ஆன்மிகம் தொடர்பான திரைப்படங்கள் உலகம் முழுவதும் அவ்வப்போது வெளி வந்துகொண்டே இருக்கின்றன.
ஆன்மிகப் படங்களை எடுக்கக்கூட கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட அறிவியல் சாதனங்கள் தான் உதவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.
திரைப்பட நெகடிவ் ஃபிலிம் சுருளில் சிறியதாக இருக்கும் உருவங்களைப் பெரிய திரையில் பெரியதாக விழச்செய்து அசையும் மெய்ப்பிம்பங்களாக மாற்றிக் காண்பிக்கும் கருவியான புரொஜெக்டரைக் கண்டுபிடித்த எட்வியர்ட் மைபிரிட்ஜ் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர் தான். இங்கிலாந்தின் கிங்ஸ்டன் பகுதியில் பிறந்த அவர் சிறு வயதாக இருக்கும்போது அவரது தாயார் தேவாலயத்திற்கு அழைத்துச் செல்லும் போது அந்தத் தேவாலயக் கோபுரத்தில் உள்ள ஓட்டைகள் மூலம் விழும் ஒளியில் மேலே பறக்கும் பறவைகள் பெரிதாக சில மணித்துளிகளில் தெரிந்து மறைவதை வியப்பாகப் பார்த்தார்.
ஆர்க்டிக் பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக பறவைகள் புலம்பெயரும் பாதையில் கிங்க்ஸ்டன் பகுதி உள்ளதால் அடிக்கடி இந்தக் காட்சியைக் கண்டு வியந்தார்.
அவரது காலத்தில் ஒளிப்படங்கள் (Still pictures)பிரபலமாகி விட்டன, ஆனாலும் அவருக்கு இருந்த காட்சியை ஓடவிட்டுப் பார்க்கும் ஆர்வம், அவரைப் புரொஜெக்டர் உருவாக்க தூண்டுதலாக இருந்தது.
ஒருமுறை அவர் அம்மாவிடம் கூறியது- “இந்தக் கடவுளையே நான் திரையில் ஓடவிட்டு, பாடவிட்டுக் காண்பித்தால் அப்போது நீங்கள் என்னை என்ன சொல்லுவீர்கள்? கடவுள் என்றா?” என்று துடுக்குத்தனமாகக் கேட்டார். (சான்று-ஹிஸ்டரி சேனலில் வாழ்க்கை வரலாறு தொடர்பான டாக்குமெண்டரி) அமெரிக்கா சென்ற அவர் சீனர்கள் திரைச்சீலை வழியாக ஒளியைப் பாய்ச்சும் பழங்கால முறையை நவீனமாக்கி அட்டைப்பெட்டியில் துளையிட்டு அதன் உள்ளே ஒளியைப் பாய்ச்சி பின்னர் அதில் உருவங்களை ஓடவிட்டுப் படமாக்கினார்.
1878 முதல் 1889 ஆண்டு வரை தொடர்ந்து இரவு பகல் பாராமல் முயற்சித்து க்ரோனோ ஃபோட்டோகிராஃபிக் முறையை உருவாக்கி சாதனை படைத்தார். நிழல் போன்ற உருவத்தைத்
தத்ரூபமாகக் கொண்டுவர தொடர்ந்து பல நிழற்படங்களை வேகமாக ஓடவிட்டுப் பார்த்தார்.
ஜூப்ராக்ஸிஸ்கோப்பிக்காக , ஒளிப்பதிவில் பயன்படுத்தப்படும் நெகிழ்வான துளையிடப்பட்ட திரைப்படத் துண்டுக்கு முந்தைய கண்ணாடி டிஸ்க்குகளில் இருந்து வரையப்பட்ட இயக்கப் படங்களைத் திட்டமிடுவதற்கான ஒரு சாதனம் .
இப்போது அவரது கனவுத் திரையில் காட்சிகளாக மாறத் துவங்கியது.
பின்னர் நேரடியாக நெகட்டிவ் பிலிம்களை ஒளித்திரையில் வைத்த போது அது அவரது கனவை நனவாக்கியது. இவ்வாறு அவர் திரைப்படப் புரொஜெக்டரைக் கண்டுபிடித்தார்.
தீவிரக் கடவுள் மறுப்பாளரான இவர் திருமணத்தைக் கூட தேவாலயத்தில் நடத்த மறுத்தார். ஆனாலும் அனைவரும் இவரை வற்புறுத்தி தேவாலயம் அழைத்துச் சென்றனர்.
இவர் தனது திரைப்படக் கருவிகளை ஒன்றிணைக்க மின்சாரம் தயாரித்த பெஞ்சமின் ஃபிராங்க்ளின் மற்றும் லென்சுகளின் தந்தை எனச் சொல்லப்படும் கலிலியோ கலீலி இவர்களின் நூல்களைப் படித்து ஆய்வை மேற்கொண்டார். கலிலியோ கலீலி மற்றும் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஆகிய இருவரும் தீவிரக் கடவுள் மறுப்பாளர்கள். அதில் கலிலியோ கலீலி புனித வேதாகமத்திற்கு எதிராக அறிவியல் கருத்துகளைக் கூறுகிறார் என்ற மதகுருமார்களின் புகார்களால் மரணதண்டனை வரை சென்று பிறகு மன்னிப்பு வழங்கப்பட்டு வாழ்நாள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். அப்படி இருந்த போதும் ரகசியமாக அறிவியல் நூல்களை எழுதினார். அப்படி எழுதப்பட்ட நூல்களில் ஒன்றுதான் லென்சுகளின் இயக்கம் தொடர்பானது. அந்த நூல்தான் எட்வியர்ட் மைபிரிட்ஜின் புரொஜெக்டர் இயக்கத்திற்கு முக்கியமான ஒன்றாக இருந்தது.
8.05.1904 அன்று தன்னுடைய சொந்த ஊரிலேயே உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 74. அவரது கடவுள் மறுப்புக் கொள்கையால் அவரது உடலைத் தேவாலயக் கல்லறைத் தோட்டத்தில் புதைக்க அவரது வீட்டார் தயங்கினர். பின்னர் அவரது இல்லத்தின் அருகிலேயே அவரது உடல் புதைக்கப்பட்டு நினைவிடமாக மாற்றப்பட்டது.
2004ஆம் ஆண்டு ‘ஏசுவின் மீதான பக்தி’ (‘The Passion Of Christ’) என்ற திரைப்படம் அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. படத்தின் இறுதிக் காட்சியில் கதைப்படி ஏசு சிலுவையில் அறையப்படுவதற்கு கல்வாரி மலைக்கு இழுத்துச் செல்லப்பட்டு மலைமீது அவரைச் சிலுவையில் அறையப் போகும் காட்சியைப் படமாக்கிக்கொண்டு இருந்தனர். இதற்கானக் காட்சிகளை இத்தாலியில் உள்ள மெட்டிரா என்ற பகுதியில் உள்ள உயரமான பகுதியில் படமாக்கிக் கொண்டு இருந்தனர். அப்போது மேக மூட்டமாக இருந்தது.
ஏசுவாக நடித்த ஜிம் கவியேசல் தலையில் இரும்பிலான முள் கிரீடம் பொருத்தப்பட்டிருந்தது, காட்சிப்படி அவரைச் சிலுவையில் அறைந்து உயரமாக கிரேன் மூலம் தூக்கிக் கொண்டு இருக்கும் போது திடீரென மின்னல் அவரைத் தாக்கியது, காரணம் அவரது தலையில் பொருத்தப்பட்டிருந்த இரும்புக் கிரீடம் ஆகும். உடனடியாக அவரைக் காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவ
மனைக்கு எடுத்துச் சென்றனர். இரண்டு இதய அறுவை சிகிச்சை, சிதைந்து போன ரத்த நாளத்திற்குப் பதிலாக செயற்கை ரத்த நாளம், கழுத்துக்குக் கீழ் உள்ள முதுகுப்பகுதி எரிந்து போனது அதற்கான பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை என்று சுமார் 2 ஆண்டுகள் மருத்துவச் சிகிச்சையிலேயே இருந்தார். இவரது சிகிச்சைக்காக, திரைப்படம் எடுத்த பட்ஜெட்டை விட அதிகம் செலவழித்தது திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்.
எட்வியர்ட் மைபிரிட்ஜ் இறந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன.
இன்று கடவுள் என்று திரைப்படங்களிலோ, இதரக் காட்சி ஊடகங்களிலோ காட்டப்படும் அனைத்தும் எட்வியர்ட் மைபிரிட்ஜ் என்ற கடவுள்மறுப்பாளர் கண்டுபிடித்த கருவியின் மூலம்தான்.
அந்தக் கருவியின் மூலம் கடவுள் கதைகளைக் கண்முன் கொண்டுவந்த போதும் அப்போது நடந்த விபத்தைக் கடவுள் நிறுத்தவும் இல்லை, கடவுளாகவே நடித்து விபத்தில் சிக்கிய நடிகரைக் காப்பாற்றவும் இல்லை.