“என்னடா பிரபு, என்ன தீவிரமா படிச்சிகிட்டு இருக்க? என்ன புத்தகம்? புதுசா இருக்கே,” மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்த தனது நண்பன் பிரபுவைப் பார்த்துக் கேட்டான் தற்செயலாக அங்கு வந்த சேரன்.
“என்னோட உறவுக்காரர் ஒருவர் புதியதாக ஒரு மாத இதழ் தொடங்கியுள்ளார். அதன் முதல் இதழ்தான் இது”, என்று பதில் சொன்னான் பிரபு.
“அப்படியா! புத்தகத்தின் பெயர் என்ன?” என்று கேட்டபடியே அவன் அருகில் உட்கார்ந்தான் சேரன்.
“டெம்பிள் விசிட்” என்று பெயர் வைத்துள்ளார்கள்” என்றான் பிரபு.
“டெம்பிள் விசிட்டா? முதலில் பெயரை, தமிழில் வைக்க வேண்டும். சரி, அந்த இதழ் ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?”
“ஆன்மிகத்தைப் பரப்ப வேண்டும். மக்கள் அனைவரையும் கோயிலுக்கு வரவழைக்க வேண்டும். ராக்கெட் விடுபவரே இப்படிச் சொல்லியிருக்காரே! நீ படிக்கலையா?”
“ஆன்மிகத்தை ஏன் பரப்ப வேண்டும்? நாட்டில் இதுதான் முக்கியப் பிரச்சினையா பிரபு?”
“சேரன்! நீ நினைப்பது தவறு. ஆன்மிகம் பரவினால்தான் நாட்டில் அமைதி நிலவும்”
“அதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா பிரபு?”
“யாகம், பூஜை செய்வது இல்லாமல் மரம் நடுவது, மருந்து விற்பது என எல்லாவற்றையும் சாமியார்கள்தானே செய்றாங்க”
“பிரபு, நீ செய்தித் தாள்களைப் படிப்பதில்லையா? சாமியார்கள் நீதிமன்றங்களில் வந்து கதறுவதைப் படிக்கவில்லையா? காடுகளை அழித்து விலங்குகளின் வாழ்வாதாரத்தைக் கெடுப்பதும் சாமியார்கள்தான்”.
“எந்தச் சாமியார் விலங்குகளை வேட்டையாடினார்? யானையே கடவுளின் வடிவம் அல்லவா?”
பிரபு இவ்வாறு சொன்னபோது கோயில் யானை ஒன்று அந்த வழியாக வந்தது. பிரபு அதன் துதிக்கையில் காசுகளை வைத்தான். பாகன் காசுகளை எடுத்துக் கொண்டபின் யானை தனது துதிக்கையைப் பிரபுவின் தலையில் வைத்து எடுத்தது. சேரனையும் அவ்வாறு செய்யச் சொன்னான் பிரபு. ஆனால், சேரன் மறுத்துவிட்டான்.
“யானை காட்டில் இருக்க வேண்டிய விலங்கு. தெருவில் பிச்சை எடுக்க வைச்சுட்டாங்க. எல்லாம் கடவுளின் பெயரால். ஒன்றை நீ புரிந்துகொள்ள வேண்டும். காடுகளைப் பாதுகாப்பதில் யானைகளின் பங்கு அதிகம். ஆனால், பல சாமியார்கள் காடுகளை அழித்து யானைகளின் வாழ்வாதாரத்தை அழிக்கிறார்கள்.
“யானை என்பது பிள்ளையாராக்கும். அவை இருக்கும் காட்டை சாமியார்கள் அழிப்பார்களா? நீ தவறாகப் பேசுகிறாய் சேரன்”
“சாமியார்கள் பிள்ளையாரையே அழிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காடுகள் அழியாமல் பாதுகாப்பதே யானைகள்தான். ஒரு யானையை நாம் பாதுகாத்தால் பதினெட்டு இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குச் சமம். அதன் சாணத்தில் இருக்கும் விதைகளால் பெரிய பெரிய காடுகள் உருவாகும். யானைகள் மற்ற விலங்குகளை வாழவிடுகின்றன. அழிப்பதில்லை. அவை ஒடித்துப்போடும் மரக்கிளைகளிலிருந்து விழும் இலைகள் மற்ற விலங்குகளுக்கும் உணவாகின்றன. கிளைகளை ஒடிப்பதால் சூரிய ஒளிபட்டு விதைகளும் முளைக்கும்.
ஆனால், மரங்களை வெட்டி, காடுகளை அழித்து யானைகளின் வாழ்வாதாரத்தைப் பாதிப்புள்ளாக்கி வருவது சாமியார்களே. திருவிழா என்கிற பெயரில் இரவு முழுக்க பலத்த ஓசையை எழுப்புவது, வாண வேடிக்கை நடத்துவது எல்லாமே விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வளவு தீங்கும் செய்துவிட்டு யானையைக் கணேசர் என்று கும்பிடவும் சொல்வார்கள். இங்கே பிச்சை எடுக்கும் யானை காட்டில் இருந்தால் நான் முன்பு சொன்ன எல்லா நன்மைகளும் ஏற்படும். நாட்டின் வளமே காடுகள்தான்.”
சேரன் இவ்வாறு சொன்னதை வியப்புடன் கேட்டான் பிரபு.
கோயில் யானை நீண்ட தூரம் சென்று மறைந்ததும் மீண்டும் அவர்கள் பேச்சு பத்திரிகை பக்கம் திரும்பியது.
“டெம்பிள் விசிட் இதழில் நான் சிறுகதை எழுத வேண்டுமாம். என்னை மிகவும் வற்புறுத்துகிறார்கள். .நீயும் ஒரு எழுத்தாளனாயிற்றே! எனக்கு ஏதேனும் ஒரு யோசனை சொல்லேன்” என்றான் பிரபு. சேரன் சற்று யோசித்துவிட்டுப் பதில் சொன்னான்.
“பிரபு! சிறுகதை என்பது நமது வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவத்தை, சுருக்கமாகப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும். முக்கியமாக நம்பகத் தன்மையுடனும் இருக்க வேண்டும். வருணனை குறைவாக இருந்து, கதை முழுமை பெற்று, படிப்பவர்களுக்குக் கதைக்கரு நல்ல தெளிவான கருத்தைச் சொல்ல வேண்டும். உண்மைத் தன்மை இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதே” என்று விளக்கிப் பேசிய சேரன் பிறகு மீண்டும் பிரபுவைப் பார்த்து,
“நீ எந்த வகையான கதையை எழுதப் போகிறாய்?” என்று கேட்டான்.
“எந்த வகையான கதையா? கதைகளிலும் பல வகைகள் இருக்கா?” என்று வியப்புடன் கேட்டான் பிரபு.
“ஆமாம் பிரபு. நகைச்சுவைக் கதைகள், நீதிக் கதைகள், குழந்தைகளுக்கான கதைகள், நாட்டுப்புறக் கதைகள், தந்திர, ஏளன, வஞ்சகக் கதைகள், பகுத்தறிவுக் கதைகள் என ஏராளமான வகைகள் உள்ளன. இதில் நீ எந்த வகையான சிறு கதையை எழுதப் போகிறாய்”, என்று கேட்டான் சேரன்.
“நான் ஆன்மிகக் கதைகள் எழுதப் போகிறேன். அதுபற்றி நீ சொல்லவே இல்லையே!. அது நீதிக் கதைகள் வரிசையில் சேரும் என நினைக்கிறேன். நான் பக்தன், ஆன்மிகவாதி என்பதுதான் உனக்குத் தெரியுமே! ஆன்மிகம் நாட்டில் பரவ வேண்டும்.” என்றான் பிரபு.
“அப்போ ஆன்மிகம் இப்போது நாட்டில் பரவவில்லை என்று சொல்கிறாயா? சரி, ஆன்மிகம் என்றால் என்ன பிரபு?”
“என்ன இப்படிக் கேட்டுட்டே சேரன்! பக்திதான் ஆன்மிகம்”
“பிரபு, மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். நற்பண்புகள்தான் ஆன்மிகம். ஆன்ம இகம் என்பதே ஆன்மிகம் என ஆகியது என்பர் அறிஞர் பெருமக்கள். அதை உணர்த்தும் கதைகளை எழுதப்போகிறாயா?”
“ஆமாம் என்று வைத்துக் கொள்ளேன். சரி சேரன், இன்னும் சில நாட்களுக்கு உன்னை நான் சந்திக்க மாட்டேன். கதை எழுதப் போகிறேன். சிவனடியார்களின் பெருமைகளை எடுத்துரைக்கப் போகிறேன். எனக்குப் பணமும் கிடைக்கும். புகழும் கிடைக்கும்.”
இவ்வாறு சொன்ன பிரபுவைப் பார்த்து புன்னகைத்தவாறே விடை பெற்றுச் சென்றான் சேரன்.
ஒரு மாதம் சென்றது.
ஒரு நாள் சேரனைத் தேடி வந்தான் பிரபு. அவன் கையில் ‘டெம்பிள் விசிட்’ புத்தகம் இருந்தது.
“சேரன், நான் எழுதிய கதை வெளிவந்துள்ளது. ’சாமி வரம்’ என்ற என்னுடைய சிறுகதையைப் படித்துப் பார்! இந்தக் கதைக்காக எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க”, என்று மகிழ்ச்சியுடன் சொன்ன பிரபு புத்தகத்தைச் சேரனிடம் கொடுத்தான்.
“ரொம்பவும் மகிழ்ச்சி. நீயும் எழுத்தாளனாயிட்ட! படிச்சிப் பார்க்கிறேன். பக்திப் பரவசமூட்டும் கதைதானே!” என்று கேட்டான் சேரன்.
“ஆமாம் சேரன், குழந்தையில்லாத ஒரு பெண்மணி ஒரு சாமியாரை அணுகி அவர் செய்யச் சொன்ன பூஜையின் மூலம் குழந்தை பாக்கியம் பெற்றதாகக் கதை எழுதியுள்ளேன்.”
“இதன்மூலம் நீ எந்தக் கருத்தை மக்களுக்குச் சொல்ல வருகிறாய் பிரபு”
”பூஜா பலன் மிகப் பெரியது. பக்தி, பூஜை, யாகம் இவற்றால் மட்டுமே நாம் நினைத்த காரியம் கைகூடும் என்பதை இந்தக் கதையின் மூலம் உணர்த்துகிறேன்.”
“எந்தச் சாமியாரையாவது மய்யமாக வைத்து இந்தக் கதையை எழுதினாயா பிரபு?”
“ஆமாம் சேரன். அமர்நாத் என்ற வடநாட்டுச் சாமியார் நம் ஊரிலிருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் தற்போது முகாமிட்டுள்ளார். அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். அவர் அருள்வாக்குச் சொன்னால் அப்படியே பலிக்கிறதாம். போய் வந்தவர்கள் சொன்னாங்க. அந்தச் சாமியாரை மனதில் கொண்டுதான் இந்தக் கதையை எழுதினேன். தமிழும் அவர் பேசுகிறாராம்.”
பிரபு இவ்வாறு கூறியதைக் கேட்டதும் சற்றே எரிச்சல் அடைந்தான் சேரன்.
இருப்பினும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் புத்தகத்தை வாங்கிக்கொண்டு படித்துப் பார்ப்பதாகச் சொல்லிவிட்டு பிரபுவை அனுப்பி வைத்தான் சேரன்.
சில நாட்கள் கடந்தன.
பிரபு எழுதியக் கதையைப் படித்த பிறகு அதன்பின் அவனிடம் கதை பற்றி விவாதிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு நாள் எதிர்பாராத விதமாக பேருந்து நிலையம் அருகில் பிரபுவைச் சந்தித்தான் சேரன்.
அப்போது பிரபு எங்கோ வெளியூர் கிளம்பிச் செல்ல உள்ளது போல் தோன்றியது. மேலும் சோகமாகவும் காணப்பட்டான்.
“பிரபு, ரொம்ப சோகமா இருக்கியே! ஏன்? உன்னோட முதல் கதைக்கு நல்ல வரவேற்பு இருந்ததா? பக்திமான்கள் எல்லாம் உன்னைக் கொண்டாடி இருப்பாங்களே! சாமியார்கள் நடுவில் உன் செல்வாக்கு பல மடங்கு கூடியிருக்கும் என நினைக்கிறன்”, என்று சற்றுக் கிண்டலாகவே கேட்டான் சேரன்.
“சேரன், என் சோகத்தைக் கிளறாதே. அமர்நாத் என்ற சாமியாரை மய்யமாக வைத்துக் கதை எழுதியதாகச் சொன்னேன் அல்லவா! அது எவ்வளவு அயோக்கியத்தனம் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன். இப்போ அந்தச் சாமியாரை உதைக்கத்தான் கிளம்பிகிட்டு இருக்கேன்” என்று கோபத்துடன் சொன்னான் பிரபு.
“பிரபு, கோபப்படாதே! என்ன நடந்தது? விளக்கமாகச் சொல்”, என்று கேட்டான் சேரன்.
பிரபு சொல்ல ஆரம்பித்தான்.
“நான் எழுதிய சாமிவரம் என்ற சிறுகதையை திருச்சியில் இருக்கும் என் அக்காவுக்கு அனுப்பினேன். நான் சிறுகதை எழுத்தாளனாகிவிட்டேன் என்பதையும் பெருமையாகச் சொன்னேன். என் கதையைப் படித்துப் பார்த்திருக்கிறார் என் அக்கா. அவருக்கும் குழந்தை இல்லை அல்லவா! என் கதையைப் படித்துப் பார்த்த என் அக்கா அந்தக் கதையை நம்பி அமர்நாத் சாமியாரிடம் சென்றுள்ளார். அவன் பூஜை செய்ய வேண்டும், யாகம் நடத்த வேண்டும் என்று சொல்லி ஆயிரக்கணக்கான ரூபாய்களைப் பிடுங்கிக்கொண்டானாம். என் அக்கா வீட்டிலும் மாமியார் உட்பட அனைவரும் என் அக்காவை மலடி என்று கண்டபடி திட்டிக்கொண்டிருந்தார்களாம். அதனால் மனமுடைந்த என் அக்கா அந்தச் சாமியார் வார்த்தையை நம்பி பணத்தைக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்.
ஒருநாள் அவன் பூஜை என்ற பெயரில் அக்காவை வரவழைத்து அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறாள். நாலாபக்கமும் மட்டுமல்லாமல் அறைக்குள்ளும் பல இடங்களில் இரகசிய கேமராக்கள் வைத்திருக்கிறானாம். வீடியோ வெளியிடுவேன் என்று மிரட்டுகிறானாம். இதையெல்லாம் என் அக்கா என்னிடம் செல்போனில் சொல்லி அழுதார். எல்லாம் நான் எழுதிய கதையால் வந்த வினை. நான் அந்தச் சாமியாரைச் சும்மா விடப்போவதில்லை. அதற்காகத்தான் கிளம்பிகிட்டு இருக்கேன்,” என்று ஆத்திரத்துடன் சொன்னான் பிரபு.
“என்ன செய்யப் போகிறாய் பிரபு?” என்று அவனைப் பார்த்து அமைதியாகக் கேட்டான் சேரன்.
“அவனை உதைக்கப் போகிறேன். இதோ கிளம்பிட்டேன்” என்றான் பிரபு.
அவனைத் தடுத்து நிறுத்தினான் சேரன்.
“பிரபு, உனது கோபம் சரியானதுதான். ஆனால் நீ செய்யப்போகும் செயல் சரியல்ல. அந்தச் சாமியாருக்குத் தக்க தண்டனை வாங்கித்தர வேண்டும். உன் அக்காவை துணிவுடன் காவல்துறையில் புகார் கொடுக்கச் சொல். அவனைச் சிறையில் தள்ளிவிடலாம். அதை விடுத்து அவனை நீ உதைக்க நினைப்பது தவறு. நீயும் பிரச்சனையில் மாட்டிக்கொள்வாய். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
பகல் வேடதாரிகளுக்கு பக்தி என்கிற பெயரில் தீனி போட்டால் அது நம்மையே மேய்ந்துவிடும். உன் கதையால் நாலு பேர் திருந்த வேண்டும். நாலு பேர் நாசமாகப் போகக் கூடாது. உன் குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தீங்கு ஏற்படும் போதுதான் உனக்குப் புத்தி வருகிறது. வேறு யாருக்காவது தீங்கு ஏற்பட்டிருந்தால் நீ பாராமுகமாக இருந்திருப்பாய். சாமியார்களைப் பற்றி நீ புரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கும் புரிதலை உண்டு பண்ண வேண்டும்.
குழந்தை இல்லையென்றால் இப்போது அதற்கு அறிவியல் முறையில் பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றை உன் அக்கா தேர்ந்தெடுத்திருக்கலாம். அதை விடுத்து மூடநம்பிக்கைகளில் மூழ்கினால் இறுதியில் இப்படித்தான். உன் அக்காவை உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சொல். அதுதான் நல்லது”, என்று அறிவுரை சொன்னான் சேரன்.
சேரன் சொல்வதைக் கவனமாகக் கேட்டான் பிரபு. அவன் சொன்னவற்றில் பொதிந்து கிடக்கும் உண்மையை உணர்ந்தான். சாமியார்களை ஆதரித்துச் சிறுகதை எழுதியது தவறு என்பதையும் உணர்ந்து வருந்தினான்.
அவன் தன் தவறை உணர்ந்து வருந்துவதைக் கண்ட சேரன் அவனை மிகவும் அனுதாபத்துடன் பார்த்து, தைரியமாக இருக்கவேண்டும் என்ற வகையில் அவன் தோள்களின் மீது ஆதரவாகக் கைகளைப் போட்டான்.
“நீ சொல்வதும் சரிதான் பிரபு. நீ சொன்னபடியே செய்கிறேன். இனிமேல் நான் சிறுகதைகள் எழுதவே மாட்டேன்” என்றான் பிரபு.
“அப்படிச் சொல்லாதே பிரபு. கதை எழுது. தொடர்ந்து எழுது. ஆனால், உண்மையாக மக்களுக்குப் பயன்படும் செய்திகளைச் சொல்லும் அறிவுபூர்வமான, அறிவியல் பூர்வமான சிந்தனையைத் தூண்டும் பகுத்தறிவுக் கதைகளை எழுது. காசுக்காக கதை எழுதுவதை விட்டுவிட்டு உண்மையில் உண்மையை உரைப்பதற்கான கதைகளை எழுது. பக்தியைப் பரப்புவதை விடுத்து பகுத்தறிவைப் பரப்பு. உனக்கு என் வாழ்த்துகள்”, என்றான் சேரன்.
”நீ சொல்வது உண்மை. செய்கிறேன்”, என்று சொல்லிய பிரபு தன் அக்காவை செல்பேசியில் தொடர்பு கொண்டான்.