அஞ்சா நெஞ்சன் அழகிரியின் ஆளுமைகள் !

2024 கட்டுரைகள் மார்ச் 16-31, 2024

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன்-கண்ணம்மா இணையருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர்.

திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. தீவிரமாகப் பெரியாரைப் பின்பற்றியவர்; தன் வாழ்நாள் முழுதும் ஒரே தலைவன் ஒரே கட்சி என்று வாழ்ந்தவர். மலை குலைந்தாலும் மனம் குலையாத கொள்கை மறவர். சுயமரியாதை இயக்கத்தின் சுடர் விளக்கு! ஜாதி, மத, மூட நம்பிக்கைகளை எதிர்த்துத் தினம் மேடையமைத்துப் பரப்புரை செய்துவந்தவர்.

அய்யா பெரியாரின் தளபதி

1925ஆம் ஆண்டு ஆங்கிலேயர் அளிக்கும் கல்வியைப் புறக்கணிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் கருத்தை ஏற்று வ.வே.சுப்பிரமணிய அய்யர் (வ.வே.சு.அய்யர்) சேரன்மாதேவி என்ற ஊரில் தேசியக் கல்வி நிலையம் (குருகுலம்) ஒன்றை நிறுவினார்.
அந்தக் குருகுலத்தில் வர்ணாசிரம தர்மம் கடை பிடிக்கப்படுகிறது என்று பெரியார் அவர்களுக்குச் செய்தி கிடைத்தது; சீற்றம் கொண்டார்.
குருகுலத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். காந்தியாருக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது. ஓரு சாரார் மற்றவர்களோடு கலந்து அமர்ந்து உணவு உண்ண விரும்பவில்லை என்றால் அவர்களின் அந்த உணர்வினை மதித்திடவேண்டும் என்ற காந்தியாருடைய கருத்து 12 மார்ச் 1925 அன்று “இந்து” பத்திரிக்கையில் வெளியாயிற்று. பெரியார் அதனால் கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தினார்.
இந்நிலையில், பிராமணரல்லாத மாணவர், பிராமண மாணவர்க்கென வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் அருந்தினார் என்று அந்த மாணவரைக் குருகுலக் காப்பாளர்கள் அடித்து விட்டனர். அதனை அறிந்த பட்டுக்கோட்டை அழகிரிசாமி குருகுலத்தை எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார்.

சுயமரியாதைச் சுடரொளி

1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில் அழகிரிக்கு இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பதவி கிடைத்தது. பசுமலையில் போர் ஆதரவுக் கூட்டங்களில் போருக்கு ஆதரவாய்ப் பேசாமல் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்தார். அவரின் எதிரிகள் சென்னை ஆளுநருக்கு அழகிரி தன்னுடைய பதவியை முறைகேடாகப் பயன்படுத்துகின்றார் என்று முறையீடு செய்தனர். ஆளுநர் ஆய்வு செய்திட வந்தார். நீர், போர்ப் படைக்கு ஆள் தெரிந்தெடுக்காமல், கட்சிப் பணி புரிவதாகக் குற்றம் சாட்டியுள்ளனரே என்று வினவினார். அதற்கு அழகிரி, என் பேச்சால் இராணுவத்தில் இளைஞர்கள் சேர்கின்றார்களா என்று மட்டும் பாருங்கள். என் கட்சிப் பணியைப் பற்றிக் கவலை தங்களுக்கு வேண்டுவதில்லை, என்றார். ஆளுநர், உங்களை எச்சரித்து அனுப்புகின்றேன், என்றார். அழகிரி அதற்கு, நான் தவறேதும் செய்யவில்லை. தங்கள் மன்னிப்போ, எச்சரிக்கையோ தேவையில்லை. இந்த வேலையும் வேண்டாம், என்று கூறிவிட்டுப் பணியிலிருந்தும் விலகிவிட்டார்; காரணம் சுயமரியாதை உணர்வு.

இனமானப் போராளி!

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தானில், புகழ் பெற்ற நாதசுவர இசைக் கலைஞர் சிவக்கொழுந்து அவர்களின் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது; இசைக்கலைஞர் தோளில் துண்டு அணிந்து கொண்டிருந் தார். அதனைக் கண்ட ஆதிக்கச் சாதியினர், ‘சிவக்கொழுந்து தோளிலுள்ள துண்டை எடு’ என்று கோபக்குரலில் எதிர்ப்புத் தெரிவித்தனர். இசைக்கலைஞர், ஜாதிய அமைப்பில் கீழ் ஜாதியைச் சார்ந்தவர்; மேல் ஜாதியினர் முன்னிலையில் கீழ் ஜாதியினர் தோளில் துண்டு அணிதல் கூடாது என்பது சனாதன தர்மம்; ஆதலின் ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு கூட்டத்தில் இசையைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்த பட்டுக்கோட்டை அழகிரி, நீங்கள் தோளில் போட்டுள்ள துண்டை எடுக்கவேண்டாம்; எவர் என்ன செய்கிறார் என்று நான் பார்க்கிறேன்; நீங்கள் தொடர்ந்து வாசியுங்கள், என்று சிம்மம் எனக் கர்ஜித்தார். அழகிரியின் தோற்றமும் குரலில் இருந்த உறுதியும் ஜாதிவெறிக் கும்பலை அடக்கிற்று.

இயக்க இதழ்களின் காப்பாளர்

‘குடியரசு’ எனும் வார ஏட்டின் மூலம் பகுத்தறிவுச் சுடர் விடும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் வெளிவந்தன. ப.ஜீவானந்தம், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, சௌந்திர பாண்டியன், குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார், சிங்காரவேலர், கைவல்யசாமி, எஸ். இராமநாதன் போன்ற பலர் பெரியாருக்குத் துணையாக நின்று சுயமரியாதைக் கருத்துகளைச் சூறாவளி வேகத்தில் தமிழகத்தில் பரப்பி வந்தனர்.
‘ரிவோல்ட்’ என்ற ஆங்கில இதழைப் பெரியார் 7-11-1928 அன்று (அன்று இரசியப் புரட்சி நாள்) தொடங்கி நடத்தினார். பெரியாரும், எஸ்.இராமநாதன் எம்.ஏ.,பி.எல் அவர்களும், எஸ். குருசாமியும் அதன் ஆசிரியர்களாக இருந்தனர். ஆசிரியர் குத்தூசி எஸ்.குருசாமி அவர்களை ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டுத் திரும்பினார். அந்த வழக்கு நீதி மன்றம் சென்றது. அந்த வழக்கில் அழகிரிக்காக சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் வழக்கறிஞராக வழக்கினை நடத்தினார்.

ஜாதி ஒழிப்புப் போராளி

தமிழகத்தில் 28-5-1928 இல் பெருத்த எதிர்ப்பு களிடையே முதல் ஜாதி மறுப்புச் சுயமரியாதைத் திருமணத்தைப் பெரியார் நடத்திவைக்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ,விசுவநாதனும், சிதம்பரம் என்.தண்டபாணியும் உறுதுணையாக இருந்தனர்.
17-2-1929 அன்று செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஈ.வெ.ரா.நாகம்மையார், ஆர்.கே. சண்முகம், எஸ்.இராமநாதன், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் உரையாற்றினர். இந்த மாநாட்டில் பட்டுக் கோட்டை அழகிரிசாமி எழச்சியுரையாற்றினார். இம் மாநாட்டிற்குப் பின் பல ஜாதி மறுப்புத் திருமணங்களும், விதவைத் திருமணங்களும் நடைபெற்றன. அந்தத் திருமணங்கள் சீருடனும் சிறப்புடனும் நடந்திட அஞ்சா நெஞ்சர் அழகிரி உறுதுணையாக இருந்து வேண்டும் ஏற்பாடுகளைச் செய்தார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு

திருவாரூரில் இந்தித் திணிப்பை எதிர்த்து அஞ்சா நெஞ்சன் சிம்மம் எனக் கர்ஜித்தார். இந்திக்குத் தமிழ் நாட்டில் ஆதிக்கமா? எல்லோரும் வாருங்கள் தமிழர்களே என்று இடியின் ஓசையை மிஞ்சும் பெருங்குரலெடுத்து உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். பேசி முடித்ததும் குருதி கக்கி மயங்கி விழுந்தார். அடி வயிற்றிலும், விலாவிலும் தாங்கமுடியாத வலியில் துடி துடித்தார். அங்கே நின்றுகொண்டு அவரது உணர்ச்சியைத் தூண்டும் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த சிறுவன், எதனால் இப்படி இவர் துடி துடிக்கிறார்? துன்பப்படுகிறார்? ஏன்? என்று வினவினார். அவர் நோயாளி என்றனர் கூடியிருந்தோர். நோயாளியான இவர் ஏன் இப்படிக் கத்திப் பேசவேண்டும் என்று கேட்டான் அந்தச் சிறுவன். சிறுவனின் வினா அழகிரியின் செவியில் விழுந்துவிட்டது. அந்தச் சிறுவனை அன்போடணைத்து, தம்பி, என்னைவிட இந்த நாடு நோயாளியாக இருக்கிறது! டாக்டருக்கு காய்ச்சல் என்பதற்காக மிகவும் மோசமாக நோய் கண்டவனைக் கவனிக்காமலிருக்க முடியுமா?அது போலத்தான் நான் பணியாற்றுகிறேன் என்றார் அஞ்சா நெஞ்சர். பக்கத்தில் நின்று கேள்வி கேட்டச் சிறுவன் சிந்திக்கலானான். அவர் தான் பின் நாளில் கலைஞர் கருணாநிதி என அறியப் பட்டவர். திருவாரூர் நிகழ்வுக்குப் பின்னர் தோழர் பட்டுக்கோட்டை அழகிரி முழுமூச்சுடன் இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தின் தளபதியாக நடைப்பயணத்தை அடலேறு என வழி நடத்திச் சென்றார்.
1.8.1938 அன்று அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி தலைமையில் திருச்சியருகிலுள்ள உறையூரிலிருந்து தமிழர் படை அணிவகுத்து சென்னை நோக்கிப் பயணமாயிற்று. அந்த அணியில் மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார், நகரதூதன் ஆசிரியர், மணவை. திருமலைச் சாமி, பாவலர் பாலசுந்தரம், திருப்பூர் மொய்தீன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

சென்றவிடமெல்லாம் இந்தி எதிர்ப்பாளர்களை மக்கள் வரவேற்றனர். இந்தி ஆதரவுக் காங்கிரசார் எதிர்த்தனர். கல்லடியும் சொல்லடியும் நிறையவே தந்தனர்.
எனினும் எவரும் சோர்வு பெற்றாரில்லை! பாவேந்தர் இசைப் பாட்டால் சோர்வு நீங்கினர்; ஊக்கம் உற்றனர்; உணர்வு பெற்றனர்! காணும் ஊர் தோறும் சிம்மக்குரல் அஞ்சாநெஞ்சரின் இந்தி எதிர்ப்புச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. கேட்ட மக்கள் உணர்ச்சிப் பிழம்பாயினர். இந்தி ஒழிக என்றும் தமிழ் வாழ்க என்றும் விண்ணதிர முழக்கமிட்டனர்.

அதுமட்டுமன்றி, தமிழர் படைக்குத் தேநீர் விருந்தும் நடத்தி வழியனுப்பி வைத்தனர்.

தமிழர் படையினர் சென்ற வழியெல்லாம் உள்ள சிற்றூர்களிலெல்லாம் இந்தி எதிர்ப்பு உணர்வை விதைத்துச் சென்றனர்.
அழகிரியின் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு நடைப்பயணம் 42 நாள்கள் தொடர்ந்தது; 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 11ஆம் நாள் சென்னை நகர் வந்தடைந்தது. 234 ஊர்களைக் கடந்து 87 பொதுக் கூட்டங்களைச் சிறப்புடன் நடத்தி அந்தப் படை வந்திருந்தது.
22 ஜூலை1945 அன்று புதுவையில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. பெரியார், அண்ணா, அழகிரிசாமியுடன் பல்வேறு கழகத் தலைவர்கள் பங்கேற்றனர் காலை பத்துமணிக்கு மாநாடு தொடங்கிற்று. நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி, திரும்பிப் போங்கள் என்று எதிர்ப்பு முழக்கங்கள் செய்திட்டனர்,

கவர்னர் ஜெனரல் இராஜாஜிக்கு எதிராய்க் கறுப்புக்கொடி

1948 ஆகஸ்டில் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜாஜி சென்னை வருவதாக இருந்தார். அவ்வமயம் அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த பட்டுக்கோட்டை அழகிரி கைது செய்யப்பட்டார்.

ஈரோடு-திராவிடர் கழக மாநாட்டில் எழுச்சியுரை

1948,அக்டோபர் 23, 24 ஆகிய நாள்களில் இந்தியை எதிர்த்துத் திராவிடர் கழகத் தனி மாநில மாநாடு ஈரோட்டில் அண்ணா தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமியின் பேச்சு மாநாட்டில் கூடியிருந்த தொண்டர்கள் அனைவரின் நெஞ்சை உருக்கும் தன்மையில் அமைந் திருந்தது.

என் உடல் நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. நோயினால் படுத்த படுக்கையாக இருந்து வருகிறேன். இனி என் உடல் தேறும் வரை நான் இயக்கப் பணியில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கின்றேன். இது எனக்கு மிகவும் வேதனையைத் தருகிறது, என்றார்.

அழகிரியைக் காப்பாற்ற அண்ணாவின் முயற்சி

ஈரோடு மாநாடு நடைபெற்று முடிவுற்றதும் அண்ணா, அழகிரியைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார். சென்னைக்கு அவரை அழைத்து வந்து தாம்பரம் என்புருக்கு நோய் மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் செய்திட ஏற்பாடு செய்தார். ஆயினும், தாம்பரம் மருத்துவமனை அழகிரியைக் கைவிட்டது; இயற்கையும் அவரைக் கைவிட்டுவிட்டது அவரைப்பற்றிய காச நோய் 28-3-1949 அன்று நம்மிடமிருந்து அவரின் உயிரைப் பறித்துவிட்டது!

தந்தை பெரியார் இரங்கல்

‘‘நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன்.30 ஆண்டு கால நண்பரும், மனப்பூர்வமாக நிபந்தனை இன்றி நமது கொள்கைகளைப் பின்பற்றிவருகிற ஒரு கூட்டுப் பணியாளருமாவார். 30 ஆண்டுகளில் என் கொள்கை, திட்டத்தில், ஆலோசனையில் தயக்கம் கொள்ளாமல் நம்பிக்கை வைத்துத் தொண்டாற்றியவர். அவரது முழு வாழ்க்கை யிலும் இயக்கத்தொண்டு தவிர வேறு எதிலும் ஈடுபட்டதில்லை. விளையாட்டுக்குக் கூடக் கொள்கையை விலை பேசி இருக்க மாட்டார்’’ என்று இரங்கல் செய்தியில் தந்தை பெரியார் கூறியிருந்தார்.

அழகிரிக்கு இணை அவர்தான்!

இயக்க வரலாற்றில் அவர் என்றும் வாழ்வார்! ♦