துணைவேந்தர் நியமனம் குறித்து யு.ஜி.சி. விதிமுறைகளை மாற்றியது சட்டவிரோதம் ! முதல் அமைச்சரின் நிலைப்பாடு சரியானது !

2025 தலையங்கம் ஜனவரி-16-30-2025

ஒன்றிய அரசாட்சியைப் பிடித்து, கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரத்தை, தமது ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவார்க் கொள்கை அடிப்படையில், மனுதர்ம ஆட்சியின் மறுபதிப்பு போலவே, கொஞ்சம் கொஞ்சமாக, ‘ஆக்டோபஸ்’ (எட்டுக்கால் பிராணி) போன்று தனது வன்மையைக்காட்டி, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள முக்கிய கல்வி உரிமைகளையும் பறித்து வருவதோடு,
அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்து வருகிறது!

இது கொடுமையிலும் கொடுமை!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அதன் கொடுங்கரங்கள், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநிலங்களின் அதிகாரங்களை – எவராலும் பறிக்க முடியாத உரிமைகளை, தங்களது சட்டங்களாலும், திட்டங்களாலும் நாளும் பறித்து வருகின்றது!
மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் சுயேச்சையாக (Autonomous) இயங்கும் வகையில், தனித்தனி சட்டத் திட்டங்களால் உருவாக்கப்பட்டு இயங்கும் உரிமை படைத்தவை ஆகும்.

அவற்றிற்கெல்லாம் மாறாக சகட்டு மேனியாக ஒரே வகையில் மாநில அரசுகளுக்குள்ள கல்வி உரிமைகளை – கூட்டாட்சிக்குப் பதிலாக, ஒன்றிய அரசே (Unitary not federal) நடக்கும் வகையில் நாளும் மாற்றி வருவது ஏற்கத்தக்கதல்ல. அரசமைப்புச் சட்ட விரோதமும் ஆகும்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தினை சரியாக ஆராய்ந்து, அதன் அதிகாரப் பிரிவுகளை ஆழ்ந்து படிக்கும் எவருக்கும் இது புரியும்.
ஒன்றிய அரசுக்குப் பல்கலைக் கழகங்களை அமைக்கும் அதிகாரத்தையே அரசமைப்புச் சட்டம் வழங்காதது மட்டுமல்ல,
(ஆதாரம்: யூனியன் அரசு பட்டியல் என்ற தலைப்பின்கீழ் ஏழாவது அட்டவணையில் 44 ஆவது அயிட்டம் List I)
(அ) Incorporation, regulation and winding up of corporations, whether trading or not, with objects not confined to one State, but not including universities. மாநிலப் பட்டியல்.

(ஆ) அதே ஏழாம் அட்டவணை, 32 ஆவது அயிட்டமாக, Incorporation, regulation and winding up of corporations, other than those specified in List I, and universities; unincorporated trading, literary, scientific, religious and other societies and associations; co-operative societies.
(Dr. Justice A.K.Rajans ‘‘Constitutions of India, is not what it is….’’ நூல்)

இந்நிலையில், கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் (Concurrent List) பட்டியலுக்கு மாற்றப்பட்ட பிறகும்கூட, மாநில பல்கலைக் கழகங்கள் குறித்து சட்டம் இயற்ற மேற்காட்டிய விதிமுறைகளின்படி ஒன்றிய அரசுக்கு அதிகாரமேயில்லை.
இப்போது பல்கலைக் கழகங்களுக்கு நிதி மானியம் உதவி – பரிந்துரை செய்யும் அதிகாரம் கொண்ட ஆணையம் (University Grants Commission) ஏகபோகமாக பல்கலைக் கழகத் துணைவேந்தர்களையே நாங்கள் ஆணையிடும்படிதான் பல்கலைக் கழகங்கள் தேர்வு செய்யவேண்டும் என்று திடீரென்று விதிமுறைகளை வரைவு (Draft) மூலம் மாற்ற முயற்சிக்கிறார்கள்.

(1) இது நடந்தால், மாநில உரிமைகளை மட்டும் பறிக்காது. பல்கலைக் கழகங்களின் தன்னாட்சி (Autonomy) என்ற தனித்தன்மை – சுதந்திரத்தையும் முற்றாகப் பறித்துவிடும் ஜனநாயக விரோதமாகும்.

அதற்கு மேலும் ஒரு பச்சை அக்கிரமம், பல்கலைக் கழகத் துணைவேந்தர்களாகும் தகுதி இனி கல்வியாளர்களுக்கு மட்டுமே அல்ல! வெளியில் இருந்து எந்தத் துறையிலும் வணிகம் போன்ற எதிலிருந்தும் எவரும் வரலாம் என்பதன் உள்நோக்கம், ஆர்.எஸ்.எஸ்.காரர்களையே, (முறைப்படி பல்கலைக் கழக போதனை அனுபவமே தேவையில்லை) தாங்கள் விரும்பும் எவரையும் கொண்டுவந்து பல்கலைக் கழகங்களை ஆர்.எஸ்.எஸ். காவி ‘‘கார்ப்பரேட் அமைப்புகளாக’’ ஆக்கிடவே இப்படி கல்வியாளர்கள் ஏற்காத ஒன்றை ஏற்படுத்திட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

துணைவேந்தர்கள் தேடல் குழுவை (Search Committee), மானியக் குழுவினரே அமைத்துக்கொண்டு, ஆளுநரே, நியமிக்க வழிவகை செய்வதுதான் இதன் நோக்கம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு, மாநில அரசுகளுக்கு இனி துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரமே இருக்கக்கூடாதாம்!

வெளி மாநிலம், வெளிநாடு விரும்பிடும் எவரையும் – கல்வித் தகுதிபற்றி மதிப்பீட்டுக்கே சிறிதும் கவலைப்படாது – பச்சையாக ஆர்.எஸ்.எஸ். கொள்கையைத் தடையின்றி நடத்திட, ஒன்றிய அரசு மட்டுமே தகுதியும், உரிமையும் பெற்றது என்று நிலைநாட்டவே இந்தப் ‘புதுக்கரடி’யை நுழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது!

இதனை ஒருபோதும் கல்வியாளர்கள், அரசமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் எவரும் ஏற்கவே கூடாது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ‘திராவிட மாடல்‘ ஆட்சி நடத்தும் ஆட்சி நாயகர் ஆனதால், உடனடியாக இதற்குக் கண்டனக் குரல் – எதிர்ப்புக்குரல் எழுப்பி, ‘‘இதனை ஏற்க முடியாது; சட்டப் போர் முதற்கொண்டு எல்லா வகையான முறையிலும் ஜனநாயக முறைகள்மூலம் எதிர்த்து முறியடிப்போம்’’ என்பதை உடனடியாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது! மற்ற மாநிலத்தவரும் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்.

கல்வியை வளர்த்தெடுத்த தமிழ்நாடு – எங்கள் ‘திராவிட மாடல்’ அரசு. அதனால்தான் எங்களுக்கு இவ்வளவு பெருங்கவலை.
ஆனால், ‘குஜராத் மாடல்’ என்ன என்பது ஒப்பனை கலைந்து, மக்களுக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது.

கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்ளும் ‘புத்திசாலிகளாக’ ஒருபோதும் தமிழ்நாடு ஆகாது; தமிழ்நாட்டைப் போல, மற்ற மாநிலங்களும் உணர்ந்து, தங்களது எதிர்ப்பினைப் பதிய வைப்பது காலத்தின் கட்டாயம்!

– கி.வீரமணி,
ஆசிரியர்