நிலைகள்
தங்கக் கட்டியால் கடவுள்,
தங்க தகட்டால் கோவில்,
சலவைக் கற்களால் நடைப் பாதை,
பளிங்கு கற்கலால் ஆசாமிகளின் ஆசிரமம்,
அரச மரத்தடியில் ஆரம்பப் பள்ளி.
– வெங்கட.இராசா, ம.பொடையூர்
இயற்கை Vs மனிதன்
இயற்கை
உங்களுக்கு
அளித்துள்ள
கொடைகளை
உறவாக்கிக் கொள்வதும்
உதாசீனப் படுத்துவதும்
உங்கள் விருப்பம்
உறவாக்கிக் கொண்டாலும்
உதாசீனப்படுத்தினாலும்
உங்களுக்கு அவை
உதவத் தவறுவதில்லை
ஏனெனில்,
அவை
உங்களைவிட
அறிவு குறைந்தவை
– ச.கா.முருகேசன், மைசூர்
வேண்டாம் இனி எங்களுக்கு…
இட ஒதுக்கீட்டை
எதிர்க்கும் உயர்வாளர்களே
வேண்டாம் இனி
எங்களுக்கு இட ஒதுக்கீடு
வா நீயே உன் செருப்பை தைத்துக்கொள்!
வா நீயே உன் வீட்டுக் கழிவுத் தொட்டியை
இறங்கி சுத்தம் செய்!
வா நீயே
உன் சொந்த பந்தங்களின்
சாவிற்கு பறையடி!
வா நீயே
உன் உடன்பிறந்தோரின்
பிணங்களை எரி!
வா நீயே உன் தலைமுடியை
கத்தரித்துக் கொள்
யார் வேண்டுமானாலும் கோயில் கருவறைக்குள்
சென்று அர்ச்சனை செய்துகொள்ளலாம்
என்றால்…
வேண்டாம் இனி
எங்களுக்கு இடஒதுக்கீடு
– புதுவை ஈழன்
அம்மா, தாயே!
உண்டியலில் விழும்
கட்டுக்கட்டாய் ஊழல் பணம்
ஆயிரம் கண்ணுடையாள் ஆலயம்
வாசலில் மட்டுமல்ல
கோவிலின் உள்ளேயும்
அம்மா, தாயே!
– விசாகன், திருநெல்வேலி
யார் உயர்ந்தோர்
ஓஞ்சாமி ஒசந்ததினு
உனக்கும் தெரியும்,
எஞ்சாமி ஒசந்ததினு
எனக்குத் தெரியும்.
ஆனா,
நமக்குத் தெரிவதெப்போ,
நாமதான்
ஒசந்தவங்கனு!
யார், எங்கே?
புதன் சூரிய மேட்டுல
சந்திரன் சுக்கிர மேட்டுல
ஜாதகன் சின்ன வீட்டுல!
ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி
மனுசங்களா?
ஊழல் அம்பலமாகும் முன்னே
டீசல், பெட்ரோல், சமையல் கேஸ்
விலை உயரும் பின்னே
மறதி நோயில் அல்லாடித் தவிப்பர்
நாட்டு மக்கள் நாளும் கண்ணீருடனே.
அம்பானிகளுக்கு
வரிச்சலுகை
அன்றாடக் காய்ச்சிகளுக்கு
வரிச்சுமை
அதிசய மக்களாட்சி
***
பட்டாசு ஆலைகள் முழுக்க
மனிதத் திரிகள்
முதல் தீக்குச்சியை முதலிப்பட்டியில்
கொளுத்தியவனை எந்தக் கழுவிலேற்றுவது?
***
அஞ்சும் பத்தும் திருடுனவன்
தலையைக் காட்டவே பயப்படுறான்
கோடிக்கோடியாத் திருடுனவன்
சிரிச்சுக் கையாட்டிக்கிட்டே புறப்படுறான்
வெட்கங்கெட்ட ஜென்மங்க நாம
மனுசங்களா?
இல்ல எருமைங்களா?
– அமுதாராம், மன்னார்குடி