நூறு வயதைத் தாண்ட நடைமுறைகள்
ஆசிரியர்: ச.சு.மகாலிங்கம்
பக்கங்கள்: 144 ரூ.40
வெளியீடு: மனசாட்சிக் கூடம்,
89/44, மூன்றாவது தெரு,
கருணாநிதி நகர், தண்டையார்பேட்டை, சென்னை-_-81.
என்னதான் துன்பங்களை அனுபவித் தாலும், மனிதன் நீண்டநாள் வாழ ஆசைப்படுபவன் தான். அந்த ஆசையை நிறைவேற்ற ஆலோசனை சொல்லுகிறார் இந்நூல் ஆசிரியர். இலக்கியம், வரலாறு, அன்றாட உலகச்செய்திகள், அறிவியல் ஆய்வுகள் என பல தகவல்களிலிருந்து எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியுள்ளார். உழைப்பும் தன்னம்பிக்கையும் ஆயுளை நீட்டிக்கும், உணவு முறை, நூறு வயது கடந்து வாழும் மனிதர்கள் போன்றவை குறித்த கட்டுரைகள் வாசிக்கத் தூண்டுகின்றன. “ஒரு மனிதனின் ஆரோக்கிய, ஆயுளின் அடித்தளம் நடைமுறை வழக்கம்தான் என்று அறுதியிட்டுக் கொண்டிருக்கிறது. பாரம்பரியப் பாதிப்பையும் பயிற்சிகளால் மாற்றமுடியும் எனப் பகுத்தறிவு காட்டுகிறது என்ற நூலாசிரியரின் கருத்து சிந்தனைக்குரியது.
இணையத்தளம்
www.friends2support.org
குருதிக்கொடை
5 நண்பர்களால் தொடங்கப்பட்டு இன்று 95 ஆயிரம் குருதிக்கொடையாளர் களுடன் இயங்கும் இணையதளம். குருதி வேண்டுவோர் தேவையான குருதி வகையைக் குறிப்பிட்டால் அவர்களுக்கு உடனடியாக அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே உள்ள குருதிக் கொடையாளர்களின் தொடர்பு எண் அளிக்கப் படுகிறது. குருதிக்கொடை வழங்குபவரும் தம்மைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவின் மிகப்பெரிய குருதிக்கொடை இணையதளம் என லிம்கா சாதனைப் புத்தகம், ஆசிய சாதனைப்புத்தகம், இந்திய சாதனைப்புத்தகம் உள்ளிட்டவற்றால் பாராட்டப்பட்டுள்ளது.
குறும்படம்
பயணம்
மனிதன் அறிவைக் சம்பாதிப்பதில் போட்டி போட வேண்டுமே தவிர, பணத்தை சம்பாதிக்க அல்ல என்பது தந்தை பெரியாரின் கருத்து குவியல்களில் ஒரு துளி. பணமும் தேவைதான் என்பது மாறி பணம் மட்டுமே தேவை என்கிற போக்கு, மனிதனை எந்த அளவுக்குக் கொடூரமாக மாற்றிவிடுகிறது என்பதை பயணம் குறும்படம், பாடமாக எடுத்துக்காட்டி விடுகிறது.
மும்பையில், சொத்துக்காக பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தந்தை மும்பையிலிருந்து புறப்படும் தொடர்வண்டியில், தான் பெற்ற மகனாலேயே கைவிடப்பட்டு, தனியே பயணமாகிறார். தன் பிள்ளைகளுக்காக உழைத்து உழைத்து களைத்துப்போன ஒரு வயதான குழந்தை போன்ற அந்த முதியவர் உண்ண உணவு கூட இன்றி எப்படியோ கன்னியாகுமரி வரை வந்துவிடுகிறார். அதன் பிறகு (உயிர்) இன்னமும், அவர் உடம்பில் ஊசலாடிக்கொண்டிருப்பதால், கடற்கரையோரமாக தள்ளாடி தள்ளாடி போய்க்கொண்டே இருக்கிறார்.
குறும்படம் நிறைவடையும்போது இயக்குனரின் தவிப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது. அந்த வகையில் இயக்குனர் தன் கடமையை சரியாக செய்திருக்கிறார். நாம் நமது கடமையை செய்யவேண்டும் என்றால் இது போன்ற குறும்படங்களை வாங்கி பார்ப்பதும் பரப்புவதும் அவசியம் ஆகும்.
இயக்குனர் பெயர் : சுப்புராஜ் தொடர்பு எண்: 98411 41688
– உடுமலை