அம்மா பிறந்த மண்ணில் புத்துலக பெண்கள் மாநாடு

ஜூன் 16-30

உலக இயக்கங்களின் வரலாற்றில் ஒப்புமை காட்ட இயலாத தலைவி, தன் ஓய்வு மறந்து, உறக்கம் துறந்து உற்ற துணையாக இருந்து, தந்தை பெரியார் அவர்களின் உடல் நலனைப் பேணிக்காத்து, அய்யாவை நெடுங்காலம் வாழவைக்கும் பணியினைச் செம்மையாகச் செய்தவர்,

தன் மீது பொறாமை கொண்டு காய்ந்து பாய்ந்தோரின் கடுமொழிகளையெல்லாம் பொறுமையோடு தாங்கிக் கொண்டவர், அய்யாவிற்குப் பிறகு நம் இயக்கத்தின் தனித்தன்மை குலையாமல் கட்டிக்காத்து வினைத்திட்பங்களுடன் இயக்கத்தை உயிர்ப்பாக நடத்திக் காட்டியவர்,

 

இந்திய அரசியல் வரலாற்றின் இருண்ட காலமாக அமைந்த நெருக்கடி காலத்தில் நாடெங்கிலும் சுற்றி, கொடுங்கோன்மையாளரை வீரத்துடன் சமாளித்தவர், இனநலம் பேணும் இயக்க நலம் நிலைத்து நிற்கத் தமது உடமைகள் யாவற்றையும் இயக்கத்திற்கே சொந்தமாக்கி அய்யாவின் கனவை நனவாக்கிய அன்னை மணியம்மையார் பிறந்த வேலூரில், திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிடர் மகளிர் பாசறையின் சார்பில் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவும், புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாடும் கடந்த 29-.05.2012 செவ்வாய்க்கிழமை அன்று மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

சிறப்புரை நிகழ்த்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களைத் தவிர வரவேற்பு, தலைமை, கொடியேற்றுதல் மாநாட்டுத் திறப்பாளர், கருத்தரங்கம், பட்டிமன்றம், உரைவீச்சு என அனைத்து நிகழ்வுகளும் பெண்களாலேயே நடத்தப்பெற்றது அருமையாக அமைந்தது.

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள எத்திராஜம்மாள் திருமண மண்டபத்தில் சுயமரியாதைச் சுடரொளிகள் ஏ.டி.ஜி.சந்திரா கோபால் -_ சரோஜா பெருமாள் நினைவரங்கத்தில் காலையில் பகுத்தறிவு இசை விருந்துடன் தொடங்கப்பெற்ற நிகழ்ச்சியில்  செல்வி.ஓவியா கழகக் கொடியினை ஏற்றி கொடிக்கான கரு கொடுத்தவர் தந்தை பெரியார் என்பதையும், உரு கொடுத்தவர் தோழர் சண்முக வேலாயுதம் என்பதனையும் நினைவு கூர்ந்து, அன்னை மணியம்மையார் 1946ல் ஏரல் திராவிடர் கழக மாநாட்டில் கொடியேற்றி கொடியின் இலட்சியமாகக் கூறிய கருத்துகளை நினைவுபடுத்தி எழுச்சியுரையாற்றினார்.

திராவிடர் கழக மகளிரணி பிரச்சார செயலாளர் கலைவாணி மாநாட்டினை திறந்து வைத்தார். மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி அவர்கள் பெண்களை இழிவுபடுத்திப் பேசும் சங்கராச்சாரியாரையும், மனுதர்மம், கீதை போன்றவற்றையும் மறுக்கவும், எதிர்க்கவும் பெண்கள் அணியமாக இருக்க வேண்டும் என்பதை விளக்கினார்.

மேலும் படங்களுக்கு

திராவிட இயக்கத்தில் மகளிர் பங்கு என்னும் சிறப்பான கருத்தரங்கில் இந்தி எதிர்ப்புப் போராட்டம், மூடநம்பிக்கை ஒழிப்புப் போராட்டம், பெண்ணுரிமைப் போராட்டம் என்ற தலைப்புகளில் உரையாற்றிய பெ.இந்திராகாந்தி, வழக்குரைஞர் வீரமர்த்தினி, ந.தேன்மொழி ஆகியோர் நூற்றாண்டு காணும் திராவிட இயக்கம் எந்தெந்த வகையில் எல்லாம் பெண்களை விழிப்படைய செய்திருக்கின்றதென்பதையும், இதற்காக தங்கள் வாழ்க்கையை ஈந்த மகளிரின் வீர வரலாற்றையும் விரிவாக எடுத்துரைத்தனர்.

கருத்தரங்க நிறைவுரையாற்றிய கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆறாம் ஜாதியாக இழிவுடன் நடத்தப்பெற்ற பெண்களின் விடுதலைக்காக பாடுபடும் திராவிடர் கழகத்தின் தேவை பற்றியும், அவர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுபட தந்தை பெரியார் தந்த தீர்வுகளைப் பற்றியும் மாநாட்டிற்கு முதன்முறையாக வந்திருந்த பெண்களும் சுவைக்கும் வண்ணம் மிகவும் நகைச்சுவையுடன் விளக்கினார்கள்.

மேலும், மாநாட்டின்  ஒரு பகுதியில் நடைபெற்ற குருதிக்கொடை வழங்கும் முகாமில் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கிய தோழர், தோழி யருக்கு சான்றிதழ்களும், அதனை நடத்திட உதவிய மருத்துவர் அனிதா அவர்களைப் பாராட்டி சிறப்புச் செய்தும், பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பொன் னாடை அணிவித்து விருதுகளையும் வழங்கினார்.

அடுத்த நிகழ்வாக பெரும்பாலான பெண்களை ஆட்டிப்படைக்கும் சோதிடம், ஜாதகம் போன்ற மூடநம்பிக்கைகள் பற்றியும், பெண் என்பவள் எவ்வளவு வலிமையானவள் ஆனால் தன் வலிமை தெரியாமல் அவள் எப்படி தன்னை அடிமைப்படுத் திக் கொள்கிறாள் என்பது பற்றியும்  மருத்துவர் எழிலன் அவர்கள் ஒளிப்பட விளக்க (றிஷீஷ்மீக்ஷீ றிஷீவீஸீ) முறையில் தெளிவுபடுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பெற்ற பட்டிமன்றம் சமூக வளர்ச்சிக்கு ஆண்_பெண் சமத்துவம் போதுமானது! போதுமானதல்ல! என்ற தலைப்பில் நடைபெற்றது.

பேராசிரியர் தமிழ்மொழி அவர்களை நடுவராகக் கொண்டு போதுமானது என்ற அணியின் தலைவராகத் தகடூர் தமிழ்ச் செல்வியும், ம.கவிதா, அனிதாராணி, கவிஞர் லெட்சுமி ஆகியோரும் போதுமானதல்ல என்ற அணியில் இறைவி தலைமையேற்க கல்லூரி மாணவிகள் வீ.தெ.அருள்மொழி, ச.சாந்தி, க.அபிதா ஆகியோரும் வாதிட்டனர். போதுமானது என்ற அணியில் அனைவரும் திராவிட இயக்கத்தால் பெண்கள் பெற்றுள்ள உரிமை களைப் பற்றியும், இயற் றியுள்ள சட்டங்கள் பற்றியும் ஆதாரங்களு டன் எடுத்துரைத்தனர்.

பெறப்பட்டுள்ள உரிமைகளை பயன் படுத்திக் கொள்ளும் மனமாற்றம் பெண்களிடையே வளராத நிலையே இன்னும் நிலவுவதை சான்றுகளுடன் விளக்கினர் போதுமானதல்ல அணியினர். முடிவில் ஆண் பெண் சமத்துவம் போதுமானதல்ல என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார்.

தொடர்ந்து மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி _ பெரியார் சமூகப் காப்பு அணியின் மகளிர்  பிரிவைச் சேர்ந்த இளம் பெண்கள் தமிழில் கட்டளைச் சொற்கள் இடப்பட்டு நடந்த அணிவகுப்பு, தீச்சட்டி ஏந்திய மகளிர், கடவுள் மறுப்பு மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை காப்பு என்ற சீரிய கருத்துக்களை ஒலிமுழக்கம் செய்து பார்வையாளர் களைக் கவர்ந்த பெண்களின் அணிவகுப்பு போன்றவற்றைத் தொடர்ந்து அலகுக்காவடி, சிலம்பாட்டம், சுருள் கத்தி சுழற்றுதல், கடவுள் இல்லவே இல்லை என்று முழங்கியபடி கத்திமேல் நிற்பது, எரியும் சூடத்தை நாக்கில் வைப்பது என ஆண்கள் பங்கேற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு காட்சிகளைத் தொடர்ந்து ஆண்கள் அணிவகுப்பும் மிகச் சீரிய முறையில் நடைபெற்றது.

ஊர்வலப் பாதை முழுவதுமே வேலூர்ப் பொதுமக்களாலும் வியாபாரிகளாலும் நிறையப் பெற்று அவர்கள் ஊர்வலத்தினரின் மாட்சி கண்டு வியப்பிலாழ்ந்தனர்.  மண்டித் தெருவில் போடப்பட்டிருந்த தனி மேடையில் நின்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மகளிர் அணியினரின் இந்த சிறப்பு வாய்ந்த பேரணியினைக் கண்டு மகிழ்ந்தார்.

அன்னை மணியம்மையார் நினைவரங்கமாக அமையப்பெற்ற புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாடு அரங்கத்தில் ஜெயமணிகுமார் அவர்கள் நிகழ்த்திய மந்திரமா? தந்திரமா? மற்றும் பெரியார் பிஞ்சுகள் நிகழ்த்திய நடனம், யோகா, பேசா நாடகம் போன்ற நிகழ்வுகளும் தொடக்க சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்தது.

மாநில திராவிடர் கழக மகளிரணி அமைப்பாளர் கலைச்செல்வி வரவேற்புரை நல்க, பேரா.டெய்சிமணியம்மை தலைமையேற்க தொடர்ந்து பெண்களுக்கு நாடாளுமன்றத்தில், நீதித்துறையில், அமைச்சரவையில் மற்றும் முக்கியத் துறைகளில் வாய்ப்புகள் வேண்டியும், குடும்பங்களில் தரப்பட வேண்டிய உரிமை, மரியாதை, விழிப்புணர்வு போன்றவற்றை வலியுறுத்தியும் பதினான்கு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

துபாயிலிருந்து மாநாட்டிற்கென வருகைபுரிந்த பாவலர் லதாராணி தமது தொடக்க உரையில் பெண்களுக்காக பல அவமானங்களைச் சுமந்து கொண்டு உழைத்த தந்தை பெரியாரால் கல்வி, உரிமை, உத்தியோக வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம். ஆனால் இன்னும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறவில்லை என்றும், இதனை மாற்ற பெண்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, திருமகள் இறையன் ஆகியோரை, அடுத்து பேசிய கழகப் பிரச்சார செயலாளர் அருள்மொழி இந்த மாநாடு திராவிடர் கழகப் பெண்களுக்கான மாநாடு மட்டுமல்ல அனைத்துப் பெண்களின் விடுதலைக்காகவும், விழிப்புணர்வுக் காகவும்தான் என்பதை நன்றியுடன் சிந்திக்கத் தூண்டினார்.

தொடர்ந்து கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சென்னை ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், சத்துவாச்சாரி கனகம்மாள் கணேசன், நாகம்மாள், குடியாத்தம் கமலம்மாள், வேலூர் கலைமணி பானியப்பன், வடசேரி மீராஜெகதீசன் ஆகியோருக்கு திராவிடர் இயக்க வீராங்கனை விருது வழங்கிச் சிறப்பித்தார். 95 ஆண்டுகளுக்கு முன் திராவிட இயக்க சமூகப் புரட்சி என்னும் நூல் ஒன்றினையும், அன்னை மணியம்மையாரின் சிந்தனை முத்துக்கள், பெரியார் பிஞ்சு பழகுமுகாம் _ தஞ்சை ஆகிய குறுந்தகடுகளையும் வெளியிட்டார்.

மாநாட்டு நிறைவுரையாற்றிய தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் அன்னை மணியம்மையாரை ஈந்த சிறப்பு வாய்ந்த வேலூரில் திராவிடர் கழக மகளிரணியினர் _ மகளிர் பாசறையினர் சாதித்துக் காட்டிய மாநாட்டைப் பற்றியும், பேரணியினைப் பற்றியும் மகிழ்வுடன் குறிப்பிட்டு இதற்குக் காரணமான அனைத்துப் பொறுப்பாளர்களையும் மனமாரப் பாராட்டினார்.

நம் சூத்திரப் பட்டம் ஒழிய திராவிடர் கழகம் பாடுபட்டதையும், திராவிட இயக்கத்தில் பார்ப்பனர் நுழைந்ததால் ஏற்பட்டுள்ள சீர்கேட்டையும், மக்கள் நலத்திட்டம் முதல் ஈழத்தமிழர் பிரச்சினை வரை ஒடுக்க நினைக்கும் பார்ப்பனர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்றும், டெசோ அமைப்பின் மூலம் நாம் இப்பொழுது கொடுக்கும் அழுத்தத்தின் மூலம் ஈழத்தமிழரின் இன்னல் தீர உலக நாடுகள் நல்லதோர் முடிவை எடுக்கக்கூடிய சூழல் ஏற்பட அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டிய கட்டாயம் குறித்தும் விரிவாக உரையாற்றி மாநாட்டினை நிறைவு செய்தார்.

கடும் வெயிலின் கொடுமையினையும் பொருட்படுத்தாத வண்ணம் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இயக்கத் தோழர்களையும் பொதுமக்களையும், சோர்வளிக்காத முறையில் நிகழ்ச்சியினை அமைத்து மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய திராவிடர் கழக மகளிரணி _ மகளிர் பாசறையினரை நாமும் பாராட்டுவோம்.

– இறைவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *