பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்
நூல் பெயர் : ஈரோடு தமிழர் உயிரோடு
ஆசிரியர் : பிரபஞ்சன்
வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம்
– முதல் பதிப்பு 2022
பக்கங்கள் : 184; விலை : ரூ.200/-
பெரியார் உயிரோடு இருந்த போதும், மறைந்த பின்னும் அவரைப் பற்றி எழுதுபவர்களின் எண்ணிக்கை குறையவேயில்லை ! பாராட்டி எழுதுபவர்களை விட பழி, சுமத்திச் சுகம் காண்பவர்களே அதிகம். அந்தப் பழிகளையும் வென்றவர் தான் பெரியார்!
ஆனால், இந்த நூலோ பெரியாரை வியந்து பாராட்டி எழுதப்பட்ட எழுத்தோவியம்!
எழுத்தாளர் பிரபஞ்சன் (1945 – 2018) சிறந்த படைப்பாளர். சிறுகதை, நாவல்கள், கவிதை என 50க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். இவரது நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல தரப்பட்ட வாசகர்களை அடைந்திருக்கின்றன. இவர் தனது ‘ வானம் வசப்படும் ‘ நாவலுக்காக 1995ஆம் ஆண்டுக்்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
நூலாசிரியர் பிரபஞ்சன் இடது சாரி எழுத்தாளராக தொடங்கி திராவிட இயக்கச் சிந்தனையாளராகப் பரிணமித்தார். ‘ திராவிடம் என்பது இடம் அல்லது மொழி, இனம், நாடு முதலான உட்பகுதிகளைக் கொண்ட மனோபாவம் என்பதே ‘ என்ற சித்தாந்தத்தைக் கொண்டவராக இருந்தார்.
பெரியாரை ஒரு புதிய கோணத்தில், புதிய கவிதை நடையில், புதிய உரை வீச்சாக புதுக்கவிதையின் குணத்தோடும் புதுவைக் கவிஞரின் மணத்தோடும் இதிலுள்ள 15 உரைநடைக் கவிதைகளை வழங்கிவிட்டுச் சென்று விட்டார்!
பெரியார் யார்? என்ற கேள்வி இன்றும் கேட்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. அதற்கான பதில் வேறு வேறாக இருந்தாலும், பிரபஞ்சன் தனது எழுத்தோவியத்தில் வடித்தது எவ்வளவு பொருத்தம் என்பதற்கு இதோ, சில வைரவரிகள்-
♦ ஆயிரம் ஆண்டு அடிமைத் திராவிடத்தின் விடுதலைக்குப் பாயிரம் எழுதிய பண்பாட்டுப் படைப்பாளி!”….
♦ “பேச்சு மொழிகளைப் பிரச்சார மொழியாக்கி
தமிழை உயிர்ப்பித்த புதிய தொல்காப்பியன்!”….
♦ “ஆண்டாண்டு காலமாய் அரச மரத்தடியில்
வேலை மெனக்கெட்டு வீணுக்கு அமர்ந்திருந்த
பொல்லாப் பிள்ளையாரை போட்டுடைத்த மெய்ஞ்ஞானி!”
பெரியார் தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் பேசினார். அனைத்துத் துறைகளைப் பற்றியும் பேசினார். அவர் பேசிய பேச்சுகளை கடுகு சிறுத்தும் காரம் குறையாமல் இருப்பது போல், பிரபஞ்சன் தனது கவிதை நடையில் வடித்துள்ளார்:
“எல்லோருக்கும் ஒளி கொடுக்கும்
சூரியனில் ஆரியன் உண்டா
உண்டா பகலவனுக்குப் பூணூல்
பிரமன் நெற்றியிலே பிறக்குமா காற்று
காலில் பிறந்த மழை உண்டா
இயற்கைக்கு இல்லாத பேதம்
இருக்கலாமா மனிதர்க்குள்ளே?”….
“பிறப்பால் ஒருவன் சிறப்பான் என்பதும்
பிறப்பால் ஒருவன் சிறுப்பான் என்பதும்
பித்தலாட்டமே!”…
“மனிதர் சமம் என்பது அறம்!
மற்றதெல்லாம் எனக்கு அப்புறம்!”…..
சுயமரியாதை இயக்கம் பற்றி பிரபஞ்சன் தருகின்ற இந்த விளக்கத்தை விட வேறு எப்படி சுருக்கமாகச் சொல்ல முடியும்?
“மனுவின் தர்மத்தில் இருந்து மனித தர்மத்தை வெட்டி எடுத்து மீண்ட இயக்கத்தின் மறுபெயர்- சுயமரியாதை இயக்கம்!
மானுட இயக்கத்தின் மறுபெயர் – சுயமரியாதை இயக்கம்!”…
*பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்கப் பாடுபட்டவர் பெரியார்! பெண்ணின் உரிமைக்குக் குரல் கொடுத்தவர் பெரியார்! அந்தப் பெண்களால் ‘ பெரியார் ‘ என பட்டம் பெற்றவர் பெரியார்! பெண்ணினம் என்றுமே மறக்க முடியாத ஆளுமையானார் பெரியார்!
அதற்குப் பெரிய மகுடமாக பிரபஞ்சன் எழுதியுள்ள வைர வரிகள் :
“பெண்ணைத் தெய்வமாக்கியது ஆன்மிகம்|
பெண்ணைத் தாசியாக்கியது நிலப் பிரபுத்துவம்|
பெண்ணை அடிமை ஆக்கியது வைதீகம்
பெண்ணை வேலைக்காரியாக்கியது குடும்பத்துவம்
பெண்ணை மனுஷியாக்கியது பெரியாரியம்!”……
பிரபஞ்சனின் புதுக்கவிதைகள் ஓவியம் போல வண்ணத்துடனும் சீரிய எண்ணத்துடனும் அமைந்துள்ளன
“பெரியார் போட்ட வித்து
முளைக்காமல் போனதில்லை!
அய்யா வைத்த கொள்ளி சுடாமல் இருந்ததில்லை!”…
என்று உறுதியாகச் சொன்னார், இறுதியாகவும் சொன்னார்!
பெரியாருக்கு நூலாசிரியர் பிரபஞ்சன் சமர்பித்த நினைவஞ்சலியாக இந்த கவிதைகள் அமைந்துள்ளன!
ஈரோடு தமிழர் உயிரோடு !
உயிரோடு பெரியார் பெயரோடு !