– மஞ்சை வசந்தன்
உலக அளவில் புகழ் பெற்ற சுயசிந்தனையாளர்களுள் தலைசிறந்தவர் தந்தை பெரியார். கல்வி நிலையங்களில் அதிகம் படிக்காதவர். ஆனால், தன் முயற்சியால் அதிகம் படித்தவர். அவர் படித்து அறிந்தவற்றைவிட பகுத்தறிந்தவையே அதிகம்!
அவர் எதையும் ஏன்? எப்படி? எதற்காக? என்று சிந்திக்கத் தவறியதில்லை. சிந்தித்து சரியென்று கொள்ளாதவற்றைப் பின்பற்றியதும் இல்லை.
அவரது குடும்பச் சூழலே அவருக்கு பலவற்றைக் கற்பித்தன. அவரது வீட்டில் இடைவிடாது நடைபெற்ற சொற்பொழிவுகள், படையல்கள் அவருக்கு, புராண, இதிகாச, வைதீகச் சடங்குகள் பற்றியெல்லாம் போதித்தன. எனவே, சூழலாலே அவர் அதிகம் கற்றார், அறிந்தார்.
அவரது குடும்பம் கடவுள், பூசை, சாஸ்திர நடைமுறைகள் என்று பலவற்றை பின்பற்றும் மரபுடையது. ஆனால், பெரியார் சிறுவயதிலே எதையும் ஆய்வுக்கு உட்படுத்தி கேள்விகள் கேட்டார். கடவுள் பற்றிக் கூறப்படும் எல்லாவற்றையும் ஆராய்ந்தார். அவை குறித்து வினாக்கள் எழுப்பினார். புராண, இதிகாசங்களைத் துல்லியமாய் ஆராய்ந்து விமர்சனம் செய்தார்.
சுவர்க்கம், நரகம், முற்பிறவி, கர்மவினை, சோதிடம் என்று எல்லாவற்றையும் ஆய்வு செய்தார்.
ஜாதி வேறுபாடு, தீண்டாமை, பிறப்பால் உயர்வு தாழ்வு எல்லாவற்றையும் வெறுத்தார், எதிர்த்தார்.
அய்ந்தாம் வகுப்பைக்கூட முழுமையாக முடிக்காத பெரியார் 10 வயதுக்குள்ளாகவே ஜாதி, குடும்ப உயர்வு தாழ்வுகளை எதிர்த்தார். தீண்டக்கூடாதவர்கள், பழகக்கூடாதவர்கள் உண்ணக்கூடாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட-வர்களோடு தொட்டுப் பழகினார், அவர்களோடு சேர்ந்து உண்டார்.
இளம் பருவத்திலே அவரிடம் உண்மை, நேர்மை, அஞ்சாமை, ஆய்வு நுட்பம், மனித நேயம், சமத்துவம் ஆகியன ஆழப் பதிந்திருந்தன.
குடும்பச் சூழலால் அவரிடம் இளமையில் காணப்பட்ட கடவுள் சார்ந்த நம்பிக்கைகள், வயது கூடக்கூட, ஆய்வு வளர வளர அகன்றன. சுயசிந்தனையில் முழு நாத்திகர் ஆனார்.
9 வயதிலே தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்பட்ட குடும்பத்து மாணவர்களோடு நெருங்கிப் பழகினார். தண்ணீர் குடிக்கக்கூடாது என்று கூறப்பட்டவர்கள் வீட்டில் தண்ணீர் குடித்தார். பார்ப்பனர் வீட்டில் தண்ணீர் குடித்தபோது, தான் அவமதிக்கப்பட்டதை ஆழமாய் உள்ளத்தில் கொண்டார். சுயமரியாதை உணர்ச்சி அவருள் சுடர்விட்டது.
பிறப்பால் இவ்வளவு ஏற்றத்தாழ்வா? இழிவா? கொதித்தார். இளம் வயதிலே இவற்றிற்கு எதிராய் நடந்தார். இதற்காக இவர் காலில் விலங்கிட்டனர். “ஒரு தடவை 15 நாள்கள் இரண்டு கால்களிலும் விலங்குக் கட்டை போடப்பட்டேன். அப்போது இரண்டு தோள்களிலும் இரண்டு விலங்குகளைச் சுமந்துகொண்டு திரிந்தேன்” என்று பெரியாரே குறிப்பிட்டுள்ளார். அப்படியிருந்தும் அவர் ஜாதிக்கு எதிராய் பேசுவதை, நடப்பதை நிறுத்தவில்லை.
கல் சிற்பியின் வேலையாளாய் வாழ்ந்த வெங்கட்ட நாயக்கரின் மகன், ஈ.வெ.ராமசாமி, பிற்காலத்தில் சமுதாயச் சிற்பியாய் மாறியதன் அடிப்படை இந்த உள்ள உறுதிதான்; உள்ள நேர்மைதான்.
உண்மை, உறுதி, நேர்மை கொண்டது பெரியார் உள்ளம்
தந்தை பெரியார் எதையும் ஒளித்து, மறைத்து, பொய் கூறிச் செய்ததில்லை. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டை அவரே விடுதலையில் பதிவு செய்துள்ளார்.
“ஒரு நண்பர் என்னிடம் வந்து, ‘என்ன இப்படி எழுதியிருக்கிறாயே-? இந்தி எழுத்துப் பெயரை அழிக்கப் போகிறவரின் பெயர் விலாசம் கொடுத்தால், கொடுத்தவர்களை வீட்டில் இருக்கும்போதே, போலீசார் வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவார்களே; அப்புறம் யார் இந்தியை அழிப்பது?
இந்தி எழுத்துப் பெயரை அழிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் உனக்கு இல்லை போல் தெரிகிறதே! இது என்ன போராட்டம்?’ என்று கேட்டார்.
அதற்கு நான் என்ன பதில் சொன்னேன் என்றால், ‘நமது போராட்டம் காங்கிரஸ்காரர்களின் ‘ஆகஸ்டுப் போராட்டம்’ போன்ற நாசவேலைப் போராட்டம் அல்ல; திருட்டு வேலைப் போராட்டமும் அல்ல. இது ஆண்மைப் போராட்டம்; உண்மைப் போராட்டம்; அதுவும் நமது வெறுப்பையும். வேண்டாமையையும் காட்டும் வீரப் போராட்டம்; இதில் பயன் ஏற்படவில்லையென்றால் நான் விலகிக்கொள்கிறேன். மற்றதில் நம்பிக்கையுள்ள மற்றவர்கள் அவரவர் ஆசைப்படி நடந்துகொள்ளட்டும்’ என்று சொன்னதோடு _
‘எனது 30 வருஷ பொதுத்தொண்டில் ஒரு செயல்கூட, ஒரு போராட்டம்கூட நான் மறைவாய் நடத்தினது கிடையாது; நடத்த அனுமதித்ததும் கிடையாது.
என்மீது பொதுவாழ்வில் சுமார் 20 வழக்குகள் நடந்திருக்கும். என் சொந்த வாழ்விலும் சில வழக்குகள் நடந்திருக்கும். ஒன்றுக்குக்கூட நான் எதிர் வழக்காடி இருக்க மாட்டேன்; ஒப்புக்கொள்ளவும் தயங்கி இருக்கமாட்டேன்’ என்று சொன்னேன்.
ஒரு சிறு எடுத்துக்காட்டு:-_
1903இல் அப்போது எனக்கு சுமார் 24 வயது இருக்கும். அப்போதே வியாபாரத்தில் எனக்கு விளம்பரம் உண்டு; என் தகப்பனார் பெயரில் பெற்று இருந்த ஒரு ஆயிரம் ரூபாய் டிக்கிரியை திருச்சியில் நிறைவேற்ற ‘டிக்கிரி’ நகலை எடுத்துக்கொண்டுபோய் வக்கீலிடம் கொடுத்து, வக்காலத்து பாரத்தில் என் தகப்பனார் கையெழுத்தை நானே போட்டுக் கொடுத்து, அவசரப் படி கட்டி, ஆளைப் பிடித்துச் சேவகன் கையில் விட்டு உடனே ஈரோட்டிற்கு வந்துவிட்டேன்.
பிரதிவாதி டிக்கிரி பணத்தை வக்கீலிடம் கட்டி, வக்கீலை ரசீது கேட்டார்; அதோடு செலவைத் தள்ளிவிடுங்கள் என்றார். அதற்கு வக்கீல், ‘இப்பொழுதுதானே வாதி ஊருக்குப் புறப்பட்டார்; சற்றுமுன் வந்திருந்தால் வாதி இடமே ரூபாயைக் கட்டி ரசீது வாங்கி இருக்கலாமே; அவர் ஏதாவது தொகையில் தள்ளிக்
கொடுப்பாரே* என்றார். அந்தச் சந்தர்ப்பத்தில் பிரதிவாதி வக்கீலிடம், ‘வந்திருந்தவர் வாதி அல்ல; வாதியின் மகன்; இவர் பெயர் இராமசாமி
நாயக்கர்’ என்றார். உடனே வக்கீல் ஆத்திரப்பட்டு ‘அப்படியா?’ என்று கேட்டு ரசீது கொடுத்து பிரதிவாதியை அனுப்பிவிட்டு, மறுநாள் முனுசீப் கோர்ட்டில் ஒரு விண்ணப்பம் தாக்கல் செய்து பணத்தைக் கட்டிவிட்டார். அந்த விண்ணப்பத்தில் நான் ஆள் மாறாட்டம் செய்துவிட்டேன் என்றும், ‘போர்ஜரி’ _கள்ளக் கையெழுத்துச் செய்து தன்னை மோசம் செய்துவிட்டேன் என்றும் எழுதி இருந்தார்.
முனுசீப் எனக்கு நோட்டீஸ் அனுப்பி விட்டார். அந்த நோட்டீஸில் ‘உன்மீது (கேஸ்) வழக்கு நடத்த ஏன் சாங்கிஷன் கொடுக்கக்கூடாது?’ என்று கண்டிருந்தது.
இந்த நோட்டீஸ் எனக்கு வந்ததும், தென் இந்திய வியாபார உலகமே ஆடிவிட்டது. காரணம், அப்போது என் தகப்பனாருக்கும், எனக்கும் வியாபார உலகில் இருந்த பிரபலப் பெயராகும்.
என் தகப்பனார் இந்த நோட்டீசை எடுத்துக்கொண்டு பி.டி. சுப்பிரமணிய அய்யர், சி. விஜயராகவாச்சாரியார் என்ற இரண்டு பிரபல சேலம் வக்கீல்களிடம் சென்றார். அவர்கள் இருவரும் ஒரே மாதிரிச் சொன்னார்கள்; அதாவது, உங்கள் மகன், ‘இந்தக் கையெழுத்து நான் போடவில்லை’ என்று சொல்லிவிட வேண்டும் என்று சொன்னார்கள். என் தகப்பனார் நான் ஜெயிலுக்குப் போகாமல் இருப்பதற்கு எதுவும் செய்யத் துணிவு கொண்டவர்; ஆதலால், அவர் அதற்குச் சம்மதித்துக்கொண்டு வந்துவிட்டார். ஈரோட்டுக்கு வந்து என்னைக் கேட்டார். நான் அதற்கு இணங்கவில்லை. ‘இதற்காக 2 பேரும் பொய்களைச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை; வருவது வரட்டும்’ என்று சொல்லிவிட்டேன்.
என் மைத்துனன் நோட்டீசை எடுத்துக்கொண்டு நார்ட்டன் துரையிடம் சென்றார். அவரும், ‘இதில் கையெழுத்து நான் போடவில்லை என்பது தவிர வேறு ‘டிபன்ஸ்’ இல்லை; இதற்காக எனக்கு ஏன் 2000, 3000 கொடுக்க வேண்டும்!’ என்று சொல்லி, தனக்கு வர விருப்பமில்லை என்பதைக் காட்டிக்கொண்டார்.
கடைசியாக டி.டி.ரெங்காச்சாரியார் என்ற ஒரு முனுசீப்பை சிபாரிசு பிடித்து டி. தேசிகாச்சாரியை வக்கீல் வைத்து முனுசீபிடம் என் தகப்பனார் எவ்வளவு கெஞ்சியும் அவர் ‘சாங்கிஷன்’ கொடுத்துவிட்டார். உடனே நான் காப்பு, கொலுசு, கடுக்கன் எல்லாவற்றையும் கழற்றி எறிந்துவிட்டு, தாடி வளர்த்துக்கொண்டு_ கேப்பைக் களி(கேழ்வரகுக் களி) சாப்பிட்டுப் பழகிக்கொண்டு_ தலையணை இல்லாமல் பாயில் படுத்துப் பழக ஆரம்பித்துவிட்டேன். என் தாயாருக்கு அன்று முதல் ஒரு வேளை சாப்பாடு; பல கோயில்களுக்கு அர்ச்சனை செய்கிற வேலை. ஆனால் நான் மாத்திரம், ‘நாம் ஜெயிலுக்குப் போவது என்னமோ உறுதி; ‘கேஸ்’ தண்டனை கிடைக்கிறவரை அனுபவிக்காததை எல்லாம் அனுபவித்துவிடுவோம்’ என்று நல்ல மைனர்போல் திரிந்துகொண்டு இருந்தேன். சாப்பாடு_ களி; படுக்கை _ பாயில்; அவ்வளவுதான்; மற்றவையெல்லாம் ‘ஜமீன் மைனர்’தான்!
2 மாதம் பொறுத்து திருச்சியில் அசிஸ்டெண்ட் கலெக்டர் மெக்பர்லெண்டு (என்று ஞாபகம்) என்பவரிடம் கேஸ் வந்தது. கோர்ட்டுக்குப் போனோம்; அன்று 500 பேர்கள்_ பெரிய வர்த்தகர்கள் உள்பட கோர்ட்டில் வேடிக்கை பார்க்க வந்த கூட்டம்.
கலெக்டர் ஆசனத்தில் அமர்ந்து 5, 6 வழக்குகளைக் கூப்பிட்டு விசாரித்து முடிவு சொல்லிவிட்டார். எல்லா ‘கேஸ்’களையும் தண்டித்துவிட்டார். அவர் சிறு வயது_ 28 அல்லது 30 வயதுதான் இருக்கும். என் பெயரைக் கூப்பிட்டார்.
எனக்கு, வக்கீல் கணபதி அய்யர்_ அப்போது அவர் பப்ளிக் பிராசிகியூட்டர். எனக்காக பெரிய கலெக்டரிடம் அனுமதி பெற்று, ‘எதிரிக்கு’ ஆஜராகிறார். அவரும் நானும் ஒன்றாய்க் கோர்ட்டுக்குள் போனோம். அவர் என் தோள் மேல் கையைப் போட்டுக்கொடு கோர்ட்டுக்குள் வந்து, என்னைக் கூண்டிற்குப் பக்கத்தில் விட்டுவிட்டு, அவர் தனது இடத்திற்குச் சென்று அமர்ந்தார். கலெக்டர் இதைப் பார்த்துவிட்டு அவரிடம், ‘எங்கு வந்தீர்கள்? உங்களுக்கு இன்று இங்குக் கேஸ் இருக்கிறதா? என்றார். நம்பரைச் சொன்னார். அதற்கு, ‘சார்க்கார் தரப்பில் உம்மை அழைக்கவில்லை போலிருக்கிறதே’ என்றார், கலெக்டர். ‘நான் எதிரிக்காக ஆஜராகிறேன்’ என்றார் வக்கீல். “சர்க்கார் வக்கீல், சர்க்கார் வழக்கில் எதிரிக்கு ஆஜராகலாமா? இதென்ன புது வழக்கமாக இருக்கிறதே!” என்றார். “கலெக்டர் அனுமதிமீது ஆஜராகிறேன்” என்றார் வக்கீல். ‘ஏன் அப்படி?’ என்றார் கலெக்டர். ‘கேஸ், சர்க்காருக்கு உபயோகமற்ற பலமற்ற கேஸ். அதோடு இது ‘சென்சேஷனல்’ கேஸ் ஆனதால், அனுமதி கேட்டேன்; கொடுத்தார்’ என்றார் வக்கீல்.
என்னைப் பார்த்துக்கொண்டே, ‘சரி, சாட்சியைக் கூப்பிடு’ என்றார் கலெக்டர். முதல் சாட்சி வக்கீல் ஜம்புநாதய்யர். அவர் கொஞ்சம் சரக்குச் சேர்த்து, ‘இந்த ஆளை, நீதான் வாதியா என்றேன், உன் பெயர் என்ன என்றேன். ஆம்; வெங்கிட்ட நாயக்கர் என்றான்’ என்றார். ‘ஏன் அப்படிக் கேட்டீர்?’ என்றார் கலெக்டர். ‘யார் வந்தாலும் நான் அப்படித்தான் கேட்பது’ என்றார் வக்கீல். வக்காலத்து பாரம் ரிஜிஸ்டர் செய்த கிராம முனுசீப் ஒரு சாயபு; அவர் கிழவனார். அவருக்குக் கண் பார்வை சரியாகத் தெரியாது. ‘அவர் ஒரு வாலிபமான ஆள்_ காப்பு, கொலுசு, கடுக்கன் போட்டுக்கொண்டு வந்து என் எதிரில் நான்தான் வெங்கிட்ட நாய்க்கன் என்று சொல்லிக் கையெழுத்துப் போட்டார். அந்த ஆள் இதோ காப்பு, கொலுசு போட்டுக்கொண்டு நிற்கிறாரே இவர்தான்’ என்று கையை நீட்டி என்னைக் காட்டினார். எல்லோரும் சிரித்தார்கள்.
கலெக்டர் என்னைப் பார்த்து ஆங்கிலத்தில், ‘நீ என்ன சொல்லுகிறாய்?’ என்று கேட்டார். என் வக்கீல் அதை மொழிபெயர்த்து என்னைக் கேட்டார். நான் தயங்கித் தத்தளித்துப் பேசுகிற தன்மையில், ‘நான்தான் கையெழுத்துப் போட்டேன்’ என்றேன். ‘ஏன் போட்டாய்?’ என்றார். ‘அப்படித்தான் கோர்ட்டு, ரயில் நடவடிக்கைகளில் எப்போதும் நான் போடுவது வழக்கம்’ என்றேன். ‘ஏன் அந்த வழக்கம்?’ என்றார். ‘எங்கள் அப்பா கிழவனார்; நான்தான் வேலை பார்ப்பது; அந்த வியாபாரமும் பணமும் என்னுடையது. அவர் பெயர் பிரபலம்; ஆனதால் அந்தப் பெயர் வைத்து நான் வியாபாரம் செய்கிறேன்’ என்றேன்.
‘சரி; வெங்கிட நாயக்கரை கூப்பிடு!’ என்றார் கலெக்டர். வெங்கிட நாயக்கர் அழுது கொண்டே பெட்டிமேலேறி, வக்கீல் கேட்டதற்கு நான் சொன்னதை ஆதரித்தே பதில் சொன்னார். ஜம்புநாதய்யரைப் பார்த்து, கலெக்டர், ‘எனிதிங்?’ என்றார். எல்லோரும் சிரித்தார்கள். ஜம்புநாதய்யர் ஒன்றும் பேசவில்லை.
உடனே கலெக்டர் 4 வரி எழுதிப் படித்துவிட்டு அடுத்த கேஸ் கூப்பிட்டார். அவர் படித்தது விளங்கவில்லை.
மேஜிஸ்ட்ரேட் கிளார்க்கு ஒரு நாயுடு-. அவர், ‘கேஸ் தள்ளப்பட்டுவிட்டது; நீ போகலாம்’ என்றார். என் தகப்பனார் என்னைக் கட்டிக்கொண்டு அழுதுவிட்டு, கணபதி அய்யர் காலில் விழப்போனார்; அவர் எட்டிப்போய்விட்டார். தீர்ப்பு என்னவென்றால், ‘இந்த நடவடிக்கை இந்த செக்ஷனின் கருத்துக்குப் பொருந்தாது. எதிரி யாரையும் மோசம் செய்ய இந்தக் காரியம் செய்யவில்லை. வழக்குத் தள்ளப்பட்டது’ என்று இருந்தது.
இப்படி இன்னும் சில உண்டு.”
(விடுதலை தலையங்கம் 26.7.1952)
அதேபோல் பெரியார் பொதுத் தொண்டிலும் நாணயத்தோடும் நேர்மையோடும், உண்மையாகவும் நடந்தார். எடுத்துக்காட்டாக, 1924 ஆம் ஆண்டு மே மாதம் ஈ.வெ.ரா. வுக்கு கேரளாவில் வைக்கம் நகரில் இருந்து ஒரு தந்தியும், ஒரு கடிதமும் வந்தன.
திருவனந்தபுரம் சமஸ்தானத்திலுள்ள ஒரு சிறு நகரம் வைக்கம், ஈழவர் போன்ற பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் அந்நகரின் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடமாடவோ, கடந்து செல்லவோ உரிமை கிடையாது. அவர்கள் எதிரிலுள்ள தெருவிற்குப் போக சுமார் ஒன்றரை கி.மீட்டர் சுற்றித்தான் போக வேண்டும். மாதவன் என்ற வழக்கறிஞர் (ஈழவர் வகுப்பு) அத்தெருவழியே நீதிமன்றம் செல்லும்போது தடுத்து நிறுத்தப்பட்டார்.
இக்கொடுமைகளுக்குத் தீர்வு காண ஈ.வெ.ரா.வால் மட்டுமே முடியும் என்று அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட தலைவர்கள் முடிவெடுத்துதான் ஈ.வெ.ராவை வைக்கத்திற்கு அழைக்கும் கடிதமும் தந்தியும் அனுப்பினர்.
மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஈ.வெ.ரா சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்து விட்டு, காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை தான் திரும்பி வரும் வரை ராஜாஜியை ஏற்க கடிதம் கொடுத்துவிட்டு, உடனே வைக்கம் நோக்கிப் புறப்பட்டார்.
வைக்கம் வந்த ஈ.வெ.ரா. தம்மை வரவேற்க திருவிதாங்கூர் மகாராஜாவின் போலீஸ் அதிகாரியும், நிருவாக அதிகாரியும் காத்திருக்க வியப்படைந்தார்.
திருவிதாங்கூர் மகாராஜா டெல்லிக்குச் செல்லும் போது வழக்கமாக ஈரோட்டில் ஈ.வெ.ரா. வின் வீட்டில் தங்குவார். அந்த நன்றி விசுவாசத்தில் தான் இந்த வரவேற்பைக் கொடுத்தார். ஈ.வெ.ராவை போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தடுக்க ஒரு யுக்தியாகவும் மகாராஜா அந்த வரவேற்பைப் பயன்படுத்தினார். ஆனால் ஈ.வெ.ரா கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்பவராயிற்றே! மகாராஜா ஏமாந்து போனார்.
அய்ந்தாறு நாள்கள் வைக்கத்தில் நடக்கும் கொடுமையை எதிர்த்து காரசாரமாகப் பேசினார். இதைக் கேட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணர்வு கிளர்ந்தது.
கீழ்ஜாதி மக்கள் சென்றாலே தீட்டாகும் என்று சொல்லப்படும் வைக்கத்தப்பனை (வைக்கத்து கடவுளை) போட்டு துணி துவைக்க வேண்டும் என்று ஈ.வெ.ரா. கூற மக்கள் ஆதரவு மிகவும் கூடிற்று.
மகாராஜா ஒருவாரம் பொறுத்தபின் தடையுத்தரவு போட்டார்.
ஈ.வெ.ரா அத்தடையுத்தரவை மீறினார்.
அதனால், அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் ‘அருவிக்குத்தி’ சிறையில் அடைக்கப்பட்டார். (22.04.1924)
இதைக் கேள்வியுற்ற நாகம்மாளும் கண்ணம்மாளும் வைக்கம் வந்து, பிரச்சாரத்தைத் தொடர்ந்தனர். நாளுக்கு நாள் ஆதரவு பெருகிற்று.
இச்சூழலில், ராஜாஜி ஈ.வெ.ராவிற்கு ஒரு கடிதம் எழுதினார். நமது இடத்தை விட்டுவிட்டு நீங்கள் ஏன் இன்னொரு இடத்தில் போய் ரகளை செய்கிறீர்கள். அதை விட்டுவிட்டு இங்கு வந்து, விட்டுச் சென்ற வேலைகளைக் கவனியுங்கள் என்று அதில் எழுதியிருந்தார். மற்றொரு காங்கிரஸ்காரர் எஸ். சீனிவாச அய்யங்கார் ஈ.வெ.ராவை கையோடு அழைத்துப் போகவே வந்து விட்டார்.
ஆனால், கொள்கைப் பிடிப்புள்ள ஈ.வெ.ரா இவர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், வர முடியாது என்று மறுத்துவிட்டார்.
ஈ.வெ.ராவின் போராட்டச் செய்தி நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. பஞ்சாபிலிருந்து கூட ஆதரவு கிடைத்தது.
ஆனால், இந்த ஆதரவை இந்துக்களுக்கு எதிரான சீக்கியர் போர் என்று சூழ்ச்சிக்காரர்கள் திசை திருப்ப, பிற மதத்தவர் யாரும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று காந்திஜி அறிக்கை விட்டார். அதனால் பிற மதத்தவர்கள் விலகிக் கொண்டனர்.
ஈ.வெ.ரா சிறையிலிருந்து விடுதலையானதும் மீண்டும் அங்கே பிரச்சாரத்தை ஆரம்பித்தார். காந்தியின் ஆதரவு இப்போராட்டத்திற்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்ட அதிகாரிகள் மீண்டும் ஈ.வெ.ராவைக் கைது செய்து 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்தார்கள். அதன்படி ‘பசுப்புரா’ சிறையில் அடைக்கப்பட்டார்.
இச்சூழலில் கேரளாவில் ஈ.வெ.ரா தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது . இதனால் ஆத்திரமடைந்த வைதீக சனாதனிகள் ஈ.வெ.ரா. மரணமடைய வேண்டும் என்று கடவுளை வேண்டி ஒரு யாகம் நடத்தினர். அதற்கு ‘சத்ரு சம்ஹார யாகம்’ என்று பெயர். இந்த யாகம் நடந்து கொண்டிருந்த போதே திருவிதாங்கூர் மன்னர் மரணமடைந்தார். இதுதான் வரலாற்று நகைச்சுவை!
மன்னர் மறைந்ததையொட்டி போராட்ட வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மன்னர் மறைவிற்குப் பின் அரசியார் பதவிக்கு வந்தார். அவர் போராட்டத் தலைவர்களுடன் பேசித் தீர்வுகாண உடன்பட்டார்.
ஈ.வெ.ராவிற்கும் ராணிக்கும் இடையே உடன்பாடு எற்படுவதை விரும்பாத சமஸ்தான திவான் ராஜாஜிக்குக் கடிதம் எழுத, அவர் காந்திஜிக்குக் கடிதம் எழுதி வரவழைத்தார்.
வைக்கம் வந்த காந்திக்கும் ராணிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஈ.வெ.ரா. கலந்து கொள்ளாமல் பயணியர் விடுதியில் இருந்தார்.
“நாங்கள் தெருக்களைத் திறந்துவிடத் தாயார். ஆனால் ஈ.வெ.ரா கோயிலுக்குள்ளும் போக வேண்டும் என்று போராடுவார். அதுதான் தயங்குகிறோம்” என்றார்.
உடனே காந்திஜி பயணியர் விடுதிக்கு வந்து ஈ.வெ.ராவைச் சந்தித்து ராணி கூறியதைக் கூறி, “ஒத்துக் கொள்வது நல்லது; உங்கள் கருத்தென்ன” என்று கேட்க,
“தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள்ளும் செல்லவேண்டும் என்பது காங்கிரஸின் நோக்கமாக இல்லாவிட்டாலும் அது எனது லட்சியம். அதை நான் விட்டுக் கொடுக்க முடியாது. இப்போதைக்கு வேண்டுமானால் அதுபோன்ற கிளர்ச்சி இருக்காது” என்று ஈ.வெ.ரா தனது தனித் தன்மையையும், நேர்மையையும், உறுதியையும் வெளிப்படுத்தினார்.
காந்திஜி ஈ.வெ.ராவின் பதிலை அரசிடம் கூற, அரசி ஏற்றுக் கொண்டார். தீண்டப்படாத மக்களுக்கு கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் இருந்த தடை நீங்கியது; அவர்கள் தலைநிமிர்ந்து நடந்தனர்.
இப்போராட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியது. கோயில் நுழைவுப் போராட்டத்திற்கு அவர்களைத் தூண்டியது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கூட இப்போராட்டத்தினால் தூண்டப்பட்டதாக அவரே கூறினார்.
வைக்கம் போராட்டத்தில் வைக்கம் மன்னரே பெரியாருடைய குடும்ப நண்பராக இருந்த நிலையிலும், அந்த நட்பைப் பயன்படுத்தாது, உண்மையான நேர்மையான போராளியாக அவர் போராடியதை மேற்கண்ட நிகழ்வுகளின் மூலம் அறியலாம்.
அடுத்து தான் பிரச்சாரம் செய்வதை தன் சொந்த வாழ்விலும் பின்பற்றிய நேர்மையாளர் பெரியார். எடுத்துக்காட்டாக,
பெரியாரே நடத்திய தன் குடும்ப விதவைத் திருமணம் தந்தை பெரியார் அவர்கள் எதைச் சொன்னார்களோ அதைச் செய்தவர். எதைச் செய்தார்களோ அதை சொன்னவர் என்பதற்கு அடையாளமாக ஒன்றை சுட்டிக் காட்ட வேண்டியது முக்கியமான ஒன்றாகும். ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலில் அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அதாவது விதவைத் தன்மை எப்படியெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும்; மாற்றப்பட வேண்டும் என்ற மனிதாபிமானத் தத்துவம் கூட அவர்களுக்கு திடீரென்று வரவில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன்னாலே ‘குடிஅரசில்’ எழுதினார்.
‘விதவைகள் கல்யாணத்தைப்பற்றி இவ்வாறு எழுதும் நான், எழுத்தளவிலும், பேச்சளவிலும் ஆதரிக்கின்றேனா? செயலிலும் அதை நான் ஆதரிக்கின்றேனா என்ற அய்யம் பல தோழர்களுக்கு உண்டாகலாம். இதன் பொருட்டே எனது கருத்தைப் பிரதிபலிக்கும் செய்தியைக் கூற விரும்புகிறேன் என்று சொல்லி, நான் கர்நாடக பலிஜா நாயுடு வகுப்பில் பிறந்தவன். எனது வகுப்பார் பெண் மக்கள் முக்காடுடன் கோசாவாக இருக்க வேண்டியவர்கள் எனவும், விதவா விவாகம் அனுமதிக்கப்படாத வகுப்பினர் எனவும் கருதப்படுபவர்கள். நான் பிறந்த குடும்பமோ அளவுக்கு மீறிய ஆச்சாரத்தையும் வைஷ்ணவ சம்பிரதாயத்தையும் கடுமையாக ஆதரிக்கும் குடும்பம். இப்படி இருந்த போதிலும் என்னுடைய ஏழாவது வயதிலிருந்தே மக்களில் உயர்வு கற்பித்ததையும், ஒருவர் தொட்டதை மற்றவர் சாப்பிடலாகாது என்று சொல்வதையும் நான் பரிகாசம் செய்து வந்ததோடு, எவரையும் தொடுவதற்கும், எவர் தொட்டதையும் சாப்பிடுவதற்கும் நான் சிறிதும் பின் வாங்கியதே கிடையாது. என்னைச் சிறு வயதிலிருந்து எங்கள் வீட்டு அடுப்பங்கரைக்குச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். நான் தொட்ட சொம்பை என் தகப்பனார் தவிர மற்றவர்கள் கழுவாமல் உபயோகப்படுத்த மாட்டார்கள்.
எங்கள் குடும்ப ஆச்சார அனுஷ்டானங்-களைப் பார்த்துப் அடுத்துதான் பிரச்சாரம் செய்வதை தன் சொந்த வாழ்விலும் பின்பற்றிய நேர்மையாளர் பெரியார் எடுத்துக்காட்டாக, பொறாமைப்படுபவர்கள், என்னைப் பார்த்து சாந்தி அடைந்து விடுவார்கள். ‘நாயக்கருக்கு அவர்கள் ஆச்சாரத்துக்கு ஏற்றாற்போல்தான் ஒரு பிள்ளை நன்றாகப் பிறந்திருக்கிறது’ என்று சொல்லிப் பரிகாசம் செய்வார்கள். என்னுடைய பதினாறாவது வயதிலே பெண் மக்களைத் தனித்த முறையில் பழக்குவதையும், அவர்களுக்கென சில கட்டுதிட்டங்களை ஏற்படுத்துவதையும், ஆண்மக்களின் அகம்பாவம் என்று நான் நினைத்து வந்தேன்.
இஃது இவ்வாறு இருக்க, என் தங்கை தன் இளம் வயதிலேயே ஒரு பெண் குழந்தையையும், ஒரு ஆண் குழந்தையையும் பெற்றுவிட்டு இறந்துவிட்டாள். இவற்றுள் அம்மாயி என்று அழைக்கப்படும் என் தங்கையின் புதல்விக்கு பத்தாவது வயதில் சிறந்த செல்வாக்கோடு ஒரு செல்லக் கல்யாணம் செய்து வைத்ததோடு, கல்யாணம் செய்த அறுபதாம் நாள் அப்பெண்ணின் கணவன் என்னும் பதின்மூன்று வயதுள்ள சிறு பையன் ஒரு நாள் பகல் 2 மணிக்கு சீதபேதியால்_ காலராவால் உயிர் துறந்தான். அவன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்டதும் அப்பெண் குழந்தை, அதாவது என் சகோதரியின் புதல்வி என்னிடம் ஓடி வந்து, மாமா, ‘எனக்குக் கல்யாணம் செய்து வை’ என்று நான் உன்னைக் கேட்டேனா? இப்படி என் தலையில் கல்லைப் போட்டு விட்டாயே என்று ‘கோ’வென்று அலறிய சத்தத்தோடு என் காலடியில் மண்டையில் காயம் உண்டாகும்படி திடீரென்று விழுந்தாள். இது ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்னால் என்று சொல்லுவது அதிசயமல்ல. சிதம்பரம் போன்ற பகுதிகளில் குழந்தை மணம் நடந்து கொண்டிருக்கிறது. வடநாட்டில் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது; ஆனால் அவர்களின் விதவையான நிலையை அவர்கள் சொல்லும்போது, அங்கு வந்திருந்த ஆண், பெண் உட்பட அறுநூறு, எழுநூறு பேர்கள் அக்குழந்தையையும், என்னையும் பார்த்தவண்ணமாய் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வடித்தனர். எனக்கும் அடக்கவொண்ணா அழுகை வந்துவிட்டது. ஆனால், கீழே விழுந்து கிடந்த அந்தக் குழந்தையை நான் கையைப் பிடித்து தூக்கும் போதே, அதற்கு மறுபடியும் கல்யாணம் செய்துவிடுவது என்ற உறுதியுடனேயே தூக்கினேன்,” என்கிறார்.
“பிறகு அந்தப் பெண் பக்குவமடைந்த ஒரு வருடத்துக்குப் பின், அதற்குக் கல்யாணம் செய்து வைக்க நானும் என்னுடைய மைத்துனரும் முயற்சி செய்தோம். இச்செய்தி என் பெற்றோருக்கும், மற்றோருக்கும் எட்டவே – தம் வகுப்புக்குப் பெரிய ஆபத்து வந்துவிட்டது என்று கருதி, பெரிதும் கவலையுற்று நாங்கள் பார்த்து வைத்த இரண்டு மாப்பிள்ளைகளையும் கலைத்தார்கள். முடிவில் எனது மைத்துனரின் இரண்டாவது மனைவியின் சகோதரரைப் பிடித்து சரிசெய்து, எவரும் அறியாவண்ணம் மாப்பிள்ளையை சென்னை வழியாகவும், பெண்ணை திருச்சி வழியாகவும் சிதம்பரத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு கோயிலில் கல்யாணம் செய்து வைத்து ஊருக்கு அழைத்து வரச் செய்தேன். ஆனால், நான் அங்கு போகாமல் ஊரிலேயே இருக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் அவர்கள் சென்றுள்ள செய்தியை சுற்றத்தார் அறிந்தால் ஏதாவது சொல்லி மாப்பிள்ளையை தடை செய்து விடுவார்களோ என்கிற பயத்தாலும், நான் ஊரில் இருந்தால் கல்யாணத்திற்காக வெளியூர் சென்றிருக்கிறார் என்ற சந்தேகம் இராது என்ற எண்ணம் கொண்டுமேயாகும். இக்கல்யாணத்தின் பயனாக இரண்டு மூன்று வருட காலமாக பந்துக்களுக்குள் வேற்றுமையும், பிளவும் ஏற்பட்டு, ஜாதிக்கட்டுப்பாடு இருந்து பிறகு அனைத்தும் சரிபட்டுப் போயின. பெண்ணும் மாப்பிள்ளையும் ஒத்து வாழ்ந்து ஒரு ஆண் மகவைப் பெற்றனர்,” என்று பெரியாரே பதிவு செய்துள்ளார்.
ஆக, பெரியார் உலக அளவில் தலைசிறந்த உண்மையான, நேர்மையான, தூய்மையான சிந்தனையாளர், செயல்பாட்டாளர், போராளி என்பது காலமெல்லாம் நிலைக்கும் கல்லில் பதித்த செய்தியாகும்! வாழ்க பெரியார் புகழ்! பரவுக அவரது சிந்தனைகள்! ♦