பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

2024 அக்டோபர் 1-15 கட்டுரைகள்

தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் _ விசாலாட்சி இணையருக்கு இளைய மகனாக 13.4.1930இல் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 2ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்ட கல்யாணசுந்தரம் சுயமரியாதை இயக்கத்திலும் கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

பத்தொன்பது வயதிலேயே கவி புனைவதில் அதீத ஆற்றல் பெற்றிருந்தார். கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது.

தமிழ்த் திரைவானில் கருத்துச் சூரியனாக வலம் வந்த இவர் பாட்டாளி மக்களின் ஆசைகளையும் ஆவேசத்தையும் பாடல் மூலம் நேரடி வர்ணனையாகத் தந்தவர். எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியதுதான் இவரது தனிச்சிறப்பு. இவர் இயற்றிய பல பாடல்களை ‘ஜனசக்தி’ பத்திரிகை வெளியிட்டது.

திரைத்துறையில் இவரது சேவையைப் பாராட்டி 1981ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ‘பாவேந்தர் விருதி’னையும் கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் ‘மக்கள் கவிஞர்’ என்ற பட்டத்தையும் வழங்கிக் கவுரவித்தது. இவரது அனைத்துப் பாடல்களும் தமிழ்நாடு அரசால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதே இவரது தனித் திறமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

இத்தகைய பெருமைக்குரிய கல்யாணசுந்தரம் அவர்கள் தனது 29ஆவது வயதில் (8.10.1959) காலமானார். மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும் நூறு ஆண்டுகள் வாழ்ந்து சாதிக்கக்கூடிய சாதனைகளை நிகழ்த்திவிட்டார் என்றே கூறலாம்.