சிறுகதை

மார்ச் 01-15

நெருஞ்சி முள்

சூரிய ஒளியின் கூரிய முள்ளில் அழகிய வடிவில் படலமாய் மலர்ந்த பூக்களின் தேன் தேனீக்கு வேண்டும் என்றால் அத்தேனீ எத்தனை பாடுபடுமோ அது போலத்தான் டீ கடை செல்வாவும்.  தேநீர் அருந்துவது என்பது எல்லோருக்கும் பிடித்தமான செயல்தான்.  அதுவும் காலை நேரத்தில் உறையும் பனியில் அதிகாலையில் அலுவலக வேலைக்குச் செல்லும் நபர்களைப்பற்றி நாம் சொல்ல வேண்டியதே இல்லை. டீ, காபி என்றால் அத்தனை பிரியம், அவ்வளவு இன்பம், ஆயிரம் மன அழுத்தம் இருந்தாலும் அதுவெல்லாம் மனதின் இனிமையாய் மாற்றக்கூடிய ஆற்றல் படைத்தவை.

எத்தனையோ டீ கடைகள் மக்களின் கண்களில் தென்பட்டாலும் அது பொதுமக்கள் புழங்கும் இடத்தில் இருந்தால்தான் இன்னும் சற்று சிறப்புடையதாக அமையும்.  அதுபோலத்தான் டீ கடை செல்வாவின் கடையும்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்முன் அமைந்துள்ளதால் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வரும் பொதுமக்கள் வாங்கப்பா ஒரு டீ குடிக்கலாம், ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுப்பா என்ற சத்தத்துடன் டீ கடைக்குள்ளே நுழைவர். அமர் பலகையில்  அமர்ந்து செய்தித் தாள்களை ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.  ஆனால், ஒன்று அல்லது இரண்டு பக்கங்கள் புரட்டும் முன்பே டீக் கடை செல்வா அண்ணே டீ என்ற சத்தத்துடன் வந்துவிடுவார்.  டீ கடைக்கு அங்கு வந்து செல்லும் மக்கள் டீ குடிக்க வருகிறார்களோ இல்லையோ செல்வாவின் டீ போடும் அழகை ரசிப்பதற்கு ஒரு கூட்டமே நின்று பார்த்துக் கொண்டிருக்கும்.

டீ கடையின் மூலம் செல்வாவிற்கு வருமானம் ஓர் அளவிற்கு வருவதால் அவர் படும் கடினங்களையும், களைப்புகளையும், அவர் எந்தச் சூழ்நிலையிலும் பொருட்படுத்துவதே இல்லை.  இந்தத் தொழிலே தனக்கு ஏற்ற வருமானம் அளிப்பதால் மன நிறைவுடன் வீடு திரும்புவார்.  வீடு ஒன்றும் பெரிதல்ல என்றாலும், பரவாயில்லை இதையும் இழந்து நிற்பவர்கள் எத்தனை பேரோ என்ற சமூகப் பாங்கை மனதில் நிலைநிறுத்திக் கொள்வார்.  வழக்கமான காலங்களிலும் சரி, குளிர், கோடை காலங்களிலும் சரி, தன் சொந்தக் கடையாக இருந்த போதிலும் பணியில் தாமதம் என்பதே என்னவென்று அறியாதவர்.  சக வயதுடைய இளைஞர்கள் சினிமா, புகை, போதைக்கு அடிமைப்பட்டாலும் அவர்கள் வியக்கும் வகையில் அறிவை அதற்கு அடிமையாக்காதவராய் உயர்ந்த எண்ணங்களுடன் இருப்பவர்.

அன்று ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கூட்டம் கூட்டமாக ஆட்சியரைப் பார்ப்பதற்கு வந்திருந்தனர்.  ஆட்சியர் அலுவலகம் முன் டீ கடை உள்ளதால் அங்குள்ள அனைவரையும் அவர்கள் களைப்புறும் வேளையிலே அங்கு வரவழைக்கும்.  அக்கூட்டத்தின் இடையே ஓர் முதியவர் மிகவும் அசைந்த நடை, கைக்குத் தாங்கு கோல், முகமெல்லாம் மழிக்காத நிலையில் டீ கடைக்கு வந்து அமர் பலகையில் அமர்ந்தார். அனைவரும் கடையில் ஏதேதோ கேட்டுக் கொண்டிருக்க டீ கடை செல்வா அம்முதியவரைச் சற்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார்.  வந்தவர் எதையும் கேட்காமல் தன் கைத் தாங்கு கோலை மார்பின் மீது போட்டுக்கொண்டு எதனையோ சிந்தித்தவாறே அமர்ந்திருந்தார்.  மாலைப்பொழுது கூட்டம் ஓர் அளவு குறைந்தேவிட்டது.  முதியவர் எந்தச் சுழுச்சமும் இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்ததைப் பார்த்து அய்யா…அய்யா… என்ன வேணும் உங்களுக்கு? காலையில் இருந்து இங்கேயே உட்காந்துட்டீங்களே… என்று டீ கடை செல்வா கேட்க, அவர் ஏதேதோ உளற ஆரம்பித்துவிட்டார்.  பின்புதான் தெரிகிறது அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று.  மன நிலை பாதித்துள்ளவராக இருந்தாலும் அவர் அமைதியானவராகத் தென்பட்டதால் அவரை உபசரித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றான் செல்வா.

ஆனால், டீ கடை செல்வாவிற்கு அவரை எங்கோ எப்போதோ பார்த்த நினைவு கூர்ந்து கொண்டே இருந்தது.  இரவு தூங்கும்முன் புத்தகம் படிப்பது என்பது செல்வாவிற்கோ அளவற்ற ஆர்வம்.  அப்படிப் படித்துக் கொண்டிருக்கும் அவ்வேளையிலே மீண்டும் அம்முதியவரின் உளறல் சத்தம் கேட்டு திடுக்கென எழுந்த செல்வா உளறலைக் கேட்டு அவர் ஏதோ சொல்லத் துடிக்கிறாரே, சொல்ல வந்ததைச் சொல்லட்டும் என அறையின் வெளியிலே நின்று பார்த்துக் கொண்டிருக்க செல்வா …. செல்வா…. உனக்கு நான் செய்த துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது என்றவாறே அழுது துவண்டதைப் பார்த்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல.  அவ்வாறு நடிக்கிறார் என்பது செல்வாவிற்கு உறுதியாகிவிட்டது.  உளறித் தீர்த்துக் கொண்டிருந்த முதியவர் செல்வாவைப் பார்த்து சட்டென மாற்றி உளற செல்வா அம்முதியவரிடம் நீங்கள் யார்?  என்ன?  என்று விசாரிக்கத் தொடங்கினார்.  முதியவர் என்ன சொல்வது என்று தெரியாமல் எழுந்து தலை குனிந்தார்.

அங்க அடையாளங்களைக் கண்டு கொண்ட செல்வா, அய்யா நீங்களா இப்படி என்றவாறே உள்ளே நுழைந்தான்.  தனது அப்பாவின் முதலாளி திடுகிட்டுத் தலை நிமிர்ந்தார்.  என்ன அய்யா நீங்க ஊர்லயே பெரிய செல்வந்தரா இருக்கிற நீங்க இப்படி இருக்கலாமா? என்ன அய்யா இது வேசம் என்றான் தன் ஆதங்கங்கள் ஆர்ப்பரிக்க. தயவு செய்து என்னை மன்னிச்சுடுடா செல்வா (அழுது கொண்டே) நான் செய்த பல செயல்களுக்கு மன்னிப்பே கிடையாது. இருந்தாலும் கேட்கிறேன்.  நீ படிக்கணுங்கறதுக்காக உங்கப்பா பணத்தைக் கொஞ்சம் கடனா கேட்டான்.  ஆனா, நான் சவரம் செய்ற தொழிலாளி மகன் உயர் படிப்புப் படிக்கணுமான்னு நெனச்சு உங்கப்பாவ உன் மகனுக்கு உன் தொழிலப் பழக்கி மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு வருகிற ஜனங்களுக்குச் சவரம் செஞ்சு பொழைக்கச் சொல்றா, அதவிட்டுட்டு படிப்பாம் படிப்பு உன் மகனுக்குப் படிப்பு ஒன்னுதான் கேடான்னு அன்றைக்கு இருந்த ஜாதி வெறியில் அவனத் திட்டி, அவன் கண் முன்னாடியே நாலு லட்ச ரூபாவ மாரியம்மன் திருவிழா நடத்துறதுக்கு இனாமா கொடுத்தேன்.

அப்படி வாரி வாரி சாமிக்கி… சாமிக்கி…ன்னு கொடுத்த பணமெல்லாம் இருந்தாக்கூட, இன்னிக்குச் சல்லிக் காசு இல்லாம பைத்தியக்காரன் மாதிரி வேசம் போட்டுத் தெருவுல அலைய மாட்டேன்.  அப்படியெல்லாம் கொடுத்து என்ன உபயோகம்? மரமும், கிளையுமா இருந்த என் மகன இழந்தேன்.  மண்ணைக்கூடப் பிரிக்கலாம். ஆனா, என் மனைவிய என்கிட்ட இருந்து பிரிக்க முடியாதுன்னு நெனச்சேன். ஆனா, அவளையே மண்ணுக்கு இரையாக்கிட்டேன்.  உன்ன மாதிரியே படிக்க விரும்பிய பசங்களுக்கு எல்லாம் படிக்க உதவி செய்யாம அவங்க வாழ்க்கைய இருட்டறையாக்கினேன்.  இப்போது என்னையே நான் கொஞ்சம் கொஞ்சமா இழந்துட்டு வருகிறேன். என்று அம்முதியவர் தனது உருக்க நிகழ்வைச்  சொன்னார்.

அம்முதியவரைப் பார்க்கையிலே மிகப் பரிதாபமாக இருக்க அய்யா உங்களுக்கு யாரும் இல்லையே என்கிற கவலைய விடுங்கய்யா.  ஒரு கிளையினை நறுக்கினால் மறு கிளை வந்தே தீரும். இதுவே இயற்கை நியதி அய்யா. நீங்க தேவையில்லாத கிளைய எப்போது நறுக்க ஆசைப்பட்டீங்களோ அப்பவே தேவையான கிளையா நான் வளர்ந்திட்டேன்.  அய்யா உங்கள எங்கப்பா மாதிரிப் பார்த்துக் கொள்கிறேன் அய்யா.
இல்லப்பா நான் அவ்வளவு சொத்தையும் கடவுளுக்காக இழந்தவன்.  இனிமேலும் நான் உன்னோட இருந்தா உன்னையும் இழந்திடுவேன்.  ஏன்னா, கடவுள் பக்தி ஒரு போதை மாதிரி. ஒரு முறை பழகிட்டா அதுல இருந்து மீள முடியாது.  அதை நினைக்காம என்னால இருக்க முடியது.  செல்வாவின் அழைப்பை மறுத்து, நான் செய்த உதவியினால நீயாவது நல்லா இருக்கணும் என்ற மன உறுதியுடன் செல்வாவை விட்டு தனது வாழ்க்கையை நெருஞ்சி முற்களின் படர் போன்று  பயணித்தார் அவர்.  ஒரு சில நாள்களில்… தடம் புரண்ட அவரது மனதில் தந்தை பெரியாரின் வழிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *