உலகம் முழுவதும் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. ஆதிக்கத்தின் வடிவங்கள்தாம் நாட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம் மாறுபடுவன. இந்தியாவின் ஆதிக்க வடிவம் வெளிப்படைத் தன்மையற்றது; ஆனால், மிகுந்த வலிமை பொருந்தியது. அத்தகைய ரகசியக் கூட்டாளிகளான பார்ப்பனியமும் பனியாவும் ஒன்றோடு ஒன்று இணைந்த காவி பாசிசம் தான் இன்றைய இந்தியாவின் பேராபத்தான ஆதிக்க நிலை.
பார்ப்பனரல்லாத மக்களை கல்வி,வேலைவாய்ப்புகள்,பொருளாதாரம், அரசியல் என்று அனைத்து வகையிலும் அடிமைப்படுத்த பார்ப்பனியம் முயற்சி செய்தபோது அதனை ‘சமூகநீதி’ என்ற குரல் கொண்டு தகர்த்தார், தந்தை பெரியார். அவரின் அடிச்சுவட்டில் நடக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அதே பாதையில் ‘சமூகநீதி’ எனும் மாமருந்தை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தார். 91 வயதிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆசிரியர் அவர்களின் சமூகநீதிப் பயணத்தில் முக்கிய அத்தியாயம் – தான் ‘மண்டல் குழு’ பரிந்துரையை அமல்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளும், போராட்டங்களும்.
‘கோட்டா’ என்று நம்மை நோக்கி பார்ப்பனர்களும், எங்களுக்கு ஏன் சலுகை என்று நம்மவர்களுமே
(பார்ப்பனரல்லாதார்) இடஒதுக்கீடு பற்றிய புரிதலின்றி இருக்கும் சூழலில், இன்றைய தலைமுறையிடம் அந்த வரலாற்றைக் கொண்டு செல்லும் நோக்கில் திராவிடர் கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள் எழுதிய “மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்” என்னும் நூல் 07.08.2024 அன்று பெரியார் திடலில் வெளியிடப்பட்டது.
நூல் வெளியீட்டில் பேசியவர்களது உரைகள் யாவும் சமூகநீதி வரலாற்றில் நம்மை உலா வரச் செய்தன. தந்தை பெரியார் அவர்கள் சமூகநீதியை வென்றெடுக்கச் சந்தித்த களங்களையும், அதே பாதையிலே – கொண்ட கொள்கையில் உறுதியுடன் நின்று மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவதற்காக 42 மாநாடுகள் 16 போராட்டங்கள் நடத்தி தனது 48 வயது தொடங்கி 62 வயது வரை இந்த போராட்டத்திலேயே முழுவதுமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அதில் எப்படி வெற்றியும் கண்டார் ஆசிரியர் என்பதையும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்கலி.பூங்குன்றன் எடுத்துரைத்தார். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், மண்டல் குழுவில் தமிழர் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி அதற்கும் சேர்த்து குரல் கொடுத்து, தமிழர் ஒருவரை மண்டல் குழுவில் இடம்பெறச் செய்தவரும் ஆசிரியர் தான்.
நம் பக்கம் அனைத்து நியாயங்கள் இருந்தாலும், பார்ப்பனர்களுக்குத் தான் இங்கு அனைத்தும் சாதகமாக அமையும். இதனை மெய்ப்பிக்கும் வகையில் தான் நாம் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்து நமக்கான இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றெடுத்தோம் என்ற செய்திகளை திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார். 1953இல் காகா காலேல்கர் குழுவின் பரிந்துரை நிறைவேற்றப்படாமல் போனதை அடுத்து 1978இல் மண்டல் குழு அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் அதனுடைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதும், அதனை நிறைவேற்ற பத்து ஆண்டுகளுக்குமேல் ஆகி இருக்கின்றன என்ற செய்தியும், பெற்ற இடஒதுக்கீட்டினைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றம் வரை சென்று அனைத்து போராட்டங்களுக்குப் (42 மாநாடுகள், 16 ஆர்ப்பாட்டங்களுக்கு) பிறகு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கிறோம் என்பது எத்தனை பெரிய வரலாற்றுச் சாதனை! இதனைச் செய்து முடிக்க பார்ப்பனிய ஆதிக்கத்தின் ஒவ்வொரு அசைவின் அர்த்தங்களையும் புரிந்தவரால் தான் முடியும். அதனை மிகத் துல்லியமாகப் புரிந்து வைத்திருந்தார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் என்பதற்கு கீழே உள்ள ஒரு சான்று போதும்.
மண்டல் குழு அறிக்கையைப் பற்றி ‘இந்து’ நாளிதழ் ‘Burry the Mandal Commission’ என்று எழுதினார்கள். அடுத்த நாளே ஆசிரியர் அவர்கள் ‘Hurry the MandalCommission’ என்று ‘விடுதலை’யில் எழுதினார். நிருபர்கள் ஆசிரியரைப் பார்த்து, “இன்னும் மண்டல்குழு பரிந்துரை வெளியிடப்படவில்லையே, அதற்குள் ஏன் இப்படிக் கூறுகிறீர்கள்” என்று கேட்டபோது , உடனே சற்றும் தாமதிக்காமல் “இதே கேள்வியை ‘இந்து’ பத்திரிகையிடம் கேளுங்கள்” என்று ஆசிரியர் கூறியிருக்கிறார். அவர்கள் எதிர்க்க என்ன காரணமோ அதுவே நாம் ஆதரிப்பதற்கான காரணம் என்ற பெரியாரின் பார்ஃமுலாவை(Formula) அனைத்துத் தளத்திலும் பயன்படுத்தி ஆசிரியர் வென்றிருக்கிறார்.
பார்ப்பனரல்லாத சமூகத்தின் வாழ்வியல் மேம்பாட்டுக்கான கேடயமாக விளங்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு ஆசிரியர் நடத்திய போராட்டங்களையும், அவரின் செயல்பாடுகளையும், அரும்பணியையும் விளக்கக்கூடிய வகையில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு ஏன்? எதற்கு? யாரால்?” எனும் நூலினையும் மானமிகு கோ.கருணாநிதி அவர்கள் தான் தொகுத்தார். இன்று அந்த நூல் ஆங்கில நூலாக அனைத்து மாநில முதலமைச்சர்களின் கைகளிலும் இருக்கிறது. ஆசிரியரின் மதி நுட்பத்தால், சட்ட அறிவால், சமூகநீதி உணர்வால் இன்று தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள 69% இடஒதுக்கீடு பற்றிய அந்த வரலாற்று நூல் இன்று யாருக்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா? பீகாரில் நிதிஷ் குமார் அவர்கள் கொண்டு வந்த 65% இட ஒதுக்கீட்டுக்கு நெருக்கடி வந்து, உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்ற போது நிதிஷ்குமார் அவர்களுக்கும் அந்த ஆங்கில நூலினை அனுப்பி, 65 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன் அதை ஒன்பதாவது அட்டவணையில்
இணைக்கப் பாருங்கள் என்று கூறியதையும் அதற்கான முயற்சிகளை நிதிஷ்குமார் தற்போது எடுத்து வருவதையும் கோ.கருணாநிதி அவர்கள் கூறினார். ஆசிரியரின் சமூகநீதி மருந்து இந்தியா முழுவதும் பார்ப்பனிய ஆதிக்க நோய்க்கு எதிராகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.
இத்தகைய சமூகநீதிச் சாதனைகளைத் தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பனக் கூட்டம் அதன் எதிர்ப்பையும், தாக்குதலையும் பல்வேறு முனைகளில் தொடுத்தது; தொடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் ஆட்சி பாசிச பா.ஜ.க.வால் கவிழ்க்கப்பட்ட நிகழ்வு. ஆட்சி போனாலும், பதவி போனாலும், செய்து முடிப்பேன் என்று உறுதியுடன் மண்டல் குழுப் பரிந்துரையைச் சட்டமாக்கினார் வி.பி.சிங். அந்த நாளில் அவர் பதிவு செய்த செய்தி மிக உருக்கமானது. “என் கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் நான் அடைய வேண்டிய இலக்கை அடைந்துவிட்டேன்” என்றார்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அவரின் வார்த்தை கள் இன்று மீண்டும் ஓர் உணர்ச்சிப் பிழம்பாய் நமக்குக் காட்சியளிக்கிறது. காரணம், இன்று தனது உரிமைக்காக, தன்னைப் போல் மல்யுத்தத்தை நேசிக்கும் பெண்களுக்காக, தங்களைப் பாலியல் பண்டமாக நினைக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிராக, பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்கும் பாசிசத்துக்கு எதிராக உரத்த குரல் எழுப்பிய மல்யுத்த வீராங்கனை “வினேஷ் போகத்”தின் பதக்கம் பாரிஸ் ஒலிம்பிக்கில் பறிக்கப்பட்டுள்ளது. மூன்று முறை தொடர்ந்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு நூறு கிராம் கூடுதல் என்ற காரணத்தினால் அரையிறுதிச் சுற்றில் வெற்றிபெற்ற பிறகு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அது நூறு வித்தியாசமா அல்லது நூல் வித்தியாசமா என்பது
அவர்களுக்கே தெரியும். தோற்றாரா? தோற்கடிக்கப்பட்டாரா? என்ற விவாதங்களுக்கு இடையே பாசிசத்
தின் ஆதிக்க வரலாற்றில் ‘‘உடைக்கப்படும் கால்களும்; பறிக்கப்படும் பதக்கங்களும்’’ புதிதல்ல; தொடர் கதை என்பது மட்டுமே கண்கூடு.