டாக்டர் கவுதமன் அவர்கள் 1949 இல் பிறந்தவர். வயது 75 ஆகிறது.
அப்பா பெயர் இராமமூர்த்தி. “பென்னாகரம் இராமமூர்த்தி” என அழைக்கப்பட்டவர். அம்மா பெயர் சாந்தா. இராமமூர்த்தி அவர்கள் மிகச் சிறந்த பெரியார் தொண்டர். சுயமரியாதைக் குடும்பத்தின் வார்ப்பு, வளர்ப்பு கவுதமன் அவர்கள்.
தத்துவ விளக்கம்!
டாக்டர் கவுதமன் அவர்களின் தந்தை, அந்தக் காலத்திலேயே இன்டர்மீடியட் முடித்தவர்கள். மேனாள் அமைச்சர் க.இராஜாராம் அவர்களின் வகுப்புத் தோழர் ஆவார். சேலம் அரசுக் கல்லூரியில் படித்த போது, கல்லூரி முதல்வர் இராமசாமி, பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களை அழைத்துப் பேச வைத்துள்ளார். அந்தப் பேச்சு தான், இன்று வரை விற்பனை ஆகும் “தத்துவ விளக்கம்” எனும் புத்தகமாகும். இந்தக் கூட்டத்தைக் கேட்டுத்தான் பென்னாகரம் இராமமூர்த்தி அவர்கள் பெரியாரிஸ்ட் ஆனது. 1938இல் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போரில், பெரியாருடன் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியரே தலைவர்!
75ஆண்டுகளுக்கு முன்னால் பென்னாகரம் இராமமூர்த்தி அவர்கள், பெரியாரை எப்படி தலைவராக ஏற்று, இயக்கத்திற்கு உழைத்தார்களோ, அதேபோல டாக்டர் கவுதமன் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களைத் தலைவராக ஏற்று பலமடங்கு உழைத்து வருகிறார்.
இயக்கக் குடும்பம் என்பதால், கவுதமன் அவர்கள் தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே விடுதலை வாசிக்கத் தொடங்கி இருக்கிறார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1967 ஆம் ஆண்டு பி.யு.சி முடிக்கிறார். பிறகு மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு, அதற்கான பணிகளைச் செய்கிறார். இந்நிலையில் தான் அறிஞர் அண்ணா முதல்வராகப் பதவியேற்கிறார். அச்சூழலில், மருத்துவக் கல்லூரியில் இடம்பெற 60 விழுக்காடு மதிப்பெண்கள் வேண்டும் எனப் புதிய ஆணை வருகிறது. அதற்கு முன்பு 50 விழுக்காடு என்று இருந்தது.
இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை’யில் ஒரு தலையங்கம் எழுதுகிறார்கள். முன்பு இருந்த 50 விழுக்காடே இருக்கட்டும், புதிய சட்டத்தால் ஏழை, எளிய கிராமப்பகுதி மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்து மாணவர்களுமே பாதிக்கப்படுவார்கள் என ஆசிரியர் சுட்டிக்காட்டி எழுதினார்கள். இதனை மய்யமாக வைத்து அறிஞர் அண்ணா அவர்களும் பழையவாறே சட்டத்தை மாற்றினார்கள். கல்வி வளர்ச்சிக்காகச் சத்தம் இல்லாமல் நடந்த வரலாற்றுச் சாதனை இது!
மருத்துவர் ஆன கதை!
அதேநேரம் வேறு சில காரணங்களால் கவுதமன் அவர்களுக்கு, மருத்துவம் படிக்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. தமது பெற்றோர்களின் கனவே மருத்துவர் ஆவது தானே, அது முடியாமல் போய் விட்டதே என கவுதமன் அவர்கள் வேதனையில் இருந்த போது, குடும்பத் தலைவர், வழிகாட்டும் தலைவர் என எல்லோராலும் நேசிக்கப்படுகிற தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஓர் ஆலோசனை சொல்கிறார்கள்.
M.B.B.S., படிக்க வாய்ப்பில்லாமல் போனால் என்ன, B.D.S , படியுங்கள் என்கிறார். அப்படி ஒரு படிப்பு இருப்பதே அப்போது பலருக்கும் தெரியாது; கவுதமன் அவர்களுக்கும் தெரியவில்லை. பிறகு அதற்கு விண்ணப்பமிட, இடம் கிடைக்கிறது. இந்தச் செய்தி அறிந்த அன்னை மணியம்மையார் அருகில் இருந்தோருக்கு இனிப்பு வழங்கியுள்ளார். பின்னர் சென்னை மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கியுள்ளார். அப்போது பல் மருத்துவத்திற்குத் தனிக் கல்லூரி கிடையாது. எம்.பி.பி.எஸ்., கல்லூரியுடன் இணைந்தே இருந்தது.
பிறைநுதல் செல்வி சந்திப்பு!
இப்படியாகத் தொடங்கிய மருத்துவக் கல்லூரி வாழ்க்கையில் தான், திராவிடர் கழகப் பொருளாளராக இருந்த பிறைநுதல்செல்வி அவர்களை, கவுதமன் அவர்கள் சந்திக்கிறார். அந்தக் கல்லூரியில் தமிழ் மன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் எனத் தம் குழுவினருடன் பிறைநுதல்செல்வி முயற்சி செய்கிறார். அவர் இனவுணர்வும், மொழிவுணர்வும் கொண்டவர், குறிப்பாக நாத்திகர் என்பதைக் கவுதமன் அறிகிறார். ஹிந்தி எதிர்ப்புப் போரில் பிறைநுதல்செல்வி அவர்கள் பங்கேற்றதையும், 1965இல் அறிஞர் அண்ணா தலைமையிலான கூட்டத்தில் பேசியதையும் ஒன்றன் பின் ஒன்றாக அறிகிறார்!
ஒத்தக் கொள்கை, சிந்தனை எனும் அடிப்படையில் கவுதமன் – பிறைநுதல்செல்வி தோழமை வலுப்பெறுகிறது. இருவரும் இணைந்து மருத்துவக் கல்லூரியில் பொது நிகழ்ச்சிகளை முன்னெடுக்கின்றனர். இறுதியாண்டில் நாம் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது எனப் பிறைநுதல்செல்வி அவர்கள் கேட்க, இருவரும் வாழ்விணையர்கள் ஆகிறார்கள்!
ஆசிரியரின் ஒற்றைக் கேள்வி!
கவுதமன் அவர்கள் தம் நன்றியை இயக்கத்திற்குக் காட்டி வருவது போல, டாக்டர் பிறைநுதல்செல்வி அவர்கள் ஒருபடி அதிகமாகவே ஈடுபடுத்திக் கொண்டவர். ஆசிரியர் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகக் குன்னூர் சென்ற போது, பிறைநுதல்செல்வி அவர்களைப் பார்த்து, “இன்னும் பணிக் காலம் எவ்வளவு ஆண்டுகள் இருக்கிறது”, எனக் கேட்டுள்ளார். ஆசிரியர் ஒன்றைக் கேட்டால் காரணம் இருக்கும் என்பது நாம் அறிந்ததே! இந்நிலையில் அடுத்த நாளே பிறைநுதல்செல்வி அவர்கள் தம் மருத்துவப் பணியைத் துறந்து எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார்்.
இவ்வளவுக்கும் அப்போது அவர்கள் மருத்துவர் என்பதைக் கடந்து, மருத்துவத்துறை சார்ந்த இணை இயக்குநராகப் பணியாற்றி வந்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திற்கே அவர்தான் மருத்துவ அதிகாரி. வீட்டில் வந்து இணையரிடம் “நான் விருப்ப ஓய்வு எழுதிக் கொடுத்து வந்துவிட்டேன்”, என்றபோது, என்னிடம் கூட காலையில் சொல்லவில்லையே எனக் கவுதமன் அவர்கள் கேட்டுள்ளார். ஆசிரியர் சொன்னதற்குப் பிறகு மறுயோசனையோ, தாமதமோ எதற்கு என்று கேட்டுள்ளார். அப்பேர்ப்பட்ட மருத்துவர் பிறைநுதல்செல்வி அவர்கள்தான், திராவிடர் கழகத்தின் பொருளாளராகத் தமிழர் தலைவரால் நியமிக்கப்பட்டார். துணைப் பொதுச் செயலாளராக 2 ஆண்டுகளும், பொருளாளராக 4 ஆண்டுகளும் பொறுப்பு வகித்தார்.
குற்றாலம் பயிற்சி முகாம்!
டாக்டர் கவுதமன் அவர்கள் தென்காசியில் பணியில் இருந்த போது, ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலின் பேரில் உருவானதே குற்றாலம் “பெரியார் பயிற்சி முகாம்”. இன்றைக்கு “மானமிகு” என்கிற வார்த்தை வழக்கத்தில் இருக்கிறதே அது உருவான இடம் தென்காசியில் தான்! அதேபோல அன்றைய கால கட்டத்தில் “பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாடு” தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. அந்தச் சிந்தனையின் தொடக்கமும் தென்காசி தான்! அந்த வகையில் முதன்முதலில் மாநாடு நடைபெற்ற இடம் திருநெல்வேலி. சிறப்பான வரலாறு கொண்ட இந்தக் குற்றாலம் பயிற்சி முகாமில், 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து பங்கேற்றும்,
சேவைப் பணிகளும் ஆற்றி வருபவர் டாக்டர் கவுதமன் அவர்கள்! சளைக்காமல் உழைத்தவர்கள்!
பல் மருத்துவம் முடித்த பிறகு சென்னையில் 1983 இல் M.D.S., படித்து, அதில் முக அறுவைச் சிகிச்சையைப் பயின்றவர், குன்னூருக்குப் பணிமாற்றம் விரும்பிப் பெற்று அங்குச் சென்றார். அவர் ஓர் இயற்கை விரும்பி! மட்டுமின்றி மலைவாழ் மக்களுக்கும் தொண்டு செய்வதில் விருப்பம் உள்ளவர்.. 1986இல் குன்னூர் அரசு மருத்துவமனையில் டாக்டர் கவுதமன் டாக்டர் பிறைநுதல் செல்வி இருவருமே பணியாற்றினர். கவுதமன் அவர்கள் 9 ஆயிரம் முக அறுவை சிகிச்சைகள் செய்தவர். இதில் 6 ஆயிரம் சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டவை. இவ்வளவுச் சிறப்பாகப் பணியாற்றிய அவர், 2008ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதேபோல டாக்டர் பிறைநுதல்செல்வி அவர்கள் 10 ஆயிரம் மகப்பேறு மருத்துவம் பார்த்தவர். இருவருமே இச்சாதனைகளுக்குகிடையே இயக்கப் பணிகளில் சளைக்காமல் உழைத்தவர்கள்.
பிறைநுதல்செல்வி அவர்கள் 2019இல் நடைபெற்ற ஒரு விபத்தில் காலமானார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய இரங்கல் அறிக்கை, வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு உருக்கமாக இருந்தது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து, மீண்டு வந்த டாக்டர் கவுதமன் அவர்கள், வழக்கம் போல இயக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
பெரியாருக்கு மட்டன் சூப்!
சென்னை மருத்துவக் கல்லூரியில் கவுதமன் அவர்கள் படித்த போது பெரியார் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்னை, பார்க் டவுன் அருகேயுள்ள அரசுப் பொது மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். கவுதமன் அவர்கள் உணவு வேளையில் ஒருமுறை மட்டன் சூப் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். அதனைக் குடித்துவிட்டு, சுவையாக இருக்கிறதே, என்ன விலை? எங்கே வாங்கினீர்கள் எனப் பெரியார் கேட்டுள்ளார். “மெட்ராஸ் யுனைடெட் கிளப்பில்” வாங்கினேன் என்று
கூறிவிட்டு, சிக்கன் சூப் ரூ.25, ’மட்டன் சூப் ரூ15 என்றாராம். ’மட்டன் சூப் விலை குறைவுதானா, அப்படியானால் தினமும் வாங்கி வாருங்கள்’
என்ற பெரியார், ‘மெட்ராஸ் யுனைடெட் கிளப் இன்னமும் இருக்கிறதா’ என்று கேட்டுவிட்டு, அந்தக் காலத்தில் நான் அதில் உறுப்பினராக இருந்தேன் என்றாராம். பிறகு தினமும்
மதியம் சூப் வாங்கிச் சென்றுள்ளார்
கவுதமன். மணியம்மையார் அவர்கள், “வாங்க சூப் மாஸ்டர்” என கவுதமனை வேடிக்கையாக அழைப்பாராம்!
இப்படி தம் தந்தையார் காலத்தில் இருந்தே பெரியார், மணியம்மையார் அறிமுகமும், பின்னர் ஆசிரியர் கி.வீரமணி, மோகனா அம்மையார் என இன்றும் தொடர்ந்து எந்தச் சூழலிலும், எந்த நெருக்கடியிலும் இயக்கப் பற்று மாறாமல் தம் சமூக உணர்வுகளை வெளிப்படுத்தி வருபவரே மருத்துவர் கவுதமன் அவர்கள்!