வலது கை இட்ட திருநீற்றை, பொள்ளாச்சி கழக மேடையிலே இடதுகையால் அழித்தது, வெறும் கைத்தட்டலுக்குத் தான் என்பதைப் பகுத்தறிவுப் பாசறை முன்னமேயே உணரும். கண்ணதாசன் ஒரு க்ஷண சித்தன் _ ஒரு க்ஷணப்பித்தன் என்பதையும் நாடிபிடிக்காமலே சொல்லும் தொலைநோக்கு, பெரியார் தொண்டர்களுக்கு உண்டு.
ஆத்திகப் போர்வை போர்த்தி பழங்குப்பை களை அர்த்தமுள்ள இந்துமதமாக்கி, மூடநம்பிக்கைகளுக்கு தலைப்பாகை கட்டி, ராஜகிரீடமும் புதுபாஷ்யம் சிருஷ்டித்த கொடுமைக்கு அவரது தமிழ் துணை போனதுதான் கொடுமையிலும் கொடுமை. எட்டி உதைத்த சங்கரமடம், கட்டிப் பிடித்து கைலாகு தந்தது. இதெல்லாம் தற்காலிக மயக்கம். போதை தெளியும் என்பதே பகுத்தறிவு பெரியாரியக்க நம்பிக்கை.
அது வீண் போகவில்லை. கண்ணதாசனின் ஊரறிய மகளே ஆனாலும், விசாலி அவரது எச்சமே. அவர் எழுதிய சத்தியவாக்கு என்ற புத்தகம். (ஆனந்த விகடன் வெளியீடு) அதில்,துன்பம் வந்தபோது சிவாய நம என்றேன். திடீர் தோல்வி வந்தபோது ஆஞ்சநேயா என்றேன். ஆதரவு தேடியபோது ஏசுபெருமானே பொருத்தம் என்றேன். எல்லா இடமும் சுற்றிப் பார்த்து விட்டு இப்போது சொல்கிறேன் என் காளியே எனக்கு தோதானவள். இந்த க்ஷணத்தில் நான் நினைக்கிறேன். இல்லை என்ற ஒன்றிலேயே உறுதியாக நிலைத்திருக்கும் நாத்திகன் என்னைவிட நல்லவனே! உள்ளத்தில் கறை ஏறியவனுக்கே அதைக் கழுவ பக்தி தேவைப்படுகிறது. உண்மையை நினைத்து உண்மையே பேசி, உண்மையாகவே வாழ்ந்து முடிக்கிற ஒருவனுக்கு என்ன தேவைப்படப் போகிறது?
தகவல்: -சந்தனத்தேவன், திண்டுக்கல்