சமதர்ம ஆட்சி என்பதற்கு அடையாளமான பட்ஜெட்

பிப்ரவரி 16-28

வருகின்ற 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு – இடைக்கால அறிக்கை – கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசின் நிதி அறிக்கை  பேராசிரியர் அவர்களால் பிப்ரவரி 5இல் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இடைக் கால வரவு – செலவுத் திட்டம், ஓர் மக்கள் நல அரசு எப்படி அனைவருக்கும் அனைத்தும்  அளிக்கும் அரசு என்ற முறையில் அமைந்துள்ளது என்பதற்கான  ஓர் அற்புதமான அறிக்கையாகும். அதுவும் வரிகள் ஏதும் போடாமலேயே, வளர்ச்சியை நோக்கி வளமுடன் தமிழ்நாட்டைக் கொழிக்கச் செய்யும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் பட்ஜெட் ஆகும்!

மொத்த வருவாய் வரவு ரூ.79,413 கோடி, செலவு ரூ.78,974 கோடி என்ற அளவில் அமைந்து, ரூபாய் 439 கோடி அளவு உபரி இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது!

ஆறாவது ஊதியக் குழு இறுதித் தவணை செலுத்துவதால் 20.11.-12 ஆம் ஆண்டில் உபரி ஏற்படாது என்பதால் பற்றாக்குறை 2.32 சதவிகிதம் மட்டுமே அமைந்துள்ளது என்பது பாராட்டி வரவேற்கத்தக்க சிறப்பான அம்சமாகும்.

4000 கோடி ரூபாய் உணவு மானியம், ஏழை எளிய மக்களுக்கு  உண்ண உணவு (1 ரூபாய் கிலோ அரிசி), இருக்க இடம் (கலைஞர் வீட்டு வசதித் திட்டம் – நகர்ப்புரம் உட்பட), படிக்கக் கல்வி (இலவசக் கல்வி),  விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி கடன் தள்ளுபடி என்ற நிம்மதி, புதிய தொழில்கள் மூலம் வாங்கும் சக்தியை உயர்த்திட வகைசெய்யும் திட்டங்கள்.

இப்படி பலப்பல அதிசயங்கள் பூத்துக் குலுங்கும் புதுமணப் பூங்காவாக, காய்த்துக் கனிந்த பழத் தோட்டமாகக் காட்சியளிக்கிறது!

இதனை வடிவமைத்த முதல்வர் மானமிகு கலைஞர், நிதியமைச்சர் பேராசிரியர், தி.மு.க. அரசு ஆகியோருக்குக் கோடானுகோடி ஏழை எளிய மக்களின் மகிழ்ச்சியும், பாராட்டும், நன்றியும் ஏகபோகமாகிவிட்டது என்பதே உண்மை!

சமதர்ம ஆட்சி என்பதற்கு இது ஓர் சரித்திரச் சான்று.

– கி.வீரமணி, ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *