தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பணிகளில் பெருந்துணையாக இருந்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். காங்கிரசில் தந்தை பெரியாரின் சிந்தனைக்கொள்கை மற்றும் செயல்பாடுகளைக் கண்டு பெரியாரோடு காங்கிரசில் இணைந்து இயங்கினார். தந்தை பெரியார் பார்ப்பனர் அல்லாத மக்களின் வகுப்புரிமைக்காய் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய போது தந்தை பெரியாரோடு சுயமரியாதை இயக்கத்திற்கு வந்தவர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள். காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம்,திராவிடர் கழகம் என தொடர்ந்து தந்தை பெரியாரோடு இயங்கியும் வந்தவர். 1944இல் சேலத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் (“திராவிடர் கழகம்” பெயர் மாற்ற மாநாடு) அம்மையார் கலந்து கொண்டார். திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டவர்.
இராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறை ஒழிப்பு பணிகளைத் தன் சொந்த அனுபவத்திலிருந்து எதிர்த்து வந்தவர். தனக்குப் பின்னும் இக்கொடுமை தொடரக்கூடாது எனத் தொடர்ந்து போரிட்டவர். தேவதாசி ஒழிப்பு முறை இந்து சமூகத்தில் அவ்வளவு எளிதன்று! தேவதாசிகள் கடவுளோடும் பார்ப்பனர்களோடும் தொடர்புடைய சேவகம் என்றிருந்தது. கடவுளை, மதத்தை, ஜாதியை எதிர்த்துப் பேசுவதா என்று அடங்கிக் கிடந்த சூழலில் இந்து மதம் என்னும் புற்று நோய்க்கு மருந்தாய்ப் புறப்பட்டவர்தான் இராமாமிர்தம் அம்மையார். தேவதாசி ஒழிப்பில் முத்துலட்சுமி ரெட்டிக்கு முன்பே பேசியும், எழுதியும் போராடியவர். 1925இல் மயிலாடுதுறை மாயவரத்தில் “பொட்டறுப்பு மாநாடு” நடத்தியவர்.
அம்மேடையிலேயே தேவதாசி என்று கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு புது வாழ்வு பிறக்கும் என்றும், இனி யாரும் பொட்டு கட்டிக் கொள்ளக் கூடாது எனவும் முழங்கி பல பெண்களின் பொட்டுகளை அறுத்ததோடு, அதே மேடையில் தேவதாசி பெண்களுக்கு திருமணமும் நடத்தி வைத்த புரட்சிக்காரர். தேவதாசி பெண்கள் கோயிலுக்குத்தான் அர்ப்பணிக்கப்பட்டவர்கள்; ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது, எனும் இந்து பார்ப்பன வேத மரபை உடைத்துக் காட்டியவர்.
சுயமரியாதை இயக்கப் போர்வாளான (13.12.1925) ‘குடிஅரசு’ இதழில்,
“தேவதாசிகளுக்கு ஒரு எச்சரிக்கை”
என்ற கட்டுரையை எழுதுகிறார்.
தனது தொடர் பரப்புரையின் மூலம் சுயமரியாதை
இயக்கத்தில் பல பெண்களை இணைக்கிறார். தேவதாசி ஒழிப்பு மட்டுமல்லாமல் தனது தலைமையில் ஜாதி மறுப்பு திருமணங்களையும் நடத்தி வைக்கிறார். தேவதாசி ஒழிப்பு மாநாட்டை நடத்தி தந்தை பெரியார்,திரு.வி.க, வரதராஜுலு நாயுடு போன்ற தலைவர்களைப் பேச வைக்கிறார். பங்கு பெற்ற தலைவர்கள் ஓர் அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைக்கும் போது, அமைப்பை நிர்வகிக்கத் தெரியாது என்று சொல்ல, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் சொல்லியதற்கு இணங்க தொடங்கப்பட்டது தான் “இசை வேளாளர்களுக்கான சங்கம்”.
தேவதாசி ஒழிப்பிற்காக சட்ட மன்றத்தில் முத்துலட்சுமி ரெட்டி ஒரு மசோதாவைத் தாக்கல் செய்யவும் அச்சட்டம் நிறைவேறவும் அம்மையாரின் உழைப்பும், சங்கம் ஆற்றிய பணிகளும் முக்கிய காரணமாக அமைந்தன. ஜாதி மறுப்பு, தேவதாசி ஒழிப்பு, ஜாதி மறுப்புத் திருமணம், மேடைப்பேச்சு, பொதுக்கூட்டம், எழுத்து என்று தந்தை பெரியாரோடு தொடர்ந்து பயணிக்கிறார் இராமாமிர்தம் அம்மையார். தேவதாசிப் பெண்கள் நிலை பற்றியும் மதம், கடவுள் பெயரால் நிலைநிறுத்தப்படும் அநீதிகளை விளக்கியும், “தாசிகள் மோச வலை” எனும் நாடகத்தை எழுதி கிராம கிராமமாய்ச் சென்று நடத்தி பரப்புரை செய்கிறார். 1937இல் வெளிவந்துள்ள இந்த நூலில் ஆ. இராமாமிர்தம் என்று இருந்தது “ஆ” என்பது அவரை வளர்த்த ஆச்சிக்கண்ணு என்னும் வளர்ப்புத் தாயின் பெயர். தந்தையின் பெயரை விட்டு பெற்ற தாயின் பெயரையும் விட்டு வளர்ப்புத் தாயின் பெயரைத் தனது முதல் எழுத்தாகப் போடும் சிந்தனை, அறிவு அன்றே ஓர் புரட்சி எனலாம்.
இராமாமிர்தம் அம்மையார் பல இன்னல்களைக் கடந்து சுயமரியாதை சுகவாழ்வுக்காகப் போராடியவர். ஒருமுறை அம்மையார் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது மேடையில் ஏறிய நான்கு பேர் அம்மையாரின் தலைமுடியை வெட்டி விட்டனர். ஒரு பெண்ணை அவமானப்படுத்தச் செய்யப்படும் செயல் என அறிந்தும், முண்டச்சி, கணவனை இழந்த பெண் என்பதை அறிவுக்கு எதிரான செயலாய் இழிவுபடுத்தப்பட்டதைக் கூட கண்டு கொள்ளாமல்,”முடிதானே” என்று தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார். இதுவே வேறு பெண்களின் முடி அறுபட்டு இருந்தால் புனிதம் கெட்டு விட்டது என்று என்னென்னவெல்லாம் நடந்து இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
சமூகத்தின் இழிச் சொல்லுக்கு ஆளாவோம் என்று அஞ்சி, நடுங்கி, பயந்து ஒழியாமல் மீண்டும் போர்க்களம் புகுவது என்றால் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் பயின்றவரால்தான் முடியும் என்பதற்கு இதுவே தக்க சான்று. தேவதாசி ஒழிப்பில் மட்டுமல்ல, ஹிந்தி எதிர்ப்புப்போரில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். 60 வயதிலும் ஹிந்தி எதிர்ப்பு நடைப் பயணத்தில் கலந்து கொண்ட ஒரே பெண்மணி இவர்தான். தேசியக் கொடியை ஏற்றக்கூடாது என ஆங்கில அரசு தடை விதித்த போது, அக்கொடியைச் சேலையாக உடுத்திக் கொண்டு வடநாடு வரை சென்று வந்தவர். வடநாட்டில் முகமது அலி ஜின்னா அம்மையாரை அழைத்து ஏன் இவ்வாறு செய்தீர்
கள்? எனக் கேட்ட போது, “கொடியை ஏற்றத்தானேதடை செய்தார்கள்? அதனால்தான் உடுத்திக் கொண்டேன்” என்று தீரத்துடன் பதில் அளித்தவர்.
தொடர்ந்து தமிழர்களின் சுயமரியாதையை வென்றெடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அம்மையார். பிற்காலத்தில் தி.மு.க.வில் இணைந்து விட்டாலும் கூட தனது 70 வயதில் முரசொலி கட்டுரை கேட்கும் போது, இராமாமிர்தம் அம்மையார் இப்படிச் சொல்லுகிறார். அது “அன்னை நாகம்மையாருடைய அன்பு” என்று. சொல்ல எத்தனையோ இருந்தும் தன் இறுதிக் காலங்களில் அடிக் கட்டுமானத்தை நினைவு கூர்வதும், அதை வெளிப்படுத்த நினைப்பதும் திராவிட இயக்கத் தோழர்களுக்கு உரித்தான ஒன்றுதான்.”
அன்னை நாகம்மையாரின் அன்பு தான் இயக்கத்தை கட்டியது. வந்தவர்களை எல்லாம் அன்று ஆதரித்து இடம் கொடுத்தது. அய்யாவுக்கே
கருத்து மாறுபாடுகள் உள்ள தோழர்கள் வரும்போது கூட அனுசரணையோடு அணுகியும், தவறு என்றால், சுட்டிக்காட்டும் பண்பையும் “நாகம்மையார் பற்றிக் கூறியிருப்பது சுயமரியாதை இயக்கத்தின் மீதான செயல்பாடுகளும், நாகம்மையாரின் தலைமைத்துவத்தின் மீதான அக்கறை” என்று சொல்லலாம்.
சமூகப் புரட்சியிலும், தமிழுக்கும், பெண்களுக் கும், தன்மான இயக்கத்திற்கும் அம்மையாரின் செயல்பாடுகள் அளப்பரியது. இவ்வளவு சிறப்புக்குரிய அம்மையாரை நினைவு கூர்வது என்பது வரலாற்றை மீட்டெடுக்கும் வரலாறாய் அமையும். 27.06.1962இல் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் மறைந்தார். அவர் மறைவுக்கு அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ‘முரசொலி’ இதழில் இப்படி விளிக்கிறார்.
வீரத்தாயை இழந்தோம்!
பால் நுரைபோல் தலை;
தும்பை மலர் போல் உடை!
கம்பீர நடை!
கனல் தெறிக்கும் பேச்சு !
அனல் பறக்கும் வாதத்திறன் !
அநீதியைச் சுட்டெரிக்கச் சுழலுகின்ற கண்கள் !
அடிமை விலங்கு தகர்த்தெறிய ஆர்ப்பரிக்கும் உள்ளம் !
ஓயாத பணி !
ஓயாத அலைச்சல்!
என்று பாராட்டுகிறார்.
இராமாமிர்தம் அம்மையாரின் செயல்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுவோம். அவர் காண விரும்பிய சமத்துவ உலகத்தை வென்று காட்டுவோம்.
வாழ்க அம்மையாரின் புகழ் !
வாழ்க பெண் உரிமை !!