லாகூரில் 1929இல் நடைபெற்ற ஆண்டு மகாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் பூரண சுயராஜ்யம் (முழு விடுதலை) அடைவதே தன் லட்சியம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் நாள் சுதந்திர நாளாகக் கொண்டாடுவதென்று தீர்மானிக்கப்பட்டது. மறு ஆண்டு (1930) ஜனவரி 26 அன்று நாடெங்கிலும் நடைபெற்ற ஆயிரக்கணக்கான பொதுக்கூட்டங்களில் கீ¢ழ்வரும் சுதந்திரச் சூளுரை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
வேறெந்த மக்களையும் போலவே இந்தியர்களுக்கும் சுதந்திரமும், தம் உழைப்பின் பலனை அனுபவிக்கவும், வாழ்வின் தேவைகளை அடையவும், இவற்றின் மூலம் வளர்ச்சிக்கான முழுவாய்ப்பைப் பெறும் மாற்ற முடியாத உரிமை உண்டென்று நாங்கள் நம்புகிறோம். இவ்வுரிமைகளை மறுத்து மக்களை ஓர் அரசு ஒடுக்குமானால் அந்த அரசை மாற்றவும் கவிழ்க்கவும்கூட அம்மக்களுக்கு உரிமை உண்டென்றும் நம்புகிறோம். இந்திய மக்களின் மாற்ற முடியாத உரிமைகளைப் பறித்ததோடன்றி பிரிட்டிஷ் அரசு மக்களைச் சுரண்டியே வாழ்கிறது. இந்தியாவை, அரசியல், பொருளாதார, கலாச்சார, ஆன்மிக ரீதியில் அழித்துவிட்டது. ஆகவே, பிரிட்டிஷ் தொடர்பைத் துண்டித்துக்கொண்டு இந்தியா பூர்ண ஸ்வராஜ் (முழுவிடுதலை) அடைந்தே தீரவேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியப் பொருளாதாரத் துறை நாசமாக்கப்பட்டுவிட்டது-. எங்கள் மக்களுடைய வருமானத்துக்கும், அவர்கள் செலுத்தும் வரிக்கும் ஒரு தொடர்புமில்லை. எங்கள் சராசரி வருமானம் ஒரு நாளுக்கு ஏழு பைசா (இரண்டு பென்னிக்கும் குறைவு) நாங்கள் கட்டும் வரியில் 20 சதவிகிதம் ஏழை விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும் நிலவரி; 3 சதவிகிதம் உப்பு வரி என்று எளியவர் தலையில் விழுகிறது.
நூல் நூற்றல் முதலிய கிராமியத் தொழில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. ஆண்டுக்கு 4 மாதம் அவர்களுக்கு வேலை ஏதுமில்லாமல்
போயிற்று. கைவினைகள் இல்லாமற் போனதால் அவர்களின் மதிநுட்பம் மங்கிப்போனது. பிற நாடுகளில் இப்படி கைத்தொழில்கள் மங்கிப்போகும்போது செய்யப்படுவதுபோல் இங்கு மாற்று ஏற்பாடெதுவும் செய்யப்படவில்லை.
சுங்கவரியும் நாணயக் கொள்கையும் ஏழை விவசாயினை நசுக்கும் விதமாகவே மாற்றியமைக்கப்பட்டன. எங்கள் இறக்குமதியில் பெரும்பகுதி பிரிட்டிஷ் பொருட்களே. பிரிட்டிஷ் உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாகவே எல்லாம் என்பதை சுங்க வரிக் கொள்கை தெளிவாகக் காட்டுகிறது. அதில் கிடைக்கும் வருமானமும் மக்களின் சுமைகளைக் குறைப்பதற்கல்லாது ஆடம்பரமான அரசு நிருவாகச் செலவுகளுக்கே போய்ச் சேருகிறது. நாணயச் செலாவணி முறையும் பணம் கோடிக்கணக்கில் இந்தியாவிலிருந்து வடிந்து போவதற்கு வழிசெய்யும் முறையிலேயே திரிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தளத்தில் இந்தியாவின் நிலை வேறெப்போதும் தாழ்ந்திராத அளவு பிரிட்டிஷ் காலத்தில்தான் தாழ்ந்துபோயிருக்கிறது. எந்தச் சீர்திருத்தமும் மக்களுக்கு உண்மையான அதிகாரம் எதையும் அளிக்கவில்லை. எங்கள் சமூகத்தின் உன்னத மனிதர்கள் கூட அந்நியர்முன் கைகட்டி நிற்கின்றனர். கருத்துரிமையும் கூடிப் பேசும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளன. எங்கள் நாட்டினர் பலபேர் நாட்டைவிட்டோடி அயல்நாட்டிலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அவர்கள் தாயகம் திரும்ப வழியில்லை. நிருவாகத் திறமை யாவும் மழுங்கடிக்கப்பட்டு குமாஸ்தா வேலையும் குற்றேவல் பணிகளுமே எங்களுக்கென்று ஆக்கப்பட்டுள்ளது. அதிலேயே நாங்கள் நிறைவுகாண வேண்டுமாம்.
கலாச்சாரத் தளத்தில், எங்களுக்குத் தரப்படும் கல்வி எங்களை எங்கள் வேர்களிலிருந்து பிரித்துவிட்டது. எங்களைப் பிணைத்திருக்கிற சங்கிலியையே அணைத்துக் கொள்ளத்தான் எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மனோரீதியாக, கட்டாயமாக எங்களை நிராயுத பாணிகளாக்கியதில் எங்கள் ஆண்மை பாதிக்கப்பட்டுவிட்டது. எங்கள் மனதிலிருந்து எதிர்ப்புணர்ச்சியை நசுக்குவதற்காக முழுப் போர்க்கோலத்தில் நிறுத்தப்பட்டிருக்கிற அந்நிய ஏகாதிபத்திய ராணுவம் எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியாது என்றும், எனவே வெளியார் படையெடுப்பிலிருந்து காத்துக்கொள்ள முடியாதென்றும், அவ்வளவு ஏன்? திருடர், கொள்ளையர், தீயவர் தாக்கு
தலிலிருந்து எங்கள் வீட்டையும் குடும்பத்தையும் கூட பார்த்துக்கொள்ள முடியாதென்றும் எண்ண வைத்துவிட்டது.
எங்கள் தேசத்துக்கு நான்கு வகையிலும் நாசம் விளைவித்த ஓர் ஆட்சிக்கு இன்னமும் பணிந்து நடப்பது மனித மாண்புக்கும் கடவுளுக்குமே எதிரான பாவம் என்பது எங்கள் தெளிவு. ஆனால், எங்கள் உரிமையை மீட்டெடுப்பதற்கு அனைத்திலும் சிறந்த வழி வன்முறை அல்ல என்பதும் எங்களுக்குத் தெரிகிறது. எனவே, இயலக்கூடிய வகையிலெல்லாம் நாங்கள் எங்களைப் பிரிட்டிஷ் அரசிடமிருந்து விலக்கிக் கொள்வோம். விரும்பி அத்துடன் சேர்ந்து பணியாற்றமாட்டோம். வரி கொடாமை முதலான ஒத்துழையாமைக்குத் தயாராக ஆகிக்கொள்வோம். நாங்கள் இணக்கமாய்த் தந்து வருகிற ஒத்துழைப்பை விலக்கிக் கொண்டு, வரி கொடுப்பதையும் நிறுத்திவிட்டால், அதுவும் எத்தனை நெருக்கடிவரினும் வன்முறைக்கு இடந்தராமலே அப்படிச் செய்தால், மனிதத் தன்மையற்ற இவ்வாட்சி முடிவுக்கு வந்தே தீரவேண்டி நேரும் என்பது எங்கள் சந்தேகமற்ற தெளிவு. எனவே, முழு விடுதலையை அடைவதற்கு அவ்வப்போது காங்கிரஸ் கட்சி இடும் ஆணைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதென்று நாங்கள் இங்கே இப்போது இத்தீர்மானத்தின் முன் ஒரு புனித முடிவை மேற்கொள்கிறோம்!
அடிப்படை உரிமைகளும் பொருளாதாரத் திட்டமும் காந்தி _ இர்வின் ஒப்பந்தம் 5.3.1931இல் கையொப்பமானதை அடுத்து ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் 1931 மார்ச் 29 முதல் 31 வரை
கராச்சியில் கூடியது. அம்மாநாட்டில், பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் கூறும் (ஸ்வராஜ்) விடுதலை இந்நாட்டு மக்களுக்கு என்ன தரும் என்பதை அவர்கள் அறிய உதவும் வகையில், காங்கிரஸ் தனது கொள்கை நிலையை அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய எளிய மொழியில் கூறவேண்டியது அவசியமென்று இம்மாநாடு கருதுகிறது. மக்கள் சுரண்டப்படுவதை முடிவுக்குக் கொணர வேண்டுமானால் அரசியல் சுதந்திரம் பஞ்சத்தில் வாடும் கோடிக்கணக்கானவர்களின் பொருளாதார சுதந்திரத்துக்கும் வகை செய்ய வேண்டும். எனவே, நாம் (காங்கிரஸ்) ஒப்புக்கொள்ளக்கூடிய எந்த அரசியலமைப்பும் பின்வரும் நலன்களுக்கு வகை செய்ய வேண்டும். அல்லது சுதந்திர இந்திய அரசு அவற்றை வழங்குவதற்கு வகை செய்ய வேண்டும்:_
1. அடிப்படை உரிமைகள் –_ இதில்
அ. கூடிப்பேசவும், சங்கங்கள் அமைத்துக்
கொள்ளவுமான உரிமை;
ஆ. பேச்சுரிமையும் எழுத்துரிமையும்;
இ. மனசாட்சி உரிமை, பொது அமைதிக்கும், ஒழுக்கத்துக்கும் ஊறு நேராத வகையில் எந்த மதத்தையும் பின்பற்றவும் அதன்படி வாழவும் உரிமை;
ஈ. சிறுபான்மையினரின் பண்பாடு, மொழி, எழுத்து ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு;
உ. ஆண் _ பெண் பேதமின்றி குடிகள் அனைவருக்கும் சமவுரிமை, சம கடமை.
ஊ) அரசுப் பணிகளுக்கும், பதவி, பொறுப்பு, மரியாதை ஆகியவற்றுக்கும் எந்தத் தொழிலையும், வணிகத்தையும் நடத்து
வதற்கும் எந்தக் குடிமகனுக்கும் ஜாதி, மதம், இனம், பால் எந்த அடிப்படையிலும் எவ்விதத் தடைகளும் இல்லாத நிலைமை;
எ) பொதுச் சாலைகள், கிணறுகள், பள்ளிகள், பிற பொது இடங்கள் அனைத்திலும் குடிகள் அனைவருக்கும் சமவுரிமை.
ஏ) விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு ஆயுதம் வைத்துக்கொள்ளவும் ஆயுதமேந்தவுமான உரிமை;
அய்) சட்டத்துக்குட்பட்டு அல்லாமல் எவருடைய சுதந்திரமும் சரி, சொத்தும் சரி, பறிக்கப்படக்கூடாது. சொத்தில் அத்துமீறல் பிரவேசங்கள் கூடாது என்பதற்கான உரிமை ஆகியவையும் அடங்கும்.
2. மதச்சார்பற்ற அரசு
3. வயது வந்தோருக்கு வாக்குரிமை
4. இலவச ஆரம்பக் கல்வி
5. ஆலைத்தொழிலாளிக்கு அடிப்படை வாழ்வுக்கான சம்பளம், குறிப்பிட்ட வேலைநேரம், ஆரோக்கியமான தொழிற்
சூழல் முதுமைக்கால பொருளாதாரத்துக்கு உத்தரவாதம், நோயிலிருந்தும், வேலையின்மையிலிருந்தும் பாதுகாப்பு.
6. தொழிலாளர்களுக்கு அடிமைத்தனம் அல்லது அடிமைத்தனத்தை ஒட்டிய நிலைகளிலிருந்து விடுவிப்பு.
7. பெண் தொழிலாளிகளுக்குப் பாதுகாப்பு; குறிப்பாக தாய்மைக் கால விடுமுறை.
8. பள்ளி செல்லும் வயதினர் தொழிற்சாலைகளில் வேலை செய்யத் தடை.
9. தமது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள தொழிலாளர்கள் சங்கம் அமைத்துக்
கொள்ள உரிமை; நடுவர் மூலம் சச்சரவுகளைத் தீர்த்துக் கொள்ள நேரிய ஏற்பாடுகள்.
10. விவசாயிகள் செலுத்தும் நிலக் குத்தகையிலும், வரியிலும் பெரும் குறைப்பு; போதிய வருவாய் தராத சிறு உடைமை
களுக்குக் குறிப்பிட்ட காலத்துக்குத் தேவையான வரிவிலக்கு; தேவைக்கேற்ப, உரிய முறையில் சிறு மிராசுதார்களுக்கும் அத்தகைய சலுகைகள்.
11. குறிப்பிட்ட குறைந்தபட்ச வருமானத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு முற்போக்கு விகிதத்தில் விவசாய வருமான வரி.
12. படிப்படியான வாரிசுரிமை வரி.
13. இராணுவச் செலவை இப்போதுள்ள அளவிலிருந்து குறைந்தது 50 சதவிகிதம் குறைத்தல்;
14. பிற அரசு செலவினங்களையும், சம்பளங்களையும் பெருமளவு குறைத்தல், குறிப்பிட்ட பணிக்காக நிபுணர்கள் என்ற அளவில் நியமிக்கப்படுவோர், அவர்களைப் போன்றோர் தவிர பிற அரசுப் பணியாளர்களின் ஊதியத்துக்கு உச்சவரம்பு, பொதுவாக அது மாதம் 500 ரூபாய்க்குமேல் போகக் கூடாது.
15. வெளிநாட்டு நூலுக்கும் அந்நியத் துணிக்கும் தடை விதிப்பதன்மூலம் உள்நாட்டுத் துணிக்குப் பாதுகாப்பு.
16. முழு மதுவிலக்கும், போதைப் பொருட்களுக்கான முழுத் தடையும்.
17. உள்நாட்டு உப்புக்கு வரிவிலக்கு.
18. இந்தியத் தொழில்களுக்கு உதவக் கூடியதும் ஏழை மக்களுக்கு ஆறுதலானதுமான சுங்க வரிக்கொள்கையும் _ நாணய அமைப்பும்.
19. முக்கியத் தொழில்கள்மீது அரசுக் கட்டுப்பாடு; கனிமங்களின் அரசுடைமை.
20. நேரடியாகவும் மறைமுகமாகவும் வட்டித் தொழில்மீது கட்டுப்பாடுகள். ♦