அந்த மேடை ஒரு பெரியாரிய மேடையாகவே இருந்தது. எங்கெல்லாம் விடுதலை வேட்கை
வீறு கொள்கின்றதோ அது பெரியாரிய மேடை யாகத்தான் தோன்றும் என்பதில் அய்யமில்லை. மேடைக்குக் கீழே ஆயிரக்கணக்கான மாணவிகள் அமர்ந்து, ஆழ்ந்து செவிமடுத்துக் கொண்டிருந்தனர். நிகழ்வின் இறுதியில் கேள்விகளைத் தொடுக்க வரிசை கட்டி ஆயத்தமாக நின்றனர்.
“என்ன இருந்தாலும் நீ இன்னொரு வீட்டுக்குப் போகிறவள் தானே என்று எந்த முடிவையும் என்னிடம் என் பெற்றோர் ஆலோசிப்பதில்லை. மகன்களிடம் மட்டும் கேட்கிறார்கள். இதை என்னால் ஏற்க முடியவில்லை”
“அது என்ன பையன்கள் தான் பெற்றவர்களைப் பார்ப்பார்களாம். ஏன் எங்களால் பார்க்க முடியாதா?”
“எங்களை மட்டுமே ஏன் இப்படி இருங்க அப்படி இருங்க என்று சொல்கிறார்கள்? பெண்களுக்கு மட்டுமே ஏன் அறிவுரை? இப்படி நடந்து கொள்ளுங்கள் என்று ஆண்களுக்குச் சொல்வது தானே?”
“பெற்றோர்கள் பயப்பட்டு எங்களைப் பூட்டிப் பூட்டி வைக்கும்படியான நிலைக்கு ஏன் இவ்வளவு பாலியல் வன்முறைகள் நடக்கின்றன? இதற்கெல்லாம் யார் பொறுப்பு?
ஆண்டவனா? அரசாங்கமா? ஆண்களா?”
“இதெல்லாம் மாறுமா? அப்படி என்றால் என்றுதான் மாறும்? சட்டத்தால் இதை மாற்ற முடியுமா? நாமெல்லாம் இதுக்கு என்ன தான் செய்யணும்?”
இப்படியெல்லாம் தன் உள்ளத்தில் தேங்கிக் கிடந்த குமுங்கல்களை குமுறல்களாகக் கொட்டியவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் காத்தான்பள்ளம் கொன்சாகா மகளிர் கல்லூரி மாணவிகள் ஆவர்.
கல்லூரியின் இருப்பிடம் மாநகர்ப் பகுதி அல்ல; பின் தங்கிய பல கிராமங்கள் சூழ்ந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கல்வி – பெண் உரிமை இலக்கு!
அங்கே ஓர் அற்புதமான சூழல் உருவாகி இருந்தது.
அது ஒரு நூல் வெளியீட்டு விழா! அதுவும் “பெண் கல்வி – பெண் உரிமை!” என்ற இரு பெரும் முழக்கங்களை முன்னிறுத்தி நடந்த ”மாயூரம் நீதிபதி வேதநாயகரின் பெண்ணியக் கோட்பாடுகள்” எனும் நூல் வெளியீட்டு விழா! 26.7.2024 அன்று கல்லூரியே விழாக்கோலம் கொண்டிருந்தது. அந்தக் கல்லூரி முதல்வரின் சீரிய வழிகாட்டுதல் மற்றும் அணுகுமுறை, தலைமையுரை ஆற்றிய அருள் சகோதரி, எழுந்து நடக்க முடியாத நிலையிலும் விடாமுயற்சியோடு இந்நூலை ஆக்கித் தந்த நூலாசிரியர் அருள்பணி முனைவர் ஆ. தாமஸ் மற்றும் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோரின் உண்மை விளக்கப் பேச்சுகள் அம்மாணவிகளின் மயக்கத்தை உடைத்து – தயக்கத்தை விடுத்துப் பேச வைக்கிற துணிச்சலைத் தரும் இலகுவான சூழலை அங்கே உருவாக்கி வைத்திருந்தது என்றால் மிகையில்லை…
நீங்களே போராடுங்கள்!
“இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது. ஆண்கள் தீர்ப்பார்கள் என நம்பாதீர்கள். நீங்களே போராடுங்கள்! ஒவ்வொரு வெற்றியும் போராட்டத்தில் இருந்து தான் வந்திருக்கிறது! இதற்கெல்லாம் காரணம் இந்தச் சமூகம் தான். இவையெல்லாம் மாற வேண்டும் என்றால் அவ்வளவு எளிதல்ல. ஆனால், நாம் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அதற்காகச் சோர்ந்து விடத் தேவையில்லை. விதைத்தவர்கள் பெரிதும் கனியை அனுபவிப்பதில்லை என்பதற்காக விதைக்காமல் போவதில்லை. நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்.” என்று மாணவிகளின் சீற்றத்தின் நியாயத்தை விளக்கி சற்று ஆற்றுப்படுத்தி பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் அவர்களை அடுத்தக் கட்டத்திற்கு ஆயத்தப்படுத்தினார்.
நூலில் என்ன இருப்பதாகப் பேசினார்?
பெண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதை கிரிமினல் குற்றமாகப் பார்த்த சமூகத்திலிருந்து தான் நாம் பிறந்து வந்திருக்கிறோம் என்று அழுத்தமாக அவர் தொடங்கிய போதே அசையாமல் மாணவிகள் அமர்ந்தனர். மனைவி கணவனுக்கு அடங்க வேண்டாமா? என்று கேட்பார்கள்; தேவையில்லை… யாரும் யாருக்கும் அடங்க வேண்டியதில்லை; உண்மையாகவும் நட்பாகவும் தோழமையாகவும் இருந்தால் போதும். இது என் பாட்டன் பெரியாரின் குரல்!” என்று சொன்னபோது கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருந்தனர். “கடவுள்தான் பாதி உடம்பை பெண்ணுக்குத் தந்திருக்கிறார் என்று எவரேனும் சொன்னால், இது இயற்கைக்கு மீறிய கற்பனை என்பதோடு எதற்கு இந்தத் தொல்லை? பாதி சொத்தைக் கொடுக்கச் சொல்லுங்கள் போதும்” என்று சொல்லும் போது மாணவிகள் தமக்குள் இருந்த அச்சத்தைத் தள்ளி வைத்தனர்.
தொடர்ந்து நூலைப் பற்றிப் பேசினார்.
140 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் எல்லாரும் வெண்மதி மாலை பாடிய நேரத்தில் நீதிபதி வேதநாயகம் அவர்கள் பெண்மதி மாலை பாடினார். அந்தக் காலங்களில் 31 கோடி இந்திய மக்களின் சரிபாதியாக 15 கோடி பெண்கள் எனில் அதில் விதவைகள் மட்டும் 26 லட்சம் பேர்… அய்ந்து வயதிற்கு உட்பட்ட குழந்தை விதவைகள் 25 ஆயிரம் பேர்… என்ற புள்ளி விவரத்தைத் தந்ததோடு பெண்களுக்கு முதலில் கல்வி வேண்டும், பருவம் வந்த பிறகு திருமணம் செய்ய வேண்டும் (குறைந்தது 14 வயதுக்குப் பிறகாவது). இந்தக் கருத்துகளை அப்போது தன்னுடைய பாடல்கள் வழியாக அவர் பாடினார். நாங்கள் படித்து விட்டால் உங்களை மிஞ்சி விடுவோம் என்று கருதாதீர்கள், உங்களுக்கு அடங்கி இருப்போம் என்பதாக ஒரு பாட்டில் ஆண்களைப் பார்த்துக் கெஞ்சித் தான் எழுதினார். காலம் மாறிற்று. பெரியார் தான் கேட்டார். எதற்கு அடங்க வேண்டும்? யாருக்கும் யாரும் அடங்கத் தேவையில்லை என்றார். நீதிபதி வேதநாயகம் அவர்களின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் ஆகும். சுகுண சுந்தரி அவரின் இரண்டாவது படைப்பாகும். எட்டு ஆண்டுகள் கழித்து இரண்டாவது படைப்பில் முதல் கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு அவரே வருகிறார்.
நான் இறந்தால் என்னோடு சேர்ந்து அவனும் இறந்து போவானா?
அம்மா பிள்ளைக்குமான ஒரு உரையாடலாக ஒரு பாடலை எழுதுகிறார். மூன்று வயதுக் குழந்தையைப் பெண் பார்க்க நான்கு வயது ஆண் குழந்தை வந்திருக்கிறது. அம்மாவிடம் யாரோ வந்திருக்கிறார்கள் என்று அக்குழந்தை சொல்லும்போது உன்னைப் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என்கிறார் அம்மா… அவன் தான் உனக்குத் தாலி கட்டப் போகிறவன், அவன் மீது நீ அன்பாக இருக்க வேண்டும் என்று அம்மா சொல்ல, அவன் என் மீது அன்பாக இருப்பானா என்று அந்தப் பெண் குழந்தை கேட்கிறது. அன்பாக இருப்பது என்றால் எப்படித் தெரியுமா? நாளைக்கு அவனுக்கு ஏதாவது நேர்ந்து இறந்து விட்டால் நீயும் அவனோடு சேர்ந்து எரிந்து போக வேண்டும் என்று அம்மா சொல்வது போல் பாடல் வரும். அதற்கு அந்தப் பெண் குழந்தை வடிவில் நீதிபதி கேட்பார் – “அப்படியானால் நான் இறந்து போனால் என்னோடு சேர்ந்து அவனும் இறந்து போய் விடுவானா” என்று. (சுருக்கென்று). உடன்கட்டை ஏறுதலை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிற ஒரு பாடலாக எழுதி இருப்பார். பிறகு ராஜா ராம்மோகன் ராய் அவர்களின் முயற்சியால் அக்கொடுமை முடிவுக்கு வந்தது. அப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து போராடிப் போராடித்தான் இன்று அனைத்தையும் பெற்றிருக்கின்றோம்.
முடியும் முடிவும்!
எங்கள் வீட்டிற்கு வந்த உறவினரின் ஏழு வயதுப் பெண் குழந்தையை அவர்களின் அம்மா, முடியைப் பறக்க விடாதே, வா கட்டி விடுகிறேன் என்று அழைத்துக் கொண்டே இருந்தார்கள். மூன்று நான்கு முறை அப்படிச் சொன்ன பிறகு ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தை, “ஏம்மா இது என் முடியா? இல்ல உன் முடியா?” என்று கேட்டது.
அந்தக் குழந்தை சரியாகப் பேசியது. அது அந்தக் குழந்தை யின் முடிதானே, அந்தக் குழந்தையே முடிவெடுக்கும் என்பது
தான் சரியானது. பெற்றோராக இருந்தாலும் அவரவர் உரிமை அவரவர்க்கு வழங்கப்பட வேண்டும் என்பதே எதிர்காலம் சொல்லப்போகும் தீர்ப்பாகும்.
மாணவர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதன் அடையாளமாகத் தான் மேற்குறிப்பிட்ட கேள்விகள் கணைகளாக வெளிப்பட்டன.
இனி அடுத்தது செயல்படுத்தும் வழிமுறைகளை ஆராயத் தொடங்குவார்கள். அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது போல் ஆராய ஆராய அடிமைகள் ஆக்கப்பட்டதன் உண்மை புரியும். இதுவரை அடிமைகளாய் இருந்த வலியைப் புரிந்து கொண்ட பெண்கள் இனி தங்கள் மகள்களை அடிமையாய் நடத்த ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.
இனி உரிமைத்தீ கொழுந்து விட்டு எரியும்!
எரிந்த பின்பு தான் அது தணியும்! மேலோட்டமான நீர் தெளிப்புகளால் அடியில் கனன்று கொண்டிருக்
கின்ற நெருப்பு அகன்று விடாது. அப்படியே தான் இருக்கும் என்பது அறிந்ததே ! அந்தப் புகைச்சல் இதோ தெரிகிறது! அறிவு பற்றிக்கொண்டதால் அடிமைத்தனம் இனி பற்றி எரியாமல் போகாது என்பதை இந்நூல் வெளியீட்டு விழா உறுதிப்படுத்தியது.
– இது ஒரு நிகழ்வுத் தொகுப்பு.