தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் அண்மையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தாழ்த்தப்பட்டோருக்கு அமைச்சரவையில் இடம் அளித்தது காங்கிரஸ்தான் என்று கூறியுள்ளார். அதே வேளையில் நீதிக்கட்சி ஆட்சியில் கூட அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்கள் இடம்பெற முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். இது ம.பொ.சி வகையறாக்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட புளித்துப்போன ஒரு குற்றச்சாட்டு. தாழ்த்தப்பட்ட மக்களின் அன்றைய நிலை என்ன?
1935ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டுப் பேருந்துகளில் பஞ்சமருக்கு இடமில்லை என்று சொன்னதோடு பயணச் சீட்டுகளிலும் அப்படி அச்சிடப்பட்டிருந்ததே! அதை ஒழித்துக் கட்டியது இராமநாதபுரம் மாவட்டத்தின் ஆட்சிக் குழுத் தலைவராக இருந்த சவுந்தரபாண்டியனார் அல்லவா?
தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காக நீதிக்கட்சி ஆற்றிய சாதனைகள் எத்தனை? எத்தனை? பேருந்தில் கூட செல்ல முடியாத நிலை. உணவு விடுதிகள், பொது இடங்கள் என எங்கு சென்றாலும் தடை. அனைத்தையும் உடைத்து தகர்த்தது நீதிக் கட்சியும் அதன் நீட்சியான திராவிட இயக்கமும் அல்லவா? இதை உணர்ந்தால் நீதிக்கட்சி அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோர் ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்வியே எழ வாய்ப்பில்லையே!
1919லிருந்து 1935ஆம் ஆண்டு வரை இங்கே இருந்தது இரட்டை ஆட்சி முறை. அதன்படி அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட இந்தியர் மொத்தமே மூன்று பேர்தான் இடம்பெற முடியும். அந்தக் காலகட்டத்தில் ஆட்சி புரிந்த நீதிக்கட்சி அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்கள் இடம் பெறவில்லை என்று கூறுபவர்கள், அதனைத் தொடர்ந்து 1937இல் 10பேர் கொண்ட அமைச்சரவையையும், 1952இல் 15பேர் கொண்ட அமைச்சரவையையும் வைத்திருந்த ராஜாஜி அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்கள் இடம் பெறவில்லை என்ற உண்மையை மறைப்பது ஏன்?
1937ல் ஏப்ரல் முதல் ஜூலை வரை சென்னை மாகாணத்தில் சொற்பகாலமே ஆட்சியிலிருந்த கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவின் தற்காலிக இடைக்கால அமைச்சரவையில் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எம்.சி.ராஜா அவர்கள். அவர் பெரியார் அவர்களைப் பற்றி கூறியது என்ன?
“இம்மேடையில் தோழர் ஈ.வே. ராமசாமி பெரியார் இருப்பதைக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு ஆதி திராவிட மந்திரி நியமிக்கப்பட வேண்டும் என அவர் சென்ற ஆறு- ஏழு வருஷ காலமாக கிளர்ச்சி செய்து வந்திருக்கிறார். அவர் தமது பத்திரிகைகள் மூலமாகவும் அதிகாரிகளிடம் நேரில் சொல்லிக் கொள்வதன் மூலமாகவும் அவர் நமக்காக பெரு முயற்சி செய்து வந்திருக்கிறார். ஆதி திராவிடர்களுக்குரிய இன்றைய மந்திரி ஸ்தானத்துக்கு பெரியாருடைய முயற்சியே பிரதானக் காரணம் என்பது பொய்யல்ல. இந்த மாநாட்டை அவர் நம்மிடம் இருந்து நடத்திக் கொடுக்க உதவியமைக்கு என் நன்றியையும் சந்தோஷத்தையும் அவருக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட வில்லையா?
நீதிக்கட்சிக்குப்பின் ஆட்சிக்கு வந்த காமராசர் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோர் இடம் பெற்ற முழுப் பெருமையையும் காங்கிரஸ் எடுத்துக் கொள்ள முடியாது! அதற்குக் காரணமாக காமராசரின் பின்புலத்தில் பெரியார் இருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான் ‘காரணம் பெரியார்! காரியம் காமராசர்!’ என்று அப்போது பத்திரிகைகள் எழுதின. பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க இயலாமல்தான் பெரியாரே காங்கிரசை விட்டு வெளியேறினார். காங்கிரசில் தற்போது பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இன்றைய நிலை அப்படி இல்லை.
அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோரின் நம்பிக்கை ஒளியாய் காங்கிரஸ் மட்டுமே இருந்து கொண்டிருக்கிறது என்பதிலும் இருவேறு கருத்துக்கு இடமில்லை. காங்கிரசைத் தூக்கிப் பிடிப்பதற்காக, நீதிக்கட்சியைக் குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை!