R. பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (சிந்துவெளி ஆய்வாளர்)
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பிய இலக்கணம்.
(தொல்.சொல். 157)
எல்லாச் சொல்லும் என்று கூறியதில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நால்வகைச் சொற்களும் அடங்கும்.
“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.’ (தொல்.எச்ச.1,) என்று பிறமொழிச் சொற்கள் தமிழில் பயின்று வரும் முறை பற்றியும் தொல்காப்பியர் எச்சவியலில் பேசுகிறார்.
வடசொற்களைத் தமிழில் பயன்படுத்தும் முறை பற்றியும் அவர் தெளிவுபடுத்துகிறார்.
“வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.”
(தொல். எச்ச.5)
அண்மையில் “சனாதனம்” என்ற “சொல்”; அதன் பொருள் மற்றும் அச்சொற்பொருள் சார்ந்த கருத்தியல் மற்றும் கோட்பாடுகள் பற்றி பொதுவெளியில் பரவலாக, பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
“சகரக் கிளவியும் அதனோரற்றே
‘அஐஔ எனும் மூன்றலங் கடையே” என்று இலக்கணம் வகுத்த தொல்காப்பியத்தில் “சனாதனம்” என்ற சொல் இருக்கிறதா என்று தேடுவதே நியாயம் இல்லை தான்.
பரிபாடல், திருமுருகாற்றுப்படையிலும் சனாதனம் என்ற சொல் இல்லவே இல்லை.
அடுத்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்களான திருக்குறள், நாலடியார், திரிகடுகம், ஏலாதி போன்ற நூல்களிலும் சனாதனம் என்ற சொல்லாடல் இடம்பெறவில்லை. திருக்குறள் என்ற உலகப் பொதுமறை “இதன் சாரம்; அதன் சாரம்” என்று வதந்திகளைப் பரப்புவோர் தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.
“இரட்டைக் காப்பியங்கள்” என்று
போற்றப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை யிலும் சனாதனம் என்ற சொல் இடம் பெறவே இல்லை.
அய்ம்பெரும் காப்பியங்களில் அடங்கிய ஏனைய காப்பியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய நூல்களிலும் சனாதனம் என்ற சொல் இடம்பெறவில்லை.
கம்பராமாயணம், தேவாரம் திருவாசகம் நாலாயிர திவ்யப்பிரபந்தம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களிலும் சனாதனம் என்ற சொல் இல்லவே இல்லை.
கம்பராமாயணத்தில் சலம், சனம், சழக்கு, சவரி, சழக்கியர் எல்லாம் இருக்கிறது. ஆனால் சனாதனமோ சனாதனியோ இல்லவே இல்லை. மூவர் தேவாரத்திலும் சைவக் குரவர்களாகிய நாயன்மார்கள் பற்றிய சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்திலும் சனாதனம் இல்லை.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் சமணம், சமயம், சரணம், சன்மம் ஆகிய சொற்கள் இருந்தாலும் சனாதனம் இல்லை.
அய்ஞ்சிறுங்காப்பியங்களிலும் சனாதனம் இல்லை. வில்லிபாரதத்தில் சன்பதம் இருக்கிறது; ஆனால் சனாதனம் இல்லை.
சன்மார்க்கம், சற்குரு, சமரசம் போன்ற சொல்லாட்சிகள் இடம்பெறும் திருவருட்பாவிலும் சனாதனம் இல்லை. தாயுமானவர் பாடல்களிலும் இல்லை. கலிங்கத்துப் பரணியிலும் சனாதனம் இல்லை.
நளவெண்பா, திருக்குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, அபிராமி அந்தாதி, மதுரைக்கலம்பகம், கச்சிக்கலம்பகம் உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் எவற்றிலும் சனாதனம் இல்லை.
மகாகவி பாரதியாரும் தனது கவிதைகளில் சனாதனம் என்ற பதத்தைப் பயன்படுத்தவே இல்லை.
மேலும் கல்வெட்டுக் கலைச்சொல் அகர முதலியிலும் சநாதன/ஸனாதன போன்ற சொற் பயன்பாடு இல்லவே இல்லை.
இவ்வாறு சங்க இலக்கியம் தொடங்கி பாரதியார் கவிதைகள் வரை தமிழ் இலக்கியப் பரப்பு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சந்தித்திராத ஒரு சொல்லே சனாதனம்
என்பதைப் புரிந்து கொள்வோமாக. ♦