பெரியாரின் அறிவியக்கத் தொண்டுக் கெல்லாம்
பின்புலமாய் அடித்தளமாய்த் திகழ்ந்தார் அன்னை!
அருங்கொள்கை உரம்பெற்றார்! தமக்குப் பின்னர்
அய்யாவும் இவர்தலைமை முடிவைச் சொன்னார்!
பெருமைமிகு பெற்றோரை இழந்தோர் தம்மைப்
பேணிடவே நாகம்மை இல்லம் கண்டார்;
விரிந்தமனம் கொண்டோராய் ஒடுக்கப் பட்டோர்
விடுதலைக்குக் களம்நின்றே உழைக்க லானார்!
மணியம்மை விளம்பரத்தை விரும்பார் வாழ்வில்
மவுனத்தால் அவமானம் இகழ்ச்சி வென்றார்
பிணிசூழ்ந்த சமுதாயக் கட்டு மானப்
பின்னடைவை முறியடிக்கும் உறுதி பூண்டார்!
துணிவோடு கேடுகளை, இழிவைச் சாடித்
துணையான அய்யாவை உயிராய்க் காத்தார்!
தனக்குப்பின் ஆசிரியர் செயலர் ஆகத்
தகுபணியைத் தொடர்ந்திடுவார் என்றார் அன்னை!
ஆற்றல்தம் மறுபெயரே அன்னை ஆவார்!
ஆடைகளில் அணிகலனில் நாட்டம் கொள்ளார்;
போற்றும்நற் பெண்மணியாய் விளங்கி வந்தார்!
பூவையரோ நகையணிதல் விரும்பா அன்னை
ஏற்பில்லா இராமலீலா நடந்த நேரம்
இராவணனின் லீலாக்கொண் டாடச் சொன்னார்!
மாற்றத்தை இக்குமுகம் பெறுதல் வேண்டி
மாண்பார்ந்த தொண்டறத்தைத் தொடர லானார்!
அய்யாவும் மணியம்மை தம்மை நாளும்
அம்மாவென் றழைத்திட்டே மகிழ்ந்தார்! என்றும்
மெய்யான பரப்புரையால் திராவி டத்தின்
மேன்மைமிகு போராளி எனவே வாழ்ந்தார்!
பொய்வேட தாரிகளைக் கடிந்தார்! நாளும்
பொற்பார்ந்த பகுத்தறிவால் வாழும் பெண்கள்
உய்வதற்கே உயர்ஈகச் சுடராய் வாழ்வில்
ஒளிர்ந்தமணி யம்மையாரின் புகழோ வாழும் ! ♦