விக்டோரியா மாளிகைக்கு ‘‘சமூகநீதி மாளிகை’’ என்று பெயர் சூட்டுக!

2024 டிசம்பர் 1-15 2024 தலையங்கம்

‘நீதிக்கட்சி’ என்று எளிய மக்களால், வாஞ்சையோடு அழைக்கப்பட்ட தென்னிந்தியர் நல உரிமைக் கழகம்
(South Indian Liberal Federation) என்ற அமைப்பு பிறந்த நாள் 20.11.1916.

பார்ப்பனரல்லாதார் இயக்கம் – The Non-Brahmin Movement என்று பரவலாக அழைக்கப்பட்டதும், அறியப்பட்டதுமான சமூகநீதிக்கான இயக்கம் அது.
பஞ்சம, சூத்திர, கீழ்ஜாதிகள் என்று ஆரிய வருண தர்மத்தால் பிரிக்கப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்புகள், சொத்துரிமை, திருமண உரிமை உள்பட அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட நாட்டின் பெரும்பாலான மக்களாகிய ஒடுக்கப்பட்ட, பழங்குடியினர், ஆதிதிராவிடர்கள், திராவிடர்கள் உள்பட அனைவருக்கும் சமத்துவமும், சம உரிமையும் கோரியே, நீதி கேட்டுப் பிறந்த இயக்கத்தின் தொடக்க நாள் அது!

இந்த நாட்டில் வணிகத்திற்காக வந்த பிரிட்டீஷ்காரர்களின் கம்பெனி (கிழக்கிந்திய கம்பெனி) நாளடைவில் அதன் ஆதிக்கக் கரங்களை நீட்டி, அதிகாரத்துவம் பெற்று, பிறகு அது பிரிட்டீஷ் சாம்ராஜ்ய காலனியாதிக்கத்திற்கு உட்படுத்திய ஒன்றாக ஆகியது!

வேதங்களையும், மநு தர்மத்தையும் வைத்து, கல்வியை ஏகபோகத்திற்குக் கொண்ட மேல் வருண பார்ப்பனர்கள், ஆங்கிலத்தை முதலில் படித்து, பிரிட்டீஷ்காரர்களிடம் ராஜ விசுவாசம் பொங்க, ராஜபக்தியைக் காட்டி, அவர்களுக்குத் தேவையான உதவியாளர்களாக, அரசு ஊழியர்களாக அவர்களை நெருங்கி, அதிகாரத்தினைக் கைப்பற்றினர்.
அந்த நாளில், காங்கிரஸ் என்ற அரசியல் அமைப்பினை உருவாக்கிய ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்ற வெள்ளைக்கார அய்.சி.எஸ். ஓய்வு பெற்ற அதிகாரியை ஆதரித்து, ஆரிய பார்ப்பனர் ‘ததாஸ்து’ பாடி ஒவ்வொரு ஆண்டும் அந்த அரசியல் அமைப்பின் மாநாட்டிலும் வெள்ளை அரசுக்கு ராஜ விசுவாசத் தீர்மானம், மன்னர் வாழ்த்து, வெள்ளையர்களை மாநாட்டுத் தலைமை ஏற்கச் செய்வது, பிரிட்டீஷ் அரசு மஹாவிஷ்ணுவால் அனுப்பப்பட்ட அவதாரம் என்றெல்லாம் பலபடப் புகழ்ந்து தங்களது செல்வாக்கினை உயர்த்திக் கொண்டனர். சுயநலத்தைப் பெருக்கிக் கொண்டனர்.

அடுத்தகட்டமாக, வெள்ளையர்களுக்கே முக்கிய அய்.சி.எஸ்., அய்க்கோர்ட் ஜட்ஜ் என்ற பெரும் பதவிகள் சென்றதைக் கண்டு, அதில் தாங்களும் பங்குபெற வேண்டும் என்றே, தேசியப் போர்வையில் இந்தியர்களுக்கும் பங்கு வேண்டும் அதிகார வர்க்கத்தில் என்று வெள்ளையர்களைக் கேட்டு, ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டதால், அவர்கள் தங்களது ஏகபோகத்தை நிலை நிறுத்த சில முக்கியப் பதவிகள் ‘முதல் இந்தியர்’ என்ற பெயரில் பார்ப்பனருக்கே தரப்பட்ட நிலை தொடர்ந்ததைக் கண்டு குமுறி எழுந்ததுதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.

அனைவருக்கும் பரவலாகக் கல்வி, அரசுப் பணி பகிர்ந்தளிக்கவே போராடப் பிறந்ததே இந்தப் பார்ப்பனரல்லாதார் இயக்கம்.
பெரும்பான்மையான மக்களின் கல்வி உரிமை, உத்தியோக உரிமை, சமத்துவ, சம வாய்ப்புக்காகவே விழிப்புணர்வை ஏற்படுத்த முன்னோட்ட முயற்சியை டாக்டர் சி.நடேசனார், சென்னை திருவல்லிக்கேணியில் திராவிடர் இல்லம் மூலம், கல்வி உதவிகள்மூலம் கால்கோள் இட்டார்.

அதன்பிறகு 1916 பார்ப்பனரல்லாதார் சமூக நிலையைப் படம் பிடித்துப் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை – Non Brahmin Manifesto சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர், பானகல் அரசர் போன்ற பெருமக்கள் வெளியிட்டு, அதன் பின்னரே நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்கம் பிறந்தது!

தங்களிடம் பங்கு கேட்க வந்துவிட்டார்களே என்று ஆத்திரத்தால் பொங்கிய ஆரியம், இதனை ‘வகுப்புவாத இயக்கம்’ என்று வர்ணித்து, விஷமப் பிரச்சாரம் செய்தது!
ஊடகங்கள், செய்தித்தாள்கள் எல்லாம் ‘பார்ப்பனர் வசம்’ என்பதால், அது அவர்களுக்கு எளிதாகிவிட்டது!

அதை பார்ப்பனரல்லாதார் உடனடியாக ‘கபக்’ என்று பற்றிக் கொண்டதால், 1920 இல் நடைபெற்ற (குறைந்த அதிகாரம் உடைய நிலையில்) நீதிக்கட்சி சென்னை ராஜதானி ஆட்சியை தங்கள் வசமாகும் அளவுக்கு மக்களது பேராதரவினைப் பெற்று, அதன் முதல் தேர்தலிலேயே முத்திரை பதித்தது!

அந்த இயக்கத்தைத்தான் வெறும் பதவி வேட்டை இயக்கம், உத்தியோகத்திற்காக பிரிட்டிஷ்காரர்களுக்கு வால் பிடித்த இயக்கம் என்று அவதூறு மழை பொழிந்தது ஆரியம்!
அவற்றையெல்லாம் தாண்டி, நெருப்பாற்றில் நீந்திதான் – வெற்றியடைந்து திராவிடர் ஆட்சி – சமூகநீதிக் கொடி தலைதாழாது பறக்கும் ஆட்சியாக – இன்றும் எட்டுத் திசையும் எழிலார்ந்த பெருமை கொள்ளும் இயக்கமாய் பெரும் ஆலமரமாகி, அதன் பலமான தந்தை பெரியார் என்ற வேருடன் விழுதுகளும் பரவலாகித் தழைத்தோங்கி வளர்ந்துள்ளது!
1967 இல் அண்ணா, ‘‘எனது ஆட்சி – நீதிக்கட்சிகளின் பேரன்கள் ஆட்சி’’ என்றார்!

இன்று, அது பேரன், கொள்ளுப்பேரன், எள்ளுப் பேரன்கள் ஆட்சி – திராவிடத்தின் மீட்சியில் ஓங்குபுகழ் அண்ணா, கலைஞர் ஆட்சிகளுக்குப் பிறகு, சாதனைச் சரித்திரத்துடன் உலகத்தின் கவனத்தை ஈர்த்து, ஆயிரங்காலத்துப் பயிர்களாகி, அடலேறுகளின் துணைகொண்டு தகைமையோடு தலைநிமிர்ந்து திராவிட மாடல் ஆட்சி புரிகிறது!
109ஆம் ஆண்டில் முதுமை இல்லை – இளமையும், முதிர்ச்சியுமே எங்கும் – என்றும்!

நமது ‘திராவிட மாடல்‘ ஆட்சியின் நாயகருக்கு – முதலமைச்சருக்கு நமது முக்கிய வேண்டுகோள் ஒன்று.

சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள முந்தைய வி.பி.ஹால் என்ற விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற பாரம்பரிய வரலாறு படைத்த அந்தப் பழைய கட்டடத்தினைப் பழுது பார்த்து, அப்படியே அதன் பூர்வ மரபு உரிமையோடு இன்று நமது தி.மு.க. ஆட்சி மாநகராட்சி சீரமைப்புச் செய்து வருகிறது.

இன்னும் ஓரிரு மாதங்களில் திறப்பு விழா நடைபெறவிருக்கும் அக்கட்டடத்தில்தான் சமூகநீதிப் பிரகடனங்கள், வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த நிகழ்வுகள், மொழி உரிமைக் குரல் எல்லாம் நடந்தேறின என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, ‘சமூகநீதி மாளிகை’ என்ற புதிய பெயரை இணைத்து, அந்த அரங்கிற்குச் சூட்டுவதோடு, அந்தத் தலைவர்களின் சிலைகளையும் நிறுவுவது மிகவும் பொருத்தமாகும்!
திராவிட உணர்வாளர்கள், சமூகநீதியாளர்கள் சார்பில் இதை ஓர் அன்பு வேண்டுகோளாக மாண்பமை மானமிகு முதலமைச்சருக்கு நாம் சமர்ப்பிக்கின்றோம் – செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு!

‘அனைவருக்கும் அனைத்தும்’ – ‘அனைத்தும் அனைவருக்குமான’ சமூகநீதி ஆட்சி வெல்க!