வழிகாட்டும் பெரியார் தொண்டர்கள்

நவம்பர் 01-15

96 விடுதலை சந்தாக்கள்

தமிழகத்தில் பல முன்னுதாரணங்களைப் பெரியார் பெருந் தொண்டர்களே படைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இரண்டுபேர் பற்றிய செய்தி இது.

ஒருவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.மணியம். இன்னொருவர் மதுரை தமிழக எண்ணைப் பலகாரம் அங்காடி நிறுவனர் பே.தேவசகாயம் அவர்களின் துணைவியார் அன்னத்தாயம்மாள் அவர்கள்.

அய்யா எஸ்.எஸ்.மணியம் அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் 96 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். எப்படித் தெரியுமா? நம்முடைய பகுத்தறிவு நாளேடான விடுதலைக்கு ஆண்டு சந்தாக்களை அளித்துக் கொண்டாடினார். 96 ஆண்டு சந்தாக்களுக்கு 96 ஆயிரம் ரூபாய் அளித்தார். அந்த விடுதலை இதழ்கள் 96 கிராமங்களுக்கு அனுப்பப்பட இருக்கின்றன. காசைக் கரியாக்கும் வெற்று டாம்பீக பிறந்த நாள்கள் பலவற்றைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், பெரியார் பெருந்தொண்டரின் பிறந்த நாள் 96 கிராமங்களுக்குப் பகுத்தறிவைப் பரப்பப் பயன்பட்டிருக்கிறது.

 

மறைந்த பின்னும் பெரியார் பணி

தமிழகத்தில் உடல் தானம் என்பது கடந்த சில ஆண்டுகளாகச் செய்யப்படுகிறது. ஆனால், இந்த உடல்தான  முறையை அறிமுகப்படுத்தியவர்கள் பெரியார் தொண்டர்கள்தான் என்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சிபுரம் பெரியார் தொண்டர் கே.டி.எஸ்.மணி அவர்கள் இறப்புக்குப் பிறகு தனது உடலை மருத்துவ ஆய்வுக்கு அளித்துவிட வேண்டும் என்று அறிவித்தார். அதன்படியே அவரது உடல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல பெரியார் தொண்டர்கள் தமது உடலை அளித்துள்ளார்கள்.

உடல் தானம் குறித்த அரசின் சட்ட நடைமுறைகளும், அதற்கான விண்ணப்பப் படிவமும் முதல்முறையாக பெரியார் பகுத்தறிவாளர் நாட்குறிப்பில்தான் வெளியிடப்பட்டது. உடல்தானம் குறித்த விழிப்புணர்வை அதிகம் பேசியதும் பெரியார் தொண்டர்கள்தான்.

நமது உண்மை இதழைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு அறிமுகமான பெயர் மதுரை, தமிழக எண்ணெய் பலகாரம். இந்த அங்காடியின் நிறுவனர் பெரியார் பெருந்தொண்டர் மதுரை பே.தேவசகாயம். வாழ்நாளெல்லாம் பெரியார் கொள்கையைப் பரப்பி வந்தவர். இவர் மட்டுமல்ல, இவரது துணைவியார் அன்னத்தாயம்மாள் அவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றிப் பெரியார் கொள்கையைப் பரப்பிய வீராங்கனையாகத் திகழ்ந்தவர். கழகக் குடும்பத்தவர்களைக் காணும்போதெல்லாம் வாஞ்சையுடன் நலம் விசாரிப்பார். தமது அங்காடி உணவுப் பொருட்களையெல்லாம் அனைவருக்கும் வாரி வாரி வழங்குவார். எந்நேரமும் கருப்பு ஆடையிலேயே காட்சி அளிப்பார். இத்தகைய உயர்குணம் கொண்ட அன்னத்தாயம்மாள் அவர்கள் வயது முதிர்வால் கடந்த அக்டோபர் 3 ஆம் நாள் தமது 82 ஆவது வயதில் காலமானார்.

மறையும் வரை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பி வந்த அன்னத்தாயம்மாள், மறைவுக்குப் பின் தமது உடலை மதுரை மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக அளிக்க வேண்டும் என விருப்பப்பட்டுள்ளார். அவர் விருப்பப்படியே அவரது மகன் தே.எடிசன்ராசா அவர்களால் அன்னத்தாயம்மாளின் உடல் தானம் செய்யப்பட்டது. மதுரைக்குத் தெற்கே ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த அன்னத்தாயம்மாள் பெரியாரின் கொள்கை வயப்பட்டதால், இன்று மதுரை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்குப் பாடமாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *