1. கே: ஆரிய சனாதன தர்மம்தான் இந்துக்களின் தர்மம் என்று தப்பாக இந்தியா முழுவதும் எண்ணுவதால், அது நம்மை அடிமை கொள்ள ஆரியர்
உருவாக்கியது என்பதை, வடமாநிலங் களிலும் அறிய அவர்கள் மொழியில் விளக்கி கையடங்கு நூல் வெளியிடுவீர்களா?
– கி.முருகன், தாம்பரம்.
ப : நல்ல யோசனை – செயல்படுத்த முயற்சிப்போம்! – ஓட்டு அரசியல்தான் இதில் உள்ள ஒரே முட்டுக்கட்டை – தடை!
2. கே: தலையில் தேங்காய் உடைப்பது, தீ மிதியின்போது வீழ்ந்து வெந்து சாவது போன்றவற்றைச் சட்டப்படி தடுக்க முடியாதா?
– அ.செந்தில், கோடம்பாக்கம்.
ப : நிச்சயம் தடுக்கவேண்டும் – சட்டம் மூலம். அறிவியல் மனப்பாங்குக்கு எதிரானவை இவை!
3. கே: ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை உடைக்கும் நாளே இந்துக்களின் எழுச்சி நாள் என்று கூறிய ஹிந்து முன்னணி நிர்வாகி கனல்கண்ணனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை, நீதிபதி ஜெயச்சந்திரன் ஒருதலைச் சார்பாய் ரத்து செய்திருப்பதை எதிர்த்து மேல் முறையீடு செய்வது கட்டாயம் அல்லவா?
– ப.காமாட்சி, வண்டலூர்.
ப : நிச்சயமாகச் செய்யவேண்டும் – தமிழ்நாடு அரசு. சீரங்கம் பெரியார் சிலை வாசகத்தில் இல்லாத வாசகங்கள் என்று அவர் தள்ளியிருக்க வேண்டிய வழக்கு. அதைப் பற்றிக் கவலைப்படாமல், தவறான தீர்ப்பு வழங்குவது உண்மைக்குப் புறம்பாகும். எனவே, உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய
வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை!
4. கே: பிராமணர்களை இழிவாக விமர்சிப் பவர்களுக்கு எதிராக சிறப்பு பி.சி.ஆர். சட்டம் இயற்றக் கோரி சென்னையில் நவம்பர் 4ஆம் தேதி பார்ப்பனர்கள் பேரணி நடத்த முடிவு செய்துள்ள நிலையில் நம் எதிர்வினை எதுவாக இருக்கவேண்டும்?
– கே.தாமோதரன், கொடுங்கையூர்.
ப : எனது 08.10.2024 தேதியிட்ட ‘விடுதலை’ நாளேட்டைப் பாருங்கள். நவம்பர் 5ஆம் தேதி திராவிடர் எழுச்சிப் பேரணி அதே இடத்திலிருந்து புறப்பட்டு முடியும் இடத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு சாதனை விளக்க சிறப்புக் கூட்டம் நடத்த முடிவு.
5. கே: ஒரு மாநிலத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு நம்பத்தகுந்ததல்ல என்று காங்கிரஸ் கட்சி கூறும் நிலையில் தீர்வு என்ன? உச்சநீதிமன்றம் தானே முன் வந்து இதற்குத் தீர்வு காண வேண்டாமா?
– ச.தனலட்சுமி, அரும்பாக்கம்.
ப : அலுத்துப்போன அனுபவம் இது! இறுதித் தீர்வு மக்கள் கையில்…. தேர்தல் மூலம்.
6. கே: தனியார் நிறுவனங்களில் சிறிய அளவில் அணுமின் நிலையங்களை அனுமதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது
சரியா? குப்பையாகும் அணுக்கழிவுகள் ஆபத்தை விளைவிக்கும் அல்லவா?
– த.பிரேமா, சாயல்குடி.
ப : நோய்க் கிருமி பார்வைக்குச் சின்னது தான்! ஆனால், அது உண்டாக்கும் ஆபத்து உயிர்களைக் கொல்வது போன்றது! இதில் சிறியது பெரியது முக்கியமல்ல; ஆபத்தா இல்லையா என்பதே கவனத்தில் கொள்ளவேண்டியது. அனுமதிக்கக் கூடவே கூடாது !
7. கே: அண்மைக் காலமாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர், தங்களின் விருப்பு வெறுப்பு
களின் அடிப்படையில் வழக்குகளைக் கையாள்வதும், தீர்ப்பு வழங்குவதும் தொடர்வது பற்றி தங்கள் கருத்து என்ன?
– செ.ராம்குமார், ஆரணி.
ப: நீதிமன்ற அவமதிப்பு என்ற பூச்சாண்டிக்குப் பயப்படாமல் உண்மைகளை உலகுக்கு உணர வைத்து, தண்டவாளத்தை விட்டு விலகும் நீதிபதிகளுக்கும் அதை உணர வைப்பதே இன்றைய அவசரத் தேவை !
8. கே: வேலையில் உள்ளவர்களின் உரிமைகள் காக்கப்படுதல் வேண்டும் என்பதைப் போலவே, வேலைத் தேடுவோர்க்கு வேலை
கிடைக்கச் செய்ய முதலீடுகளை ஈர்ப்பதும் கட்டாயம் என்ற இக்கட்டான நிலையில் கூட்டணிக் கட்சிகள் இச்சிக்கலை எப்படி அணுக வேண்டும்?
– பொ.பிச்சையாண்டி, உசிலம்பட்டி.
ப : உரிமை எவ்வளவு? உறவு எவ்வளவு? வாய்ப்பு எப்படி? என்று பல கோணங்களில் இரு சாராரும் ஆய்வு செய்து, இருவரில் யாருக்கும் தோல்வி ஏற்படாத
‘Win – Win’ தீர்வு காணப்படுதலே சாலச் சிறந்தது என்பது நம் கருத்து.