மனமின்றி அமையாது உலகு!(2) மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்

2024 Uncategorized ஆகஸ்ட் 1-15, 2024

நலமான வாழ்க்கைக்கு உடல் நலன் மட்டுமே போதுமானதல்ல, மனநலன் தான் அதற்கு அடிப்படையானது. என்ன தான் உடல் நலமாக இருந்தாலும் மனம் சரியில்லையென்றால் நம்மால் அதன் பலன்களை அனுபவிக்க முடியாது. அதனால் மனநலமில்லாமல்

நல்வாழ்க்கையை அடைய முடியாது .
“மனதளவில் நலமாக இருப்பது என்றால் என்ன?” மனதை எப்படி நலமாக வைத்துக் கொள்வது?” போன்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாத காரணத்தினால் மனதைப் பற்றிய புரிதல்கள் தவறானதாகவே இருக்கின்றன. மனம் என்பதை நம் உடலின் ஓர் அங்கம் என்றே யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் தான் மனதில் உருவாகும் நோய்களையும் நோய்களாகவே யாரும் உணர்வதில்லை.

உதாரணத்திற்கு, நீங்கள் யாரிடமாவது சென்று, “எனக்கு மனசு கஷ்டமா இருக்கு” என்று சொல்லிப் பாருங்கள், ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையா’, ‘எல்லாம் மனசுலதான் இருக்கு’, ‘மனச தைரியமா வச்சுகிட்டா எந்தப் பிரச்சினையும் இல்ல’, ‘நீயாதான் பயந்துக்கிட்டு கற்பனை பண்ணிக்கிற’. ‘எதப் பத்தியும் யோசிக்காம மனச உறுதியா வச்சுக்க’ என்று ஏராளமான ஆறுதல் வார்த்தைகள்தான் உங்களுக்குக் கிடைக்கும்.

உண்மையில் மனரீதியான தொந்தரவுகள் மிகவும் சாதாரணமாகவே தொடங்குகின்றன. உடனடியாக அதைக் கவனித்தால் மிக விரைவாகவே அதிலிருந்து மீண்டு வந்து விடலாம். ஆனால், மனரீதியாக வரும் பிரச்சினைகளைத் தனிப்பட்ட பலவீனமாக மட்டுமே எண்ணி அதற்கான சிகிச்சையை நாம் அலட்சியப்படுத்தி விடுகிறோம். இதனால் சிறிய மனநலப் பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தீவிரமடைந்து விபரீதமான நிலைக்குக் கொண்டு செல்கின்றன.

ஏன் மனநலத்தின் மீது நமக்கு இந்த ஒவ்வாமை?

நான் எனது மாணவர்களிடம் அவர்களுடைய முதல் நாள் வகுப்பில் எப்போதும் ஒரு கேள்வியைக் கேட்பேன்-

“உங்களில் யாருக்காவது மனரீதியான பிரச்சினை எப்போதாவது இருந்ததா?” என்று.

முழு அமைதி மட்டுமே அந்த வகுப்பில் அந்தப் பொழுதில் நிறைந்திருக்கும், சில பேர் தங்களுக்குள் சிரித்துக் கொள்வார்கள், சில பேர் வேறு யாரோ ஒருவரைப் பார்த்து மவுனமாகச் சிரிப்பார்கள்.

நான் அடுத்த கேள்விக்குச் செல்வேன்,

“சரி, உங்களில் யார் முழு மனநலத்துடன் இருக்கிறீர்கள்?”

அதற்கும் அதே நமட்டுச் சிரிப்புகளே பதிலாகக் கிடைக்கும்.

மனநலன் என்பதே கேலிக்கு உரியதாக, வெளிப்படையாகப் பேசுவதற்கே தயங்குகிற ஒன்றாக இருக்கிறது. மனநலத்தின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் இந்த ஒவ்வாமையே மனநலத்தின் மீதான அத்தனை களங்கங்களுக்கும் காரணமாக இருக்கிறது.

ஒருவருக்கு உடல் நலத்தில் ஏதேனும் பாதிப்பு என்றால் அந்தப் பாதிக்கப்பட்டவருக்கு சக மனிதர்களின் பரிவும், அன்பும் கிடைத்துவிடுகிறது. அதுவே அவர் மனரீதியாக ஏதாவது பாதிப்பில் இருக்கிறார் என்றால் சக மனிதர்கள் அவரைக் கேலியாகவும், பரிகாசமாகவும் பார்க்கும் நிலைதான் இருக்கிறது, அதனாலேயே பெரும்பாலான நேரங்களில் மனரீதியான பிரச்சினைகளை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள்.

மனதில் வரும் பிரச்சினைகள் அனைத்தும் ஒன்றல்ல!

மனநலனின் மீதான பொதுமக்களின் களங்கப் பார்வைக்கான மற்றொரு காரணம்- மனதில் வரும் அனைத்துப் பிரச்சினைகளையும் ‘தீவிர மனநோயாக’ நினைத்துக் கொள்வதே! பொதுவாகவே மனநோயாளிகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரு பொதுப் பார்வை சமூகத்தில் இருக்கிறது. அதாவது மனநோயாளிகள் அனைவரும் தனியாகப் பேசிக்கொள்வார்கள், சிரித்துக் கொள்வார்கள், எந்த வேலையையும் செய்யத் திறனற்றவர்களாக இருப்பார்கள், சுத்தமாக இருக்க மாட்டார்கள், மற்றவர்களுக்கு ஆபத்தானவர்களாக இருப்பார்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதனால் ஒருவருக்கு மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றாலே அவரும் பின்னாளில் இப்படி மாறிவிடுவார் என நம்புகிறோம். இந்தத் தவறான பார்வையே மனநலத்தின் மீதான களங்கத்திற்குக் காரணம்.

உண்மையில் இன்றைய காலகட்டத்தில் மிகவும் சவாலானதாகவும், பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகளுக்கு காரணமாகவும் இருப்பது மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற மிக எளிமையான மனநோய்களே!. மனநோய்களின் மீதிருக்கும் தவறான பார்வையினாலும், களங்கத்தினாலும் இந்த எளிமையான நோய்களுக்கான உதவியை யாரும் கோருவதில்லை, அதனால் இந்த மிகச் சாதாரணமாகக் குணமாகக்கூடிய மனநலப் பிரச்சினைகளெல்லாம் பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகளுக்குக் காரணமாகிவிடுகின்றன. மக்களின்நல்வாழ்வோடு மனநலம் பின்னிப் பிணைந்திருக்கிறது. மனதை நலமாக வைத்துக்கொள்ளாமல் உடலை நலமாக வைத்துக்கொள்ள முடியாது.

கேள்வி :

வணக்கம் மருத்துவர் அய்யா!

மனநோய் என்றால் என்ன? அதன் தன்மைகள் என்ன?

– சரவண பாரதி, கும்பகோணம்.

பதில் :

“உடல் நோய் என்றால் என்ன?” என்று எப்படி பொத்தாம் பொதுவாகக் கேட்க முடியாதோ அதே போலத் தான் “மனநோய் என்றால் என்ன?” என்றும் பொத்தாம் பொதுவாகக் கேட்க முடியாது. உடலில் ஏற்படும் நோய்கள் அத்தனையும் ருவகைப்பட்டதல்ல; மிகச் சாதாரணமான நோய் முதல் மிகத் தீவிரமான நோய் வரை பலவகைப்பட்ட நோய்கள் இருக்கும் போது, “உடல்நோய்” என்ற பொதுவான கேள்வியின் வழியாக அத்தனை நோயையும் நாம் புரிந்து கொள்ள முடியாது. நீரிழிவு நோய் என்றால் என்ன? ரத்த அழுத்தம் என்றால் என்ன? என்பது போல ஒவ்வொரு நோயையும் குறிப்பிட்டுக் கேட்கும்போது மட்டுமே அந்தந்த நோயின் தனித்தன்மைகள், காரணங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ஏனென்றால் ஒவ்வொரு நோயும் வேறு வேறு தன்மைகள் கொண்டது, வேறு வேறு காரணங்களைக் கொண்டது. அதே போல உடலில் ஏற்படும் அத்தனை நலக்குறைபாடுகளையும் நோய்மை என்ற வகைமைக்குள் அடைக்க முடியாது. உதாரணத்திற்கு உடல் பருமனாக இருப்பது நோய் அல்ல; அது ஓர் ஆரோக்கிய மற்ற நிலை. நோயைத் தடுக்க வேண்டுமானால் ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியம். நம்மிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற நிலைகளைக்கண்டுகொண்டு அதைத் தவிர்ப்பது நோயைத் தடுக்கும் முக்கியமான வழி. ஏனென்றால் ஆரோக்கியமற்ற நிலைகள் எல்லாம் நோய் அல்ல என்றாலும், அவை நோயை நோக்கிய பாதை என்பதை நாம் உணர வேண்டும்.

மேல் சொன்னவை அத்தனையும் மனநோய்களுக்கும் பொருந்தும். “மனநோய்” என்பது பொதுவான ஒன்று. உடலில் உருவாகும் நோய்களைப் போலவே மனதிலும் மிக எளிமையான மனநோயிலிருந்து மிகத் தீவிரமான மனநோய் வரை ஏராளமான நோய்கள் தோன்றலாம். இன்றைய மருத்துவ அறிவியல் புத்தகங்களின்படி நானூறுக்கும் மேற்பட்ட மனநோய்கள் இருக்கின்றன. இதில் தீவிரமான மனநோய்கள் என்பவை மிகச் சொற்பமே. பெரும்பாலான மனநோய்கள் மிக எளிமையானவை. இவற்றை எளிதில் குணப்படுத்த முடியும்.

ஆனால், நாம் மனநோய் என்றாலே தீவிரமான மனநோயை நினைத்துக் கொள்கிறோம். இந்த அச்சத்தினால்தான் நம் மனதில் ஏற்படும் சாதாரணப் பிரச்சினைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் அந்தப் பிரச்சினைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழும் வாழ்க்கையின் தரத்தினை நமது ஆரோக்கியமான மனமே நிர்ணயிக்கிறது. மனரீதியாக நாம் எதிர்கொள்ளும்
சின்னச் சின்னச் சங்கடங்களை எல்லாம் நிராகரிப்பதன் மூலம் நமது வாழ்க்கையின் தரத்தைக் குறைத்துக் கொள்கிறோம். இவற்றையெல்லாம் சரி செய்தால் நமது அன்றாட வாழ்க்கையை இன்னும் சிறப்பானதாக, மகிழ்ச்சியானதாக, திருப்திகரமானதாக வைத்துக் கொள்ள முடியும்.

இதைச் சரி செய்ய விடாமல் தடுப்பது “மனநோய் என்றாலே ஒன்று தான், அது குணப்படுத்த முடியாதது” என்ற தவறான கருத்தாக்கம்தான். அதனால் அந்தக் கருத்தாக்கத்தில் இருந்து நாம் வெளியே வருவதும், மனரீதியான சங்கடங்களை எந்த முன்முடிவுகளும் இல்லாமல் ஏற்றுக்கொள்வதும் தான் மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் நாம் முதன்மையாகச் செய்ய வேண்டியது.