திராவிட மாடல் ஆட்சியில் கல்விப் புரட்சி!- சரவணா இராஜேந்திரன்

2024 அக்டோபர் 1-15 கட்டுரைகள்

திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டு இளம் தலைமுறைகளுக்கான பொற்காலம்.

15ஆம் நூற்றாண்டில் அறிவியல் ரீதியாக உலகம் ஒரு புதிய பாதையை அமைக்கும் என்ற முற்போக்குச் சிந்தனையோடு அய்ரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மன், ஸ்வீடன், போர்ச்சுகல், பிரிட்டன், உள்ளிட்ட நாடுகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கின இதனால், குறிப்பாக இத்தாலியைத் தவிர்த்து மேற்கு அய்ரோப்பாவில் கல்வி வீட்டுக்குவீடு சென்று சேர்ந்தது, அந்தக் காலகட்டத்தில் அய்ரோப்பாவில் காகிதப் பயன்பாடும் உச்சத்தைத் தொட்டுக்கொண்டு இருந்த காலகட்டம். குறிப்பாக, அப்போது இந்தியாவிற்கான கடல்வழிப் பயணப் பாதை கண்டுபிடிக்கப்பட்டு கிறிஸ்துவப் போதகர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவை நோக்கி வரத் துவங்கினர்.

இதனால் இந்தியாவிலும் குறிப்பாக தென் இந்தியாவில் படிப்படியாக கல்வியில் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படத் துவங்கியது. கல்விப் புரட்சி காரணமாக திடீரென மக்களின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்கள் துவங்கியது. இது பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது. இந்த பிரெஞ்சுப் புரட்சிதான் உலகம் முழுவதும் மக்களாட்சி ஏற்படுவ்தற்கு அடித்தளமாக மாறியது.

இந்த நிலையில், காகிதப் பயன்பாடு காரணமாக அய்ரோப்பாவில் அச்சகங்கள் அனைவருக்குமான ஒன்றாக மாறியது.
1700இல் கிழக்கிந்தியக் கம்பெனி கொல்கத்தா மற்றும் சென்னையில் அச்சகங்களை உருவாக்கி அங்கேயே கம்பெனி தொடர்பான துறைகள் அனைத்தையும் ஏற்படுத்தி செயல்படத் தொடங்கினர்.

குறிப்பாக, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னைக்காயல் என்ற மீனவர் கிராமத்தில் 1550ஆம் ஆண்டிலேயே நூல்களை அச்சிடத் துவங்கிவிட்டனர், தமிழர்கள் சங்ககாலம் முதலே அறிவில் சிறந்து விளங்கினர். பிறகு வர்ணபேதம் தலைவிரித்தாடிட சுமார் 1200 ஆண்டுகள் தமிழர்களுக்கு கல்வி கிடைக்காமல் போய்விட்டது, பின்னர் 1850களின் துவக்கத்தில் கிறிஸ்துவ மிஷினரிகளின் கல்வி நிறுவனங்களில் சாமானியர்கள் கல்வி கற்கத் துவங்கினர்.

1900களில் மதராஸ் மாகாணத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தலைதூக்கிய பிறகு கல்வி
அனைவருக்குமான ஒன்றாகவே மாறி இந்தியாவிலேயே கல்விப் புரட்சி ஏற்படும் சூழலுக்கு வித்திட்டது.

சுதந்திரத்திற்குப் பிறகு திராவிடக் கட்சிகள் வளர்ச்சி பெற்று அது ஆட்சிக் கட்டிலில் ஏறிய பிறகு கல்வி மற்றும் சுகாதாரம் முதன்மையான திட்டங்களாக மாறியது. திராவிடக் கட்சியின் ஆட்சியில் ஏற்பட்ட கல்விப் புரட்சி இன்று உச்சத்தைத் தொட்டுகொண்டு இருக்கிறது.

சத்துணவு, அதன் பிறகு மதிய உணவில் முட்டை, ஊட்டச்சத்து மிக்க மதிய உணவு, காலணிகள், புத்தகப்பை,
புத்தகம், சீருடை, கட்டணமில்லாப் பேருந்து பயணம் என்று தொடர்ந்து கல்வியை நோக்கிய மாணவர்களின் பயணத்திற்கு அரசு பல வசதிகளைச் செய்து தருவதால் எந்தவிதத் தடையுமின்றி ஆர்வத்துடன் கல்வி கற்றுக்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன் பிறகு கல்விக்கான பொற்காலம் தொடங்கியது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இணைய வசதிகளைப் பள்ளிகளில் ஏற்படுத்துதல், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்திட “இல்லம் தேடிக் கல்வி”, “நம் பள்ளி நம் பெருமை”, ‘நான் முதல்வன்’ என்கிற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டம் மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் என பல்வேறு கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

அனைவருக்கும் IITM திட்டம்,

அனைவருக்கும் கல்வி – அனைவருக்கும் உயர்கல்வி என்பதை இலக்காகக் கொண்டுள்ளது தமிழ்நாடு அரசு. இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் முதன்மையான கல்வி நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது IIT, சென்னை. IIT, சென்னையில் சேர்ந்து உயர்கல்வி பயில்வதே தம் வாழ்வின் இலட்சியமாக நினைத்து இலட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் கற்றல் திறன்களை மேம்படுத்தி வருகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை நாட்டிலுள்ள முன்னணிக் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்வதற்குத் தயார்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் தொடர்ச்சியான முன்னெடுப்புதான் இது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனம், நம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையிலும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும்,அறிவியல் சிந்தனைகளை வளர்க்கும் வகையிலும் நம் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து உருவாக்கியுள்ள திட்டமே “அனைவருக்கும் IITM”.

B.S. Data Science and Applications (தரவுப் பயன்பாட்டு அறிவியல்) பட்டப்படிப்பில் சேர தமிழ்நாட்டிலுள்ள 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில் 45 மாணவர்கள் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள்.

இத்திட்டத்தின் நோக்கம், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்கும் அவர்கள் உயர்கல்வியைத் தொய்வின்றித் தொடர்வதற்கும் உதவி செய்வதே ஆகும். இந்த திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்புப் பயிலும் (500 மாணவர், 500 மாணவியர்) 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை அய்.அய்.டி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தொடர்பும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பினை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000/-வழங்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வுத் திட்டத்தில் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தங்களுடைய இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பைத் தொடரும் போது ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000/- வீதம் உதவித் தொகையும் பெறுவர்.

சமூக அமைப்போ பொருளாதார நிலைமையோ அவர்களது வளர்ச்சியைத் தடுக்கக் கூடாது. பெண் என்பதற்காக பள்ளிப் படிப்போடு அவர்களது கல்வி நிலை சுருக்கப்படக் கூடாது. இத்தகையச் சமூக அநீதிகளைக் களைவது தான் சமூகநீதி
யாகும். இடஒதுக்கீடாக இருந்தாலும் – கல்வி உதவித் தொகைகளாக இருந்தாலும் அவை வழங்கப்படு
வதற்கு இதுதான் காரணம். இதுபோன்ற சமூகநலத் திட்டங்களின் காரணமாகத் தான் சமூகமும் வளர்ந்துள்ளது. நாடும் வளர்ந்துள்ளது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக பல்வேறு உயர் பதவிகளில் பணிபுரியும் தமிழ்நாட்டுச் செல்வங்களின் பேட்டிகள் நாளிதழ்களில் மிளிர்வதைக் காண்கிறோம்.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தும் நிதியை முடக்கி தமிழ்நாட்டின் கல்வியைப் பாழ்படுத்த ஒன்றிய அரசு முனைப்போடும் வன்மத்தோடும் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்களின் கல்விப் பயணத்தைத் தொய்வில்லாமல் தொடர நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சரின் தோளோடு தோள் நின்று ஒவ்வொரு பெற்றோரும் ஒன்றிய அரசின் விரோதப் போக்கை எதிர்த்து ஒற்றுமையாக நின்று முதலமைச்ச
ரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே தமிழ்நாடு மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத மாநிலமாக உருமாறி வருகிறது. இதனால்,
தமிழ்நாட்டின் உயர்கல்விச் சேர்க்கை உயர்ந்து, மனிதவளக் குறியீடும் அதிகரித்து, இறுதி விளைவாக
தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என்பதில் அய்யமில்லை.