ஒருமுறை சென்னை கால்நடைக் கல்லூரி விழாவுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதாவை அக்கல்லூரி மாணவர்கள் அழைத்திருந்தனர். எம்.ஆர்.ராதாவும் வந்துவிட்டார். நிகழ்ச்சி நடப்பது எங்கே என்று கேட்டார்.
முதல் மாடியில் உள்ள அரங்கத்தில் என்று மாணவர்கள் சொல்ல, மேல் மாடிக்குச் செல்ல எனது உடல் நிலை இடம் கொடுக்காதுப்பா…
என்றார் ராதா. மாணவர்களுக்கோ நிகழ்ச்சி ஏற்பாடுகளை எல்லாம் மேலே செய்துவிட்டதால் கீழே மாற்றமுடியாத நிலை. நாங்கள் அழைத்துச் செல்கிறோம் வாருங்கள் என்று கூறி ராதாவைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றுவிட்டனர்.
சிரமத்துடன் ராதாவும் மேல் மாடிக்கு வந்துவிட்டார். அவரைப் பேச அழைத்தனர்.ராதா மைக் பிடித்தார். மாணவர்கள் ஆர்வத்துடன் கைத் தட்டினார்கள். எனக்கு ஒடம்பு சரியில்லன்னு சொன் னேன்; ஆனாலும் என்னைக் கஷ்டப்படுத்தி மேலே கூட்டிட்டு வந்துட்டீங்க.
மனுஷனோட கஷ்டத்தையே உங்கனால புரிஞ்சுக்க முடியலையே? எப்படிப்பா மாட்டோட கஷ்டத்தைப் புரிஞ்சுக்கு வீங்க? என்று எடுத்த எடுப்பிலேயே ஒரு போடு போட்டார். என்னை மாதிரி கூத்தாடியக் கொண்டாடாதீங்க; பெரியார் மாதிரி அறிவாளியக் கொண்டாடுங்க; அப்பதான் நாடு உருப்படும் என்று அறிவுரை கூறி அவருக்கே உரிய கலகலப்புடன் பேசினார்.
சென்னை பெரியார் திடலில் 2012 செப் 17ல்
நடந்த பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கில்
சொன்னவர்: வழக்குரைஞர் ராமலிங்கம்