ஈரோட்டில் இரண்டு நினைவுச் சின்னங்கள்
– கி.வீரமணி
இயக்கப் பணிகளை ஒருபுறம் தொய்வின்றி நடத்தியதுபோலவே, பொதுநலப் பணிகளும் அரசு சார்ந்தும், சாராதவைகளாகவும் அமைந்த தந்தை பெரியார்தம் தொண்டறம் நாட்டு மக்களுக்கு கிடைத்த வண்ணமே இருந்தது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு. எடுத்துக்காட்டாக,
தந்தை பெரியார் பிறந்த மண்ணாம் ஈரோட்டில் பெருகி வந்த மக்கள் தொகையின் தேவைக்கேற்ப, மாவட்ட மருத்துவமனை இங்கேயே (ஈரோட்டில்) அமையவேண்டும் என்று ஈரோடு மக்கள் தந்தை பெரியார் அவர்களை அவர்கள் வாழ்ந்தபோது பலமுறை வலியுறுத்தி வந்தார்கள்.
ஒன்றுபட்ட கோவை மாவட்ட மற்றொரு நகரமான திருப்பூர் நகரவாசிகளோ அங்கே கொண்டுவந்து அமைத்துவிட எண்ணி விரும்பினார்கள். நடந்த ஆரோக்கியமான போட்டியில், ஈரோடே வென்றது? தி.மு.க. ஆட்சியில், (பின்னாளில் அதே தி.மு.க. ஆட்சி திருப்பூரையே தனி மாவட்டமாக்கி அந்த மக்களின் ஆசைகளையும்கூட நிறைவேற்றியது.) இது அறிவிக்கப்பட்டது. அய்யா அவர்கள் ஒரு லட்ச ரூபாய் தனது அறக்கட்டளையிலிருந்து தந்தார்கள்; என்னை அந்த காசோலைகளையும் கடிதத்தையும் கொண்டுபோய் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களிடம் தந்துவிட்டு, தலைமை மருத்துவமனை அறிவிப்புக்காக நன்றி தெரிவித்துவிட்டு வரவும் பணித்தார்கள். முதல் அமைச்சரும் மகிழ்வுடன் காசோலையை ஏற்று, அய்யாவின் அருட்கொடைக்கு நன்றி தெரிவித்து, கடிதமும் அரசு சார்பில் அனுப்பினார்கள். ஆனால் அம்மருத்துவமனை _ தலைமை மருத்துவமனையாகப் பல புதிய கட்டிடங்களுடன் உருவாவதற்கு முன்னரே அய்யா அவர்கள் முடிவெய்திவிட்டார்கள்.
தந்த வாக்குறுதியை தி.மு.க. அரசு நிறைவேற்றிட, அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தலைமையிலேயே 31..
8.1974ல் ஈரோட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனை (District Headquarters Hospital) திறக்க ஏற்பாடு செய்து, திறப்பு விழாவில் அரசு சார்பில் முதலமைச்சரே வந்து நடத்தி ஈரோட்டு மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தார்கள்!
அன்னையார் தலைமையில், முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சிறப்பாக, தந்தை பெரியார் அவர்களுடன் இருந்த குருகுலவாசம், அதனால் பெற்ற பலன், அய்யாவிடம் தந்த நன்கொடை அவர்களது பொருள் எல்லாம் மக்களுக்கே தரப்படுகிறது என்றெல்லாம் விளக்கமாகப் பேசியதோடு, அம்மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு தந்தை பெரியார் மாவட்ட மருத்துவமனை என்றே பெயர் சூட்டப்படும் என்று அறிவித்து, எல்லோரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள்!
நான் அன்னையாரின் தலைமை உரைக்குப் பின் (அந்த அரசு விழாவில்) சுருக்கமாகப் பேசி, தலைமை மருத்துவமனையை அய்யா விரும்பியபடி அமைத்ததற்கு இயக்கச் சார்பாகவும், ஈரோடு மக்கள் சார்பாகவும் பாராட்டி நன்றி கூறினேன்.
அதன் பின்னர் தலைமை உரையில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் முத்தாய்ப்பாக, இதற்கு முன்மாதிரிகள் இருந்ததாக நண்பர் வீரமணி அவர்கள் தெரிவித்தார்கள். (தமிழ்நாட்டில் சில மருத்துமனைகள் தலைவர்கள் பெயரில் இருப்பதை) முன்மாதிரி இல்லாமலே இருந்தால்கூட, இதற்குத் தந்தை பெரியார் அவர்கள் பெயர் சூட்டப்படுவது இனி வருகிறவர்களுக்கு முன் மாதிரியாக அமையும் என்ற உறுதியான முடிவின் காரணமாகவே இந்த பெயர் வைப்பதில் பெருமகிழ்ச்சியான கடமையாக கருதுகிறேன் என்று பலத்த கைத்தட்டலுக்கிடையே அறிவிப்புச் செய்தார்கள்!
மாணவப் பருவம் முதலே பிரச்சாரத்திற்குச் சென்று (ரயிலில், பஸ்ஸில், சைக்கிளில் _ பிறர் ஓட்ட நான் அமர்ந்துதான்!) பல மைல்கள் நடந்தும் பிரச்சாரம் செய்வது வாடிக்கையாக வழமையாக ஆகிவிட்டது என்றாலும் இந்த நிகழ்ச்சி எனது பொதுவாழ்க்கை _ சுற்றுப் பயணத்தில் மறக்க முடியாததொரு அனுபவத்தை ஏற்படுத்தியது.
அன்னையார் திருச்சியிலிருந்து ஈரோட்டிற்கு இரண்டு நாள் முன்பே வந்துவிட்டார்கள். எஸ்டேட் நிர்வாகத்தைக் கவனிக்க, வரி கட்டுவதற்கும் வாடகை வசூல் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்யவும் அம்மா அவர்கள் 2 நாள் முன்பே சென்றார்கள். எனக்கு ஈரோடு வரும்படி ஆணையிட்டார்கள். நான் கோவை செல்லும் இரவு ரயிலில் ஏறி ஈரோடு செல்லுவதற்கு வந்து ரயிலில் ஏறி பயணம் செய்தபோது (30.8.1974) இரவு அசந்து தூங்கிவிட்டேன். விழித்துப் பார்த்தால் ஈரோடு ஸ்டேஷன் தாண்டிவிட்டது! மேலே (மூன்றாம் வகுப்புப் பெட்டி பயணம்) ஏறி படுத்திருந்ததால் இப்படி தூங்கிவிட்டேன். ஈரோட்டில் வந்தவர்கள் தேடிப்பார்த்து வரவில்லை என்று சிலர் திரும்பி அம்மாவிடம் சொன்னார்கள். எனக்கோ வெட்கம் ஒருபுறம்; காலையில் 10 மணிக்கு நிகழ்ச்சி. ரயில் 6 மணியளவில் திருப்பூர் சென்றது.
உடனே அறக்கபறக்க வெளியே வந்து பஸ் ஸ்டாண்டை விசாரித்து, அங்கே ஈரோடு பஸ் பிடித்து, பல்கூட விளக்காது, பயணித்து காலை 9 மணி அளவில் நேரே மருத்துவமனைக்கே சென்றுவிட்டு, அங்கிருந்து அம்மாவுக்குத் தகவல் கொடுத்தேன். அம்மாவுக்கு அப்போதுதான் நிம்மதி. மருத்துவமனையில் உள்ள ஒரு கழிப்பறை பகுதியிலேயே முகம்கழுவி, பல்துலக்கி காபி மட்டும் அருந்திவிட்டு, விழா ஏற்பாட்டினைக் கவனித்து, முதல்வரை வரவேற்க தயாராகி, அன்னையார் சார்பில் நின்றேன். சிறிது நேரத்தில் அம்மா வேனில் வந்திறங்கி என்னை மிகுந்த அனுதாபத்தோடு பார்த்து நலம் விசாரித்தார். நிகழ்ச்சி முடிந்து, விடுதலைக்கு டிரங்க் செய்தி (அப்படித்தான் போடுவது வழக்கம்.) கொடுத்து, பகல் 1.30 அளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் அய்யாவின் அறையில் எங்களுக்கு அம்மா உணவு பரிமாறினார்கள். பசியாறியதே அப்போதுதான்! அய்யா பெயர் வைத்தாகிவிட்டது; மருத்துவமனை வருவதற்கும் தூதுவனாக அய்யா சார்பில் அலைந்து, அவர்களுக்குப் பின் _ இப்படி அவரது மண்ணில் அவருக்குச் சிறப்பு கிடைத்தாலும் நாம் பங்கேற்க, பணிபுரிய வாய்ப்பேற்பட்டதே எனக்கு பசிபோக்கிய விருந்தாக அமைந்துவிட்டது!
பொதுவாழ்க்கை ரயில் பயணத்தில் இதுபோல் ஸ்டேஷன் விட்டு தூங்கி பிறகு இறங்கவேண்டிய நிலையம் தாண்டி கண்விழித்து வருத்தப்பட்ட நிகழ்வு இது எனக்கு இரண்டாவது அனுபவம் ஆகும்!
இதற்கு முதலில் கும்பகோணம் கூட்டத்திற்கு, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது செல்லும்போது, குடந்தையில் இறங்காது தூங்கி பாபநாசம் புகைவண்டி நிலையத்தில் விழித்து, பேருந்தில் பயணித்து குடந்தை வந்து தோழர்களின் அதிர்ச்சியைத் தீர்த்த, மகிழ்ச்சியான அனுபவத்தை எனது வாழ்க்கையின் வேறொரு பக்கத்தில் எழுதினேன். 70 ஆண்டு பயணத்தில் இரண்டு முறை மட்டுமே இப்படி Adventure _ விநோதம்!
பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்
தூங்காதே தம்பி தூங்காதே
என்ற பாட்டு அதனால் என்னவோ எனக்கு மிகவும் நான் சுவைக்கும் பாட்டாக ஆகிய தத்துவப் பாடமாகிவிட்டது போலும்!
பட்டுக்கோட்டையார் பாட்டு அதற்குமுன் _ இப்படி தூங்கிவிட்டு ரயில் நிலையத்தை விட்டுச் சென்ற முதல் அனுபவத்தின்போது இந்தப் பாட்டு அவரால் எழுதப்படவில்லை என்றே நினைக்கிறேன்!
ஈரோட்டில் எப்படி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தந்தை பெரியார் மருத்துவமனை என்று பெயர்சூட்டி, தந்தை பெரியார் அவர்களால் தரப்பட்ட நன்கொடையான ஒரு லட்சத்தைப் பெற்ற முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் புதிய பொலிவான அரசு மாவட்ட மருத்துவமனைக் கட்டிடங்களைத் திறந்து வைத்து மிகப் பெரிய வரலாற்றுச் சாதனையை ஈரோட்டு மண்ணில் தான் குருகுல மாணவன் என்பதை சற்றும் மறக்காமல் குருதட்சணை வழங்கிச் சிறப்பித்ததுபோல் செய்து முடித்தார்கள்.
அதைத் தொடர்ந்து, அதே ஈரோட்டிலேயே திராவிடர் இயக்க வரலாற்றில் இன்னுமோர் அத்தியாயம் புதிதாக இணைக்கப்பட்டது போன்றதொரு நிகழ்ச்சியும் நடைபெற, கழகத்தலைவர் அன்னையார் அவர்களும் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களும் காரணகர்த்தாவானார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் தமிழினத்தின் ஒவ்வொரு அசைவிலும் அணுவிலும் -_ ஏன் ஒவ்வொரு துளி வியர்வையிலும் ரத்தத்திலும் இரண்டறக் கலந்தவர் தந்தை பெரியார் என்ற இந்த இனத்தின் மூச்சுக்காற்று.
அதனால்தான் மற்ற சில அரசியல் தலைவர்களைப்போல மக்கள் மத்தியில் அவர்கள் மறைந்த பிறகு அதிகமாகப் பேசப்படுவதே இல்லை; தந்தை பெரியார் அவர்களோ, அவர்தம் இன எதிரிகளுக்கு; அவர்கள் உடலால் மறைந்தாலும், கொள்கையால் உறுதியாக வாழ்ந்து கொண்டிருப்பதால் _ இன்றும் _ என்றும் _ சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள்!
அவர்களது நினைவு நிலைத்திட அவர் பிறந்த வீட்டையே நினைவுச் சின்னமாக்கி நிறுவிட தமிழக அரசு ஆவன செய்யும் என்று தமிழக (தி.மு.க.) அரசின் விருப்பத்தை, அய்யா அவர்கள் மறைந்த பிறகு நடந்த செப்டம்பர் 17 (1974) பிறந்த நாள் விழாவின்போது தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள் சென்னை பெரியார் திடலில் அன்னையார் முன்னிலையில் அறிவித்தார்கள்.
உடனே சற்றும் பெரிய இடைவெளி தராது, அன்னையார் அவர்கள்,
அப்படி ஒரு நினைவகத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு முன்வந்தால், அய்யா தந்தை பெரியார் பிறந்த (ஈரோட்டில் உள்ள அவரது) இல்லத்தை இயக்கம் நன்கொடையாகவே வழங்கத் தயார் என்று அறிவித்தார்கள்.
இந்த இரண்டு பிரகடனங்களும் மிகவும் முக்கியமானவை அல்லவா?
எதிலும் விரைந்து முடிவெடித்து வேகமாகச் செயலாற்றுவதில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் பெயர் பெற்றவர் என்பதால், அன்னையார் அவர்கள் அதிகாரபூர்வமாக அரசுக்குக் கடிதம் எழுதி அனுமதியளித்தார்கள்.
அச்சொத்து _ இல்லம் _ இயக்கச் சொத்து என்பதால் அதை இயக்கத்தின் பொறுப்பாளர்களின் அனுமதியையும் உடனே பெற்று முறைப்படி கடிதம் கொடுத்து, பணியைத் துவக்க உதவினார்கள்.
நான்தான் முதல்வரிடம் அன்னையார் சார்பில் இது சம்பந்தமாக நிகழ்வுகளுக்குரிய தூதுவனாக இருந்து கடமையைச் செய்தேன்; மற்ற சில தலைவர்கள் இல்லங்களை நினைவிடமாக ஆக்குவதற்கு தமிழக அரசு அதன் உரிமையாளர்களிடமிருந்து _ பெரிதும் குடும்பத்தவர்களிடமிருந்து _ அரசு உரிய மதிப்பீட்டுத் தொகையை _ விலையாகத் தந்தே பெற்றுள்ளது. அதுபோல எவ்வளவு தொகை தேவை என்று அம்மா சொல்லுகிறார்களோ, அதைத் தரத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது; கேட்டுச் சொல்லுங்கள் என்றார் முதல் அமைச்சர் என்னிடம்.
அன்னையார் அவர்கள் நாம் அந்த இடத்தை நினைவகமாக்கிட நன்கொடையாகவே தர முடிவுசெய்து விட்டோம்; முதல்வர் அவர்கள் தொகை தர முன்வந்ததற்கு நன்றி. ஆனால் நாங்கள் தொகை ஏதும் பெறத் தயாரில்லை என்று கூறி, தமிழக அரசை வியப்புற வைத்தார்கள்!
அது மட்டுமா? மற்றொரு முக்கிய கருத்தையும் ஆலோசனையாக முதல் அமைச்சர் கலைஞர் அவர்களிடம் கூறச் சொன்னார்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் விடுதலை நாளேட்டின் நிர்வாக ஆசிரியராக இருந்து தலையங்கங்கள், கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்த அந்த நாளில் (1942 துவக்கம் வரை) குடியிருந்தது அய்யா பிறந்த அந்த இல்லத்தின் பின்புறத்தில் இணைக்கப்பட்ட ஓர் எளிமை நிறைந்த சிறிய இல்லத்தில்தான் என்பதாலும், தந்தை பெரியாரிடம் பணியாற்றிய காலத்தையே தம் வாழ்வின் வசந்தம் என்று அண்ணா முதல் அமைச்சர் ஆனபிறகும் அவர்கள் எழுதி மகிழ்ந்த காரணத்தால், அந்த நினைவகத்திற்கு தந்தை_தனயன் இருவர் பெயரும் இணைந்த நிலையில்,
பெரியார்_அண்ணா நினைவகம் என்றே தமிழக அரசு பெயர் சூட்டுவதும் சாலப் பொருந்தும். இப்படி ஒரு தலைவரும் _ அவரிடமிருந்து பிரிந்து அரசியல் கட்சி ஆட்சியைப் பிடித்து, அந்த ஆட்சியையே மிகுந்த நன்றிவுணர்வின் நாயகமாகத் திகழ்ந்து எனது அமைச்சரவையே அவருக்குக் காணிக்கை என்று சட்டமன்றத்தில் பிரகடனப்படுத்திய சரித்திரமாக நிகழ்ந்தது உலக வரலாற்றில் எந்த ஓர் இயக்கத்திற்கும் கிடைத்திருக்காத பெரும் புதுமையான வாய்ப்பு அல்லவா? _ அதையும் அன்னை மணியம்மையார் அவர்களே _ யார் அவர்களை அய்யாவின் திருமணத்தினை சாக்காக ஆக்கி கடுமையாக விமர்சித்தாரே, அவருடைய பெயரும் அந்த நினைவகத்தில் இணைந்திருக்க வேண்டும் என்று கூறியது, அன்னையார்தம் உயர்ந்த உள்ளத்தை அல்லவா உலகுக்கு காட்டுகிறது?
இயக்கத்தில் ஒரு சிலர், அய்யா பெயர் மட்டும்தான் அந்த நினைவு இல்லத்திற்கு இருக்க வேண்டும்; அண்ணா பெயரை ஏன் இதில் இணைக்க வேண்டும் என்று கேட்டனர்; ஆனால் அன்னையார் அவர்கள், அண்ணா செய்த சாதனைகளையும், மற்ற காரணங்களையும் கூறி, அவர்களையும் இசையும்படிச் செய்து, தனது இயக்கத்தவரையும் கருத்தினையும் அலட்சியப்படுத்தாமல், விளக்கிச் சொல்லி ஏற்கவே செய்தார்கள்!
பலருக்குத் தெரியாத, இதுவரை பதிவாகதாச் செய்தியாகும்; இது ஏதோ கலைஞர் முன்னின்று அண்ணா பெயரை இணைத்துவிட்டார் என்றுகூட சிலர் அரைகுறை விமர்சனங்களையும் அப்போது அள்ளிவீசிடத் தவறவில்லை; அன்னையாரோ, திராவிடர் கழகமோ, அதைப் பொருட்படுத்தவில்லை.
தமிழக அரசு அவ்வில்லத்தினை சீர்செய்து, பழமை கெடாமல் அதை நினைவகமாக்கி அடுத்த 17_9_1975 அன்று ஈரோட்டில் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்து விழாக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
– நினைவுகள் நீளும்…