மாதவா, என்ன ஏதோ தீவிரமான சிந்தனையில் இருக்க போலிருக்கே”, என்று கேட்டுக்கொண்டே நண்பன் மாதவன் வீட்டுக்கு வந்தான் தமிழ்ப்பிரியன்.
“வா தமிழ்ப்பிரியன், நீ சொல்றது உண்மைதான். நான் அடுத்த வாரம் மதுரைக்குப் போக வேண்டும். எந்தப் பாதை வழியாகப் போகலாம்னுதான் யோசனை பண்றேன். பல நேரங்களில் நான் தவறாக முடிவெடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறேன்” என்றான் மாதவன்.
“இதில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் நீ சரியான முடிவினை எடுப்பதில்லை. நான் சொல்லும் யோசனையையும் கேட்பதில்லை. சரி, இப்ப உனக்கு நான் யோசனை சொல்கிறேன். கேட்கிறாயா பார்ப்போம். விருத்தாசலம் சென்று புறவழிச்சாலை வழியாகப் போகலாம். எளிதாக இருக்கும். விரைவாகவும் போய்விடலாம்”, என்றான் தமிழ்ப்பிரியன்.
“நீ சொல்றது சரிதான், ஆனால் சிதம்பரம், மயிலாடுதுறை வழியாகச் சென்றால் போகும்போது அந்தந்த ஊர்களைப் பார்த்துக்கொண்டே செல்லலாம். அதுமட்டுமல்ல, சுங்கக் கட்டணத் தொல்லையும் இருக்காது”, என்றான் மாதவன்.
“சுங்கக் கட்டணம் பெரிய கொள்ளைதான். கங்கை கொண்ட சோழபுரத்தில் பிறந்த முதலாம் குலோத்துங்கச் சோழன் என்ற மன்னன் மக்கள் படும் அவதியைக் கண்டு சுங்க வரியை நீக்கினான் என்று ஒரு வரலாறு உண்டு. அவனை மக்கள் சுங்கம் தவிர்த்த சோழன் என்று பாராட்டி மகிழ்ந்தார்களாம். ஆனால், இப்போது நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் மேலும் பல சுங்கச்சாவடிகள்
கட்டப்போகிறார்களாம். கார் வாங்கினாலும் வரி, பயணம் செய்தாலும் வரி, சாலைகள் அமைப்பது ஒரு முதலீடு போல் ஆகிவிட்டது. போட்ட முதலுக்கு மேல் எடுத்து யாரோ இலாபம் பார்க்கிறார்கள். சரி, அதைவிடு, போற வழியில் என்ன பார்க்கப் போகிறாய்? உன் காரில்தானே செல்கிறாய்?’ சிதம்பரத்தில் என்ன பார்க்கப் போகிறாய்?” என்று கேட்டான் தமிழ்ப்பிரியன்.
“சிதம்பரம் என்றாலே…” என்று தொடங்கிய மாதவனை இடைமறித்த தமிழ்ப்பிரியன், “சிதம்பரம் என்றாலே நம் நினைவுக்கு வரவேண்டியது அண்ணாமலை பல்கலைக்கழகம்தான். மாணவர்களின் அறிவுக்குத் தீனி போட்டு அவர்களைப் பட்டதாரிகளாக்கி, பணியில் உட்கார வைத்து, சுயமரியாதை உள்ளவர்களாக மாற்றியது அந்தப் பல்கலைக்கழகம்தான்“, என்றான்.
ஏதோ சொல்ல வந்த மாதவனைப் பேசவிடவில்லை தமிழ்ப்பிரியன்.
“சரி, சரி; நீ சொல்வது எனக்குப் புரிகிறது. அப்புறம் சீர்காழி பற்றியும் சொல்லேன்”, என்று கேட்டான் மாதவன்.
அவன் பேச்சில் காணப்பட்ட கிண்டல் தொனியையும் உணர்ந்தான் தமிழ்ப்பிரியன்.
ஆனால் அதுபற்றிக் கவலைப்படாமல் பேசினான் தமிழ்ப்பிரியன்.
“சீர்காழி என்றாலே ஞானப் பால் கொடுத்த கற்பனைக் கதைகளையெல்லாம் நினைவில் கொள்ளாதே! அதெல்லாம் அறிவுக்குப் பொருந்தாத மூடநம்பிக்கை – கட்டுக்கதைகள். நமக்கு ஆவின் பாலே போதும். ஞானப்பால் தேவையில்லை. சீர்காழி என்றால் நமக்கு வெண்கலக்குரல் கொண்ட பாடகர் கோவிந்தராஜன் அவர்கள்தான் நினைவுக்கு வரவேண்டும். அவர் தமிழில் மட்டும்தான் பாடினார். தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடவில்லை. அதனால் சபாக்களில் பாட அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.”
“அப்புறம் என்னாயிற்று?” தமிழ்ப்பிரியன் பேச்சை இடைமறித்துக் கேட்டான் மாதவன்.
“சொல்கிறேன் கேள்! சபாக்களில் தமிழ்ப்பாடல் பாட சீர்காழி கோவிந்தராஜன் அனுமதிக்கப்பட
வில்லை என்பதை அறிந்த தந்தை பெரியார் அவரை அழைத்துப் பேசினார். அப்போது அவரைத் தங்களின் கழகக் கூட்டங்களில் பாட வருமாறு அழைத்தார் பெரியார். ஆனால், கோவிந்தராஜன் அவர்கள் நெற்றியில் திருநீற்றுப் பட்டை
யுடன் பக்திப் பாடல்களைப் பாடி வந்ததால் சற்றே யோசனை செய்தார். அதைப் பெரியாரிடம் தெரிவித்தார்.”
இப்போது மீண்டும் இடை மறித்தான் மாதவன்.
“பெரியார் அதற்கு என்ன சொன்னார்?”
“பெரியார் அவரிடம், தான் அதுபற்றிக் கவலைப்படவில்லை யென்றும், உங்கள் உடையுடனும், சந்தனம், விபூதிப் பட்டை
யோடும் எங்களின் பகுத்தறிவு மேடைகளில் பக்திப் பாடல்களைக் கூட பாடலாம் என்றாராம். அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே செய்தாராம் சீர்காழியார். ஆனால், அவர் பாடி முடித்த பிறகு பெரியார் பேசும்போது பக்தி என்பது எவ்வளவு சீர்கேடுகளை விளைவிக்கும் என்பதை விளக்கிப் பேசுவாராம்.”
அவன் பேசுவதை ஆர்வமாகக்
கேட்டான் மாதவன்.
“சீர்காழி கோவிந்தராஜனுக்கு, பகுத்தறிவு மேடைகளில் பாடுவதன் மூலம் புகழ் பரவி வருவதைக் கண்ட மேல்ஜாதி சபாக்காரர்கள் பயந்துபோய் கோவிந்தராஜன் அவர்களைச் சபாக்களில் பாட வருமாறு அழைத்துப் பாடவைத்தார்களாம். இதெல்லாம் வரலாறு.”
“இப்படியெல்லாம் நடந்ததா?” என்று வியப்புடன் கேட்டான் மாதவன்.
“ஆமாம். சபாக்களில் தமிழில் பாட அனுமதிக்கவே இல்லை என்பது எவ்வளவு கொடுமையான செய்தி! அதை சீர்காழி கோவிந்தராஜன் மூலம் உடைத்தெறிந்தவர் பெரியார். மேலும் மயிலாடுதுறை பற்றியும் சில செய்திகளை உனக்குச் சொல்கிறேன்.
மயிலாடுதுறை என்பது முன்பு மயூரம் என்றும் மயூரபுரம் என்றும் அழைக்கப்பட்டது. பிறகு அந்த ஊரை மாயவரம் என்று அழைத்தார்கள். பிறகு அது தமிழ்ப்படுத்தி மயிலாடுதுறை என 1982ஆம் ஆண்டு முதல் அழைக்கப்படுகிறது. இந்த ஊரில் மயில்கள் அதிகம் இருக்குமாம்.”
“ஓ! அப்படியா! எனக்கு தரங்கம்பாடியைப் பார்க்க மிகவும் ஆசை. இன்னும் நான் அங்கு போகவே இல்லை” என்றான் மாதவன்.
“தரங்கம்பாடியைப் பற்றிச் சில செய்திகளை உனக்குச் சொல்கிறேன். டேனீஷ்காரர்களின் கோட்டை அங்குள்ளது. முக்கியமான சிறப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் முதல் அச்சுக்கூடம் 1713ஆம் ஆண்டு இங்குதான் நிறுவப்பட்டது. ஜெர்மனி நாட்டிலிருந்து வந்த சீகன்பால்கு என்ற பாதிரியார்தான் அதை நிறுவினாராம். பைபிளைத் தமிழில் முதன்முதலாக இங்குதான் அச்சிட்டார். கடலில் குளிக்கும் இளைஞர்கள் சிலர் இங்கு நீரில் மூழ்கி பழங்கால நாணயங்களை அள்ளி வருவதையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
ஆனால், நீ மதுரைக்குப் போகும்போது தரங்கம்பாடிக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லையே“, என்றான் தமிழ்ப்பிரியன்.
“ஆமாம், தேவைப்பட்டால் போகலாம் என்றிருந்தேன்” என்று பதில் சொன்னான் மாதவன்.
“செல்லும் பாதையை முதலிலேயே நாம் தீர்மானித்துக்கொள்வது நல்லது. தேர்ந்தெடுத்த பிறகு அந்தப் பாதையில் தான் நாம் பயணம் செய்ய வேண்டும். பாதையை அடிக்கடி மாற்றக் கூடாது,” என்று சொன்ன தமிழ்ப் பிரியன் மேலும் தொடர்ந்தான்.
“செல்லும் பாதையை முதலிலேயே தீர்மானிக்க வேண்டும் என்பது நமது வாழ்க்கைக்கும் பொருந்தும். செல்லும் பாதை தவறான பாதை என்பதை பிற்பாடு உணர்ந்தால் உடனடியாக பாதையை மாற்றவும் செய்யவேண்டும். உதாரணமாக சென்னையிலிருந்து லண்டன் நகரத்திற்கு ஒரு விமானம் பறக்க வேண்டுமென்றால், அதன் பாதை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும். அந்தப் பாதையில்தான் விமானம் பறந்து செல்ல வேண்டும். பாதை மாறிப் பறக்க முடியாது. ஆனால் சிக்கலான சூழ்நிலைகளில் விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் உத்தரவுகளின்படி செயல்பட வேண்டும்,” என்று விளக்கம் கொடுத்தான் தமிழ்ப்பிரியன்.
அவன் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டான் மாதவன்.
தமிழ்ப் பிரியன் தொடர்ந்து பேசினான்…
“மாதவா, நாம் செல்லும் பாதை தெளிவாக இருக்க வேண்டும். தீர்மானிக்கப்பட்ட பாதையில் பயணம் செய்யும்போது குறுக்கீடுகள் எதுவும் இருக்கக்கூடாது. ஆனால், இங்கு அது ஒரு சாபக்கேடு. கோயில் திருவிழாக்கள் என்ற பெயரில் நடைபெறும் ஊர்வலங்கள், தேரோட்டங்கள் போன்றவைகளால் காலதாமதம் ஏற்படுவது மட்டுமல்லாமல் விபத்துகளும் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு, நாய்கள் போன்ற விலங்குகளாலும் தொல்லைகள் ஏற்பட்டு பல்வேறு விபத்துகளுக்கு அவை காரணிகளாகின்றன. வாகனங்களில் செல்லும்போது விலங்குகளிடம் நாம் கவனமாக இருக்கவேண்டும். குறிப்பாக கார் ஓட்டும்போது மாடு குறுக்கே வந்தால் நம் கவனம் அதன் வால்மீது இருக்கவேண்டும். அதே சமயம் பன்றி குறுக்கே வந்தால் அதன் தலைமீது நம் கவனம் திரும்ப வேண்டும்.”
“ஏன் அப்படி?”, என்று வினவினான் மாதவன்.
“மாடு அது செல்லும் திசையில் சென்றுகொண்டே இருக்கும். அதனால் வாலைப் பார்க்க வேண்டும். ஆனால் பன்றி அது செல்லும் திசையில் செல்லாமல் சட்டென பின்னோக்கித் திரும்பும். அதனால் அதன் தலைமீது நம் பார்வை இருக்கவேண்டும். அது நேராகச் செல்லும் என நினைத்து சிலர் அதன்மீது மோதிவிடுவார்கள். அது ஆபத்தானது என்பதால்தான் பன்றியின் மீது மோதக்கூடாது என்பார்கள்”, என்று விளக்கம் கொடுத்தான் தமிழ்ப்பிரியன்.
“கடவுளின் அவதாரம் என்பதால் பன்றியின் மீது மோதக்கூடாது என்பது தவறா தமிழ்ப்பிரியன்?”
“ஆமாம். பன்றியின் குணம் அப்படி இருப்பதால்தான் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு பன்றிகள் குறுக்கே வந்தால் கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பார்கள். மற்றபடி கடவுளின் அவதாரம், அதனால் அதன்மீது மோதக்கூடாது என்பதெல்லாம் கட்டுக்கதை,” என்று விளக்கினான் தமிழ்ப்பிரியன்.
அதைக் கேட்டு பெரிதும் வியப்படைந்தான் மாதவன்.
“பாதையை மாற்றக்கூடாது என்று சொன்னாயே. அது பற்றி சொல்”, என்று கேட்டான் மாதவன்.
“சில நாடுகளில் உல்லாசப் பயணம் செல்பவர்கள் தங்கள் வாகனத்தைத் தாங்கள் விரும்பிய பாதையில் மாற்றி மாற்றிச் செல்லக் கூடாதாம். அவர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பாதையில்தான் செல்லவேண்டும் – அதாவது விமானத்தின் பாதை தீர்மானிக்கப்பட்டிருப்பதைப்போல. உதாரணமாக நீ மதுரை செல்ல விரும்பினால், விருத்தாசலம் வழியாக வேப்பூர் புறவழிச்சாலை நமக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தால் அதன் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால், அந்த விதமான ஏற்பாடு தற்போது போக்குவரத்துத் துறையிடம் இல்லை. ஆனால் வரவேண்டும். இந்தத் திட்டம் இருந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
விபத்துகளும் தவிர்க்கப்படும்,” என்றான் தமிழ்ப் பிரியன்.
“அது நல்லதுதானே,” என்று தனது கருத்தைத் தெரிவித்தான் மாதவன்.
“அப்புறம் இன்னொரு செய்தி. காரை நீயே ஓட்டப் போகிறாயா? அல்லது ஓட்டுநர் போட்டு பயணம் செய்யப் போகிறாயா?” என்று கேட்டான் தமிழ்ப்பிரியன்.
“ஓட்டுநர்தான் காரை ஓட்டப் போகிறார். எனக்கு இரவில் கார் ஓட்ட முடியவில்லை. எதிரில் வரும் காரின் விளக்கு வெளிச்சத்தில் கண்கள் கூசுவதால் பாதை சரியாகத் தெரிவதில்லை. அதனால் ஓட்டுநர் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான் மாதவன்.
“உருப்படியான செயலைச் செய்துள்ளாய் மாதவன். கண்களில் கோளாறு என்றாலோ, உடல்நலம் சரியில்லை என்றாலோ நாம் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதோடு தூக்கம் வந்தாலும் கார் ஓட்டக்கூடாது. நான் வடநாட்டில் காரில் பயணம் செய்தபோது வாகன ஓட்டுநர் குட்கா, பான்பராக் போன்ற புகையிலைப் பொருட்களை வாயில் போட்டு மென்று கொண்டே தூங்காமல் பல மணி நேரங்கள் கார் ஓட்டினார். கேட்டால் வயிற்றுப் பிழைப்புக்காக என்றார். வேறு வழியில்லாமல் பயந்து கொண்டே பயணம் செய்தேன். பல நாடுகளில் ஓட்டுநருக்குப் பல கட்டுப்பாடுகள் உண்டு. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அதாவது எட்டு மணி நேரத்திற்கு மேல் கார் ஓட்டக்கூடாது. மீறினால் கடும் தண்டம் விதிக்கப்படும். நான் அய்ரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்தது உனக்குத் தெரியுமல்லவா?” என்று மாதவனைப் பார்த்துக் கேட்டான் தமிழ்ப்பிரியன்.
“ஆமாம். நினைவிருக்கிறது. பெரியார் பன்னாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த விழாவிற்குச் சென்றிருந்தாய்.”
“ஆமாம் மாதவன். ஜெர்மனி நாட்டில் கொலோன் பல்கலைக்கழக வளாகத்தில் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில் நானும் கலந்துகொண்டேன். மாநாட்டிற்குப் பிறகு பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தேன். அப்போது இதுபோன்ற பல செய்திகளை நேரில் அனுபவத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். காலம் தவறாமை என்பதும், சட்டத்தை மதிக்கவேண்டும் என்பதும் மிகவும் முக்கியம். நம்மால் மற்றவர்களுக்கு எந்தவிதத் தொல்லையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். அதுபோலவே வாழ்க்கைப் பாதையை நாம் சரியாகத் தேர்வு செய்துவிட வேண்டும். பாதை தவறானது என்றால் உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டும். நான் செல்லும் பாதை என்னவென்று உனக்குத் தெரியுமல்லவா? என்று கேட்டபடியே மாதவனைப் பார்த்தான் தமிழ்ப்பிரியன்.
தெரியும் என்பதுபோல் தலையசைத்தான் மாதவன். “ஆமாம். பகுத்தறிவுப் பாதையே என்னுடைய பாதை. நீ உன் பாதையில் சற்றுத் தயங்கித் தடுமாறுவாய் என்பதும் எனக்குத் தெரியும். தெளிவான பாதையில் பயணம் செய்வதுதான் நல்லது என்றான் தமிழ்ப்பிரியன்.
“உன்னுடைய பேச்சுகள் பலவும் என்னைப் பலமுறை சிந்திக்க வைத்துள்ளன. பலமுறை எனக்குப் பல தடுமாற்றங்கள் இருந்தாலும் இப்போது நீ சொன்ன பல கருத்துகளால் நானும் உன்னோடு பகுத்தறிவுப் பாதையில் பயணம் செய்ய முடிவு செய்துவிட்டேன். என்னை உன்னுடன் சேர்த்துக்கொள்வாயா?” என்று கேட்ட மாதவனைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சி தெரிவித்து தன் பாதைக்கு வரவேற்றான் தமிழ்ப்பிரியன்.