மலைகளடர்ந்த ஸ்தலத்தின்டே
யானையை உருட்டிப் பந்து செய்ததுபோல்
திரண்ட பாறையொன்று
உருண்டுவிடாமல் உச்சியில்
ஒய்யாரமாய்க் கிடக்கிறது
இதுதான் “தங்ஙள்பாறா”
பெரிய முஸ்லிம் பெரியவர்
அடங்கி இருக்காராக்கும்
ஒட்டிய அடுத்த குன்றில் மயிலும் குமரனும்
இடது புறம் தேவனின் ஆலயம்
மும்மதத்தவரும் பக்தியால் மலையேறும்
முக்திபெற்ற ஸ்தலம்
பரமபிதாவின் பரம விசுவாசிகள்
மொத்தமாய்க் குவிந்து
தங்ஙள் பாறாவை தங்கள் பாறாவாக்கிய
குறுத்தோலை ஞாயிறன்று
அவசரத்திற்கு மலைச்சரிவில் ஒதுங்கிய விசுவாசியொருவர் என்ட அம்மே என்றலறினார்
எட்டிப் பார்த்தால்
கந்தலாகிக் கிடந்தாளொரு
மலை தேசத்துச் சிறுமி
ஒரு சாமியும் காப்பாத்தலே
என்றபடி வாய்விட்டழுத பாட்டி
அண்மையில்தான் முருகனிடம் முரண்பட்டு
ஏசுவை ஏற்றிருந்தாள்
நிபுணர்கள் கூற்றின்படி
ஒன்றிற்கும் மேற்பட்டோரின்
பாலியல் பலாத்காரத்திற்குப் பின்தான்
படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள் சிறுமி
ஸ்தலத்தின் அருமை தெரியவேண்டாமோ!
இவிடே வந்தா இதைச் செய்வது?
உருண்டையான பாறை உருளாமலிருப்பதற்கு
இங்கே அடங்கியுள்ள தங்ஙள்தான் காரணம்
எத்தன சக்தி தெரிமோவென்றார்கள் பாறையிலிருந்து சிறுமியை வேடிக்கை பார்ப்பவர்கள்
எதிர்புறத்து மலையிலொரு
வெள்ளச் சாட்டமுண்டு
அந்த அருவி தழுவும் பாறைக்கு
“பாலொழுகும்பாறா” என்று பெயர்
ஆனால் தண்ணீர்தான் பால்நிறத்தில்
பாய்ந்து கொண்டிருக்கிறது !