“ஏங்க, பென்ஷன் பணம் வந்துடுச்சா? பேத்தியோட பொறந்த நாள் வருது. துணிமணியெல்லாம் எடுக்கணும். எப்ப போறது?” ஓய்வு பெற்ற அரசு அலுவலரான கோபாலிடம் கேட்டார் அவரது இணையர் சரோஜா.
“பென்ஷன் வந்துடுச்சி. ஆனா, போன மாசம் வாங்கின கடனைக் கொடுக்கணுமே. அதோட இந்த மாசம் திருச்செந்தூர் வர்றதா வேண்டிக்கிட்டு இருக்கேன். எதுக்கும் பணம் பத்தாது. இந்த மாசமும் கடன் வாங்க வேண்டியதுதான். இந்த லட்சணத்தில் பேத்திக்கு எப்படி நல்ல துணிமணியெல்லாம் எடுக்கிறது?” என்று சலிப்புடன் சொன்னார் கோபால்.
“போன மாசம் மட்டுமா கடன் வாங்கினீங்க! மாசா மாசம் கடன் வாங்கிட்டுத்தான் இருக்கீங்க. திட்டுவான்னு பயந்துக்கிட்டு நம்ம பையன்கிட்ட மட்டும்தான் நீங்க பணம் கேட்கல. அது சரி, யாரைக் கேட்டுக்கிட்டு கோயிலுக்கு வர்றதா வேண்டிக்கிட்டீங்க. ஒவ்வொரு மாசமும் கோயில் கோயிலா அலையிறீங்களே! காசை வெட்டியா செலவு பண்றீங்களே! இதுக்காகத்தான் அரசாங்கம் உங்களுக்குப் பென்ஷன் கொடுக்குதா என்று கோபத்துடன் கேட்டார் சரோஜா.
“கோயிலுக்குப் போறதை குத்தம் சொல்லாதே. கடன் வாங்கியாவது கடவுளைக் காணவேண்டும். கடவுளுக்குச் சேவை செய்வது நமது கடமை. அப்படிச் செய்தால் கடவுள் நம்மைக் காப்பாத்துவார். மந்திரிங்க, நீதி சொல்றவங்க, ராணுவத்தில் இருங்கிறவங்க எல்லோரும் கோயிலுக்குத்தானே போறாங்க. நான் மட்டும் போகக் கூடாதா?”
“ஏங்க, அவங்களெல்லாம் நம்ம வரிப்பணத்தில் கோயில் கோயிலாச் சுத்துறாங்க. நாம அப்படியா? வர்ற பென்ஷன் பணத்தை ஒழுங்காச் செலவு செய்யுங்க. எனக்கும் உடம்பு சரியில்லை. இருதயம் கெட்டுப்போய்க் கெடக்குன்னு டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கா. அது தன்னாலேயே சரியாயிடும்னு நெனைக்கிறீங்களா?”
“சரோஜா, நீ கவலையே படவேணாம். இருதயத்தைச் சரி செய்ய யோகா இருக்கு. அதைச் செய்ஞ்சாலே போதும். எல்லாம் கிளீயராயிடும். ஒரு சாமியார் சொன்னார். யோகா நாள் கொண்டாடப்படுவது உனக்குத் தெரியுமா? உலகம் பூராவும் யோகா பரவிகிட்டு இருக்கு.”
“சாமியார் சொன்னார் என்பதால்தான் யோகா செய்யணுமா? அது ஒரு உடற்பயிற்சிதானே! அதுமட்டும் போதாது. டாக்டர்கிட்ட திரும்பவும் போய் காட்டி சிகிச்சை எடுத்துக்கணும். அது சரி, நானும் தெரியாமத்தான் கேட்கிறேன்… ஏதேனும் ஒரு யோகாசனம் பேரைச் சொல்லுங்க.”
“என்னை டெஸ்ட் பண்ணிப் பார்க்கிறீயா சரோஜா? ஹலாசனம் என்பது நல்ல ஆசனம். கேள்விப்பட்டிருக்கியா?
“ஹலாசனம் என்றால் என்ன? அதைத் தமிழில் சொல்லக் கூடாதா? ஏர்க்கலப்பை ஆசனம் என்று சொல்லக் கூடாதா? ஆசனம் என்பதைக்கூட இருக்கை அல்லது நிலை என்றுதான் சொல்ல வேண்டும். அதைப் போலவே தனுராசனம். அதை வில் நிலை என்று சொன்னால் என்ன? செத்துப்போன ஒரு மொழியை தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே இதை ஊக்கப்படுத்துறாங்க சில சாமியார்களும் அரசியல்வாதிகளும். அதை ஒரு உடற்பயிற்சியா மட்டும் பாருங்க. அதுவே தீர்வாக அமைஞ்சுடாது.”
சரோஜா இவ்வாறு சொன்னதும் சற்றே அதிர்ச்சியடைந்தார் கோபால்.
”நீயும் புத்தகங்கள் படிச்சிகிட்டு வர்ற போலிருக்கு. பேத்தியின் நன்மைக்காகத்தானே கோயிலுக்குப் போறேன்.”
“அந்தக் கவலையெல்லாம் உங்களுக்கு வேணாம். உங்க பக்தியை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். பேத்தியை எப்படி வளர்க்கணும்னு அவளைப் பெத்தவங்களுக்குத் தெரியும்.”
“என்ன இப்படிச் சொல்லிட்ட சரோஜா. நம்ம பேத்தி இல்லையா?”
“நம்ம பேத்திதான். ஆனால் நம்ம புள்ளை இல்லை. உங்ககிட்ட ஏதேனும் யோசனை கேட்டா மட்டும் சொல்லுங்க.”
சரோஜா இவ்வாறு சொன்னதும் ஏதோ முனகிக் கொண்டே வெளியில் சென்றார் கோபால்.
மறுநாள்.
அவரைப் போலவே ஓய்வு பெற்ற அரசு அலுவலர் அருணகிரி வீட்டிற்குச் சென்றார் கோபால். கடன் கேட்க வேண்டும் என்ற நோக்கில் சென்றார். இருவருக்கும் ஒரே வயது. நீண்ட கால நண்பர்கள்.
“திருச்செந்தூர் போகப் போறேன் அருணகிரி”, என்றார் கோபால்.
“என்ன விஷேசம்?” என்று கேட்டார் அருணகிரி.
“பேத்தி பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணிட்டா. அதுக்காக கோயிலுக்குப் போய் மொட்டை போட வேண்டிக்கிட்டேன். பணம் கொஞ்சம் வேணும்.”
“பேத்தியோட அம்மாவும் அப்பாவும் உன்கிட்ட வந்து மொட்டை போட்டு வேண்டிக்கச் சொன்னாங்களா கோபால்.”
“இல்லை, இல்லை! நானாகத்தான் வேண்டிக்கிட்டேன் அருணகிரி. பேத்தி மேலும் நல்லாப் படிக்கணும், நல்லாயிருக்கணும் இல்லையா? அதனால்தான்”
“அந்த வேலை உனக்கு வேண்டாமே கோபால். அவர்கள் பார்த்துப்பாங்க. நாம் ஓய்வு பெற்றுவிட்டோம். எஞ்சிய காலத்தை மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் வாழவேண்டும். பேத்தியைப் பார்த்தா மகிழ்ச்சியா இரு. பாராட்டிப் பேசு. அதிகமா அதிகாரம் செலுத்த வேண்டாம்.”
அருணகிரி இவ்வாறு சொன்னதும் மிகவும் வருத்தமாகப் போய்விட்டது கோபாலுக்கு. பணம் கடனாகத் தரமாட்டான் போலிருக்கே என எண்ணினார்.
“அப்போ நீ எனக்கு பணம் கடனாகத் தரமாட்டியா அருணகிரி?” என்று கேட்டார்.
“ஏற்கெனவே நீ என்னிடம் பணம் கடன் வாங்கி இருக்கியே… நானும் பென்ஷனை வைத்துத்தான் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கேன். மேலும் மேலும் நீ பணம் கடன் கேட்டால் எப்படித் தரமுடியும்? முதலில் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் வழியைப் பார்.” என்று கண்டிப்புடன் சொல்லி கோபாலை அனுப்பிவிட்டார் அருணகிரி.
அருணகிரி பணம் கொடுக்காத நிலையில் கோபால் மிகவும் குழம்பிப் போனார் கோபால். எப்படியாவது கோயிலுக்குப் போயே ஆக வேண்டும் என முடிவு செய்தார். இன்னும் அவரது நெருங்கிய நண்பர் கலையரசன் மட்டும்தான் பாக்கி. அவரிடமும் பணம் கேட்க வேண்டும். ஆனால், அவரிடமும் ஏற்கெனவே நிறைய பணம் வாங்கியிருந்தார். ஆனாலும் இப்போது வேறு வழியில்லை. கேட்டுத்தான் ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
அந்த முடிவுடன் ஒருநாள் மாலை கலையரசன் வீட்டுக்குப் போனார் கோபால். தனது நிலையை எடுத்துச் சொன்னார்.
“நான் வேண்டிக்கிட்டதால் போய்த்தான் ஆகணும். கையில் பணம் இல்லை. இந்த ஒருமுறை மட்டும் பணம் கொடு. பேத்திக்காக மொட்டை போட்டுகிட்டு வர்றேன்,” என்று கலையரசனிடம் சொன்னார் கோபால்.
அதைக் கேட்ட கலையரசன் மிகவும் எரிச்சலடைந்தார். “கோபால், ஏற்கெனவே நீ என்னிடம் கடனாக நிறையப் பணம் வாங்கி இருக்க… பணம் மட்டுமல்ல, மூன்று தங்கக் காசுகளும் வாங்கி இருக்க… ஒரு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு மொய் வைக்கப் போறதா அதுக்குக் காரணமும் சொன்னே… ஆனால், அதை ஏழுமலை சாமி கோயிலுக்குப் போய் உண்டியலில் போட்டுவிட்டு வந்தது பிற்பாடுதான் எனக்குத் தெரிய வந்தது- பக்தி உன்னை பொய் சொல்லவும் வைத்தது என்று. அந்த மூணு தங்கக் காசையும் இன்னும் எனக்குத் திருப்பியே கொடுக்கல. இப்படித் தேவையில்லாமல் கோயில் கோயிலா சுத்திக்கிட்டு பணத்தை வீண் செலவு செய்யிறது கொஞ்சம் கூட சரியில்லை. இப்படிக் கடன் கேட்டு எங்களையும் கஷ்டப்படுத்தி நீயும் ஏன் கஷ்டப்படுறே”, என்று சற்றுக் கோபத்துடனேயே கேட்டார் கலையரசன்.
“நாம் கடவுளுக்குச் செய்தால் கடவுள் நமக்கு அள்ளிக் கொடுப்பார் கலையரசா”, என்று பதில் சொன்னார் கோபால்.
மீண்டும் எரிச்சலடைந்தார் கலையரசன்.
“கடவுளுக்கு லஞ்சமா? லஞ்சம் கொடுத்து வரம் வாங்கப் போறீயா? அள்ளிக் கொடுக்கிறதை மூட்டை கட்டிக்கிட்டு வரப் போறீயா? இடைத்தரகர் போல் அங்கு உள்ளவனின் பணக்கஷ்டம் தீருமே ஒழிய, உன் கஷ்டம் தீராது. பென்ஷன் பணத்தை வைத்துக்கொண்டு கவுரவமாக வாழக்கூடாதா கோபால்?”
“நான் வர்றதா வேண்டிக்கிட்டேனே! சொன்னபடி செய்யாவிட்டால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமே கலையரசா!”
“அதெல்லாம் எதுவும் ஆகாது. போனால்தான் ஏதாவது ஆபத்து ஏற்படலாம். நீ வேணும்னா ஒரு மாதத்து செய்தித்தாள்களை எடுத்துப் படித்துப் பார்! கார் விபத்துகளைப் பற்றிய செய்திகள் நிறையவே இருக்கும். அவை பெரும்பாலும் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களின் கார்களைப் பற்றியதாகவே இருக்கும். அப்போதுதான் பல மரணங்கள் ஏற்பட்டிருக்கும்”, என்று சொன்ன கலையரசனை இடைமறித்தார் கோபால்.
“ஏன் இப்படி என்னை பயம் காட்டுகிறாய்”, என்றார்.
“பயம் காட்டவில்லை. அவர்களுக்காக அனுதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார் கலையரசன்.
“ஏன் அப்படி நடக்கிறதாம்?” என்று மீண்டும் கேள்வி கேட்டார் கோபால்.
“சொல்கிறேன் கேள் கோபால். கார் ஏற்பாடு செய்து கோயிலுக்குப் போறவங்க பக்தியில் மட்டுமே மூழ்கியிருப்பாங்க. காரில் சத்தமா சாமி பாட்டுகளைப் போட்டுக்கொண்டு இவர்களும் கத்தி பாடிக்கொண்டே பயணம் செய்வார்கள். அவர்களுக்கு சாலையின் மீது கவனம் இருக்காது. இவர்கள் அடிக்கும் கூத்தில் ஓட்டுநருக்கும் தலைவலி எடுக்கும். விடிய விடிய தூக்கமின்றி காரை அவர் ஓட்டுவார். ஓட்டுநரும் பக்தராக இருந்தால் அவரும் பக்தி வெள்ளத்தில் மூழ்கிவிடுவார். ’எல்லாம் அவன் செயல்’ என்று நினைக்கும் அனைவரின் கவனமின்மையின் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு பலர் மாண்டு போவார்கள். நான் சொல்வது உண்மையா என்பதை நீயே சரிபார்த்துக்கொள்”, என்று சொல்லி முடித்தார் கலையரசன்.
கோபாலுக்கு ஒரு விஷயம் நன்கு தெரிந்து விட்டது. கலையரசனிடமிருந்து கடன் கிடைக்காது என்பதே அது.
“நமக்கு அறுபது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ஏன், எழுபது வயதையும் நெருங்குகிறோம். இந்த வயதில் நாம் யாரையும் திருத்த முடியாது என்பது எனக்குத் தெரியும். நீயாகவே திருந்திவிடு. உன் பிள்ளை அவன் குடும்பத்தைக் கவனித்துக் கொள்வான். பேரன்- பேத்திகளிடம் அளவோடு அன்பு காட்டினால் போதும். நமக்கு நாம்தான் துணை. மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது”, என்று மீண்டும் அறிவுறுத்தினார் கலையரசன். எதுவும் பேசாமல் கலையரசனின் வீட்டைவிட்டு வெளியேறினார் கோபால்.
சில நாட்கள் கடந்த பின் கோபாலும் சரோஜாவும் சென்னைக்குக் கிளம்பினர். பெயர்த்தி தமிழரசியின் பிறந்த நாளில் அவளுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு மறு வாரம் அவர் மட்டும் கோயிலுக்குச் சென்று மொட்டை போடுவது என்பது அவரது திட்டம். நண்பர்கள் பணம் கொடுக்காத நிலையில் அவர் கையில் போட்டிருந்த ஒரே ஒரு மோதிரத்தை விற்று, செலவு செய்வது என முடிவு செய்திருந்தார். அந்த மோதிரம் அவரது அம்மா உயிரோடு இருந்தபோது அவருக்குப் போட்ட மோதிரம். அதைக் கழற்றாமல் அம்மா நினைவாகப் போட்டிருந்தார். ஆனால் பக்திப் போதையில் அதையும் விற்கத் துணிந்துவிட்டார்.
தமிழரசியின் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தபின் கோபாலிடம் தமிழரசி பேசினாள்.
“தாத்தா, எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க. ஆனாலும் நீங்க மட்டும் ஏன் இறுக்கமா இருக்கீங்க.”
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லையம்மா. நான் உனக்காக சாமி கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன்” என்றார்.
“என்ன வேண்டிக்கிட்டீங்க தாத்தா?”
“கோயிலுக்கு வந்து மொட்டை போடறதா வேண்டிக்கிட்டேன்.”
இதைக் கேட்டு பலமாகச் சிரித்தாள் தமிழரசி.
“ஏன் சிரிக்கிறாய்?” என்பது போல் அவளைப் பார்த்தார் கோபால்.
“உங்க தலையில் முடியே இல்லையே! இருக்கும் முடியை எண்ணிவிடலாம். இதை எடுக்க வெளியூர் கோயிலுக்குத்தான் போகவேண்டுமா? இங்கேயே எடுத்துக்கலாம். எனக்காக நீங்க சாமியை வேண்டிக்கிட்டு அலைய வேண்டாம். நல்லா உடற்பயிற்சி, நடைப்பயிற்சி பண்ணுங்க. அறிவுபூர்வமான கருத்தரங்குகள் நடந்தால் போங்க. நீங்களும் பங்கெடுத்துப் பேசுங்க. நீங்க அருணகிரி தாத்தா, கலையரசன் தாத்தாகிட்ட போய் பணம் கேட்டதெல்லாம் அப்பாவுக்குத் தெரிஞ்சி போச்சு. மோதிரத்தை விற்க நினைப்பதும் தெரிஞ்சி போச்சு. அதை முதலில் என்னிடம் கொடுங்க. எனக்கு ஏதாவது நல்லது செய்யணும்னா நான் சொல்வதைச் செய்யுங்க”, என்று சொல்லி, பேச்சை நிறுத்தினாள் தமிழரசி.
“என்ன செய்ய வேண்டும்?” என்றார் கோபால்.
“எனக்காகக் கோயிலுக்குப் போக வேண்டும் என்கிற எண்ணத்தை முதலில் கைவிடுங்க. அம்மா, அப்பா என்னைப் பார்த்துப்பாங்க. அதோடு மட்டுமல்ல தாத்தா, எனக்கும் நல்லது எது கெட்டது எது என்பதெல்லாம் தெரிஞ்சிட்டுது. என்னை சாக்கு வச்சி பணம் கடன் வாங்குவதோ, அலைவதோ கண்டிப்பாகக் கூடாது. நீங்களும் நிம்மதியா இருந்து மத்தவங்களையும் நிம்மதியா இருக்க விடுங்க. எனக்கு ஏதாவது செய்தே ஆகணும்னு நெனைச்சா எனக்கு நல்ல புத்தகங்கள் வாங்கிக் கொடுங்க. படிக்கிறேன். அது மட்டும் போதும். நான் தாத்தான்னு மகிழ்ச்சியா கூப்பிட நீங்க நல்லாயிருந்தா அதுவே போதும். இதை நீங்கள் செய்தாலே அதுவே நீங்கள் எனக்குத் தரும் சிறப்பான பிறந்த நாள் பரிசு”, என்று பேசி முடித்தாள் தமிழரசி.
சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார் கோபால். பெயர்த்தி சொல்வதும் சரிதான் என்பதை உணர்ந்தார். பெயர்த்திக்கு, பகுத்தறிவுச் சிந்தனை வளர்ந்துவிட்டதை உணர்ந்த அவர் ஒரு முடிவுக்கு வந்தவராய் கையில் இருந்த மோதிரத்தைக் கழற்றி, தமிழரசியிடம் கொடுக்க முயன்றார். ஆனால், தமிழரசி அதைத் தடுத்து நிறுத்திவிட்டாள்.
“வாங்க தாத்தா சாப்பிடலாம், பாட்டியும் வாங்க. எல்லோருமா உட்கார்ந்து சாப்பிடுவோம்” என்று அன்புடன் அழைத்தாள் தமிழரசி.