… ஆனந்தி …
தமிழர் சமூகத்தை ‘ஜனநாயக’ப் படுத்த பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் பற்றி மார்க்சிய, மார்க்சியம் சாராத அறிஞர்கள் வரலாற்று ஆய்வுகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். சுயமரியாதை இயக்கம் பற்றி அது திரிபுவாத இயக்கம், பிரிட்டிஷ் ஆதரவு இயக்கம், பிரிவினை இயக்கம், பிராமண எதிர்ப்பு இயக்கம் என்றெல்லாம் கருத்துகள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த இயக்கம் பெண்கள் விடுதலைக்காக தொய்வில்லாமல் நடத்திய போராட்டம் பற்றியோ, தமிழர் சமுதாயம் முழுதும் பரவிக்கிடந்த ஆண் ஆதிக்க அமைப்பைத் தகர்த்தெறிய மேற்கொண்ட முயற்சிகள் பற்றியோ, இந்த ஆய்வாளர்கள் மவுனம் சாதித்திருப்பது குறிப்பிடத்தக்க ஓர் அதிசயமே!
1925ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகி, தனது விலகலை உறுதிப்படுத்திக்கொண்ட பெரியார், தமிழர் சமுதாயத்தில் நிறுவனமாகி-விட்ட மதம், ஜாதி அமைப்பு, ஆண் ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக தனது கடுமையான பிரச்சாரத்தைத் துவக்கினார். தனது சமகாலத்தவரான காந்தியார் மற்றும் அதற்கு முந்தைய சித்தர், ராமானுஜர் போன்றவர்களின் சீர்திருத்தக் கோட்பாடுகளை அவர் எதிர்த்ததோடு, கடந்தகால பிற்போக்குத் தனங்களைச் சீர்திருத்திக் கொண்டிருக்காமல், முழுமையாக அவற்றிலிருந்து விடுபடவேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெரியார் மேம்போக்கான சீர்திருத்தத்தை ஏற்காதவர்; முழுமையான மாற்றத்தை வலியுறுத்தியவர். தலைகீழ் மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்ற அவரது கண்ணோட்டமே பெண்ணுரிமைப் பிரச்சினையிலும் காணப்பட்டது. சம்பிரதாய-மாக வலியுறுத்தப்படும் விதவைத் திருமணம், பெண் கல்வி போன்ற பிரச்சினைகளை எடுத்துக் கொள்வதோடு சுயமரியாதை இயக்கத்தின் பணி முடிந்துவிட்டதாக அவர் கருதிவிடாமல், மேற்கண்ட பிரச்சினைகளில் வெற்றிபெற்றாலும் ஆண் ஆதிக்க அமைப்பைத் தகர்த்துவிட முடியாது என்பதால், ஆண் ஆதிக்கத்துக்குக் காரணமான அடிப்படைகளைத் தகர்க்க அவர் குரல் கொடுத்தார். ஆண் ஆதிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கும் நிறுவனங்களான குடும்ப அமைப்பு, கற்பு போன்ற பெண்கள் மீது திணிக்கப்பட்ட “நெறிமுறைகளை’’க் கேள்விகளுக்கு உட்படுத்தினார்.
திருமணம் என்பது ஒரு பெண்ணை அடிமையாக்கி ஆணின் உடைமையாக அவளை மாற்றிவிடுவதால் திருமணம் என்ற முறையே ஒழிக்கப்பட வேண்டும் என்று பெரியார் கூறினார்.
திருமணம் ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்பாக இருப்பதை பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், பழமைச் சம்பிரதாயங்களிலிருந்து விடுபட்ட திருமணங்களை அவர் அங்கீகரித்தார். திருமணத்தோடு தொடர்புடைய சடங்குகள் அனைத்தையும் அவர் எதிர்த்தார். குறிப்பாக மாப்பிள்ளை பெண் கழுத்தில் கட்டும் தாலியை அவர் எதிர்த்தார். தாலியைக் கட்டிவிட்டால் பெண், கணவனுக்கு அடங்கிப்போக வேண்டும் என்பது சம்பிரதாயம். பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணங்களை அவர் எதிர்த்ததோடு, ஆண்களும், பெண்களும் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்.
‘ஒருவனுக்கு ஒருத்தி’ எனும் குடும்ப அமைப்பில் மிகப் புனிதமாகக் போற்றப்படும் ‘கற்பு’ எனும் கோட்பாட்டையும் அவர் குறை கூறினார். அவர் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ எனும் நூலில் அவர் கூறுகிறார்.
“கற்பு என்பதற்குப் பதிவிரதம் என்று
எழுதிவிட்டதன் பலனாலும் பெண்களைவிட
ஆண்கள் செல்வம், வருவாய், உடல்
வலிவு கொண்டவர்களாக ஆக்கப்பட்டு
விட்டதனாலும், பெண்கள் அடிமையாவதற்கும் புருஷர்கள் மூர்க்கர்களாகிக் கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை, தவிர, புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது மொழிகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.”
கற்பு, பெண்களுக்குத் தேவையான குண நலன் என்று கூறும் தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம், திருக்குறளைக்கூட அவர் சாடினார். அதற்குப் பதிலாக விவாகரத்து உரிமையும், மறுமண உரிமையும் தேவை என்று அவர் வலியுறுத்தினார். பெண்கள் மீதான ஒடுக்குமுறை பற்றி அவர் தனது பேச்சுகளிலும், எழுத்துகளிலும் குறிப்பிடும்போது ‘விதவை’ என்ற சொல்லுக்கு நிகரான ஆண்பால் சொல் உண்டா என்று கேட்கிறார். தமிழ் மொழியில் இதற்கு ஏன் சொல் இல்லை என்று
கேட்டு, கண்டித்துள்ளார். ஆண்களுக்கும் ‘விதவன்’ ‘விபசாரன்’ என்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று யோசனையும் கூறியிருக்கிறார்.
‘ஆண்மை’ என்ற சொல்லே பெண்களை இழிவுபடுத்துவதாகும் என்று கூறுகிறார். அவர் எழுதுகிறார், “ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக்கூடாது. அந்த “ஆண்மை” உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகத்தில் “ஆண்மை” நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்துவரும். பெண்களால் “ஆண்மை” என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லாது பெண்மை விடுதலை இல்லை என்பது உறுதி.”
தமிழ் மொழியில் பெண்களுக்கு மதிப்பைத் தரக்கூடிய சொற்கள் இல்லை என்பதால் அதைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறவும் அவர் தயங்கவில்லை. 1946ஆம் ஆண்டு திருப்பத்தூரில் அவர் பேசும்போது பெண்களின் உடல் அமைப்பைப் பற்றித்தான் தமிழ் இலக்கியங்களில் விரிவாக எழுதியிருக்கிறார்களே தவிர, அவர்களுடைய அறிவுத் திறன் பற்றி இப்படி சித்தரிக்கப்படுவதை பெண்கள் எதிர்த்துப் போராடாதவரை, இலக்கியங்களின் போக்கோ, பெண்களின் நிலையோ மாறாது என்று அவர் வாதிடுகிறார்.
சொத்துரிமைக்கும், பெண்கள் விடுதலைக்கும் உள்ள தொடர்பையும் பெரியார் சுட்டிக்காட்டினார். சொத்து சேர்க்கும் உரிமை மட்டும் இல்லாமல் இருந்தால் குடும்பத்துக்கு வாரிசை உண்டாக்க வேண்டும் என்ற கட்டாயமே இருந்திருக்காது என்றும், எப்போது ஒரு பெண், ஆணின் சொத்துக்குப் பாதுகாப்பாக ஆக்கப்பட்டாளோ, பிறகு அவளே கணவனுக்கு உரிமைப் பொருளாகி குடும்பத்துக்கு வாரிசை உற்பத்தி செய்ய வேண்டியவளாகிவிடுகிறாள்; அதன் பிறகு, அவளுக்கு கடவுளை வணங்கும் உரிமைகூட இல்லாமல் கணவனையே கடவுளாக வணங்க வேண்டியிருக்கிறது என்று கூறும் பெரியார், தனியுடைமையை ஒழிப்பதில் தான் பெண்ணின் முழுமையான விடுதலை அடங்கி இருக்கிறது என்று வலியுறுத்துகிறார்.
“கர்ப்பத் தடையின் அவசியத்தைப் பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும் மற்றவர்கள் கருதும் காரணங்களுக்கும் அடிப்படையான வித்தியாசம் இருக்கின்றது. அதாவது பெண்கள் விடுதலை அடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியம் என்று நாம் கூறுகிறோம். மற்றவர்கள் பெண்கள் உடல் நலத்தை உத்தேசித்தும், பிள்ளைகளின் தாஷ்டிகத்தை உத்தேசித்தும், நாட்டின் தரித்திர திசையை உத்தேசித்தும் குடும்பச் சொத்து குலையாமல் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியமென்று கருதுகிறார்கள். இதை மேல்நாட்டினர் பலரும்கூட ஆதரிக்கிறார்கள். ஆனால், நமது கருத்தோ இவைகள் எதையும் பிரதானமாய்க் கருதியது அல்ல. மற்றெதைக் கருதி என்றால், முன் சொன்னதுபோல், பொதுவாகப் பெண்களின் விடுதலைக்கும், சுயேச்சைக்கும் கர்ப்பம் விரோதியாய் இருப்பதால், சாதாரணமாய் பெண்கள் பிள்ளைப் பேறு பெறுவது என்பதையே அடியோடு நிறுத்தி விட வேண்டும் என்கிறோம்”.
ஆண் ஆதிக்கத்துக்கு சாஸ்திர ரீதியாக அங்கீகாரம் வழங்கியதால் பெரியார், இந்து மதத்தைக் கடுமையாகச் சாடினார். அவர் பெண்களிடையே பேசும்போது -_வர்ணாஸ்ரமும் – இந்து மதமும் – உங்களைக் கடவுளின் ‘தாசி’களாக்குவதோடு இந்து மதம் பெண்களுக்குத்தான் கற்பை வலியுறுத்துகிறதே தவிர ஆண்களுக்கு அல்ல என்று கூறினார்.
பெண் விடுதலையாளர்கள் என்று வெளியே சொல்லிக்கொள்ளும் அறிஞர்கள், வீட்டுக்குள் தங்கள் சகோதரிகளையும், மனைவிகளையும் அலங்காரப் பதுமைகளாக வைத்திருப்பதை அவர் கண்டிக்கத் தயங்கவில்லை. நீதிக்கட்சிக்கு ஆதரவு தந்தாலும், பெண்கள் பிரச்சினையில் நீதிக்கட்சி அமைச்சரவையை அவர் விமர்சித்ததோடு பால்யவிவாகத் தடுப்புச் சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தத் தவறிவிட்டது என்றும் கண்டித்தார். பெண்கள் முன்னேற்றத்துக்கான சட்டங்களைக் கொண்டுவரத் தவறிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டி, நீதிக்கட்சி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஏ.பி. பாத்ரோ மற்றும் நீதிக்கட்சி அமைச்சர்கள், கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெரியார் இந்தப் பிரச்சினையில் தன்னையும் விமர்சனத்துக்கு உட்படுத்தத் தயங்கவில்லை. தனது துணைவியார் நாகம்மையார் முடிவெய்தியபோது அவர் எழுதிய இரங்கல் உரையில் தனது சொந்த வாழ்க்கையில் தான் எழுதிய கருத்துகளில் நூறில் ஒன்றையாவது பின்பற்றாதவனாக இருந்ததற்கு வெட்கப்படுகிறேன் என்று எழுதினார்.
பெரியாரின் இந்த பெண்ணுரிமைக் கோட்பாடுகள் பேச்சளவோடு இல்லாமல் சுயமரியாதை இயக்கத்தில் செயல்திட்டமாகவும் நடந்தது.
பெண்ணுரிமைப் பிரச்சினையில் சுயமரியாதை இயக்கத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தை அதே காலத்தில் இருந்த ஏனைய இயக்கங்களின் அணுகுமுறையோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். சுயமரியாதை இயக்கக் காலத்தில் இருந்த மற்றொரு முக்கியமான இயக்கம் – தேசிய இயக்கம்தான். பெண்கள் பிரச்சினையைத் தேசிய இயக்கம் எப்படித் தீர்க்க விரும்பியது என்பதை சுருக்கமாகக் குறிப்பிடுவோம். பாந்தா சாட்டர்ஜி என்பவர் அண்மையில் எழுதியுள்ள ஓர் ஆய்வுக் கட்டுரையில் தேசிய இயக்கம் ஏற்கெனவே நிலைபெற்றுள்ள ஆண் ஆதிக்கக் கூட்டமைப்பு உடைந்துவிடாமல் அதற்குள்ளேயே பெண்களுக்குச் சலுகைகள் கிடைப்பதற்கான மாற்றங்களை முன்வைத்தது என்று கூறுகிறார்.
மேற்கத்திய பொருளிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்ட தேசியவாதிகள், அதைத் தவிர வேறு ஆன்மிகம் மற்றும் வேறு பிரச்சினை தொடர்பாக மேலை நாட்டுக் கலாச்சாரத்தை ஏற்கக்கூடாது என்றும், அது தேசிய கலாச்சாரத்தின் தனித்தன்மையை அழித்துவிடும் என்றும் வாதிட்டனர். இதே சிந்தனையை மேலும் விரிவாக்கி வீடுதான் ஆன்மிக உணர்வுகளையும், இந்தியக் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் இடம் என்றதோடு, அந்த வீட்டை நிர்வகிக்க வேண்டியது பெண்ணின் கடமை என்றனர். ஒரு பெண் கற்புடையவளாக, அடங்கிப்போகிறவளாக, தியாகம் செய்கிறவளாக, அன்புள்ளவளாக, பொறுமைசாலியாக இருந்து தேசியக் கலாச்சாரத்தின் ஆன்மாவைக் காப்பாற்றுவதன் மூலம் தங்கள் கடமையைச் செய்யவேண்டும் என்றனர். இந்தப் புதிய ஆண் ஆதிக்க எல்லைக்குட்பட்டுத்தான் தேசிய இயக்கம் பெண்களுக்கான சீர்திருத்தத்தைப் பேசியது. மேற்குறிப்பிட்ட பெண்களுக்கான நல்லொழுக்கக் குணாம்சங்களைக் காப்பாற்றிக்கொண்டுதான் அவர்கள் படிக்கவும் பேருந்து ரயில்களில் பயணம் செய்யவும், சினிமா நாடகங்களைப் பார்க்கவும், வீட்டுக்கு வெளியே வேலைக்குப் போகவும் அனுமதிக்கப்பட்டனர்.
காலனியாதிக்க எதிர்ப்புப் பேராட்டத்தில் குறிப்பாக 1920 முதல் தேசிய இயக்கம் பெண்களைத் திரட்டியது மேற்குறிப்பிட்ட புதிய ஆண் ஆதிக்க வரம்புக்கு உட்பட்டுத்தான். பெண்கள்மீது பாரம்பரியமாகச் சுமத்தப்பட்ட குணங்களான குழந்தையைப் பராமரிக்கும் தாய், பெற்றோர்க்குக் கீழ்படிந்த மகள்; கடவுளுக்குப் பயந்த கணவன் சொல்லைத் தட்டாத கற்புடைய மனைவி ஆகிய குணங்களுடன்தான் தேசிய இயக்கம் பெண்களை மேடையில் பேசவும் பொதுவாழ்வில் ஈடுபடவும் அனுமதித்தது.
கல்கத்தாவில் அலாதிபானுபேகம் என்பவர் மேடையில் ஒரு தாய் என்று அறிவித்துத்தான் மேடையிலே பேச அனுமதிக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்துக்குக் கல்கத்தா விலை மாதர்கள் ஆதரவு தர முன்வந்தபோது தேசிய இயக்கத் தலைவர்கள் பலர் அதைக் கடுமையாக எதிர்த்தனர். தமிழ் பேசும் பகுதியில் தேசியவாதிகள் பெண்கள் பிரச்சினையை எப்படிப் பார்த்தார்கள் என்பதற்கு தேசிய இயக்கத்தில் தீவிரம் காட்டிய திரு.வி.கல்யாணசுந்தரனாரின் கருத்தை எடுத்துக்கொள்ளலாம். அவர், தேசிய அரசியலில் தீவிரம் காட்டினாலும், பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி எழுதிப் புகழ்பெற்றவர். அவரது பிரபலமான ‘பெண்ணின் பெருமை’ நூலில் (1927இல் வெளிவந்தது) பெண்மை என்பது பொறுமை. அடக்கம், அழகு, காதல், தாய்மை ஆகியவற்றில்தான் அடங்கி இருக்கிறது என்கிறார். எல்லா பெண்களும் தாயாவதற்காகப் படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் சந்ததியை உருவாக்குகிறவர்களாக இருப்பதால், வணங்கத்தக்கவர்கள்; புதிய தலைமுறையினரான குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைப் போதிப்பவர்கள் என்பதே பெண்களைப் பற்றிய திரு.வி.க.வின் கண்ணோட்டம். மேலை நாட்டுக் கல்வி முறையை அவர் எதிர்த்ததோடு, பாரம்பரிய ‘ஒழுக்கத்தையும்’ மத நெறிகளையும் கொண்ட கல்வித் திட்டமே தேவை என்று அவர் கூறினார். பெண்கள், வீட்டுக் கடமைகளை ஒழுங்காகச் செய்வது எப்படி என்பதற்கான பயிற்சிக் களமாகக் கல்வி இருக்க வேண்டும் என்றார் அவர். பெண்களின் “கடமையான” சோறு சமைப்பது, தையல் வேலை போன்றவற்றில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார்.
தேவதாசி முறை ஒழிப்பு பற்றி முத்துலட்சுமி ரெட்டி பிரச்சினையை எழுப்பியபோது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த சி. ராஜகோபாலாச்சாரி, அந்தப் பிரச்சினையை காங்கிரஸ் கமிட்டியில் எழுப்புவதற்கே எதிர்ப்பு தெரிவித்தார். சத்தியமூர்த்தி இன்னும் ஒருபடிமேலே போய். “தேவதாசி முறை தேசியக் கலையையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பது என்பதால், அந்த முறை தொடர்ந்து நீடிக்கவேண்டும்; ஒவ்வொரு தேவதாசியும் குறைந்தது இன்னொரு பெண்ணை எதிர்கால தேவதாசியாக்க வேண்டும்” என்றார்.
அதேபோல் குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தையும் அது இந்து மதத்துக்கு விரோதமானது என்று கூறி சத்தியமூர்த்தி எதிர்த்தார். (சுதேசமித்திரன், 1928 நவம்பர் 28) காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சேலம் சி.விஜயராகவாச்சாரியார் குழந்தைகள் மண தடுப்புச் சட்டம் அமலாவதற்குள் அவசர அவசரமாக வயதுக்கே வராத தனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்தார்.
தேசியவாதிகள் ஆண் ஆதிக்க அமைப்பு முறையை எதிர்க்க முன்வரவில்லை; மாறாக அது அவசியத் தேவை என்று வலியுறுத்தினார்கள். எனவே, சுயமரியாதை இயக்கத்தின் பெண்கள் முன்னேற்றத்துக்கான கொள்கைகள் தேசிய இயக்கத்தின் கொள்கைகளோடு முற்றிலும் வேறுபட்டவை. ஆண் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நிறுவனங்களான குடும்பம், திருமணம், கற்பு ஆகியவற்றைப் பெரியார் கேள்விக்கு உட்படுத்தியபோது, தேசியவாதிகள் இந்த அமைப்புகளை ஆதரித்தனர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் தேசியவாதிகள் ஆண் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக்கொண்டு, பெண்களை அரசியலுக்கு
இழுத்தனர். ஆண் ஆதிக்கத்தை எதிர்க்கவே பெண்களை அரசியலுக்கு இழுத்தது சுயமரியாதை இயக்கம். ♦