ஜாதி என்பது சான்றிதழன்று- வாசுகி பாஸ்கர்

2024 கட்டுரைகள் நவம்பர் 16-30
2. கோவில் என்பது ஆண் / பெண் / திருநங்கை என்கிற எந்தப் பாலின பேதமுமற்ற இடமாக அறிவிக்கப்பட வேண்டும். அதன் மூலம் பெண்களை மாதவிடாய் தீட்டு என காரணம் சொல்லிப் புறக்கணிப்பது (Untouchability Offence) தீண்டாமைக் குற்ற2மாக ஆக்கப்பட வேண்டும். சமத்துவம் பேசும் ஆண்கள்கூடப் பரவலாக இறை ஊழியத்தில் பெண்கள் / திருநங்கைகளுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவது குறித்தோ, சில கோவில்களில் வழிபாட்டுக்கே உரிமை மறுக்கப்படும் கொடுமைகள் குறித்தோ பேசுவதில்லை.
சமத்துவம் என்பது ஆணுக்கு மட்டும் அதிகாரப் பகிர்வு கொடுப்பதல்ல. இந்த உரிமைகளைப் பாலினம் தாண்டிப் பெற்றுத் தந்தால் தான், பெண்களே தாமாக முன்வந்து மாதாந்திரத் தீட்டுக்குத் தம்மை உட்படுத்தி விலகி நிற்கும் கொடுமையில் இருந்து முற்றிலுமாக வெளிவர முடியும். உதிரப்போக்கு என்பது தீண்டாமை அல்ல என்று அதிலிருந்து சுயமாய் வெளிவருகிற பெண்களும், விழிப்புணர்வு பெற்றிருக்கிற பெண்களும் பெரும்பாலும் இறை மறுப்பாளர்களாக இருப்பதால், அவர்கள் ஆத்திக காரியங்களில் ஈடுபடுவதில்லை. அதேநேரம் கடவுள் / பக்தி என்பது அதை நாடிப் போகும் அனைவருக்குமே பொது என்கிற சமத்துவக் கருத்தை நோக்கிச் செல்லும் போது, பாலினப் பிரிவினைகள் எப்படிச் சமத்துவமாகும்?
3. கோவில்களில் தட்டு ஏந்தி காசு பெறும் வழக்கம் ஒழிக்கப்பட்டு மாதாந்திர சம்பளத்தோடு அரசுப் பணியாளர்களுக்கு உண்டான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அர்ச்சகர், குருக்கள் போன்ற குறிப்பிட்டச் சமூகத்தை அடையாளப்படுத்தும் பெயர்கள் வழக்கொழிந்து “இறை ஊழியர்கள்” என்பதைப் போல, அந்தந்த மாநில மொழிகளில் இறைபணியைக் குறிப்பிடும் பெயர் மாற்றப்பட வேண்டும்.
4. திருமண முறைகளில் ஆண் வீட்டாரும், பெண் வீட்டாரும் சம அளவில் திருமணச் செலவை பங்கிட்டு, அரசு பதிவுத்துறையில் கட்டாயப் பதிவுத் திருமணம் செய்வதோடு, மாநிலக் கலாச்சாரத்தோடு ஒன்றிய ஒரு முறைப்படி திருமண முறைகள் இருத்தல் வேண்டும். நம் சமூகத்தில் ஜாதிக்கொரு திருமண முறை இருப்பதாலும், திருமணம் செய்யும் முறையே நமக்கு ஒரு குறிப்பிட்டச் சமூகங்களை அடையாளப்படுத்தி விடுவதாலும், வரதட்சணை கொடுக்கும் முறையிலும் ஜாதியம் இருப்பதாலும், வரதட்சணை கேட்பதே முறைசாராக் குற்றமாகக் கருதப்பட வேண்டும்.
5. சுடுகாடுகள் அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு, மின்தகன முறையில் எல்லாப் பிணங்களும் எரிக்கப்பட வேண்டும். ஜாதிக்கொரு மண்டபம், ஜாதிக்கொரு சுடுகாடு, சுடுகாட்டிலேயே ஜாதிக்கொரு இடம் என்றிருப்பது குற்றமாக்கப்பட வேண்டும்.
6. பள்ளிகளில் இறைவழிபாட்டுப் பாடல்களுக்குப் பதில் பொதுமறைப் பாடல்கள் இயற்றப்பட வேண்டும். அரசு சார்பிலோ, அரசு அலுவலகங்களிலோ குறிப்பிட்ட மதக் கடவுளர்களை வழிபடுவது தடுக்கப்பட வேண்டும்.
7. கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாநிலக் கலைகளை வளர்ப்பதற்கும், தொன்மையானக் கலைகளை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கும், அதிலிருக்கும் வேறுபாடுகளைக் களைவதற்கும் அரசு சார்பில் ஒருங்கிணைந்த விழா எடுக்கப்பட வேண்டும். பறையிசையில் இருந்து தவில் வரை, கோவில் உட்பட எல்லாக் கொண்டாட்டங்களிலும் பாகுபாடின்றிக் கலைகளின் பங்களிப்பு இருத்தல் வேண்டும்.
8. பெயருக்குப் பின் ஜாதிப்பெயரை இணைத்துக் கொள்ளும் வழக்கம் ஒழிக்கப்பட வேண்டும். ஊர், தெரு, சாலை, போன்றவற்றிற்கு ஜாதியோடு சேர்ந்த பெயர்களைச் சூட்டுவது கூடாது. ஜாதிப்பெயர் எல்லாத் தளங்களிலும் இருந்தும் நீக்கப்பட வேண்டும், மேட்ரிமோனியல் இணையதளங்கள் உட்பட. ஒருவர் தான் எதிர்பார்க்கும் கல்வி, பொருளாதார, அல்லது தனிப்பட்ட விருப்ப கோரிக்கைகள் மேட்ரிமோனியலில் தகவல்களாக இருக்கலாமே ஒழிய, ஜாதி ரீதியான அடையாளங்கள் பதிவேற்றம் செய்யப்படமாட்டாது என்பதை உறுதி செய்யவேண்டும். ஜாதிச் சங்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும். மொத்தத்தில் ஜாதிப்பெயர் என்பது, மக்கள் மன்றத்தில் பயன்படுத்தத் தகுதியில்லாத Unparlimentary வார்த்தையாக அறிவிக்கப்பட வேண்டும்.
9. கல்வியில் பின்தங்கிய மக்களைக் கணக்கெடுத்து, வருடந்தோறும் அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான (குறைப்பதற்கான) முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தின் எண்ணிக்கையை ஒப்பிட்டு அரசு சார்பில் கல்வி விகிதாச்சார அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
10. அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள், அரசு சார்ந்த பயனீட்டாளர்களைக் கணக்கெடுத்து, அவர்களுக்கு முதன்மை அங்கீகாரம் கொடுப்பதைப் போல ஏதோவொரு மானியம், சலுகை, ஊக்கத்தொகை, உதவியை அரசு வழங்கிட வேண்டும்.
தனியார் மருத்துவமனை, கல்லூரி, பள்ளி என்று தனியாரை நாடிப் போக வசதியில்லாத மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தான் பரவலாக அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். இட ஒதுக்கீட்டைப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்குக் கொடுக்கவேண்டுமெனச் சிலர் கொல்லக் கேட்டிருக்கிறோம். இடஒதுக்கீடு என்பது வெறும் பொருளாதாரப் பின்னடைவுக்காக உருவாக்கப்பட்டதன்று. அப்படியே ஒரு வாதத்திற்கு இந்தக் கூற்றை ஏற்றாலும், தற்போது நடைமுறையிலேயே பெரும்பான்மையாகப் பொருளாதாரப் பின்னடைவில் இருப்பது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் தான். ஆகையால், அரசைச் சார்ந்து இருப்பவர்கள் குறித்த துல்லியமானத் தகவல்களைச் சேகரித்தாலே அரசு உதவிகள் நியாயமானோரைச் சேரும்.
ஜாதியை இந்திய அரசாங்கம் உண்மையிலேயே கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் இருந்து ஒழிக்க வேண்டுமென்றால், மேற்சொன்னவற்றோடு ஜாதி உயிர்ப்போடு இருப்பதற்கான இடங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்து, துரித நடவடிக்கைகளை இந்த அரசியலமைப்புச் சட்டம் எடுக்க வேண்டும். அப்படிச் செய்வதால் மட்டும் ஜாதி ஒழியுமா? என்கிற கேள்வி தவிர்க்க இயலாதது. இதையும் தாண்டிப் பல பரிணாமம் எடுக்கக்கூடியது ஜாதி.
ஆனால், அந்த ஜாதியானது, காவல் துறையும், நீதிமன்றங்களும் இருக்கும் போது எப்படி கொலை, கொள்ளை, ஊழல் போன்ற மக்கள் விரோதச் செயல்பாடுகள் இருக்கிறதோ, அது போன்றதொரு குற்றமாகக் கூனிக் குறுகிய நிலையிலிருக்கும். எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் அதிகாரத்தோடு இருக்காது.
சட்டங்கள் வலுவாக்கப்படுவது குற்றங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத்தான். குற்றமே நடக்காது என்கிற உத்தரவாதத்தைக் கொடுக்க அல்ல. அதுபோல ஜாதி என்பது ஒரு குற்றமான உணர்வாக்கப்பட வேண்டும்.
மராத்தியத்தை ஆண்ட பேஷ்வாக்களின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிழல் கூட இந்துக்களின் மீது படக்கூடாது என்று தெருவில் நடமாடவே அம்மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது. வரலாற்றில் இருந்த இத்தகைய நேரடித் தீண்டாமைக் கொடுமைகள் எல்லாம் தற்காலத்தில் பரவலாக அழிக்கப்பட்டு நமக்கெப்படி புத்தகங்கள் வாயிலாக இத்தகவல்கள் கிடைக்கிறதோ, அது போல எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஜாதி என்பது வரலாற்றுச் செய்தியாகவே இருக்கும்; ஜாதியை ஒழிக்க வேண்டுமானால் மேற்சொன்ன பதினோரு வழிகளோடு சேர்த்து மேலும் பல கடுமையான சீர்திருத்தங்கள் மூலம் ஜாதியை இந்தச் சமூகத்தை விட்டு அகற்றலாம்.
ஆனால், இவை எதுவுமே சாத்தியப்படுவதற்கான காலநிலை அமையாது. இந்தியத் தேசமே மேற்சொன்னவற்றைக் கேட்டுச் சிரிக்கும் அல்லது சினம் கொள்ளும். ஆனாலும் ஜாதியை ஒழிக்க இடஒதுக்கீட்டை விலக்கிக் கொள்ளவேண்டுமென எந்தவிதக் கூச்சமுமின்றி அதிகாரமாய்ச் சொல்லும். வாழ்வியல், கலாச்சாரத்தோடு ஊறி ஒன்றாகிப் போன ஜாதி ஒழியவே ஒழியாது என்கிற திடமான நம்பிக்கையில் தான் பொய்க்காரணங்களைச் சொல்லி, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்கு இயற்றப்பட்ட சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஜாதியொழிப்பு சாத்தியப்பட்டாலும், சமத்துவமின்மை என்பது கல்வி, பொருளாதாரம், ஒருவரின் சூழல், நிலை என்று பல்வேறு கூறுகளாக இருந்துகொண்டே தானிருக்கும். இந்தச் சமத்துவமின்மைகளில் ஜாதி ஏன் முதலில் அழிக்கப்பட வேண்டியதாக இருக்கிறதென்றால், இரண்டு முதலாளிகளை எதிர்த்து, இரண்டு கூலித் தொழிலாளிகள், இரண்டு ஏழைகளும் ஒரே வர்க்கமாக ஒன்றிணைந்து போராடும்படியான சந்தர்ப்பத்தை ஜாதி தடுக்கிறது. மக்களைப் பிரித்தாள்கிறது.
அம்பேத்கர் குறிப்பிட்டதை மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தால், அவர் ஹிந்து மதத்தின் நம்பிக்கைகளை நோய் என்கிறார். அந்த நோய் பிற இந்தியர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தீங்கு விளைவிப்பதாகச் சொல்கிறார். நோய் என்று அவர் குறிப்பிடுவது சாதியத்தையும் அதனோடு ஒட்டிப்பிறந்த சம்பிரதாயங்களையும் தான். அந்த நம்பிக்கைகளைச் சீராய்வு செய்யாமல் ஜாதியொழிப்பு சாத்தியமற்றது என்பதனைத் தீர்க்கமாகச் சொல்கிறார்.
ஜாதியை ஒழிக்க வழிகள் உண்டு. அமெரிக்காவில்  கறுப்பின மக்களுக்கு ஆதரவாகத் தன் சொந்தபந்தங்களையே எதிர்த்துக் கடுமையாகச் சண்டையிட்டார்கள் வெள்ளை இனச் சீர்திருத்தவாதிகள். சீர்திருத்தங்களை ஏற்க மறுத்த வெள்ளையர்களை வெள்ளையர்களே சமூகத்தில் இருந்து அகற்றினார்கள். ஆனால், இந்தியாவில் வெறும் நம்பிக்கைகளின் பெயரிலான ஜாதி சம்பிரதாயச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவே தயாராக இல்லாதவர்கள், ஜாதி ஏற்றத்தாழ்வுக்கும், ஜாதியொழிப்புக்கும் தீர்வுகள் சொல்வார்களேயானால், அந்தத் தீர்வுகளினால் தங்களின் சாதிய அடையாளம் எப்படியும் பாதிக்கப்படாது என்கிற நம்பிக்கையாகத் தான் இருக்கும்.  நேரடியான ஜாதி வெறியர்களைக் காட்டிலும், போலி சமத்துவவாதிகள் ஆபத்தானவர்கள்.
(’மற்றமையை உற்றமையாக்கிட’ என்னும் நூலிலிருந்து…)