‘‘பெரியாரின் பூங்காவில் நுண்ணிய கொடியாக இருந்துவிட்டுப் போகிறேன்’’-கலைஞர் பெருமிதம்
பெரியாருக்குப் பிறகு அவர் ஆரம்ப காலந்தொட்டு சேர்த்து வைத்த ஆஸ்தி – பாஸ்தி, கட்டி வைத்த கட்டடங்கள், அறிவுக் கூடங்கள், விட்டுச் சென்றுள்ள கொள்கைகள், வீரமிக்க அறை கூவல்கள் இத்தனையும் சட்டிக் காக்க யாருளர் என்று நமக்கெல்லாம் எழுந்த அய்யப்பாட்டை இதோ, நானிருக்கிறேன் என்று எடுத்துக் காட்டி. ஏறு போல் நம்மை நிமிர்ந்து பார்க்கின்ற என்னரும் இளவல் பெரியாரின் பெருந்தொண்டர். சுயமரியாதைச் சுடர், தன்மான முரசு, வீரமணியார் – என் கண்ணிலும், அவர் கண்ணிலும் நீர் துளிர்க்க – அது ஆனந்தப் பன்னீராக இருக்க – ஒருவரையொருவர் தழுவிக் கொண்டோம்.
அறிவுப்பணி, அதற்குத் தேவையான அமைப்புப் பணி, அதிலும் ஓர் கட்டுப்பாட்டுப் பணி என இப்படி கடமைப் பணியாற்றுகிற சுயமரியாதை இயக்கக் கண்மணியாம் வீரமணியாரின் நிர்வாகப் பணியை நேரிலே காணும் வாய்ப்பு இனியும் பல முறை இந்த வாய்ப்பு எனக்குக் கிட்ட வேண்டும் என பேராவலுடன் விடை பெற்றுக் கொண்டேன். ஆங்கொரு நூலகத்திற்கு விழா மேடையில் இறுதிக் கட்டமாக ஓர் அறிவிப்பு – கலைஞர் கருணாநிதி நூலகம் என்று அது அழைக்கப்படும் என்று !
திணறிப்போனேன் – தேன் குடத்தில் தூக்கிப் போட்டு விட்டார்களேயென்று! பெரியாருக்குக் காலணியாய் இருப்பது போல் பெரியார் பெயரில் அமைந்துள்ள அந்தப் பூங்காவில் நூலகம் என்ற ஒரு நுண்ணிய கொடியாக இருந்து விட்டுப் போகிறேன்; அது எனக்குப் பிறவிப் பெரும் பயன்தான்!
(திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி நூலகம் திறப்பு விழாவில் கலைஞர் பேச்சு, ‘முரசொலி’ 15.11.2006)