சனாதனம் எவ்வளவு மோசமானது என்பதை உணரவேண்டும்!
1. கே: தமிழில் பெயர் சூட்டும் நல்ல முயற்சியைத் தொடங்கியுள்ள தாங்கள், இதைக் கூட்டு இயக்கமாக்க, உணர்வுள்ள இயக்கங்களை, கட்சிகளை ஒருங்கிணைத்து செயல் திட்டம் வகுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவீர்களா?
– து.மல்லிகா, கிழக்குத் தாம்பரம்.
ப: நிச்சயம் இதுபோன்ற முக்கிய பிரச்சினையில் ஒத்த உணர்வாளர்கள் அனைவரையும் குறிப்பாக தமிழ் உணர்வாளர்களை ஓரணியில் இணைத்து இந்த முயற்சியை வெற்றியாக்கிட விரைவில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த முடிவு செய்து தமிழ் அமைப்புகள், கட்சிகள், இயக்கங்களுக்கு அழைப்பு விடுப்போம்.
2. கே:இராமர் சிலையை மோடி வைப்பதற்கு பூரி சங்கராச்சாரி தெரிவிக்கும் எதிர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– தே.எழிலரசன், காட்டாங்குளத்தூர்.
ப: சனாதனம் எவ்வளவு மோச-மானது என்பதை இனியாவது பிரதமர் மோடியும் அவரது கட்சியினரும் உணர்வார்கள் என்று நினைக்கிறோம்.
3. கே:தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே காவிக்கூட்டம் ஜாதி உணர்வுகளை மறைமுகமாக, ஆனால் தீவிரமாகத் தூண்டிவரும் நிலையில், அரசு இதை கவனமாகக் கண்காணித்துத் தடுக்க தாங்கள் வலியுறுத்துவீர்களா?
– உ. குறளமுதன், திருச்சி.
ப: மழை, வெள்ளம், துயர்துடைப்பு, நிவாரணங்கள் _ இப்பணிகள் சில வாரங்களில் முடிவுக்கு வரும் நிலையில் அப்பகுதியில் ஒரு பொதுப் பிரச்சாரம் _ அறப்போர் _ மக்கள் விழிப்புணர்வு பாதுகாப்பு அடிப்படையில் நடத்த ஆயத்தமாவது எமது திட்டம்.
4. கே: ஓ.பன்னீர்செல்வம் பி.ஜே.பியை ஆதரிப்பது பற்றியும், பி.ஜே.பி. விஜயகாந்த் கட்சியினருக்குத் தூண்டில் போடுவது பற்றியும் தங்கள் கருத்து என்ன?
– எஸ். கொடிமலர், சேலம்.
ப: வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்கள் கிடைக்கும் துரும்பையும் தூணாகக் கருதிப் பிடிப்பது இயல்புதானே! திண்ணை எப்போது காலியாகும் எனக் காத்திருந்தவருக்கு, இப்போது ஒரு புதிய முயற்சி இது; அவ்வளவுதான்!
5. கே: மூடநம்பிக்கைகளை நிலை நிறுத்த ஆண்டு முழுவதும் விழாக்களை வைத்திருப்பது போல, சமூகநீதி, பெண்ணுரிமை, பொதுவுடைமை, பகுத்தறிவு, தமிழ் உணர்வு, சுயமரியாதை உணர்வு, ஜாதி ஒழிப்பு போன்றவற்றை முன்னிறுத்தி நாம் விழாக்களைக் கொண்டாட ஏற்பாடு செய்தால் என்ன?
– கு. நன்மதி, ஆர்க்காடு.
ப: அருமையான யோசனை விரைவில் சிந்தித்து முடிவு எடுத்து அறிவிப்போம்!
6, கே: ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்துவதற்கு மாறாக, தமிழ்நாடு அரசை பா.ம.க. வலியுறுத்துவது சரியா?
– வே. சேகர், கோடம்பாக்கம்.
ப: இந்த மாமியார் எப்போதும் மருமகள் மீதுதான் குறி வைப்பார்; அவர்களிடம் கூட்டுச் சேருபவர்கள் அதைச் சட்டப்-படி வற்புறுத்துவதுதானே நியாயம்! சென்சஸை _ ஜாதிவாரி கணக்கெடுப்பைத் தள்ளிப் போடுகிறது ஒன்றிய அரசு.
7. கே: குருகுலக் கலாச்சாரம் மீண்டும் வேண்டும் என்று கூறும் ராஜ்நாத் சிங் – கல்லூரி, பல்கலைக் கழகங்கள் வேண்டாம் என்கிறாரா? பல்கலைக் கல்வியை குருகுலம் கற்பிக்க முடியுமா? இதை அறியாமை என்பதா? ஆதிக்கம் என்பதா?
– மா.சதீஷ், விருகம்பாக்கம்.
ப: இரண்டும் தான். ஆதிக்க ஆசையே முதலில் மூலகாரணம்.
8. கே: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீட்டை நீக்க வழியுண்டா? முடியாது என்றால் ஆண்டு வருவாய் அளவை 2 லட்சம் என்று குறைக்கவும், எல்லா ஜாதியிலுள்ள ஏழைக்கும் அதை உரியதாக்கவும் வழி செய்தால் என்ன?
– க. முல்லைவண்ணன், பேரம்பாக்கம்.
ப: 09.01.2024 ‘விடுதலை’யில் வந்துள்ள எமது அறிக்கையை தயவு செய்து படியுங்கள்.