தமிழர்களால் என்றென்றும் மறக்கப்பட முடியாத மாமனிதரான பானகல் அரசர் 9.7.1866ஆம் நாள் காளஹஸ்தியில் பிறந்தார். இவருடைய மூதாதையர்கள் பானகல்லு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ‘பானகல் அரசர்’ என அழைக்கப்பட்டார். இவருடைய இயற்பெயர் இராமராய நிங்கார் என்பதாகும். பள்ளிப் படிப்பை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும் இளங்கலைப் பட்டப் படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியிலும் முடித்தார். 1899ஆம் ஆண்டு சட்டப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1917ஆம் ஆண்டில் டாக்டர் டி.எம்.நாயரும், சர்.பிட்டி தியாகராயரும் சேர்ந்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியைத் தொடங்கிய போது, அதில் சேர்ந்து பணியாற்றினார். 1920ஆம் ஆண்டு இரட்டை ஆட்சி முறையின்கீழ் சென்னை மாகாணத்திற்கு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் 1921ஆம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநிலப் பிரதமராகப் பதவி ஏற்றார். இந்தக் காலத்தில் இவர் பார்ப்பனர் அல்லாத மக்களுக்காகப் பொறித்த சாதனைகள் அசாதாரணமானவை.
வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து முதல் ஆணை பிறப்பித்தார். பார்ப்பனர்களின் வேட்டைக் காடாக இருந்த கோவில்களின் நிருவாகத்தை ஒழுங்குபடுத்த ‘இந்து அறநிலையத்துறை’ என்ற ஒன்றை ஏற்படுத்தினார். பறையன், பஞ்சமன் என்றிருந்த பெயர்களை மாற்றி ஆதிதிராவிடர் என்றே அழைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்த சமூகச் சீர்திருத்தவாதி.
மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த தடையை உடைத்தெறிந்தார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய
மொழிகளில் புலமை பெற்று விளங்கினார். மகாமகா தந்திரசாலி என்று பார்ப்பனர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டவர்.
பானகல் அரசர் மறைவுற்ற போது தந்தை பெரியார் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘தேடற்கரிய, ஒப்புயர்வற்ற நமது அருமைத் தலைவர் பானகல் ராஜா சர். இராமராய நிங்கார் திடீர் என நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற சங்கதியைக் கேட்டவுடன் பொதுவாக இந்திய மக்களுக்கும் சிறப்பாக தமிழ்நாட்டு பார்ப்பனர் அல்லாத மக்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும் துக்கத்திற்கும் அளவே இருக்காது’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார் என்றால், பானகல் அரசரின் பெருமை எளிதாகவே விளங்கும்.