முனைவர் கடவூர் மணிமாறன்
தமிழர்தம் புத்தாண்டுத் தொடக்கம் ‘தை’யே!
தமிழறிஞர் எல்லாரும் கருத்தால் ஒன்றி
அமிழ்தனைய சிந்தனையைப் பகிர்ந்தார் அந்நாள்;
அறுவடைநாள் பொங்கல்நாள் எல்லாம் சேர்ந்து
திமிர்ந்தெழவே உழவரினம் உவகை பொங்கத்
திரண்டுள்ள கதிர்விளைச்சல் கண்டு நெஞ்சில்
அமிழ்தின்பம் ஊற்றெடுக்கும் இனிய நாளில்
அகமகிழ்ந்து கொண்டாடி மகிழ்வோம் நாமே!
சித்திரையைப் புத்தாண்டின் தொடக்கம் என்போர்
சிறுமதியோர்! வரலாற்றை அறிந்து கொள்ளார்!
எத்திக்கும் இந்நாளில் வாழு கின்ற
எந்தமிழர் இக்குமுக அறத்தை வேட்பர்!
முத்தனைய சமத்துவத்தை விழைவர்; என்றும்
முத்தமிழைக் காத்திடுவர்! திராவி டத்தின்
புத்துணர்வால் “எல்லார்க்கும் எல்லாம்” என்றும்
புகழார்ந்த இனமானம் காப்பர்! மீட்பர்!
புறமென்றும் அகமென்றும் பகுத்து வாழ்ந்தோர்
பொதுநோக்கை, மேன்மையினை உணர்ந்தோர் ஆவர்!
குறளுக்கோர் நிகராக ஞாலம் தன்னில்
குற்றமிலாப் பனுவலுமே வேறுண் டாமோ?
திறமான புலமையினால் தொலைநோக் காலே
தேர்ந்துரைத்த நூல்யாவும் தமிழி னத்தார்
அறவாழ்வை, போர்மறத்தை, ஒழுக்கம், பண்பை
ஆளுமையைப் பறைசாற்றும்; பெருமை சேர்க்கும்!
கழனிகளோ செழித்திருக்கும்! காட்டில் மேட்டில்
கனிகளுமே பழுத்திருக்கும்! போற்று கின்ற
உழவரினம் உவகையிலே திளைக்கும்; சூழும்
உறவோரும் நண்பருமே பகிர்வர் வாழ்த்தை!
கிழக்கெழும்செங் கதிரோனைப் போற்றும் நன்னாள்
கிளர்ச்சிமிகு காளைகளை அடக்கும் ஆண்மை
அழகொளிர மிளிர்கின்ற தமிழர் நன்னாள்;
அனைவர்க்கும் தருவோம்நற் பொங்கல் வாழ்த்தே!!
♦