உலகம் போகிற போக்கில் போகாமல் அதனை எதிர்த்து ஒரு இலட்சிய நோக்கத்திற்காகப் போராடுகிறவர்கள், எழுதுகிறவர்கள், பேசுகிறவர்கள்தான் அவர்கள் வாழ்ந்து மறைந்த காலத்திற்குப் பின்பும் நினைக்கப்படுகிறார்கள்; போற்றப்படுகிறார்கள். அப்படி உலகம் முழுவதும் நினைக்கப்படும் ஒரு பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். உலக அளவில் அறியப்பட்ட பகுத்தறிவாளர் அவர்.அவரின் பிறந்த நாள் மே 18.அவர் 1872 ஆம் ஆண்டுப் பிறந்தார், 1970 ஆம் ஆண்டு இறந்தார். ஏறத்தாழ 98 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த நாத்திகர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் ஆவார். கிறித்துவ மதத்தில்தான் பிறந்தார் அவர். ஆனால், அவருக்கு விவரம் தெரிந்த நாள் முதலாக அவர் ஒரு கிறித்துவராக வாழ்ந்தவரில்லை. ஏன் பிறக்கும்போதே அவர் நாத்திகர்தான். ஏனெனில், அவருடைய தந்தை ஒரு நாத்திகர். ரஸ்ஸல் நான்கு வயது உடையவராக இருந்தபோதே அவருடைய தந்தை இறந்துவிட்டாலும் கூடத் தன் பிள்ளைகளை நாத்திகர்களாக மட்டுமே வளர்க்கவேண்டும் என்று எழுதிவைத்து மறைந்த பெருமைக்குரிய தந்தை . பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பெரிய பாரம்பரியம் மிக்க பிரபுக் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தை, தாய், தாத்தா ஆகியோரை இழந்த அவரை அவருடைய பாட்டிதான் வளர்த்து ஆளாக்கி இருக்கிறார்.
தந்தை பெரியாரோடு ஒப்பிட்டு நோக்கும்போது இருவருக்குமான பொதுப்பண்புகள் ஏராளம். இருவருமே செல்வக் குடும்பத்திலே பிறந்தவர்கள். தந்தை பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்தார்,ரஸ்ஸல் 98 ஆண்டுகள் வாழ்ந்தார்.தந்தை பெரியார் தன்னுடைய இறுதிக்காலம் வரை எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்ததைப் போலவே, தான் இறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்வரை எழுதிக்கொண்டு இருந்தவர் ரஸ்ஸல்.தந்தை பெரியார் எவராக இருந்தாலும் கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்து விமர்சனம் செய்தது போலவே விமர்சனங்கள் செய்தவர்.அதனால் பல இன்னல்களை வாழ்க்கையில் சந்தித்தவர் என்றாலும் கொண்ட கொள்கையில் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காதவர்.குடும்பக் கட்டுப்பாட்டை,கருத்தடையை 1920 காலகட்டங்களிலேயே ஆதரித்துப் பேசியிருக்கிறார்.
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பன்முக ஆற்றலாளராக இருந்திருக்கிறார்.கணிதத்தில் உண்மையான பகுப்பாய்வு(Real Analysis) என்பது இன்று வளர்ந்து நிற்கும் பெரும் துறை.அதனைப் போலவே ‘செட் தியரி’ எனப்படும் கணித தர்க்கப் பிரிவும் பெரும் துறையாகும். இந்த இரண்டிற்குமான அடிப்படைக் கோட்பாடுகளை அளித்தவர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் ஆவார். இன்று இராக்கெட் விடுவதற்கும், ஏவுகணைகளை ஏவுவதற்கும் அடிப்படையான கோட்பாடுகளைக் கொண்டது உண்மையான பகுப்பாய்வும் செட் தியரியுமாகும். மதத்தை அவர் தர்க்கத்தின் அடிப்படையில் தகர்த்து எறிந்ததற்கும் கூட அவரது கணிதவியல் தர்க்கம் காரணமாக இருக்கலாம்.அதனைப் போலத் தத்துவப் படிப்பைப் படித்தவர் அவர். அதிலும் தத்துவத் தர்க்கம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்..
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் இயற்பியலையும் தத்துவத்தையும் ஒப்பிட்டு ஒரு நூல் எழுதியிருக்கிறார்.மூளையைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் இன்றைக்கு நிறைய வருகின்றன. ஆனால், மூளையைப் பற்றிய பகுப்பாய்வு (The Analysis of Mind) என்னும் தலைப்பில் நூல் எழுதியவர் ரஸ்ஸல். இந்த உலகத்தைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு இயற்பியலையும் தத்துவத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்றவர். மறைந்த அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய புதிர்களை இயற்பியல் வழியாகத்தான் விளக்கினார்.
இதற்கு ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்பே வித்திட்டவர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.மனம் பற்றிப் பேசுவது தத்துவம்,பொருள் பற்றிப் பேசுவது இயற்பியல்.இரண்டையும் இணைத்து மக்கள் நல்வாழ்வு வாழ வழி காணவேண்டும் என்று எழுதியவர் ரஸ்ஸல்., கல்வி பற்றிய அவரின் நூல், (On Education:Especially in Early Childhood) குழந்தைகளுக் குக் கொடுக்கப்படும் கல்வி பற்றி நிறைய விவாதிக்கிறது. இளம் வயதில் குழந்தைகளுக் குக் கொடுக்கப்படும் கல்வியில் மதம் பெரும் பங்கு வகிக்கிறது. மத வழிக் கல்வியை மறுத்தவர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். பெற்றோர்கள் தங்கள்குழந்தைகளின் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்ட வேண்டும் என்றவர். ஆரம்பகாலக் கல்வியால் மட்டுமே ஒரு மனிதரின் குணாதிசயங்கள் தீர்மானிக்கப்படுகிறது. தந்தை பெரியார் போலவே கல்வியின் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியவர்.
அதற்கான விடைகளைச் சொன்னவர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்கள். தானே ஒரு பள்ளியை உருவாக்கி அதற்குத் தலைமை ஆசிரியராக இருந்து தான் சொன்னதை நடைமுறைப்படுத்திக் காட்டியவர் அவர். அய்யாவின் அடிச்சுவட்டில் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று எழுதி வெளியிட்டுக்கொண்டு இருப்பதைப் போலவே பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்களும் தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் மூன்று பாகங்களாக – சுயசரிதையாக எழுதி வெளியிட்டிருக்கிறார். அதன் முன்னுரையில் தன்னுடைய இளம்வயதில் தற்கொலைக்கு முயன்றதைக் குறிப்பிட்டிருக்கிறார். அதன்பிறகு வாழ்வதற்கு தன்னை உந்திய காரணங்கள் என்று மூன்று காரணங்களைச் சொல்கின்றார்.
1. அன்புக்கான ஏக்கம்:
இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர். அன்புக்காக ஏங்கியது தன்னை உந்தியது என்று சொல்கிறார்.
2. அறிவுக்கான தேடல் :
மெய்ப்பொருள் காணும் அறிவுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் தேடியிருக்கிறார். உண்மையை நோக்கியே தன் வாசிப்பை, பேச்சை, எழுத்தை அமைத்திருக்கிறார். தான் உண்மையைக் கூறியதற்காக ஏற்பட்ட
இன்னல்களை இன்முகத்தோடு ஏற்று இருக்கிறார். தொடர்ந்து பயணித்திருக்கிறார்.
3. மனித குலம் ஏன் இப்படித் துன்பப்படு
கிறது என்னும் பரிதாப உணர்ச்சி.
நான் அன்பைத்தான் முதலில் தேடினேன். என் மீது அன்பு செலுத்துபவர்களுக்காக நிறைய நேரம் செலவழிக்கத் தயாராக இருந்தேன்.செலவழித்தேன். அன்புதான் என்னைத் தனிமையில் இருந்து விடுவித்தது. அன்புதான் மண்ணில் இருக்கும் சொர்க்கத்தை எனக்குக் காட்டியது.
அதே அளவு ஆர்வத்தோடு நான் அறிவைத் தேடினேன். மனிதர்களின் இதயங்களைப் புரிந்து கொள்ள நான் அறிவைத் தேடினேன். வானத்தில் இருக்கும் விண்மீன்கள் ஏன் ஒளிர்கின்றன என்று அறிய ஆசைப்பட்டேன்… என்று அறிவின் தேடலைச் சொல்கின்றார்.
அன்புத் தேடலும் அறிவுத்தேடலும் என்னை வானத்தை நோக்கி இழுத்துச் சென்றன. ஆனால், பரிதாப உணர்ச்சி என்னை இந்தப் பூமிக்குக் கொண்டு வந்தது. உலகில் வலியால் அழுபவர்களின் அழுகையொலி என் இதயத்தில் எதிரொலிக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
மனிதகுலம் இப்படித் துன்பப்படுவதற்கான காரணமே மதமும் போர்களும்தான். போர் இல்லாத மனித நேய உலகம் அமையவேண்டும் என்று கனவு கண்டார். அதற்காக உழைத்திருக்கிறார்.வியட்நாம் போரில் அமெரிக்கா ஈடுபட்டபோது, அதனைக் கண்டித்திருக்கிறார். முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின் போது உலகில் ஏற்பட்ட கொடுமைகளைக் கண்டு மனம் பதைத்திருக்கிறார். அதனைப் போல கடவுள்,மதம் பேரினால் இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு மனம் பதைத்து அவை வேண்டாம் என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் போதித்திருக்கிறார்.
இணையத்தில் அவருடைய வாழ்க்கையைப் பற்றியும், அவர் பெற்ற நோபல் பரிசு உள்ளிட்ட பரிசுகளைப் பற்றியும் நிறையச் செய்திகள் கிடைக்கின்றன. இன்றைய இளைஞர்கள் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்களின் வாழ்க்கையைப்
படிப்பதன் மூலமும், அவரின் படைப்புகளைப் படிப்பதன் மூலமும் அவரின் அன்புத் தேடலை,
அறிவுத் தேடலை, மனித குலத்தின் துன்பத்தை
ஒழிக்க அவர் எடுத்த முயற்சிகளை உணரமுடியும்.
நம்மால் முடிந்த வகையில் அதைத் தீர்ப்பதற்கான உழைப்பினைத் தர உறுதி ஏற்கமுடியும்.