தீட்சிதர் பிடியிலிருந்து கோயிலை அரசு மீட்க வேண்டும்!

2024 அக்டோபர் 1-15 ஆசிரியர் பதில்கள்
1. கே: பெங்களூரில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கருத்துக் கூறிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவை உச்சநீதிமன்றம் கண்டித்து நடவடிக்கை எடுத்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– வெ. கோபி, காஞ்சிபுரம்.
ப : பகிரங்கமாக, பச்சையாக – தான் ஒரு ஹிந்துத்துவவாதி – RSS கருத்தியலைக் கொண்டவர் என்பதையும், அதன்மூலம் – தரம் தாழ்ந்தவர் – நீதிபதி பதவி வகிக்க இலாயக்கற்றவர் என்பதையும் பிரகடனப்படுத்திக் கொண்டார்; இப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பது நீதித்துறைக்கே அவமானம்; அதுவும் படு அவமானம்!
இந்த அளவில் அவரை மன்னிப்புக் கேட்க வைத்தது, (அதுகூட ஒப்புக்கு என்கிற பாணியில் இருப்பது) ‘அடிப்பது மாதிரி அடிப்பது, அழுகிற மாதிரி அழுறது’ என்றே நடுநிலையாளர்களுக்குத் தோன்றும்!
2. கே: த.வெ.க. தலைவர் விஜய் பெரியார் திடலுக்கு வந்து பெரியார் சிலைக்கு பெரியார் பிறந்த நாளில் மரியாதை செலுத்தியது, அவர் பா.ஜ.க. வலையில் வீழமாட்டார்; நா.த.க.,வுடனும் சேரமாட்டார் என்பதைக் காட்டும் நல்ல அறிகுறிதானே?
– ப. பச்சையம்மமாள், குடியாத்தம்.
ப : நல்லதுதான்; பொறுத்திருந்து பார்ப்போம்; அரசியலில் எதுவும் நிலையானதல்லவே! இப்போதைக்கு வரவேற்கத்தக்கதே!
3. கே:  மதுவிலக்கு  என்பது முட்டாள்தன மானது. குடிப்பவனைப் பற்றிக் கவலைப்படாமல், ஏழைகளுக்கு உதவ மதுக்கடை வருவாயைப் பயன்படுத்துவது சரி என்ற அம்பேத்கர் கருத்து சரிதானே? பூரணமதுவிலக்கு சாத்தியமா?
– ம. ராணியம்மாள், வண்ணாரப்பேட்டை.
ப : பூரண மதுவிலக்கும் அதன் வெற்றியும் சாத்தியமானதல்ல. காரணம், வெளிப்படையாக மது விற்கும்போதே கள்ளச்சாராய சாவு. முழு மதுவிலக்கு வந்தால் நிலைமை எவ்வளவு மோசமாகும்!
4. கே: இலங்கை அதிபராக அனுர குமார திசநாயக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், தமிழர்களுக்கு நன்மை கிடைக்குமா?
– ஜெ. பெஞ்சமின், கோடம்பாக்கம்.
ப : பொறுத்திருந்து பார்ப்போம். அவரது இடதுசாரிக் கொள்கையும் துவக்க அறிவிப்புகளும் சற்று முந்தைய நிலைப்
பாடுகளிலிருந்து மாற்றம் ஏற்பட ஒருவகையில் நம்பிக்கையை அளிக்கிறது. தமிழர்கள் ஒற்றுமை – ஒருங்கிணைப்பு இப்போது அவசியம்; அதன்மூலம் புதிதாய் வந்த அரசுக்கு அழுத்தங்கள் தர அது பயன்படும்.
5. கே: அயலகத் தமிழர்களிடையே பெரியாரின் தாக்கம் எப்படியிருக்கிறது? குறிப்பாக ஜப்பானிலும், சிங்கப்பூரிலும் எப்படியுள்ளது?
– சு. ஜெயக்குமார், நெல்லை.
ப : தொடர்ந்து ‘விடுதலை’யில் சில நாட்களாக வரும் ஜப்பான் பெரியார் மயம் – அறிக்கை,  கட்டுரைகளைப் படியுங்கள். பெரியார் உலகமயமாகி வருகிறார்; உலகம் பெரியார்மயமாகி வருகிறது என்பது புரியும்.
6. கே: 3000 ஏக்கர் நிலங்களில் 2000 ஏக்கரை சிதம்பரம் தீட்சிதர்கள் விற்றுவிட்டனர் என்ற செய்தியைத் தொடர்ந்து தமிழக அரசு எப்படிச் செயல்பட வேண்டும்?
– ப. பத்மநாதன், சிந்தாதிரிப்பேட்டை.
ப : கடும் தொடர் நடவடிக்கை எடுத்து, சிதம்பரம் நடராசர் கோயிலை தீட்சிதர் பிடியிலிருந்தும், அபகரிப்பிலிருந்தும் மீட்கவேண்டும்! அதற்கு ஏராளமான சட்டத் தரவுகள் உண்டு. பயன்படுத்தினால் பலன் நிச்சயம் கிட்டும் !
7. கே: திருமாவளவன் எதிர்ப்பதால், அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு ரத்து செய்யக்கூடாது என்ற ஆதித்தமிழர் கட்சியின் கோரிக்கை பற்றித் தங்கள் கருத்து என்ன?
– செ.மணியன், தஞ்சாவூர்
ப : தன் பிள்ளையைத் தானே கொல்ல தமிழ்நாடு திராவிட மாடல் அரசுக்கு பிள்ளைக் கறி சமைத்த பக்திப் பைத்தியமா என்ன? எனவே, ஒருபோதும் நடக்காது; திருமாவளவன் அந்த அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லையே – சற்று அவருக்கு ஏற்பட்ட ‘அகில இந்திய மயக்கம்.’ அவ்வளவுதான்!
.
8. கே: ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கைக்கு இலக்கு வைத்த தமிழ்நாடு பா.ஜ.கவினர், சேர்த்ததோ 5 லட்சம் உறுப்பினர்கள்தான். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– கே. பாக்கியம், வேப்பேரி.
ப : இது என்றும் பெரியார் மண்தான் என்பதற்கான சரியான பதிலடி – அந்த 5 லட்சமும் கூட ‘மிஸ்டுகால்’ மூலமோ என்னவோ! 