குழம்பிக் கிடக்கும் இந்துத்துவக் குட்டை

ஜூலை 01-15

புகழ்பெற்ற கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் பற்றி கவுண்டமணி பேசும் ஒரு வசனம் வரும். அவன் திருந்திட்டேன்னு அவனே சொன்னான் என்று! இப்படித் தான் சிலர், நாங்கள் வித்தியாசமானவர்கள், நாங்கள் மாற்று அரசியல் செய்வோம், நாங்கள் வேறுபட்டவர்கள் என்று கூவியபடி வருவார்கள். முதலில் சந்தேகப்பட வேண்டியது இவர்களைத் தான்.

வழக்கமான அரசியல்வாதிகள் போல எங்களுக்குப் பதவி ஆசை கிடையாது; புனிதத்தில் புரட்டி எடுக்கப்பட்டது எங்கள் ஆன்மா; ஊழல் என்றால் லிட்டர் என்ன விலை என்று கேட்பவர்கள் நாங்கள் (ஊறல் நினைப்பிலேயே இருப்பார்கள் போலும்) என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ்-சின் அரசியல் பிள்ளை பா.ஜ.க. தான் இன்று பதவிப் பிரச்சினையில் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போதென்ன பதவிப் பிரச்சினை? பா.ஜ.க- எதிர்க் கட்சியாக அல்லவா இருக்கிறது என்றெல்லாம் யோசிக்கிறீர்களா? இன்னும் இரண்டாண்டுகளில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.வோ அதன் கூட்டணியோ வெற்றிபெற்றால் கிடைக்கப்போகும் ஆட்சிக் கட்டிலில் யார் அமர்வது என்பது தான் பிரச்சினை. அதாவது அத்தைக்கு மீசை முளைத்தால் யார் முதலில் சித்தப்பா என்று கூப்பிடுவது என்பதில் தான் பா.ஜ.க.வுக்குள் குடுமிப்பிடி நடக்கிறது. ஆரம்ப காலந்தொட்டு இரண்டாமிடத்திலேயே இருந்து நொந்துபோய்விட்ட அத்வானி ஒரு முறையாவது, குறைந்த பட்சம் முதல்முறை வாஜ்பாய் 13 நாட்கள் பிரதமராக இருந்ததைப் போலாவது பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து எழுந்துவிடவேண்டும் என்று ஆசையாயிருக்கிறார். கடந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராகவே களமிறங்கினாலும் கடைத்தேற முடியவில்லை. எனவே அவருடைய முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வின் தீவிர முகம் என்ற எந்த பிம்பம் மக்கள் மத்தியில் அத்வானிக்கு தடையாக இருந்ததோ, அதைவிட, தீவிர இந்துத்துவவாதி என்ற அடையாளத்தோடு பிரதமர் வேட்பாளராகக் களம் புகுந்தார் நரேந்திர மோடி. ஆர்.எஸ்.எஸ்.சின் ஆசியும், இந்திய பார்ப்பன ஊடகங்களின் ஆதரவும் இவர் தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று மோடியை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றன. துக்ளக் சோ பார்ப்பனர் நீண்ட காலமாகவே மோடியை பிரதமராக முன்னிறுத்துவதில் மும்முரமாக இருக்கிறார். குஜராத்தில் நரேந்திர மோடியின் நல்லாட்சி நடப்பதாக கோத்ரா கலவரத்தில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் கல்லறை மீது நின்று கூவுகின்றன ஊடகங்கள்.  மோடியின் ஊழல், குஜராத்தின் கள்ளச்சாராய ஊறல், மதவெறித் தாண்டவம் இவற்றையெல்லாம் வெண் திரை போட்டு மறைத்து, பாலாறும் தேனாறும் ஓடுவதாக பம்மாத்து காட்டுகின்றன பத்திரிகைகள். இப்படி ஆளாளுக்கு அத்வானியின் ஆசையில் அரைப்படி மண்ணைப் போட்டு மூடினார்கள்.

முந்தைய ர(த்)தயாத்திரை போல ஊழலுக்கெதிரான ரதயாத்திரையெல்லாம் விட்டுப் பார்த்தார் அத்வானி. ஆர்.எஸ்.எஸ்.சும் ஆசி தரவில்லை. பா.ஜ.கவுக் குள்ளேயும் ஆதரவில்லை. இருந்தாலும் அவ்வப்போது ஜஸ்வந்த் சிங் போன்றவர்கள் அத்வானியை பிரதமர் என்று முன்மொழிந்து மீண்டும் ஆசையைக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் அடுத்த பிரதமராகவே தன்னைக் கருதிக் கொண்டு வலம் வரத் தொடங்கிவிட்ட மோடி, கட்சியில் தன் குழுவை பலப்படுத்திக் கொண்டு, தனக்கு வேண்டாதவர்களை ஓரம் கட்டத் தொடங்கிவிட்டார். அதில் வெளிப் படையாகப் பிரச்சினை ஆனது சஞ்சய் ஜோஷி விவகாரம். 2005-ல் ஆபாச சி.டி. பிரச்சினையில் சிக்கி, பா.ஜ.கவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்தும், நேரடி அரசியலில் இருந்தும் விலகி இருந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரான சஞ்சய் ஜோஷியை, 2011-ல் மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்து தேசிய செயற்குழு உறுப்பினராக்கினார் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி. கடந்த மாதம் (மே) 24, 25 ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெற்ற பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டத்தில் சஞ்சய் ஜோஷி கலந்துகொள்ளக் கூடாது என்றார் மோடி. அப்படி சஞ்சய் ஜோஷி கலந்துகொண்டால், தான் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் மோடி முரண்டுபிடிக்க, பிரச்சினை சூடுபிடித்தது. வேறு வழியில்லாமல், ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையின் பேரில் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் ஜோஷி. அதற்குப் பிறகே மும்பை பா.ஜ.க செயற்குழுவில் கலந்துகொண்டார் மோடி. சஞ்சய் ஜோஷியை இவ்வாறு மோடியின் நிர்ப்பந்தத்திற்காக விலக்கியது அத்வானிக்கும், சுஷ்மா ஸ்வராஜுக்கும் வருத்தத்தை ஏற்படுத்த, அவர்கள் இருவரும் கோபித்துக் கொண்டு மும்பை தேசிய செயற்குழு முடிந்ததும் நடைபெற்ற பா.ஜ.க. பேரணியில் பங்கேற்கவில்லையாம். சஞ்சய் ஜோஷிக்கு மோடி எதிர்ப்பு தெரிவித்தது ஆபாச சி.டி. பிரச்சினை காரணமாக என்று யாரும் தப்பாக நினைத்துவிடக்கூடாது. அவ்வளவு ஒழுக்க விரும்பிகள் எல்லாம் இல்லை அவர்கள். மோடியும், சஞ்சய் ஜோஷியும் குஜராத்தில் ஆரம்பகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்களாக இருந்தபொழுதி லிருந்து பரம வைரிகள். பின்னாளில் ஒருவர் குஜராத் முதல்வராகவும், மற்றொருவர் கட்சியின் தேசிய செயலாளராகவும் வந்ததற்குப் பிறகும் அவர்கள் பகை ஓயவில்லை. அந்தப் பழைய கணக்கின் இன்றைய கழித்தல் தான் ஜோஷி விலகிய விவகாரம். இதற்கிடையில் நிதின் கட்காரியையே தொடர்ந்து பா.ஜ.க. தலைவராக நீட்டிக்கச் செய்யும் வகையில் பா.ஜ.க.வின் சட்டதிட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தவும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆதரவோடு நடந்த முயற்சிகள் தான் சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர் களுக்கு கூடுதல் தலைவலியைக் கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகபட்ச தலையீடு பா.ஜ.க. தலைவர்களுக்கு எரிச்சல் ஊட்டுகிறதாம். மோடி செய்யும் ஆள் ஒதுக்கல் அரசியலால் ஓரங்கட்டப் பட்டவர்களைத் திரட்டி தனி அணியைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாராம் முன்னாள் குஜராத் முதல்வர் கேசுபாய் பட்டேல்!

மோடியின் இந்த செயல்களுக்கு கிளம்பிய எதிர்ப்பு அகமதாபாத்திலும், புதுதில்லி பா.ஜ.க அலுவலகத்துக்கு முன்னாலும் சுவரொட்டியாகவும் வெளிப்பட்டது. இதற்கு யார் காரணம் என்பதிலும் பலரின் பெயர்கள் அடிபட்டன. இன்னொரு பக்கம் பெங்களூர் அரசியல் கோமாளி எடியூரப்பாவும் பா.ஜ.க. தேசிய செயற்குழுவுக்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்து கடைசியில் சென்றுவந்தார். இப்படியாக நடந்துகொண்டிருக்கும் குழப்பத்தைக் கண்டு நொந்துபோன அத்வானி, தனது இணைய தளத்தில் உட்கட்சிப் பூசலைச் சரி செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் பா.ஜ.க. சிரமப்படும் என்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். இப்படி உள்கட்சிக் குழப்பத்திலேயே பா.ஜ.க. உழன்று கொண்டிருந்த நேரத்தில்தான், இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பரபரப்பு தொற்றத் தொடங்கியது. இந்தத் தேர்தலை ஏதோ கிங் மேக்கருக்கான போட்டி என்று பல பேர் நினைத்துக் கொண்டது தான் உண்மையில் நடந்த நகைச்சுவை. மத்திய அரசை ஆட்டிப்படைக்கும் சக்தி படைத்தவர் என்று சோ போன்றவர்கள் ஏற்றிவிட்டதால் அவ்வப்போது தனது தில்லிப் பிரவேசத்தை பிரதாபம் ஆக்கிவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, நவீன் பட்நாயக்குடன் இணைந்து பர்னோ அகிடோக் சங்மாவைத் (பி.எ.சங்மா) தங்கள் வேட்பாளராக நிறுத்த இருப்பதாக அறிவித்தார்.

ஆனால் சரத் பவாருடன் இணைந்து பி.எ.சங்மா தோற்றுவித்து, அவரும் தொடர்ந்து செயல்பட்டுவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியோ சங்மாவை ஆதரிக்காமல், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தேர்ந்தெடுக்கும் நபரைத் தான் தாங்கள் ஆதரிக்கப்போவதாக அறிவித்துவிட்டது. மம்தா பானர்ஜி தன் பங்குக்கு தானும் களத்தில் இறங்கினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அவர் முன்னிறுத்தினார். இவையெல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியோ, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பிரணாபை நிறுத்த முடிவு செய்தது. கூட்டணியின் முடிவையே தான் ஆதரிக்கப்போவதாக முன் கூட்டியே அறிவித்து, முதல் ஆதரவுக் கரத்தை நீட்டியிருந்தார் தி.மு.க. தலைவர் கலைஞர். அப்துல்கலாம் பெயரை மம்தா முன்மொழிந்து, ஆர்.எஸ்.எஸ்-சும் ஆதரித்ததாலும், அத்வானியின் சென்னை பயணத்தாலும் மயக்கத்தில் இருந்த ஜெயலலிதாவை விட்டுவிட்டு, தன்னுடைய வேட்பாளர் சங்மா என்று தன்னிச்சையாக அறிவித்துவிட்டார் நவீன் பட்நாயக். கலாம் கவனமாக இந்தச் சுழலில் இருந்து விலகிக் கொள்ள, மீண்டும் சங்மா மீது ஜெயலலிதாவுக்குக் கவனம் திரும்பிவிட்டது! இப்படி இந்தியாவே கவனித்துக் கொண்டிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலால், அய்.மு.கூ உடையப் போகிறது என்றெல்லாம் பத்திரிகைகள் ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்க, என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் களத்தில் இருந்து காணாமல் போய் விழித்துக் கொண்டிருந்தது பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி.  குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் தேர்வு பற்றி விவாதிக்கத் தொடங்கி, அது 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் வந்து நின்றது. ஆரம்ப காலத்திலிருந்தே மோடியைப் பிரதமராக ஏற்பதில் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மீண்டும் தன் குரலை உயர்த்தினார். இம்முறை சரத்யாதவும் நிதிசுடன் இணைந்து கொண்டார். பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கமல்சந்தேஷ், 2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே ஏன் அடித்துக் கொள்ள வேண்டும். தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாமே என்று சொல்லியிருப்பது, மோடிக்கு கடுப்பை உண்டாக்கியுள்ளது. குஜராத் கலவர வழக்கில் மோடியின் குற்றப் பின்னணியும் உறுதிசெய்யப்பட உள்ள புதிய சூழலில் (தனியே பெட்டிச் செய்தி காண்க) இந்த எதிர்ப்பு மேலும் வலுப்படவே வாய்ப்புள்ளது.

குஜராத்திலேயே மோடி ஆட்சியின் லட்சணத்தை உரித்துக் காட்டி குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா பிரச்சாரம் செய்துவரும் நிலையில், மோடிக்கு ஒரு புதிய பிரச்சினையாக எழும்பியுள்ளது ஆபாசப் பாட விவகாரம். ஏற்கெனவே சட்டசபைக்குள்ளேயே ஆபாசப் படம் பார்த்த பிரச்சினையில் கர்நாடகா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மாட்டிக் கொண்டு அசிங்கப்பட்டனர். அது ஆபாசப் படம்; இப்போது எழுந்துள்ள பிரச்சினை ஆபாசப் பாடம். சர்வ சிக்ச அபியான் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) திட்டத்தின்படி குழந்தைகளுக்கு மாதந்தோறும் அனுப்பப்படும் இதழ்களில் வயதுவந்தவர்களே படிக்க அசிங்கப்படும் ஆபாச நகைச்சுவைகளைப் பதிப்பித்து 35000 ஆரம்பப் பள்ளிகளுக்கு அனுப்பிவைத்தது குஜராத் அரசு. இதோ சான்றுக்கு சில: காதலியிடம் காதலன்:  உன்னைப் போன்ற அழகான பெண்ணை முத்தமிட நான் 5000 ரூபாய் கூட கொடுப்பேன்.

காதலி: அய்யோ, நேற்று இரவு மகேஷ் எனக்கு முத்தம் கொடுத்தான். ஆனால் பணம் ஏதும் தரவில்லையே!
***
கணவனிடம் மனைவி: நேற்றிரவு ஷீலாவுடன் சந்தோஷமாக இருக்க எவ்வளவு பணம் கொடுத்தாய்?
கணவன்: நூறு ரூபாய் கொடுத்தேன்.
மனைவி: அவமானம்! அவளது காதலன் என்னிடம் வரும்போது, அய்ம்பது ரூபாய் மட்டுமே கொடுத்தான்.
***
சென்சஸ்அதிகாரி ஒருவர் ஓர் வீட்டின் பெண்ணிடம் கேட்கிறார்: உங்கள் கணவர் 9 ஆண்டுகளுக்கு முன் இறந்து போய்விட்ட போது, உங்களுக்கு எப்படி  5 வயதிலும் 3 வயதிலும் மகன்கள் உள்ளனர்?
பெண் பதில்: கணவர் தானே உயிரிழந்து விட்டார்; நான் உயிருடன் இருக்கிறேனே!
***
சரி, இப்படி இருப்பது ஒன்றும் புதிதல்ல.. புராணக் குப்பைகளைப் பாடத்தில் வைத்திருக்கும் போது அதில் இல்லாத ஆபாசமா? என்று பா.ஜ.க.வினர் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள லாம். ஆனால் இது குறித்தும் குஜராத் எதிர்கட்சி யினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். உ.பி. தேர்தலில் படுதோல்வி, குஜராத் உள்ளிட்ட சில மாநில சட்டசபை இடைத்தேர்தல்களில் தோல்வி, கட்சிக்குள்ளேயே உச்சகட்ட கோஷ்டிக் குழப்பம், பிரதமராக யாரை முன்னிறுத்துவது என்பதில் குடுமிப்பிடி, முதன்மை எதிர்க்கட்சியாக இருந்தபோதும் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை நிறுத்துவது என்ற தெளிவின்மை என்று குழம்பிக்கிடக்கிறது பாரதிய ஜனதா. போதாக் குறைக்கு அதில் குச்சியைவிட்டு ஆட்டிக்கொண் டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்! இந்தச் சூழலில் மதச்சார்பற்ற சக்திகள் தெளிவாகக் களமிறங்கி, ஒரே அடியாக இந்துத்துவக் கும்பலை ஒழிக்க முற்பட வேண்டும். அதைவிடுத்து, அரசியல் நலன்களுக் காகப் பிரிந்து நின்று ஏமாந்துவிடக் கூடாது.

– சமா.இளவரசன்

மோடி ஆட்சியின் லட்சணம்

குஜராத் மாநிலத்தில் 45 சதவிகித குழந்தைகள் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டள் ளனர். குழந்தை இறப்பு விகிதம் குஜராத்தில் அதிகமாக உள்ளது. பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 50 குழந்தைகள் மரமணடை கின்றன. Infant Mortality Rate கணக்குப்படி குஜராத் அரசு 7வது இடத்தில் இருக்கிறது.

இயற்கை எரிவாயு விலையை 35 தடவை உயர்த்தியிருக்கிறார் மோடி. இது சில தொழிற்சாலை அதிபர்கள் லாபமடைவதற்காக செய்திருக்கிறார். இதன் விளைவாக 15 ரூபாய் பெறு மான முள்ள பொருட்கள் 55 ரூபாயாக உயரும் நிலை உள்ளது

ஊழலைப் பொறுத்தவரை மோடியின் ஆட்சியில் மட்டும் 17 ஊழல்கள் நடந்துள்ளன. மக்கள் பணம் 1 லட்சம் கோடி சுருட்டப் பட்டுள்ளது. அதோடு 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் குளறுபடி நடந்துள்ளது என்பதை சி.ஏ.ஜி எனும் பொதுக் கணக்குத்துறை கண்டறிந்துள்ளது.
-அர்ஜூன் மோத்வாடியா

– (குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்)

மோடியின் குற்றப்பின்னணி

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரங்களில் நரேந்திர மோடியின் பங்கு என்ன என்பதைப் பற்றி ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு திரட்டிய சாட்சியங்கள் மற்றும் மேற்கொண்ட முடிவுகளைப் பற்றி குறை கூறி உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் (அமிகஸ் குரியி) ராமச்சந்திரனின் அறிக்கை இறுதியில் பொது மக்களின் பார்வைக்கு வந்துவிட்டது.

மதப் பகையை வளர்த்தல், தேசிய ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களை மேற்கொள்ளல், சட்டத்திற்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாதிருத்தல் போன்ற குற்றங்களுக்காக நரேந்திர மோடி மீது நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடர ராமச்சந்திரன் பரிந்துரைத்துள்ளார்.

குல்பர்க் சொசைட்டி பகுதியில் கலவரம் நடந்தபோது அங்கு செல்வதைத் தவிர்ப்பதற்காக, தாங்கள் அலுவலகத்தில் இல்லை என்று காட்டிக்கொள்ள, கலவரம் அதிகமில்லாத மற்றொரு பகுதியில் மதக்கலவரங்கள் நடந்ததாக போலி முதல் தகவல் அறிக்கைகளை வேண்டுமென்றே பதிவு செய்யச் செய்த குற்றம், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு வழி வகுத்த மூத்த காவல்துறை அதிகாரிகள் கோண்டியா மற்றும் டாண்டன் இருவர் மீதும் துறை நடவடிக்கை மட்டுமே எடுக்கத் தக்கது என்று சிறப்பு புலனாய்வுக் குழு நம்புகிறது. இது ஒன்றும் சாதாரண கடமை தவறிய, கடமையை அலட்சியம் செய்த குற்றமல்ல என்றும், பல அப்பாவி மக்கள் உயிரிழக்கக் காரணமாக இருந்த செயல் என்றும் அமிகஸ் குரியி நம்புகிறார். தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடரத் தேவையான பலத்தை அச்சாட்சியங்கள் பெற்றுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீதி மற்றும் அமைதிக்கான மக்கள் இயக்கத்தின்  டீஸ்டா சேடல்வாட் மற்றும் ஜகியா ஜஃப்ரி ஆகியோர் 2009 இல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் 32 குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தனர். அவற்றில் மிகவும் கடுமையான குற்றச்சாட்டு என்னவென்றால்,  சபர்மதி விரைவு ரயில் படுகொலைகளுக்காக முஸ்லிம்கள் மீதான தங்களின் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள இந்துக்களை சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும் என்று அப்போதிருந்த காவல்துறைத் தலைவர், தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு முதல்வர் இல்லத்தில் 27.-2-.2002 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நரேந்திர மோடி அறிவுரைகள் வழங்கினார் என்பதுதான். அந்தக் கூட்டத்தில் மாநில உளவுத் துறையில் உதவி காவல்துறை ஆணையராக அப்போது நியமிக்கப்பட்டிருந்த தானும் கலந்து கொண்டதாக, விசாரணைக் குழுவின் முன் சஞ்சீவ் பட் 2010 இல் சாட்சியம் அளித்தார்.  பட்டின் சாட்சியத்தை நம்பத் தேவையில்லை என்ற சிறப்பு புலனாய்வுக் குழுவின் முடிவை நான் ஒப்புக் கொள்ளவில்லை.  பட்டும், அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறிய மற்ற அதிகாரிகளும் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

உள்துறைக்குத் தொடர்பு இல்லாத இரு அமைச்சர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளில்  இருந்தனர் என்ற உண்மையே இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் ஒரு பெரிய சதித்திட்டமே இருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு வலுவூட்டுகிறது என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

குற்றவியல் வழக்கு தொடுக்க தக்க ஆதாரங்கள் உள்ள இந்த ஆரம்ப நிலையில் நரேந்திர மோடி மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 153கி (1)(ணீ) & (தீ), 153 ஙி (1) (நீ), 166, 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்படலாம் என்பது எனது கருத்து என்று அமிகஸ் ராமச்சந்திரனின்  தனது அறிக்கையை முடித்திருக்கிறார். (நன்றி: தெகல்கா 19.5.2012 தமிழில்: த.க.பாலகிருட்டினன்.)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *