ஜாதிப் பெயர்களை, சொந்தப் பெயருடன் போட்டுக் கொள்ளும் பழக்கம் தமிழகத்தின் வெகுமக்களிடையே கிட்டத்தட்ட அருவெறுப் பானதாகப் பார்க்கப்படும் காலமிது! அதற்கு பெரியாரும், அவர் தம் இயக்கமும் செய்திருக்கும் பிரச்சாரமே காரணம். வடநாட்டில் வெகுசாதாரண மானதாகக் கருதப்படும் ஜாதிப் பின்னொட்டு போடும் வழக்கம் இன்னும் போன தலைமுறையைச் சேர்ந்த சிலரிடன் திருமணப்பத்திரிகைகள் போடுமிடங்களில் ஒட்டிக் கொண்டுள்ளது. ஆனால் அதனை மீண்டும் திணிக்கும் முயற்சிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவருவதை மீண்டும் நீளும் ஜாதி வால் என்ற கட்டுரையில் (உண்மை, மார்ச் 16–_31) சுட்டிக் காட்டியிருந்தோம்.
அந்த முயற்சி மேலும் தொடர்ந்துகொண்டிருப் பதையும், பார்ப்பனர்கள் அதற்கான தீவிரமான முயற்சியில் இறங்கியிருப்பதையும் தெளிவாகவே உணரமுடிகிறது. திருச்சி திருவரங்கத்தில் பிராமணாள் கபே முளைத்தது- இன்னும் சிலருக்கும் தைரியம் தந்திருக்கிறது. அதற்கு விழுந்திருக்கும் அடியை இப்போது பார்த்து பம்மியிருக்கிறார்கள். ஜனனி என்ற நடிகை தனது பெயருக்குப் பின்னால் அய்யர் பட்டம் போட்டே ஆக வேண்டும் என்கிறார். அதனைக் கண்டித்த இயக்குநர் கரு.பழனியப்பன் போன்றோரின் கருத்துகளையும் அவர் கண்டுகொள்ளவில்லை. எப்போதும், எது உயர்வோ அதை தம் வசம் இழுத்துக் கொள்வது அவாளின் வழக்கம். ஜி.யு.போப் வந்தாலும் அவரையும் போப் அய்யர் என்று அழைக்க வைத்தவர்கள் பார்ப்பனர்கள். ஜட்ஜ் அய்யர், வக்கீல் அய்யர், ஆடிட்டர் அய்யர், ஏன் பாக்யராஜ் படத்தில் அய்ஸ்புரூட் அய்யர் கூடப் பார்த்தாயிற்று. இப்போது புதிதாக ஒரு அய்யர் முளைத்துக் கிளம்பியிருக்கிறார். அவர் ஸ்ப்ளண்டர் அய்யர். ஸ்பென்சர் அய்யர் தெரியும்… இதென்ன ஸ்ப்ளண்டர் அய்யர் என்று ஆச்சரியமாக இருக்கிறதா?
ஆம். ஹீரோ (ஹோண்டா) ஸ்ப்ளண்டர் என்று இருசக்கர வாகனம் ஒன்று இருக்கிறதல்லவா? அது என்ன ஜாதி என்று இப்போது தான் சொல்லியிருக்கிறார்கள். இனி அடுத்தடுத்து முதலியார், ரெட்டியார், வன்னியர், கவுண்டர், தேவர் எல்லா ஜாதிக்கும் தனித்தனியாக புதிய மாடல்கள் வெளியிடுவார்கள் போல. தமிழ்நாட்டில் தான் ஸ்ப்ளண்டர் அய்யர்ஜாதி! ஆனால், மும்பையில் பட்டேல் ஜாதி, கொல்கத்தாவில் மித்ரா ஜாதி, தில்லியில் சவ்கான் ஜாதி, கொச்சியில் நாயர் ஜாதி! குடும்ப உணர்வைத் தந்திடும் வண்டி எங்களுடையது என்பது தான் அவர்கள் சொல்ல வந்தது. அதில், அப்பா பெயர் ஷிவ்ராம் அய்யராம். மகள் பெயர் சௌம்யா அய்யராம். வண்டி பெயர் ஸ்ப்ளண்டர் அயய்ராம். பிற இடங்களில் எப்படி இதை எதிர்கொண்டார்களோ தெரியாது. ஆனால், தமிழ்நாட்டில்….
டைம்ஸ் ஆப் இந்தியா, தினகரன், தினத்தந்தி ஆகிய நாளேடுகளில் விளம்பரம் வந்ததைப் பார்த்த தமிழர்கள் பொங்கி எழுந்தார்கள். கண்டனக் கணைகள் பறந்தன. இளைஞர்களின் எழுச்சியும், கோபமும் மிரள வைத்தது ஹீரோ நிறுவனத்தை! பெரியார் பக்குவப்படுத்திய பூமியை மீண்டும் மாற்றும் முயற்சியா? கடிதம், தொலைப்பேசி, முகநூல், டுவிட்டர் என இளைஞர்கள் மத்தியிலும், நேரடியாக அந்நிறுவனத்துக்கேயும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மன்னிப்புக்கோரி விளம்பரத்தை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.
இந்த விளம்பரத்தைத் தயாரித்த விளம்பர நிறுவனம் இப்படி ஒரு எதிர்ப்பை எந்த விளம்பரத்திற்காகவும் பெற்றிருக்க மாட்டார்கள். இதோ நம் இளைஞர்களின் குரல்கள்….
இன்றிலிருந்து ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளண்டர் இருசக்கர வாகனத்துக்கு சீட் பெல்ட் உண்டு
அதுவும் வெண்ணிற பெல்ட்
இனி பெட்ரோல் தேவையில்லை. கோமாதா கோமியமே போதுமானது.
அந்த மாட்டையும் இலவசமாக தமிழக அரசு தரும். திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து, லண்டன் ?#அரசியல் #திராவிட இயக்கம் # பெரியார் : இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் ஜாதி / இனப்பெயரை போட்டுக்கொள்வது தான்! மம்தா பானர்ஜி, முன்னாள் சாட்டர்ஜி, சௌஹான், ஏக்கான்! என்று எல்லா கருமாந்தரத்தையும் கூடவே வச்சுகிட்டு சுத்துவாங்க ! அதே நெனைப்புலதான் வடநாட்டு ஹீரோ ஸ்ப்ளெண்டரும் ஐயர் பைக் என்று இன்று முன்பக்கத்தில் பல்லிளிக்கிறது! தமிழகத்தில் திராவிட இயக்கம் தான் பெயரில் ஜாதிகளை ஒழித்து ஓரளவுக்கு அவ் வெற்றியை கலாச்சாரமாக மாற்றியது! அறிவு ஜீவிகள் யாரும் இங்கே ஜாதியை பகிரங்கப்படுத்துவதில்லை! முன்பு ஒரு முறை ஒரு பிற்போக்கு சங்கர் நம்ம ஐயர்களை புகழ்ந்திருக்கிறார் நன்றி என்று ஒரு விக்ரம் படத்துக்கு எழுதியபோது… நான் எழுதியது ஞாபகம் வருகிறது…
அய்யர் ஆத்து பொண்ணுகள் அம்பிகளை விட ரெமோக்களையே அதிகம் விரும்புகிறார்கள் என்று சொல்லிய சாதிமறுப்பு போராளி டைரக்டர் சங்கருக்கு வாழ்த்துக்கள்! என்று! இனிமேலாவது வடநாட்டு விளம்பர கம்பெனிகள் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை புரிந்து நடந்துகொள்வார்கள் என்று நம்புவோம் ! ஒரு விளம்பரத்தை பாதி தீவைத்து அந்த கம்பெனிக்கு சற்றுமுன்புதான் தபால் அனுப்பிட்டு வந்திருக்கேன்! – ஓசை செல்லா
வண்டியில் எங்காவது பூணூல் மாட்டியிருக்கி றதோ என்னவோ? பிராமணாள் கபே மாதிரி இதுவும் பிராமணாள் டூவீலரோ? மத்தவா தொட்டா வண்டியோட ஆக்சிலேட்டர் வேலை செய்யாதோ? சமூக சமநீதியை ஏற்றுக்கொண்ட வர்கள் (பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்கள் உட்பட) இந்த விளம்பரத்திற்குக் கண்டனம் தெரிவித்தாக வேண்டும். – குமரேசன் அசாக்
“ஸ்ப்ளென்டர் அய்யர்” பைக்கை அய்யர் ஜாதியை சேர்ந்தவர்களை தவிர மற்ற அனைவரும் புறக்கணிப்போம்! வாங்க மாட்டோம் என உறுதியேற்போம்!
பாடம் புகட்டுவோம்! பார்ப்பன திமிரில் போடப் படும் இது போன்ற விளம்பரங் கள் இனி வருங்காலத்தில் வராமல் தடுப்போம்!
பிராமணாள் கபே என்ற பெயருக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி அதற்கு பழிவாங்கும் நோக்கோடு போடப்பட்ட பார்ப்பனர்களின் திட்டமிட்ட விளம்பரமாகவே எனக்குத் தோன்றுகிறது.
ஜாதிகளின் பெயரால் வைக்கப்படும் வியாபார இடங் களை நாங்கள் எதிர்க்கவில்லை ,நாயர் கடை ,செட்டியார் கடை ஏன் அய்யங்கார் ஸ்வீட்ஸ் என்றாலும் நாங்கள் எதிர்க்க போவதில்லை, பிராமணாள் சூத்திராள் என்பதைத்தான் நாம் எதிர்க்கிறோம் என்பதற்கு பதிலடியாகவே இந்த விளம்பரத்தை நான் காண்கிறேன்.
இந்த படத்தில் “அய்யர்” என்பது “போல்ட் ஃபான்ட்டில்” இருப்பது நமக்கு நன்றாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த “போல்ட் ஃபான்ட்” உணர்த்தவேண்டியத் தை நமக்கு உணர்த்துகிறது. – திராவிடப் புரட்சி
அதென்ன ஸ்ப்லெண்டர் அய்யர்? சாதா ஸ்பெலண்டருக்கும் இதுக்கும் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்குமோ?
அய்யர் ஸ்ப்லெண்டர் பூணூல் போட்டிருக்குமோ? ஹாரன் அடித்தால் காயத்ரி மந்திரம் வருமோ?அமாவாசை அன்னிக்கு பெட்ரோல் போட்டுக்காம விரதம் இருந்து மைலேஜ் கொடுக்குமோ? – ராஜேஷ் தீனா
என்ன ஜாதின்னு கூட தெரியாம ஆறு வருஷமா பஜாஜ் பிளாட்டினா பைக்க ஓட்டிட்டு இருக்கேன்! #தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பு! : – தெ.சு.கவுதமன்
அய்யருன்னு பேரு வச்சாலே யாரும் அவங்களை தொட கூடாது,அவங்களும் யாரையும் தொட கூடாதுன்னு சொல்லுவாங்களே…ஆனா இப்போ அய்யருன்னு பேரு வச்ச பைக்க நம்ம ஆளுங்க எல்லாரும் ஸ்டார்ட் பண்றதுக்காக மிதிப்பாங்க,அது மேலே ஏறி உக்காருவாங்க,அதை மூத்துற சந்துக்குள்ளே ஓட்டிட்டு போவாங்க,அப்புறம் ரோட்ல நிறுத்தி வக்கிரப்போ அது மேல எவனாச்சும் எச்சியே துப்பிட்டு போவான்…இதெல்லாம் பேரு வச்சவங்களுக்கு ஓகேன்னா,அத வாங்கி யூஸ் பண்ற எங்களுக்கும் ஓகே. – எஸ்.பி.கனி
ஹீரோ பைக் நிறுவனத்தின் விளம்பர குசும்பு..,
ஷிவ்ராம் அய்யர், சௌம்யா அய்யர், ஸ்ப்ளென்டர் அய்யர்…, இந்த பைக் தந்திடுமே குடும்பத்தின் உணர்வை.., அய்யா தாராளமா உங்க விளம்பரத்த போடுங்க அதுக்காக பைக்கிலயும் ஜாதிய கொண்டாந்து சேர்க்கனுமா? இல்ல அய்யர்மாருங்க மட்டும் தான் இந்த பைக்க வாங்குறாங்களா? போறபோக்க பாத்தா யமஹா தேவர், பஜாஜ் பள்ளர்ன்னு பைக்குகளுக்கு பெயர் வைக்க இவங்களே ஐடியோ குடுப்பாங்க போலருக்கே! .., பைக் வழியா இன்னொரு ஜாதிக்கலவரம் உருவாகாம இருந்தா சரி! – மகேஷ் மீனா
இவை ச்சும்மா… சாம்பிள்களே! இவை தவிர, அந்த விளம்பரத்தைப் பாதி எரித்து சாம்பலோடு அந்த நிறுவனத்திற்கே அனுப்பியிருக்கிறார்கள்.
கண்டனக் குரல்களைக் கண்டு நடுங்கிய ஹீரோ ஸ்ப்ளண்டர் நிறுவனம் மறுநாளே முக்கியப் பத்திரிகைகளில் விளம்பரத்தை மாற்றி வெளியிட்டது. குடும்பப் பெயரில் அய்யர் என்பதற்குப் பதில் குமார் என்று வெளியிடப்பட்டது. மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று இளைஞர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டும் இதே போல பேபால் நிறுவனம் தனது நிறுவனத்திற்குள் நடந்த போட்டிகளுக்கு இதே போல ஜாதிப் பெயர்களை வைத்த போது மென்பொருள் துறையைச் சேர்ந்த இளைஞர்களே போராட, மன்னிப்புக் கேட்டு அந்தத்திட்டத்தை மாற்றியது அந்நிறுவனம். இது தான் தன்னெழுச்சியான உணர்வு. பெரியார் விதைத்த விதை எப்படி வேலை செய்கிறது என்பதற்கு இவை எடுத்துக்காட்டுகள். அதே சமயம், இதைப் பொறுக்காத பார்ப்பனியம் அடுத்தடுத்து எடுக்கும் தொடர் நடவடிக்கைகளைக் கவனமாகக் கையாள வேண்டும்.
தொகுப்பு: இளையமகன்