ஓரவஞ்சனையின் மறுபெயர் குஜராத் மாடல்! மக்கள் நலனுக்கானது திராவிட மாடல்!

2023 அக்டோபர் 16-31, 2023

கடந்த மூன்று நாள்கள் (2023 அக்டோபர் 9 முதல் 11 வரை) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2023-_2024ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவிற்காக துணை நிதிநிலை அறிக்கையை நமது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்து நிகழ்த்திய உரையில், குறிப்பிட்டுள்ள முக்கிய-த் தகவல்கள் தமிழ்நாட்டு மக்களின் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியதாக உள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் வெளியிட்ட ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை செயல்பாடுகள்!

நமது நிதியமைச்சரின் இலக்கியம் தோய்ந்த உரையில், ஒன்றிய அரசால் தமிழ்நாடு நிதித் துறையிலும் எவ்வளவு மோசமாக வஞ்சிக்கப்படுகிறது என்பதற்கு ஆதாரப்பூர்வ புள்ளி விவரங்களைத் தந்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும் – கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, வளர்ச்சிப் பற்றை விரும்புவோர் அதற்குரிய பரிகாரங்களைத் தேடவேண்டியதைத் தம் கடமையாகக் கருதி, இதை மக்கள் மன்றத்தில் பரப்ப வேண்டும்.
தமிழ்நாடு நிதியமைச்சரின் தெளிவான விளக்கம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்!
குறிப்பாக நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் அனைவரும் நிதி மட்டும் கேட்காமல், கூடுதலாக எங்களுக்குத் தமிழ்நாட்டிற்கு நீதியும்கூட உரிய முறையில் ஒதுக்கவேண்டியது ஒன்றிய அரசின் முக்கியப் பொறுப்பாகும் என்று வலியுறுத்திட வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி – உ.பி.க்கு இன்னொரு நீதியா?

நிதித் துறையில் அதிர்ச்சியூட்டக் கூடிய அநீதிகளைப் பட்டியலிட்டு இருக்கிறார் நமது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்!

‘‘1. ஒன்றிய அரசின் நேரடி வரி விதிப்பில் தமிழ்நாட்டி
னுடைய பங்களிப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றது. ஆனால், அந்தப் பங்களிப்பிற்கு நிகராக நாம் வரிப்
பகிர்வினைப் பெற்றிருக்கிறோமா என்பதைப் பார்த்தால் ‘‘இல்லை.’’
உதாரணத்திற்கு ஒன்றிய அரசிற்கு வரி வருவாயாக நாம் ஒரு ரூபாய் கொடுக்கிறோம்; அதற்கு ஈடாக நமக்கு ஒன்றிய அரசு திரும்பத் தருவது வெறும் 29 காசுகள்தான்! ஆனால், அதேநேரத்தில், பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் வசூலித்துக் கொடுப்பது ஒரு ரூபாய் (நம்மைப் போலவே என்றால்), ஆனால், உ.பி. மாநிலம், ஒன்றிய அரசிடமிருந்து திரும்பப் பெறுவது எவ்வளவு தெரியுமா?

2 ரூபாய் 73 காசுகள்! ஏறத்தாழ மூன்று மடங்கு! அநியாயம்!

உத்தரப்பிரதேச மாநிலம் வரி தந்த பங்களிப்பு 2.24 லட்சம் கோடி ரூபாய்.
ஆனால், அது ஒன்றிய அரசிடமிருந்து திரும்பப் பெற்ற பகிர்வு 9.04 லட்சம் கோடி ரூபாய்!
தமிழ்நாட்டின் பங்கு ரூ.5.16 லட்சம் கோடி.
ஆனால், ஒன்றிய அரசிடமிருந்து வரிப் பகிர்வாக நமக்குக் கிடைத்தது ரூ.2.08 லட்சம் கோடி.

2. பேரிடர் நிவாரண நிதியில் நமது பங்களிப்பைப் பெறுவதில்கூட நமக்குப் பேரிடர்தான் மிச்சம்!
தமிழ்நாடு, ஒன்றிய அரசிடமிருந்து 64.65 சதவிகிதத்தைத்தான் பெற முடிகிறது.

3. 2023_2024 இல் தமிழ்நாட்டிற்கென்று இருக்கின்ற பாதுகாக்கப்பட்ட வருவாயிலிருந்து நாம் மட்டும் ஜி.எஸ்.டி. என்ற பொது சரக்கு மற்றும் விற்பனை வரிமூலம் நாம் பல லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசுக்கு வசூலித்துத் தந்தாலும், நமக்கு ஏற்படிருக்கிற இழப்பீடு 20 ஆயிரம் கோடி ரூபாயாகும்!
அந்த இழப்பீடு 2022 இல் முடிந்துவிட்டது. 2 ஆண்டுகளுக்குள்ள இந்த இழப்பீடு குறித்து ஒன்றிய அரசின் நிதியமைச்சரிடம் நமது நிதியமைச்சர் எடுத்து வைத்த நியாயமான கோரிக்கைகளை ஏற்கவில்லை; நீட்டித்தரவில்லை.

‘‘பேரு பெத்த பேரு!’’என்னே ஓரவஞ்சனை?

‘‘நீ அரிசி கொண்டு வா; நான் உமி கொண்டுவருகிறேன்; இருவரும் ஊதி ஊதி அதைச் சாப்பிடலாம்‘’ என்ற ஏமாற்றுக் கதைபோலல்லவா இது இருக்கிறது!

4. நகர்ப்புறத்தில் இருக்கின்ற ‘‘பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில்’’ ஒன்றிய அரசு கொடுக்கும்
நிதி, ஒரு வீடு கட்ட ஒன்றரை லட்சம் ரூபாய்தான். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு பயனாளிக்கும் குறைந்தபட்சம் 7 லட்சம் ரூபாய் கொடுக்கிறது.
ஆனால், ‘‘பேரு பெத்த பேரு!’’ ஒன்றிய அரசுக்கு!
5. மெட்ரோ ரயில் திட்டத்திற்கென இதுவரை ஒரு ஒதுக்கீட்டையும் ஒன்றிய மோடி அரசு செய்யவில்லை. மாநில அரசு தலையிலேயே கட்டிவிட்ட நிலைதான்!
கொடுமை அல்லவா?

‘உருட்டைக்கு நீளம் – புளிப்பில் அதற்கு அப்பன்!’

6. ‘‘ஜல் ஜீவன் திட்டத்தில்’’ பாதிக்குப் பாதி வழங்கவேண்டும்; ஆனால், மின்சார செலவு, பராமரிப்புச் செலவுகளுக்கென நம்முடைய ஒன்றிய அரசு செலவழிப்பது 45 சதவிகிதத்திற்கும் குறைவு; ஆனால், பெயரோ அவர்களுடையது!
வரியைத் தரும் மக்கள் மாநில அரசுகளுடைய மக்கள் – பழைய கால பேரரசர்களுக்கு வசூல் செய்து கப்பம் கட்டும் சிற்றரசுகள் செய்கையைவிட கூடுதலாகக் கொடுமை தற்போதைய மாநில உரிமைகள் – நிதித் துறையின் பறிமுதல் மூலம்! எழுதக் கொதிக்குது நெஞ்சம்!
நிதிக்கமிஷன்(Finance Commission) கணக்கீடுகளைப் பார்த்தால், அது ‘உருட்டைக்கு நீளம்; புளிப்பில் அதற்கு அப்பன்’ என்று கிராமங்களில் கூறும் பழமொழியையே நினைவூட்டுவதாக இருக்கிறது!

15 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பங்களிப்பிற்கு நிகராக இருக்கக் கூடிய இந்த நிதி ஒதுக்கீடு, தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு மறுக்கப்பட்டே வந்திருக்கிறது, இது அநீதி அல்லவா!
‘திராவிட மாடலுக்கு’முன் ‘குஜராத் மாடல்’ வீழ்ச்சி!
அதாவது, 12 ஆவது நிதிக்கமிஷன் 5.305 சதவிகிதமாக இருந்த நிதி ஒதுக்கீடு, 15 ஆவது நிதிக்கமிஷனின் ஒதுக்கீட்டிற்கு மேல்நோக்கிப் போகாமல், கீழே போய் கொண்டுள்ள விசித்திர வேடிக்கை எவரையும் வியக்க வைக்கும்!

அதாவது 15 ஆவது நிதிக் கமிஷனில் ஒதுக்கீடு 4.079 சதவிகிதம்.
இதுதான் பிரதமர் மோடியின் ‘‘குஜராத் மாடல்’’ -_ வளர்ச்சி மாடல் -_ ‘‘சப்கா சாத், சப்கா விகாஸ்’’ செயலாக்க யோக்கியதையா?
இதைப்பற்றி பேசவேண்டியது தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பறிக்கப் போட்டி போடும் எதிர்க்கட்சிகள் உள்பட அத்துணை அரசியல் கட்சிகளின் முக்கிய கடமை அல்லவா?

‘‘என் மண் – என் மக்கள்’’ என்ற யாத்திரை போகிறவர்கள் இதுபற்றி என்றாவது தமிழ் மண்ணின் வளர்ச்சி, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிபற்றி வாய் திறந்துள்ளார்களா?
இவ்வளவு நிதி நெருக்கடியிலும் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், மகளிரின் சுயமரியாதையை வலுப்படுத்தும் மகளிருக்கு இல்லந்தேடி மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’’ என்ற சுயமரியாதைப் பெயரில் திட்டம் என்பன சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘‘திராவிட மாடல்’’ ஆட்சியின் மாட்சியின் சிறப்பு! இப்போது புரிகிறதா?
‘திராவிட மாடல்’ எப்படி மற்ற மாநிலங்களுக்குக் கற்றிடம் என்பது!

– கி. வீரமணி
ஆசிரியர்