தமிழகத் தமிழர்கள் மத்தியில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை. ஏதோ ஒன்றிரண்டு கட்சிகள் தான் இதை பற்றிப் பேசுகின்றன. மக்கள் அவர்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் தான் கவலைப்படுகிறார்கள். இளைஞர்களுக்கும் இந்த உணர்வுக்கும் சம்பந்தமேயில்லை என்று தான் மத்திய அரசும் வட இந்திய ஊடகங்களும் கருதிக் கொண்டிருந்தன.
ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் எழுந்துள்ள எழுச்சி கண்டு இந்தியா மட்டுமல்லாமல் இலங்கை உள்ளிட்ட நாடுகளே வியப்புடன் நோக்குகின்றன.
தமிழீழத்திற்கான உலகளாவிய மேடையை உருவாக்கவும், பன்னாடுகளின் ஆதரவைப் பெறவும், கடந்த ஆண்டு மாபெரும் மக்கள் திரளைக் கொண்ட வலிமையான அமைப்பாக டெசோ உருவாக்கப்பட்டதில் இருந்து ஈழத்திற்கான போராட்டப் பாதை புதிய எழுச்சி கொண்டது. உலக அரசியல் சுழலில் சிக்கியுள்ள ஈழப் போராட்டத்தினை உலக மக்களின் கவனத்துக்குக் கொண்டு சேர்ப்பதன் வாயிலாக போராட்டத்துக்கு வலிமை சேர்க்க புலம்பெயர் தமிழர்கள் முயன்று வருகிறார்கள். 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தினையடுத்து புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் மத்தியில் சில காலம் அமைதி நிலவினாலும் பின்னர் ஆங்காங்கே போராட்டக்குரல் ஒலிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் மீண்டும் டெசோ உருவாக்கப்பட்டது. தி.க., தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் டெசோவை வீரியத்துடன் முன்னெடுத்தன. டெசோவின் பயணம் தொடங்கியது. 2012 ஆகஸ்ட் 12-ல் சென்னையில் நடைபெற்ற மாநாடு, போராட்டங்கள் என அதன் பயணம் குறிப்பிட்ட இலக்கில் சென்றுகொண்டிருந்த சூழலில், சேனல் 4 வெளியிட்ட நோ ஃபயர் சோன் ஆவணப்படத்தினைப் பயன்படுத்தி இந்திய அளவில் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்று மனிதநேயர்களிடம் ஆதரவு திரட்டத் தயாரானது டெசோ.
ஒரு புறம் போராட்டக்களம்; மறுபுறம் ஈழத்திற்கான ஆதரவினை இந்திய அளவில் பெருக்கும் முயற்சி என இரண்டு களங்களில் பணிகளை மேற்கொண்டது. கடந்த பிப்ரவரியில் கூடிய டெசோ கூட்டத்தையடுத்து தமிழக மீனவர்கள் படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், கருப்புச் சட்டை அணிந்து ராஜபக்சேவின் இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் என பிப்ரவரி மாதத்தில் போராட்டக் களம் கண்டது. மார்ச் 5-ல் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம், அதே நாளில் டெல்லியில் நாடாளுமன்றத்தின் முன்பு தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி.க்களின் கண்டனஆர்ப்பாட்டம், மார்ச் 7 – டெல்லியில் மாநாடு என்று அடுத்தடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. (இச்சூழல் உருவான காலகட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பும் இன்னும் சில அமைப்புகளும் அவசர அவசரமாக அறிவித்து, டெசோவின் போராட்டத்திற்கு முன்பாக நடத்திட வேண்டும் என்னும் முனைப்பில் மார்ச் 3_ல் முற்றுகைப் போராட்டம் நடத்தின. அவர்கள் எப்படியோ; இதனை நாம் வரவேற்கவே செய்கிறோம். தி.மு.க. தலைவர் கலைஞர் எல்லோரும் போராடவேண்டும்.நாங்கள் அதனை வரவேற்கிறோம் என்றார்.) நாடாளுமன்றத்தில் 10 நாட்களாக முக்கிய விவாதப் பொருளாக டெசோவின் தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர்கள் ஈழப் பிரச்சினையை மாற்றினர். அ.தி.மு.க.வும் குரல் கொடுத்தது. பல்வேறு வட இந்திய அரசியல் கட்சிகளையும் இது குறித்துப் பேசச் செய்தனர் தமிழக எம்.பி.க்கள். ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்து, தமிழக மீனவர்களைக் கொன்றொழிக்கும் இலங்கை இனவெறி அரசுக்கு தமிழ்நாட்டின் தலைநகரத்தில் தூதரகமா என தூதரக முற்றுகைப் போராட்டத்தின் போது எழுந்த உணர்வார்ந்த தமிழர்களின் முழக்கம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இலங்கைத் தூதரகத்தை அகற்றக் கோரி பல்வேறு இயக்கங்களும் தொடர்ந்து குரல் எழுப்பியவண்ணம் இருந்தன. (தூதரகத்தை கேரளாவுக்குக் கொண்டு செல்லலாமா என சிங்கள அரசு யோசிக்கிறதாம்.இது தற்போது கிடைத்துள்ள கடைசிச் செய்தி)
அடுத்த கட்டமாக மார்ச் 12-ஆம் தேதி தமிழ்நாட்டளவில் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது டெசோ. மத்திய அரசுக்குத் தமிழர்களின் ஒற்றுமையையும், ஈழப் பிரச்சினையில் கொண்டுள்ள அக்கறையையும் எடுத்துக் காட்டும் விதத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் பங்கு கொள்ள அழைப்பு விடுத்தது. அ.தி.மு.க. அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்திய சூழலிலும் 80 சதவீத வணிகர்கள் தமது கடைகளை அடைத்து ஆதரவு அளித்தனர்.வழக்கம்போல பார்ப்பன ஊடகங்கள் புளுகின. அன்றைய தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தி டெசோ தலைவர்கள் கைதாயினர். அய்.நா-வின் மனித உரிமை ஆணயத்தின் ஜெனீவா மாநாட்டில் ஈழம் தொடர்பாகவும், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் தீர்மானம் கொண்டுவருவதற்கு பல்வேறு நாடுகளையும், அய்.நாவின் மனித உரிமை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளையும் தொடர்ந்து நேரில் சந்தித்து வலியுறுத்தியது டெசோ. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கவிஞர் கனிமொழி, டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட திமுக-வின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டனர்.
அமெரிக்கா வைத்திருந்த வரைவுத் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிரான பல அம்சங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. இனப்படுகொலை என்ற வார்த்தை இல்லை எனினும், இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் என்பதையும், அதற்கான சர்வதேச சுதந்திர விசாரணை வேண்டும் என்பதையும், இலங்கை தன் உள்நாட்டுக்குள் உருவாக்கிய எல்.எல்.ஆர்.சி அறிக்கையையொட்டிய எந்த மறுவாழ்வுப் பணிகளும் நடைபெறவில்லை என்பதையும் அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம் எடுத்துக் காட்டியிருந்தது. இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதோடு, அதில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என்பன உள்ளிட்ட முக்கியமான திருத்தங்களை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்ற குரல் தமிழகமெங்கும் ஒலித்தது. டெசோ தனது குரலை ஓங்கி ஒலித்தது. மத்திய அரசிடமும், அதன் தலைவர்களிடமும், நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்சினையை எழுப்பி தீர்க்கமான முடிவை இந்தியா எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல்கொடுத்தனர். அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை ஏற்காத இலங்கை அரசு, அய்.நா. மன்றத்துக்கான இலங்கைத் தூதர் ரவிநாதா ஆர்யசின்ஹா வாயிலாக, இலங்கை மேற்கொண்டுள்ள மறுவாழ்வுப் பணிகளை அய்.நா.வின் மனித உரிமை அமைப்பு அங்கீகரிக்க மறுப்பதாகக் குற்றம் சாட்டியது. மேலும் இது வளரும் நாடுகள் மீது நீண்டகாலப் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தனக்குக் கூட்டுக்கு ஆள் தேடியது. அளவுக்கு மீறி இலங்கை மீது மனித உரிமைக் கவுன்சில் கவனம் செலுத்துவதாகவும் குறைப்பட்ட அவர், எனவே இலங்கை மீதான குற்றாச்சாட்டுகளோடு உள்ள இந்த தீர்மானத்தை இலங்கை ஏற்காது என்றும் தெரிவித்ததோடு, இது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில் அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் பல்வேறு சதிகள் அரங்கேறின. இந்தியாவின் அரசியல் புரோக்கர் சு.சாமி சிங்கள அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்து விட்டு, அமெரிக்காவுக்கும் பயணம் மேற்கொண்டார். தமிழகத்தில் அமெரிக்கத் தீர்மானம் குறித்த விவாதங்கள் தொடங்கின. மனித உரிமை ஆணையத்தின் பணியை புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பொது வாக்கெடுப்பையும் கோரிய டெசோவின் பணியும் இந்தியாவிற்கு அழுத்தத்தைத் கூட்டியது. கடந்த ஓராண்டாக டெசோவின் இடைவிடாத ஈழ முழக்கம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கேட்டதன் விளைவு, தமிழக இளைஞர்கள்,மாணவர்களின் உள்ளங்களும் ஈழத்தை நோக்கித் திரும்பின. 2009_க்குப் பிறகு சிறு சிறு அமைப்புகளெல்லாம் குரல் எழுப்பி வந்தாலும், டெசோ எழுப்பிய குரலுக்குப் பின்தான் மத்திய அரசும், இந்திய ஊடகங்களும் ஈழச்சிக்கலைக் கண்டுகொள்ளத் தொடங்கின. இந்தச் சூழலில், மார்ச் 8-ஆம் நாள் லயோலா கல்லூரி மாணவர்கள் தங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர். தமிழக அரசு மூன்றே நாட்களில் அவர்களைக் கைது செய்தாலும், தமிழகம் முழுக்க மாணவர்கள் போராடத் தொடங்கினர். உண்ணாநிலை, சாலை மறியல், இரயில் மறியல், கல்லூரிப் புறக்கணிப்பு, மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, பேரணி என மாணவர்கள் படிப்படியாக அடுத்தடுத்த கட்டப் போராட்டங்களைக் கையிலெடுத்தனர்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் தான் போராட்டத்தை நடத்துவர் என்ற நிலை மாறி, அனைத்துக் கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்கினர். போராட்டக் களத்தில் இறங்காத மாணவர்கள் என்று எண்ணப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொடங்கி பள்ளி மாணவர்கள் வரைக்கும் தங்கள் உணர்வைத் தெளிவாக வெளிப்படுத்தினர். அமெரிக்கத் தீர்மானம் குறித்த இருவேறு பார்வை மாணவர்கள் மத்தியில் இருந்தாலும், இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என்பதை இந்திய அரசு அய்.நாவில் பதிவு செய்ய வேண்டும் என்பதையும், தனித் தமிழீழம் வேண்டும் என பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதையும் மாணவர்கள் தெளிவாக முன்வைத்தனர்.றக தமிழகம் முழுக்க மாணவர் போராட்டங்களால் உணர்வுத் தீ பற்றியெரிந்தது. தி.மு.க தனது அடுத்த கட்ட அழுத்தத்தை டெல்லியில் தொடர்ந்து கொடுத்து வந்தது. அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா உரிய திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் இல்லையேல் மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார் தி.மு.க & டெசோவின் தலைவர் கலைஞர். இந்தியா முழுக்க ஈழம் பற்றியே ஊடகங்கள் பேசத் தொடங்கின. நாடாளுமன்றம், மக்கள் மன்றம் என வட இந்தியா முழுக்க இலங்கை இனப்படுகொலை குறித்த விவாதங்கள் இடம்பெற்றன. மத்திய அமைச்சர்கள் மூவர் திமுக தலைவர் கலைஞரைச் சந்தித்து சமாதானம் செய்ய முயன்றாலும், தனது உறுதியில் சற்றும் குலையாதவராகக் கடைசி நிமிடம் வரை காத்திருந்தார் கலைஞர்.
அமெரிக்கத் தீர்மானத்தில் இனப்படுகொலைக் கெதிரான திருத்தங்கள் கொண்டுவருவதற்கான காலம் முடிந்தும் இந்தியா செயலற்று இருந்ததையும், போர்க்குற்றம், சர்வதேச விசாரணை போன்ற ஆறுதலான அம்சங்கள் கூட அமெரிக்கத் தீர்மானத்திலிருந்து நீக்கப்பட்டு தீர்மானம் நீர்த்துப் போனதை அறிந்ததும், எச்சரித்த படி அமைச்சர் பதவிகளைத் துச்சமெனத் தூக்கியெறிந்தது தி.மு.க. எத்தனையோ இக்கட்டான சூழலிலும் மதவாத ஆபத்து சூழ்ந்து விடக் கூடாது என்பதற்காக பொறுத்துக் கொண்டு, காங்கிரஸ் அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை, இனத்துக்கோர் இடர் வந்ததும் விலக்கிக் கொண்டது தி.மு.க. அடுத்தடுத்து காங்கிரஸ் ஆதரவை விடுதலைச் சிறுத்தைகளும் விலக்கிக் கொண்டது. எதிர்பாராத இந்த முடிவை காங்கிரசால் ஜீரணிக்கவே முடியவில்லை.
மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாரதீய ஜனதா, கம்யூனிஸ்ட் இயக்கங்கள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ் வாடி என பெரும்பாலான வட இந்தியக் கட்சிகளும் தங்கள் சுயரூபத்தைக் காட்டின. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதைப் போல் தமிழ்நாட்டில் காட்டிக் கொண்ட காவிகளும் கம்யூனிஸ்ட்களும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அம்பலமாயினர். காங்கிரஸ் ஒழிந்து பா.ஜ.க வந்தால் இலங்கையில் போர் நிறுத்தப்படும் என்றெல்லாம் ஆருடம் சொல்லிவந்த தமிழகத்தின் வாய்ச் சவடால் பேர்வழிகளுக்கும் ஒரேடியாய் பட்டை நாமம் தீட்டியது பா.ஜ.க. கேரளாவில் இரண்டு மீனவர்களைக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்களைத் திருப்பி அனுப்ப அந்நாடு மறுக்க, அதில் உறுதியாக இருந்து தூதரக உறவைக் கூட முறித்துக் கொண்டு, அவர்களை இந்தியாவின் விசாரணைக்கு அழைத்துவர இந்தியா மேற்கொண்ட முயற்சிகளும், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைத் தொடர்ச்சியாகக் கொன்று வரும்போதும் வாய்மூடி மவுனம் காத்து, இலங்கையை நட்பு நாடு என்று சொல்லும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் அம்பலமானது.
காங்கிரஸ் மட்டுமல்லாது, இந்தியா என்னும் கட்டமைப்பே தமிழர்களுக்கு எதிராக இருப்பதை உணர்த்தின டெல்லியில் நடந்த நிகழ்வுகள். போலியான இந்திய தேசிய உணர்வுக்கு ஆட்பட்டிருந்த மாணவர்களுக்கு இந்தியாவின் உண்மை நிலையை எடுத்துக் காட்டியது இந்நிகழ்வு. அகில இந்திய அளவில் திமுக கொடுத்த அரசியல் நெருக்கடி இவர்களை அம்பலத்திற்குக் கொண்டுவந்தது. 2009-ல் போரை நிறுத்த வேண்டும் என்ற அளவில் தமிழகத்தில் இருந்த பொதுமக்களின் உணர்வு, இப்போது மிகத் தெளிவாக தனி ஈழமே ஒற்றைத் தீர்வென்னும் முடிவிலும், அதற்கான பொதுவாக்கெடுப்பு, உலக அளவிலான ஆதரவு திரட்டல் என்ற சரியான பாதையிலும் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. இலங்கை அரசு இந்தியாவுக்கு நண்பனென்றால், தமிழ்நாடு பகை நாடா? என்னும் கேள்வி எழுந்த மாணவர்கள் மனதில், தமிழர்களுக்கு இந்தியா எவ்விதத்திலும் பயன் தராது என்ற உண்மை மாணவர்கள் மத்தியில் பதிலாகப் புலப்படத் தொடங்கியுள்ளது. டெசோவின் பணியால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகத்தில் சிலர் அவதிப்பட்டாலும், தொடர்ச்சியான போராட்டங்களால் டெசோ கொளுத்திய உணர்வுத் தீ, இன்று தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பற்றி எரிகிறது. தங்களிடம் அரசியல் காழ்ப்புணர்வோடு அணுகுவோரை மட்டும் எச்சரிக்கையுடன் கவனித்து ஒதுக்கிவிட்டால் நாளை நமக்கு நம்பிக்கையானது.
எங்கள் தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கிப் படிப்போம் – எங்கள் தமிழ் வானில் பகைவர் நுழைந்தால் எரிமலையாகி வெடிப்போம் என்று நிறுவியுள்ளனர் மாணவர்கள். தமிழர்கள் உணர்வு எரிமலையாகட்டும்; எதிர்ப்புகள் வெடித்து நொறுங்கட்டும்.
– இளையமகன்