1955ஆம் ஆண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து
இந்திய தேசியக் கொடியை ஆகஸ்ட் 1ஆம் தேதியில் எரிப்பது எனத் தீர்மானித்தார். இந்தி, தேர்வுக்கான பாடமாக இராது என மத்திய மாநில அரசுகள் உறுதி அளித்ததன் பேரில் கொடி எரிப்புக் கிளர்ச்சியை ஒத்தி வைத்தார்.
1956ஆம் ஆண்டு நாடெங்கும் இராமன் உருவப்படத்தை எரிக்கச் செய்தார். தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தட்சணப்பிரதேசம் என்ற கேடான அமைப்பை எதிர்த்து அதனை இந்திய அரசு கைவிடச் செய்தார். மொழிவாரிப் பிரிவுக்குப் பின் தமிழ்நாடே தாம் கோரும் தனித் திராவிட நாட்டின் எல்லை என அறிவித்தார்.
1957ஆம் ஆண்டு திருச்சியில் வினோபாபாவேயைச் சந்தித்து இராமாயணம் பற்றிய தம் கருத்தை விளக்கினார். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மலையப்பன் தொடர்பான பார்ப்பன நீதிபதிகள் அளித்த அநியாயத் தீர்ப்பை எதிர்த்து நாடெங்கும் கண்டனக்
குரல் எழுப்பினார். அதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு ஆளாகி தண்டனை ஏற்றார். அவ்விசாரணை
யின்போது வரலாற்றுச் சிறப்புடையதான வாக்கு மூலம் ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். “நீதிக் கெட்டது யாரால்?” எனும் நூல் அவ்வரலாற்றை எடுத்து இயம்புகிறது உணவு விடுதியில் ‘பிராமணாள்’ என்ற பெயரை நீக்கும் கிளர்ச்சி நடத்தி வெற்றி பெற்றார். தமிழ்நாட்டில் எந்தத் தலைவருக்கும் நடந்திராத தன்மையில் அவர்தம் எடைக்கு வெள்ளி ரூபாய் அன்பளிப்பாகத் தஞ்சையில் 3.11.1957இல் அளிக்கப்பெற்றார்.
அரசமைப்புச் சட்ட எரிப்பு
தந்தை பெரியார் 1957 நவம்பர் 26ஆம் நாள் நடத்திய ஜாதி ஒழிப்பு போராட்டம் எனும் அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் தலையாய போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் 10,000 பேருக்கு மேல் பங்கேற்றனர். அவர்களில் சுமார் 4000 பேர் கைதாயினர். பலரைக் கைது செய்யாமல் விட்டது காமராசர் தலைமையில் ஆன காங்கிரஸ் ஆட்சி, சிறைக் கொடுமையால் 18 பேர் இன்னுயிரை இழந்தனர். பலரும் மூன்று மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைப்படுத்தப்பட்டனர்.
இப்போராட்டத்தை ஒடுக்க மய்ய அரசின் ஆணையின் பேரில் மாநில காங்கிரசு அரசு தேசிய அவமதிப்புச் சட்டம் எனும் அவசரச் சட்டம் நிறைவேற்றியது. தந்தை பெரியார் கைதாகி ஆறுமாதத் தண்டனை பெற்றார்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற
தியாகச் செம்மல்களைப் போல் தியாக உள்ளங்களை எந்த நாட்டு வரலாறும் கண்டிராது. இப்போரில் சிறைப்பட்டவர்கள் கொலையோ, கொள்ளையோ செய்தவர்கள் அல்லர். இப்போராட்டத்தில் பங்கேற்ற எவரும் மன்னிப்பு எழுதிக் கொடுக்காதவர்கள், பெற்ற தாய், பிள்ளை இறந்தபோது அல்லது பிறந்த குழந்தையைப் பார்க்க வேண்டுமென்றோ பரோலில் வராதவர்கள், பலரு
டைய வாழ்க்கை, பொருளாதாரவாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி அக்குடும்பங்கள் இன்று வரை மீளவில்லை.
இப்போராட்டத்தில் சாமானியர்கள் மட்டுமல்லாது நூறு ஏக்கருக்கு மேல் சொத்து வைத்திருந்த சிதம்பரம் கு.கிருட்டினசாமி, நீடாமங்கலம் அ.ஆறுமுகம், ஆனைமலை நரசிம்மன் போன்றவர்கள், உயர்ந்த ஆடை அணிந்தவர்கள், சிறையில் அரைக்கால் சட்டை மேல் சட்டை அணிந்து கைதிகளாய் உயர்வகுப்பு கேட்காமல் கேழ்வரகு அரைத்தல் முதலிய கடும் வேலைகளைச் செய்தனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்களின் இல்லங்களுக்கு அன்னை மணியம்மையார் ஆசிரியர் வீரமணி அவர்களை உடன் அழைத்துக்கொண்டு சென்று நேரில் ஆறுதல் கூறியதுடன், உதவி தேவைப்பட்டவர்களுக்கு தக்க உதவியும் செய்தார் என்பதும், கணவனைப் போராட்டத்தில் இழந்த பெண்மணி மீண்டும் போராட்டம் நடைபெற்றால் என் மகனையும் அனுப்புவேன் என புறநானூற்றுத்தாய் போல் உரைத்த வரலாறும் உண்டு.
இப்போராட்ட வரலாற்றில் பங்கேற்றவர்களின் சோகக் கதை எவர் கண்ணிலும் நீர் வரவழைக்கும். இப்படிப்பட்ட போராட்டங்கள் பல மனித உரிமைக்காக நடத்திய தலைவர் தந்தை பெரியாரே அன்றி வேறு எவரையும் கூறிட இயலாது.
16 வயதே ஆன மைனர் வயதைத் தாண்டாத தட்டப்பாறை பெரியசாமி என்ற சிறுவன், ஆளுநர் சிறை வருகையின் போது இனிமேல் போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று எழுதிக்கொடுத்தால் விடுவிக்கப் பரிந்துரைக்கிறேன் என்றபோது, எத்தனை முறை வெளியில் சென்றாலும் எங்கள் அய்யாவின் ஆணையை ஏற்று மீண்டும் மீண்டும் வருவேன் என்ற வீர வரலாறு படைத்த போராட்டம் இப்போராட்டம்.
போராட்ட ஈகியர் மஜித் என்ற இசுலாமியத் தோழர் சிறையில் இறந்தபோது அவரது உடலைப் புதைக்க அவருடைய சமய பள்ளிவாசல்காரர்கள் மறுத்துவிட்ட போது அன்னை மணியம்மையார் தலைமையில் ஊர்வலம் நடத்தி மாபெரும் கூட்டத்துடன் புதைத்திட்ட வீர வரலாறும் இப்போராட்டத்திற்கு உண்டு.
பட்டுக்கோட்டை ராமசாமி, மணல் மேடு வெள்ளைச்சாமி என சிறையில் மாண்டு அங்கேயே புதைக்கப்பட்ட தோழர்களின் உடலை அன்னை மணியம்மையார் முதல்வர், உள்துறை அமைச்சகம் எனச் சென்னைக்கும், திருச்சிக்கும் அலைந்து உடலைப் பெற்று காவிரியாற்றின் கரையில் உடலை பல்லாயிரம் பேர் திரண்டு ஊர்வலமாய் எடுத்துச் சென்று புதைத்த நெக்குருகச் செய்யும் வரலாறும் உண்டு.
1960ஆம் ஆண்டு நாடெங்கும் தமிழ்நாடு பிரிவினை கோரித் தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்படத்தை எரிக்கச் செய்தார். தடுப்புக் காவல் சட்டப்பிரிவு 151இன்படி கைது செய்யப்பட்டார். ஜாதி ஒழிப்புக்காகவே இந்த முடிவுக்கு வந்தார் பெரியார்.
1961ஆம் ஆண்டு காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கத்தை ஒழிக்கக் காமராசர் கையைப் பலப்படுத்தும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டார்: சமதர்மப் பரப்புரை புரிந்தார்.
1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காமராசருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தார். பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் நிறைவேற்றிட வழிவகுத்தது அம்முடிவு.
1968ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு முழு விடுதலை கோரி 14.4.1968இல் நாடெங்கும் ‘டில்லி ஆதிக்கக் கண்டன நாள்’ கடைப்பிடிக்கச் செய்தார். அக்டோபர் மாதம் லக்னோவில் நடந்த மாநாடுகளில் அறிவுரையாற்றினார்.
1969ஆம் ஆண்டு இன இழிவை நீக்கக் கோவில் கருவறை நுழைவுக் கிளர்ச்சி பற்றி அக்டோபரில் அறிக்கை வெளியிட்டார்.
16.11.1969 அன்று நடந்த மத்திய திராவிடர் கழக நிருவாகக் குழுவில் 26.1.1970 கிளர்ச்சி நாள் என அறிவித்தார்.
1970ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னையில் பகுத்தறிவாளர் கழகத்தைத் துவக்கி, நாடெங்கும் இவ்வமைப்புகளை நூற்றுக்கணக்கில் தோற்றுவித்தார். குடந்தையில் 18.1.1970 அன்று நடைபெற்ற மாநாட்டில் கருவறை நுழைவுக் கிளர்ச்சியை ஒத்தி வைத்தார். அக்டோபரில் உணவு விடுதிகளில் ‘பிராமணாள்’ பெயர் அழிப்புக் கிளர்ச்சியை மீண்டும் நடத்தினார். சமுதாய இழிவு துடைப்பு முயற்சியே இது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்
1971ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 12.1.1971ஆம் நாள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, பெரியார் கோரிக்கை நிறைவேற வழிவகுக்கப்பட்டது.
1972ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக உரிமை தரும் சட்டம் செல்லாததென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பின் மூலம் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற வருண பேதம் நிலைநாட்டப்பட்டது. எனவே அத்தீர்ப்பை எதிர்த்து 15.3.1972இல் நாகையில் பெரியார் போர்க்கொடி உயர்த்தினார்.
1973ஆம் ஆண்டு தம் 95ஆம் வயதில் அவர் வாழ்ந்த 98 நாள்களில் 35 நாள்கள் சூறாவளிப் பயணம் செய்தார். 16.9.1973, 17.9.1973இல் சென்னையில் பிறந்தநாள் விழா, 30.9.1973, 4.11.1973இல் திருச்சி சிந்தனையாளர் கழக விழா, 18.11.1973 முதல் 28.11.1973 வரை தமிழகச் சுற்றுப் பயணம், 8, 9.12.1973இல் சென்னை மாநாடுகள் முக்கிய நிகழ்ச்சிகளாக அமைந்தன. இம்மாநாடுகள் அவர்தம் இன இழிவு நீக்கப் போரின் கடைசிக் களமாகவும், அவர்தம் வாழ்நாளில் இறுதி மாநாடுகளாகவும் அமைந்துவிட்டன. 19.12.1973ஆம் நாளில் சென்னை தியாகராயர் நகரில் சிந்தனையாளர் மன்றச் சார்பில் மரண சாசனம் என அமைய நேரிட்ட பேருரையை
நிகழ்த்தினார். அதுவே அவரின் இறுதிச் சொற்பொழிவாக அமைந்தது. மனித உரிமைப் பிரகடனமாக அந்த இறுதிப் பேச்சு அமைந்தது எனலாம்.
(முற்றும்)