தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டியதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய, மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப்பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.
இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.
நிற்க. இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில், நமது பண்டிகைகளில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப்படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும், வென்ற தன்மை களையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர்கூட இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இந்நாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவைகளே அல்ல.
பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவைகள் தான் சிறிது ஓய்வும் சந்தோஷமும் கொடுக்கின்றன.
தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில் விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படுவதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக்கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்பந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.
ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்குச் சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.