டிசம்பர் 2,2024 – சுயமரியாதை நாள். திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் பிறந்தநாள். நாமெல்லாம்
மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடக் கூடிய திருநாள். அய்யா ஆசிரியர் அவர்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கின்றோம்.
‘‘மற்றவர்கள் பலரும் பெரியாரை வாசிப்பவர்கள்; நேசிப்பவர்கள்.அவரது தொண்டர்களுக்குத் தொண்டனான யானோ பெரியாரைச் சுவாசிப்பவன்;பெரியார் தத்துவங்களை உலகமயமாக்க யோசிப்பவன் மட்டுமல்ல;அதற்காகவே மக்களை யாசிப்பவன்’’ என்று தன்னைப் பற்றி அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
சிறுகனூரில் அமையவிருக்கும் ‘பெரியார் உலகம்’ என்பது அய்யா ஆசிரியர் அவர்களின் பெருங்கனவு. பெரியார் தத்துவங்களை விளக்க, உயிரோட்டமான பல வசதிகளைக் கொண்டு அமையப்போகும் பெரியார் உலகத்திற்கு நன்கொடையை,
என்னுடைய 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிலே கொடுங்கள். சால்வை வேண்டாம்,பொன்னாடை வேண்டாம், ஏன் அவர் பெரிதும் விரும்பும் நூல்கள் கூட வேண்டாம். நன்கொடையைக் கொடுங்கள். தந்தை பெரியார் அவருடைய சிந்தனைகள் பெரியார் இயக்கத்தின் சாதனை என்று போற்றப்பட்டிருக்கும்(அய்யாவின் அடிச்சுவட்டில், பாகம் 5, கி.வீரமணி,பக்கம் 25)
தந்தை பெரியார் தொடங்கி வைத்த கலாச்சாரப் புரட்சியினைத் தொடர்ந்து எடுத்துச் செல்லும் படைத்தளபதியாய் அய்யா ஆசிரியர் அவர்கள் இருக்கின்றார்.தந்தை பெரியாரின் கருத்துகளை ஆங்கிலத்தில் கொண்டுசெல்வதற்கான பல்வேறு முயற்சிகளை அய்யா ஆசிரியர் அவர்கள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் பல ஆண்டுகளாய்.தமிழ்நாட்டில் இருந்து படித்து, பட்டம் பெற்று வெளிநாடுகளில் நல்ல வசதியாக இருக்கும் தமிழர்கள் பலரும் அய்யா ஆசிரியர் அவர்களின் ஆங்கிலமாக்கல் முயற்சிக்குப் பெரும் உதவியாக இருக்கிறார்கள்.பெரியார் பன்னாட்டு மய்யத்தின் கிளைகள் பல்வேறு நாடுகளில் இருக்கின்றன. அதன்மூலம் தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பல்வேறு வகைகளில் பரப்பும் பணி நடைபெற்று வருகின்றது.
முழுமையாகத் தந்தை பெரியார் அவர்களின் கருத்துப் புரட்சியை, கலாச்சாரப் புரட்சியை ஆங்கிலத்தில் கொண்டு செல்லவேண்டும் என்னும் அய்யா ஆசிரியர் அவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றுவதற்கு இன்றைக்குச் செயற்கை நுண்ணறிவு என்னும் அறிவியல் கைகொடுக்கிறது. பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்காவின் இயக்குநர் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் பங்களிப்பில், அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் செயற்கை நுண்ணறிவு வழியாகத் தந்தை பெரியாரின் கருத்துகளைக் கொண்டு செல்ல ஒரு படை உருவாகி அறிவுப் பணியைச் செய்து கொண்டு இருக்கிறது.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
அந்த நூற்றாண்டு இயக்கத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் பங்களிப்பை அளித்துக் கொண்டு இருப்பவர் அய்யா ஆசிரியர் அவர்கள். தமிழ்நாட்டுக் கிராமங்களுக்குச் சரியான பாதைகளே இல்லாத 1950-1960களில் ஊர் ஊராகச் சுற்றுப்பயணம் செய்து இயக்கக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தவர் அய்யா ஆசிரியர் அவர்கள். ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியராய் தந்தை பெரியார் அவர்களால் மிக இளம் வயதில் ஆக்கப்பட்டு,கின்னஸ் வரலாற்றுச் சாதனையாய் அதில் முத்திரை பதித்து இன்றுவரை பிரச்சாரத்திற்கானபெரும் பீரங்கியாய் ‘விடுதலை’ வரக் காரணமாகஇருப்பவர். 1990களில் வந்த கணினி அதற்குப் பின் வந்த இணையம், வாட்சப், முக நூல், டுவிட்டர் என அத்தனை சமூக ஊடகங்களிலும் தந்தை பெரியாரின் கருத்துகளை விதைப்பதற்கு வித்தாக இருப்பவர். நாளைய உலகை ஆளப்போகும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தையும் தந்தை பெரியாரின் கருத்துப் பிரச்சாரத்திற்கான களமாய் ஆக்குவதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.
தந்தை பெரியாரின் அத்தனை கருத்துகளும் செயற்கை நுண்ணறிவு மூலமாக ஆங்கிலத்தில் மட்டுமல்ல, பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் போகப்போகின்றது.’இனிவரும் உலகம்’எப்படிப் பொதுவுரிமை படைத்ததாக, பொதுஉடைமை உடையதாக இருக்கவேண்டும் என்று சிந்தித்த மாபெரும் சிந்தனையாளரின் படைப்பு உலக மக்கள் அனைவரையும் சென்று அடையப் போகிறது.மானுடத்தின் சரிபாதியாக உள்ள பெண்களின் துயரைத் தீர்ப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எப்படி எல்லாம் சிந்தித்து உள்ளார், எத்தனை செயல்திட்டங்களைப் பெண்ணினத்திற்கு அளித்துள்ளார் என்னும் செய்தியெல்லாம் செயற்கை நுண்ணறிவு மூலம் உரைகளாய்,படங்களாய், உயிரோட்டமுள்ள பல்வேறு விளக்க நிகழ்வுகளாய் உலக மக்களைச் சென்றடையப் போகிறது.
இப்போதே பெண்கள் அமெரிக்காவில், ட்ரம்பிற்கு வாக்களித்த வலதுசாரி ஆண்களோடு காதலும் இல்லை,கல்யாணமும் இல்லை,பாலுறவும் இல்லை, குழந்தை பிறப்பும் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.அதனை ஒரு மிகப்பெரிய இயக்கமாக (4பி) கட்டமைத்திருக்கிறார்கள். ஆண்களே, உங்களுக்கு என்ன நாங்கள் வெறும் காமத்தைத் தீர்க்கும் வெறும் பிண்டங்களா? என்று கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். பெண்களின் போராட்டம் தென்கொரியா முதல் அமெரிக்காவரை பரவுகிறது. விரிவாக இதனைப் பற்றித் தெரிய இந்த இணைப்பைப் படிக்கலாம் https://www.bbc.com/tamil/articles/c36p8zg2dnjo. பெண்களின் இன்றைய உரத்த உரிமைக் குரலைப் படிக்கும்போது, கம்பீரமாகத் தந்தை பெரியார்தான் அதற்குள் அமர்ந்து இருக்கின்றார்.
மனிதகுல வரலாறு பற்றி ஆராய்ச்சி அடிப்படையில் பல்வேறு நூல்களை எழுதிவரும் யுவால் நோவா ஹராரி என்னும் எழுத்தாளர், செயற்கை நுண்ணறிவின் வரவால், இப்போதிருக்கும் கடவுள்களும், மதங்களும் காணாமல் போய்விடும் என்று சொல்கிறார். It’s not just atheists who say that religions are filled with fictional stories invented by people. The only difference is that religious people make an exception for their own religion. இப்போது தங்கள் மதக் கடவுள் தவிர மற்ற மதக்கடவுள்கள் எல்லாம் கதைகள் என்று சொல்கிறார்கள். ஆனால் இப்போது நாத்திகவாதிகள் சொல்வது போல அனைத்து மதக் கடவுள்களும் கதைகளே என்று அனைவருமே அறிந்துகொள்வார்கள் என்று சொல்கின்றார். ஆனால் புதுவிதமான கடவுள்களும், மதங்களும் வேறுவடிவில் தோன்றக்கூடும் என்றும் அவர் கூறுகின்றார்.உண்மையான நிகழ்வுகள் போலக் கடவுள்களின் கதைகளை ஆக்கவும் கூடும் என்றும் அவர் எச்சரிக்கின்றார். அப்போதும் மிகத் தீவிரமாகப் பெரியாரே தேவைப்படுவார். ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை’ என்பது அன்றைக்கு உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கப்படும் முழக்கமாக மாறக்கூடும்.
தந்தை பெரியாரின் தத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கே கூடுதல் அறிவு தேவைப்படுகிறது. அந்தத் தத்துவத்தை ஒன்பது வயதிலேயே புரிந்து கொண்டு பரப்பிடும் தலைவராய், வழிகாட்டிடும் தலைவராய், இன்றைக்குச் செயற்கை நுண்ணறிவு வழியாகவும் உலகமயமாக்கிட வழி அமைக்கும் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் வாழ்க! வாழ்க! நூற்றி அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்க! வாழ்க!