தமிழகத்தில் மதவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்த தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் என்ற நிலை இருந்தபோது, இதனால் கலக்கம் அடைந்தது தி.மு.க அல்ல; காங்கிரஸ் கூட அல்ல. மாறாக, அ.தி.மு.க கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டு களும், ம.தி.மு.கவும், தமிழ் தேசியம் பேசும் உதிரிகளும் தான் பெரும் கவலை கொண்டனர்.
ஒரு வேளை காங்கிரஸ், தி.மு.க கூட்டணி யிலிருந்து பிரிந்து அ.தி.மு.க கூட்டணிக்கு வந்துவிட்டால் தங்கள் நிலை என்னவாகும்? என்ற பயம் தான் முதல் காரணம். ஆனால் அதையும் தாண்டி மிக முக்கியமான காரணம் ஒன்றும் இருக்கிறது. காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பெயரில் களம் இறங்கியிருக்கும் இவர்களின் உள்ளார்ந்த நோக்கம் காங்கிரசை மட்டும் எதிர்ப்பதல்ல.. இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை வசைபாடுவதும் ஒழிப்பதும்தான்.
அப்படியென்ன கம்யூனிஸ்டுகளுக்கு கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியின் மேல் கோபம்? விவசாயப் பெருங்குடி மக்களை எலிக்கறி தின்னவைத்ததும், சாலைப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியதும், அவர்கள் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி தற்கொலை செய்து கொள்ளக் காரண மாகியதும், நெசவாளர்களைக் கஞ்சித் தொட்டியை நோக்கிக் கையேந்த விட்டதும், இவையெல்லாவற்றுக்கும் மேலாக ஒரே உத்தரவில் ஒன்றே முக்கால் லட்சம் அரசு ஊழியர்களைப் பணியிலிருந்து துரத்தி, வீட்டுக்குள் புகுந்து அவர்களைப் பிடரியில் கையை வைத்து இழுத்துக் காவல் நிலையத்தில் அடைத்ததுமான மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசுதானே! அந்த நிலையை மாற்றி அனைவருக்கும் அனைத்தும் என்ற நிலையை எட்டுவதற்கான பாதையில் சமதர்மத்தை நோக்கிய திசையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிற மக்கள் நல அரசு அல்லவா தி.மு.க. அரசு! இதை வரிந்துகட்டிக் கொண்டு வலதும் இடதும் சேர்ந்து எதிர்ப்பது ஏன்? எப்படிப் போனாலும் ஆளுக்கு 10 சீட் வாங்கி அதில் 4-இல்தான் ஜெயிக்கப் போகிறார்கள். அதை எங்கிருந்து வாங்கிக் கொண்டால் என்ன? டெஸ்மா, எஸ்மா என தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறித்த அம்மாவிற்கு தொழிலாளியின் தோழர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் சிகப்புக் கம்பளம் விரிப்பதேன்? கேட்டதும் கிடைக்குமிடம், கேட்காமலே கொடுக்குமிடம் என்று இன்றைக்கு தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெற்றுள்ள தி.மு.க அரசை எதிர்ப்பதேன்? தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று எப்போதும் தன்னை விளித்துக் கொள்வதோடு, அதற்கான பாதையிலும் நடைபோடக் கூடிய கலைஞர் மேல் அப்படியென்ன சிகப்புத் தோழர்களுக்கு காய்ச்சல்? இந்தக் கேள்விகள் பலருக்கும் உண்டு. கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால், கடந்த 5 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கினால் இக்கேள்விகளுக்கான விடையை வெகு எளிதில் சொல்லிவிட முடியும்.
ஆம். நடந்து கொண்டிருக்கும் தி.மு.க. அரசில் நட்டப்பட்ட ஒரே கம்பெனி என்றால் அது கம்யூனிஸ்ட் கம்பெனிதான். செயல்பட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பவர்கள் இந்த வலது, இடது கம்யூனிஸ்டுகள்தான். அப்படி கம்யூனிசம் தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்டதா, வளர்த்து விட்டார்களா என்று அப்பாவியாய்க் கேட்காதீர்கள்! இன்னும் சமதர்மத்தை நோக்கிய பயணத்தில் நாம் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. பொதுவுடைமைத் தத்துவத்தைப் பரப்புகிற பணியெல்லாம் முடிந்துவிட்டதா தோழர்களுக்கு? இல்லை. இதுநாள் வரையில் அவர்கள் செய்து வந்ததும் இந்தப் பணி அல்லவே! தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் த.அ. மாத்திரை, அரசு ஆம்புலன்ஸ், ரேசனில் வரிசையில் நிற்பது, அளவு குறைந்த மண்ணெண்ணெய், அரிசியில் புழு, சாலை வசதி இல்லாதது… இது போக அவ்வப்போது கூலி உயர்வு, பஞ்சப்படி, பயணப்படி போன்ற பிரச்சினைகளைத் தாண்டி கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்கவேயில்லை அவர்கள். ஒவ்வொரு ஆட்சியிலும், இவற்றை முன்னிறுத்திதான் விதம்விதமான போராட்டங்களை நடத்தி மக்களைத் திரட்டுவார்கள்.
ஆனால், 2006-_11 வரையிலான கலைஞரின் ஆட்சியில் இவை அனைத்துமே வெகு எளிதில் அனைவருக்கும் கிடைத்துவிட்டது. தனியார் ஆம்புலன்ஸ்களைவிட அரசு செயல்படுத்தி வரும் 108 வெகுவேகமாக ஆபத்து நேரத்தில் உதவுகிறது. நவீனமயப்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைகள், உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், ஏழைகளுக்கு வரும் பணக்கார வியாதிகளையும் சரி செய்ய உதவுகிறது. இன்னும் நியாய விலைக்கடை பிரச்சினைகளை எல்லாம் இப்போது யாரும் குறைகூற முடியாது என்னும் அளவிற்கு அனைத்தும் சரிசெய்யப் பட்டிருக்கின்றன. தரமான அரிசி, மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எல்லாம் மக்களை மனங்குளிரச் செய்திருக்கிறது.
மிச்சமீதியிருக்கும் கூலி உயர்வுப் பிரச்சினையோ, உடனடியாக அழைத்து தீர்த்துவைக்கப்படுகிறது. கரும்புக்கு உரிய விலை, அரசு கொள்முதல், நெசவாளர் பிரச்சினை, ஆலைத் தொழிலாளர் பிரச்சினை என அனைத்தும் உடனுக்குடன் அரசின் கவனம் பெற்று உரிய தீர்வு வழங்கப்படுகிறது. 7000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி வழங்கி விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தார். ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை அளிக்கப்பட்ட உடனேயே, மருத்துவ மனையில் இருந்தபடி தமிழக அரசு ஊழியர்களுக்கு அவற்றை வழங்குவதற்கு ஆணையிடுகிறார் முதல்வர் கலைஞர். டெஸ்மா, எஸ்மா சட்டம் நீக்கம், ஏற்கெனவே பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டன. இப்படி தொழிலாளர்கள் கொடி தூக்கி, ரத்தம் சிந்தி போராடுவதற்கு முன்பே தனது பேனாவைத் தூக்கி, ஒரு சொட்டு மையில் கையெழுத்திட்டு காரியத்தை முடித்துவிடுகிறார் கலைஞர். அரசு ஊழியர்களுக்கும், தொழிலாளர் களுக்கும் எல்லாம் கிடைத்துவிட்டன. அவர்களை வைத்து கட்சி நடத்திக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு களின் கையிருப்புக் காரணங்களெல்லாம் பறிக்கப்பட்டுவிட்டன. அதுதான் தி.மு.க மீது கம்யூனிஸ்ட் இயக்கங்களின் காழ்ப்புணர்ச்சிக்குக் காரணம். போராடுவதற்குக் காரணம் கிடைக்காமல் பஞ்சத்தில் அலையும் நிலைக்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டன. மக்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் தி.மு.க ஆட்சியில் மகிழ்ந் தார்கள். அக்கறையை விலை பேசியவர்கள் கவலைப்படுகிறார்கள். தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள்தான் வலிமையானது என்ற பிம்பத்தை உடைத்து நொறுக்கியது போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத் தேர்தல். தி.மு.க-வின் தொ.மு.ச. பெருவெற்றி பெற்றது. கையில் கிடைத்த ஒரே பிரச்சினை மின்வெட்டு. வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படாமல் புதிய மின் திட்டங்களை உருவாக்காமல் வீணடித்த அ.தி.மு.க ஆட்சியின் அலட்சியம் காரணமாக எழுந்த சிக்கல்களைக் கட்டுப்படுத்தி, அடுத்தடுத்து புதிய திட்டங்களை தி.மு.க. அரசு அறிவித்ததும் பிரச்சினையை மக்கள் புரிந்துகொண்டார்கள். மின்வெட்டுப் பிரச்சாரம் ப்யூஸ் ஆகிப்போனது.
இன்றைக்கு ஏழை எளியவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டத்தைக் குறை சொல்லும் இந்த கம்யூனிஸ்ட்கள்தான் இரண்டு ரூபாய்க்கு அரிசி என்று கலைஞர் அறிவித்ததைப் பாராட்டி கூட்டம் நடத்தியவர்கள். இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்றதும் பாராட்டியவர்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்றால் எதிர்ப்பானேன்? அறிவுத் தெளிவுள்ளவர்கள் கேட்கும் இந்தக் கேள்விக்கு பொதுவுடைமை அரசியல்வாதிகளின் பதில் என்ன?
எதையாவது பிடித்துக் கொண்டு தொங்கி, போராட்டம் நடத்தி அதன் ஊடாக கட்சியை வளர்த்துக் கொண்டு, காலம் முழுக்க கூலி உயர்வு கேட்பதுதான் கம்யூனிசம் என்று மக்களை மழுங்கடித்துக் கொண்டிருந்த பிழைப்பில் மண் விழுந்தவுடன்தான் அவர்கள் தி.மு.க. அரசை எதிர்க்கத் துணிகிறார்கள். ஜெயலலிதா ஆட்சி வந்தால் என்ன ஆகும்? அவர் மேற்கொள்ளும் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்துப் போராட்டம் நடத்தலாம் அல்லவா? அப்போது இவர்கள் கட்சி நடத்த எண்ணற்ற காரணங்கள் கிடைக்கும். அரசு ஊழியர்களின் நலனில் மண் விழும். தங்களின் தொழிற்சங்கங்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தலாம். இவர்களே உருவாக்கும் அராஜக ஆட்சியை இவர்களே எதிர்ப்பதாகப் பாசாங்கு காட்டி, துவண்டுபோயிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியைத் தூக்கி நிறுத்தலாம் என்ற கேவலமான அரசியலைத் தவிர வேறு காரணம் என்ன இருக்க முடியும்.
இந்த இடத்தில் மிக முக்கியமான இன்னொன்றையும் நாம் ஒப்பு நோக்கினால் எதிர்க்கட்சி அரசியலுக்குக் காரணம் கிடைக்காமல் தவித்த கம்யூனிஸ்ட்களின் உண்மை நிலை பளிச்சென விளங்கும். அண்மைக் காலத்தில்தான், கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு அதிக பாசம் ஈழத் தமிழர்கள் மீது வந்தது. இத்தனைக் காலம் அவர்கள் தவித்த போதெல்லாம் வீதிக்கு வந்து போராடாத இயக்கம், திடீரென தமிழ்ப்பாசம் கொண்டு, தனது சர்வதேசியப் பார்வையை விட்டுவிட்டு, குறுகிய இனப்பார்வை என்று அவர்கள் அடிக்கடி சொல்லும் தமிழ் இனப்பார்வைக்குள் வந்த காரணம் என்ன? கட்சி நடத்தக் காரணம் கிடைக்காமல் அலைந்தவர்கள், வெறும் வாயை மெல்லுவதற்கு ரெண்டு அவலைப் போட்டு மெல்லுவோமே என்று தூக்கி வைத்துக் கொண்டதுதான் இந்தத் திடீர் இன உணர்வு! ஈழத்தமிழர் பிரச்சினையில் (கம்யூ. பார்வையில் இலங்கைத் தமிழர்கள்) உங்களுக்குக் கைகொடுத்துத் தூக்கிவிட்ட வை.கோ-வையும் உங்கள் சுயநலத்திற்குப் பலிகொடுத்து விட்டீர்களே!
மூன்றாவது அணி அமைக்க, புதிதாய் முளைத்த காளானை நோக்கி ஓடிய பாரம்பரியம் மிக்க கம்யூனிஸ்ட் கட்சியைப் பார்த்தால் பரிதாபமாயிருக்கிறது. 1000 கோடி ரூபாய் கொடுத்து எங்களை கூட்டணியில் இருந்து விரட்டிவிட்டார்கள் முதலாளிகள் என்று புலம்பியிருக்கும் வைகோ அவர்களின் உணர்ச்சிக்குரல் கம்யூனிஸ்ட்களின் காதுகளை எட்டவில்லையா? முதலாளித்துவத்தின் கூடாரத்தில் முக்காடு போடாமல் அய்க்கியமாகியிருக்கும் பாட்டாளிகளின் கூட்டாளிகளே! உங்களை மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதே, கம்யூனிசம் பரவாமல் இருப்பதற்குத்தான் என்று தந்தை பெரியார் உண்மையை உணர்ந்து அன்றே சொல்லி விட்டாரே! அந்த அறிவாசானின் தொலை நோக்குப் பார்வை எதையும் ஊடுருவிப் பார்க்கும் லேசர் கற்றை என்பது தான் மீண்டும் உறுதிப்பட்டிருக்கிறது.
– இளையமகன்