கல்வித் துறையில் அரசாங்கம் பெரிய பார்ப்பனியம் செய்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேருவதற்கு நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்குத் தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளதாம்! எதற்காக? பாஸ் செய்த சர்ட்டிபிகேட்டில் காலேஜில் சேர – சேர்த்துக்கொள்ளத் தகுதி உடையவன் (ணிறீவீரீவீதீறீமீ யீஷீக்ஷீ சிஷீறீறீமீரீமீ சிஷீக்ஷீமீ) என்று எழுதி, கையெழுத்துச் செய்து கொடுத்துவிட்டு, காரியத்தில் மார்க்குப் பார்த்து, திறமை பார்த்து, புகுமுகப் பரீட்சை வைத்துச் சேர்க்க வேண்டும் என்று உத்திரவு போடுவதும் தராதரம் பார்க்காமல் சேர்க்கக்கூடாது என்பதும் பார்ப்பனியமா? அல்லவா? ஏனென்றால், இவை பார்ப்பான் மூளையில் தோன்றியதுதானே?
பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பவர்களைக் கல்வி விஷயத்தில் குழியில் தள்ளி மூடுவதுதானே இந்த யோசனையின் பலன்?
கல்வித்துறையில் அதிகாரம் பிற்படுத்தப்பட்ட வகுப்பார், தாழ்த்தப்பட்ட வகுப்பார் கையில் இருந்தால் இந்த எண்ணம் அவர்களது ஞாபகத்துக்கு ஆவது வருமா? மொத்த ஜனத்தொகையில் முற்பட்ட வகுப்பு மக்கள் எவ்வளவு? பிற்படுத்தப்பட்ட வகுப்பார் ஜனத்தொகை எவ்வளவு? வரி கொடுப்பதில் யார் 1 க்கு 3 ஆக, 4ஆக வரி கொடுக்கிறார்கள்? ஓட்டர்களில் அதுபோல் யார் அதிகம்? நாளைக்குப் பதவிக்கு, நிருவாகிகள் ஆசைப்பட்டால் ஓட்டர்களில் இதை எண்ணிப் பார்க்கமாட்டார் களா? கல்வித் துறையில் பார்ப்பன ஆதிக்கத்தை உயிருக்குத் துணிந்து ஒழித்ததன் பலன் இதுதானா? இராஜாஜி, பக்தவத்சலனார் உத்திரவுகளுக்கும் இதற்கும் என்ன பேதம்? இதனால் யார் பயனடைவார்கள்?
உத்தியோகத்திற்குத் தகுதி _ திறமை பார்ப்பதே யோக்கியமற்ற காரியம் என்று 40 ஆண்டுகளாகச் சொல்லிப் போராடி வருகிற நான், பாஸ் செய்தவனைப் பள்ளியில் சேர்ப்பதற்குத் தரம் பார்க்கவேண்டுமென்றால் பெரிதும் ஜாதித் தரம் தவிர வேறு தரம் என்ன? நாம்தான் பாஸ் பண்ணாதவனைப் பெயில் ஆக்குகிறோமே! தகுதி _ திறமை பார்த்துச் சேர்க்கப்பட்டவனும் பெயில் ஆகிறானே?
நான் மனித சமுதாயத்தின் தகுதி, தரம் என்பவைகளைப் பார்த்து வந்த அனுபவமுடை யவன், அவைகளைப் பற்றி நான் எழுதி வந்த கருத்துகள் இன்னமும் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்புக-ளுக்கு ஆக, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு ஆக உழைத்து வந்தவன் _ வருபவன் நான். மந்திரிகள் முதல் அவர்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஆகித் தீரவேண்டும் என்பவன்.
கல்வி விஷயத்தில் இந்த ஆட்சியைவிட காமராஜர் ஆட்சி மிக்க தேவலாம் என்று ஆக்கிவிடக்கூடாது.
பாஸ் செய்த பின்பு தகுதி, திறமை, தரம் எதற்காகப் பார்க்கப்படுகிறது? அது எதற்காக வேண்டும்? அதன் அர்த்தம் என்ன? அதன் பலன் என்ன? மந்திரி சபையில், பெரிய பதவியில், அதிகாரத்தில் தரமுள்ளவர்களால், திறமை உள்ளவர்களால் ஏற்பட்ட நன்மை பெருமை என்ன? தகுதி, திறமை, தரம் அற்றவர்களால் ஏற்பட்ட கெடுதி என்ன? அதிகாரம், உத்தியோகங் களிலும் வகுப்பு, உள்வகுப்பு, உட்பிரிவு, ஜாதி வகுப்புரிமை வேண்டும். சர்க்காருக்கு 50 கோடி ரூபாய் மது இலாகா மூலம் வருவாய் கிடைத்திருக் கிறது. இது யார், எந்த வகுப்பார் தந்த பணம்? இந்த வருவாய் கொடுத்தவர்களை வடிகட்டுவது தான் பலனா? இதைக் கவனிக்கவேண்டும்.
கண்டிப்பாய் அரசாங்க அகராதியில் தகுதி, திறமை, தரம் என்ற சொற்களை எடுத்துவிட வேண்டும்.
இது என் சொந்தக் கருத்து. – விடுதலை 17.7.72
(தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் நாவலர் அவர்கள் நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவதுபற்றிக் கருத்துத் தெரிவிக்க – அதனை எதிர்த்து தந்தை பெரியார் விடுதலையில் வெளியிட்ட முக்கிய அறிக்கை இது. (குறிப்பு: தந்தை பெரியார் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு டாக்டர் கலைஞர் அவர்கள் டாக்டர் நாவலரின் கருத்தைச் செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). நுழைவுத் தேர்வு என்னும் சமூகநீதிக்கு எதிரான முறையை கலைஞர் அவர்களின் தி.மு.க.ஆட்சி நீக்கியது. அதன் மூலம் கடந்த மூன்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் உயர் கல்வியில் தமக்குரிய இடத்தை பெற்று வருகின்றனர். இதன் மூலம் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் நுழைவுத்தேர்வு நடைமுறையில் இல்லாத நிலையில் மத்திய அரசு மீண்டும் இந்திய அளவில் நுழைவுத் தேர்வைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இந்த சமூக நீதிக்கு எதிரான முறையைக் கைவிட வலியுறுத்தி வழக்கம் போல திராவிடர் கழகம் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தனது முதல் குரலை எழுப்பியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நுழைவுத் தேர்வைப் பற்றிய தந்தை பெரியார் அவர்களின் கருத்து என்ன என்பது தெரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். அதன் அடிப்படையில் இது வெளியிடப்படுகிறது)
அறிவுத்துறையில் நம் நிலை
நமது பிரதம மந்திரி நேரு அவர்களின் தங்கையர் திருமதி விஜயலட்சுமி பண்டிட் அவர்கள் மேல்நாட்டில் ஒரு வெள்ளைக்கார மாதுவுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அந்த மாது நீங்கள் எவ்வளவோ இப்போது முன்னேறியுள்ளீர்கள் என்று கூறினார். அதற்கு உடனே விஜயலட்சுமி அம்மையார், நாங்கள் இன்னும் எவ்வளவோ முன்னுக்குப் போய் இருப்போம். பாழும் உங்கள் நாகரிகம் வந்துதான் எங்களின் முன்னேற்றத்தைத் தடுத்து விட்டது என்று கூறினார். உடனே அந்த வெள்ளைக்கார அம்மாள் பட்டென்று சொன்னார், எங்களுடைய நாகரிகம் உங்கள் நாட்டில் பரவாது இருக்குமேயானால், நீங்கள் இந்த நாட்டிற்கே வந்து இருக்கவே முடியாதே. உங்கள் கணவன் செத்த போதே உங்களையும் உங்கள் நாட்டில் நாங்கள் வருவதற்கு முன் இருந்த பழக்கப்படி உங்கள் கணவனோடு அல்லவா சேர்த்து வைத்து கொளுத்தி இருப்பார்கள். எங்கள் நாகரிகத்தின் பயனாகவோ தானே இன்று நீங்கள் விதவையாகியும் உயிருடன் இருக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அந்த அம்மாளுக்கு வெட்கமாகப் போய்விட்டது.
நம்முடைய நடத்தைகள், செய்திகள் பற்றி வெளிநாட்டுக்காரன் எவ்வளவு கேவலமாக நினைக்கின்றான், கேலி பண்ணுகின்றான் என்பதற்கு வேடிக்கையான ஒரு செய்தியையும் கூறுகின்றேன்.
எங்கள் வீட்டுப் பையன் என் அண்ணன் மகன் சம்பத் ரஷ்யாவுக்குப் போய் இருந்தான். அவனுடன் எங்கள் ஜில்லாக்காரன் கோபிச்செட்டிப்பாளையம் சுப்பண்ண கவுண்டர் மகன் ராமசாமி என்பவரும் போய் இருந்தார். இவரும் பார்லிமெண்டு மெம்பர்தான்.
இவர்களைப் பார்த்து ஒரு துடுக்குக்கார ரஷ்ய சிறுவன், ஆமாம், உங்கள் நாட்டில் மாட்டைக் கும்பிடுகின்றீர்களாமே, நிஜமா? என்று கேட்டான். சம்பத் நம்ம கூட கொஞ்ச காலம் இருந்தவன். ஆகையால், அவன் தந்திரமாக பின்வாங்கிக் கொண்டு அந்த ராமசாமியைப் பார்த்து இந்தப் பையன் ஏதோ கேள்வி கேட்கின்றான். பதில் கூறுங்கள் என்றான்.
ஓகோ அப்படியா, ஆமாம் நாங்கள் மாடு ஜீவசத்தான பால் கொடுக்கின்றது, அதனால் கும்பிடுகின்றோம் என்றார். அந்த பையன் கேட்டான், மாட்டைவிட எருமை அதிகப் பால் கொடுக்கின்றதே, அதில் அதிக ஜீவசத்து உள்ளதே, அதை ஏன் கும்பிடக் கூடாது? என்று கேட்டானாம். அதற்குப் பதில் கூற முடியாமல் அவர் இது எங்கள் நாட்டுப் பழக்கம் என்று கோபத்தோடு கூறினாராம். நம் நிலை இந்த யோக்கியதையில் தானேயுள்ளது?
(22.8.1961 அன்று மதுரை தொழிலியல் கல்லூரி மன்றத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை உரை… – விடுதலை 1.9.1961)