ஏழைப் பங்காளர் காமராசர் !

2024 அக்டோபர் 1-15 கவிதைகள்

குலத்தொழில் செய்யச் சொன்ன
கொடியரின் இழிவைச் சாடி
நலம்தரும் திட்டம் நல்கி
நற்றமிழ் இனத்தைக் காத்தார்!
இலக்குடன் ஆட்சித் தேரை
இயக்கினார் காம ராசர்!
பலதொழிற் சாலை கண்டார்
பள்ளிகள் திறந்தார் மீண்டும்!

பள்ளியில் படிப்போர்க் கெல்லாம்
பசித்துயர் பறந்தே ஓட
நல்லவர் போற்றும் வண்ணம்
நண்பகல் உணவுத் திட்டம்
பல்வள அணைக்கட் டுக்கள்
பாங்குறக் கொணர்ந்தார்! இல்லார்
இல்லமோ இன்பம் எய்த
ஏழைப்பங் காளர் ஆனார்!

விடுதலைப் போரில் அந்நாள்
வெஞ்சிறை ஒன்ப தாண்டாய்ப்
படுதுயர் யாவும் ஏற்றார்!
பட்டினி கிடந்து நாளும்
கெடுதலில் உழன்ற மக்கள்
கேடெலாம் நீங்கச் செய்தார்!
வடுவிலாக் கர்ம வீரர்
வாழ்த்திடும் முதல்வர் ஆனார்!

நடித்திட அறியார்! என்றும்
நாட்டவர் மேன்மை நாடித்
துடிப்புடன் உழைத்தார்! வாழ்வில்
தொண்டறம் பேணி வந்தார்!
குடிலராய் இருந்தோர் தம்மின்
கொடுஞ்செயல் வெறுத்தார்! போற்றும்
படித்திடா மேதை! வாழ்த்தும்
பண்பினால் வாழ்கின் றாரே!

– முனைவர் கடவூர் மணிமாறன்