என்று மடியும் இந்த மூடநம்பிக்கை மோகம்?

2023 தலையங்கம்

மதப் பண்டிகைகள் என்கிற பேரால் புரோகிதக் கொள்ளை ஒருபுறம்; பக்தி போதையை ஏற்றினால் நாட்டில் மக்களை வாட்டி வதைக்கும் பல்வேறு வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றங்கள், மெகா ஊழல்கள் மறுபுறம். இவற்றையெல்லாம் மக்கள் மறந்து அந்த பக்தி போதையிலேயே இருந்துகொண்டு, தங்களுடைய வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராட களம் காணமாட்டார்கள்.

மனிதர்களது பகுத்தறிவு பறிமுதல் என்பதே ஓர் அடிப்படை உண்மை.
குடிபோதை தெளியாமல் இருந்தால்தான் நாம் நம் வசதிப்படி அவனை ஏமாற்றலாம் என்று பகற்கொள்ளைக்காரர்கள் மேலும் மேலும் வாரத்திற்கு ஒரு பண்டிகை, விளம்பரங்கள்.

அறிவியல் மனப்பாங்கைப் பரப்ப வேண்டியது அரசியல் சட்ட 51கி கூறின்படி உள்ளது எவருக்கும் நினைவுக்குக்கூட வருவதே இல்லை!

இன்னும் கொடுமை இந்தப் பக்தி போதை _ அதனை மூலதனமாகக் கொண்ட சுரண்டல் நீடிப்பதற்கு இப்போது விஞ்ஞான மின்னணு கண்டுபிடிப்புக் கருவிகளான வானொலி, தொலைக்காட்சி, அச்சு இயந்திரம், கைத்தொலைப்பேசி வரை பயன்படுத்துவது மகாமகா வெட்கக்கேடு!
திருவண்ணாமலை தீபம் என்கிற பெயரால் ஏழை எளிய மக்களுக்குப் பயன்படவேண்டிய துணியும், ஊட்டச்சத்துக்குப் பயன்படவேண்டிய விலை மிக்க உணவுப் பண்டமான நெய்யும் எவ்வளவு பாழ்படுத்தப்படுகின்றன-?

இந்தப் பண்டிகைகளுக்காக இலட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டார்கள் என்றால் அவர்களுக்கு ஏற்பட்ட பொருள் செலவு, அறிவியல் மனப்பாங்கு இழப்பு என்பதைத் தவிர, கிடைத்த பலன் என்னவென்று சிந்தித்துப் பார்த்துள்ளார்களா?

சொல்கிறவர்களைப் பாய்ந்து, மிரட்டி, அடக்கி, அறிவுக்கு விலங்கிட்டுவிட்டால் அதன் பலன் ஓகோவென்று அவர்களுக்குக் கிட்டும்.
நாட்டில் கோயில்களுக்கும் பண்டிகைகளுக்கும் பஞ்சமில்லை. அவை உயிர் பலிகொள்ளும் நோய்களிலிருந்து அந்த மக்களை எப்போதாவது காப்பாற்றியிருக்கின்றனவா?

பண்டிகைக் காலங்களில் இழுக்கும் தேர் இழுப்பின் போதுகூட பக்தர்கள் காப்பாற்றப்பட முடியாத பரிதாபம் தானே மிச்சம்!
வடலூர் வள்ளலார் பெருமான் சாடியபடி ‘எல்லாம் பிள்ளை விளையாட்டே!” என்பதுதானா?

கோயில் சிலைகளுக்கும் பாதுகாப்பு – பூட்டு சாவி முதல், காவல்துறை வரை எல்லாம் மனித முயற்சிகள்தானே!
சாமி சிலைத் திருட்டு என்று நிதியமைச்சர் அரசியலுக்காக அம்பை தி.மு.க. ஆட்சி மீது வீசி, வேறு வகையில் வாக்குகளை வாங்க வழி இல்லாததால் இப்படி குறுக்குச் சால் ஓட்டுகிறாரே, அவர் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லட்டும்.

கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவரென்றால், சாமி சிலையை எப்படித் திருட முடியும்?
‘உள்ளே இருந்தால் கடவுள்; திருடப்பட்டால் சிலை’ என்றுதானே சொல்லி தங்களைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள்?

அந்த பக்தியை பா.ஜ.க. அரசியல் வாக்கு வங்கி சேகரிக்க ஒரு முக்கிய கருவியாக்கியதால்தானே வடக்கே இராமர் கோயிலை அவசரஅவசரமாகக் கட்டி, 2024 தேர்தலுக்குள் திறந்து, அதைக் காட்டி பக்தி போதையூட்டி வாக்குகளை வாங்கிட அல்ல, ‘பறிக்க’ முயலுகிறார்கள்!

வாக்கு தங்களுக்குக் கிடைக்காதே என்ற மற்ற அரசியல் கட்சிகளும் இதனை அம்பலப்படுத்தி, கொள்கை _ சாதனைகளை முன்வைக்காமல் தாங்களும் அவற்றிற்கு ஆதரவானவர்களே என்று போட்டி போட்டுக் காட்டிடும் ‘பரிதாப அரசியல்’ பல்லிளித்துக் காட்டுவது வேதனை அல்லவா?
அறியாமையைப் பங்கிட்டு வாழ நாட்டில் ஆயிரம் அமைப்புகள்!

அறிவைப் பாதுகாக்க, பரப்ப, அரிது அரிது அறிவு சொல்லும் அஞ்சாமையாளர்கள் அரிது!

என்னே வேதனை! என்று மடியும் இந்த அறியாமையின் வேதனை? கண் திறக்க வைப்பது துணிவுள்ள இளைஞர்கள் கைகளில்தான் உள்ளது.

– கி. வீரமணி
ஆசிரியர்